Sunday, November 29, 2015

இதுவும் ஒரு சாதாரண பதிவுதான்

சம்பவம் 1:  ஒரு வழியாக Thanks Giving Weekendக்கு எண்டு கார்டு போட்டாகிவிட்டது. அங்க இங்க Search பண்ணி ஒரு ஆப்பிள் கணினியை 30% தள்ளுபடியில் வாங்கியாகிவிட்டது. இன்று அந்த கடை, ஒரே நாளில் ஒரு மில்லியன் டாலர் அளவிற்கு விளம்பரம் ஏதுமில்லாமல் விற்பனை செய்து சாதனை படைத்திருப்பதாக அதன் இணைய தளத்தில் விளம்பரம் செய்திருந்தது.

சம்பவம் 2:  நேற்று பொழுது போகவில்லையென்று 'தி கன் மேன்' என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வழக்கமான உயிரை காப்பாற்றிக்கொள்ளும் திரில்லர்தான். கதையின் நாயகன் காங்கோவில் அங்கு தோண்டப்படும் தாதுக்களை கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து வாங்கி விற்றுப் பயன்பெரும் தனியார் நிறுவனங்களின் கைக்கூலியாகச் செயல்பட்டு அந்த நாட்டின் சுரங்கத்துறை மந்திரி சுரங்கங்களை அரசுடமையாக்கும் சட்டத்திருத்ததை கொண்டுவர முயல்வதால் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவான். பின் அவனைக் கொள்ள அவனது முன்னாள் கேப்டன் முயற்சி செய்வது தெரிய வரும்போது, நமக்கும் ஒரு உண்மை தெரியும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சம்பவம் 3:  நாம் பயன்படுத்தும் பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்கள் கோல்டான் என்ற மூலப்பொருளைக் கொண்ட டேண்டலம் கெப்பாசிடரை உள்ளடக்கியது. இந்த கோல்டான் காங்கோவில்தான் அதிகம் வெட்டியெடுக்கப் படுகிறது. இந்த உண்மை இன்று பார்த்த காங்கோவின் Conflict Mineral என்ற ஆவணப் படத்திலிருந்து தெரிந்தது. அந்த ஆவணப் படத்தில், கோல்டான் வெட்டியெடுக்கும் சுரங்கம் உள்ள பகுதி கிளர்ச்சிக்காரர்கள் கைவசம் இருக்கிறது. ஆவணம் தயாரிப்பவர் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கிளர்ச்சிக்காரர்கள் பகுதிக்குச் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் Neutral லைனைக் கடக்க அங்கிருக்கும் ஐநா வின் துருப்புக்களைச் சந்திக்கிறார். அந்த ஐநா துருப்பின் சட்டையில் 'பெலி சிங், இந்திய ராணுவம்' என்று எழுதப்பட்டிருக்கிறது.


மேற்சொன்ன மூன்று சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், கட்டுரையை மேலும் படிக்க வேண்டியதில்லை.

நாம் எங்கெல்லாம் தள்ளுபடியையும், விலைக்குறைப்பையும் எதிர்பார்க்கிறோமோ பெரும்பாலான சமையங்களில் அங்கெல்லாம் அந்த தள்ளுபடிக்கும், விலைக்குறைப்பிற்கும் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு அப்பாவி அவன் உழைப்பை, வளத்தை இழக்கிறான். காங்கோவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு, கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து அவர்களிடமிருந்து தாதுக்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பெரு நிறுவனங்களுக்கு விற்பனை செய்பவர்கள் உங்களுக்கும் எனக்கும் தெரிந்த, தெரியாத வணிக நிறுவனங்கள்தான். காங்கோ ஒரு அற்புதமான இயற்கையின் கொடை கொண்ட தேசம். அங்கு இருக்கும் வளங்கள் உலகில் எங்குமே இல்லை. இருந்தும் காங்கோ குடிமகனுக்கு படிப்போ, உணவோ, உடையோ இல்லை. அவன் போராட்டமெல்லாம் அன்றைய உணவுக்கானதாகவே இருக்கிறது.

ஐநா அங்கு அமைதியை நிலை நாட்ட குடிகொண்டிருப்பது போல் நமக்குத் தெரியும். ஆனால் அங்கு நடக்கும் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வராமலும், தனியார் முதலாளிகளின் லாபங்கள் குறையாமல் பார்த்துக் கொள்வதும் தான் முக்கிய நோக்கம். அங்கிருக்கும் பெலி சிங்கிற்கு இதெல்லாம் தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இங்கிருக்கும் சில முதலாளிகளுக்கு நன்று தெரியும்.

சரி.. புரட்சி பேசியது போதும்.. ஐபோன் 6 ப்ளஸ் 20% தள்ளுபடியில் எங்கு கிடைக்கும் என்று பார்க்க வேண்டிய வேலையிருக்கிறது. வரட்டுமா...

பிறகு சந்திப்போம்...


Saturday, November 21, 2015

ஒரு லைக் ஒரு லைப் - இறுதிப் பாகம்

பக்கம் 1 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

பக்கம் 2 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

"இல்லை. எனக்கு முக்கியமான பிராஜக்ட் ரிலீஸ் இருக்கிறது. ஏன்?" என்று கேட்டான். நாளை குழுவின் உறுப்பினர்கள் ஒன்று கூடி இது பற்றி விவாதிக்க இருப்பதாகச் சொன்னார்.

தன்னால் வர இயலாத நிலையையும், குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தான் உதவுவதாகவும் வாக்குறுதியளித்தான். அடுத்த இரண்டு நாட்கள் புராஜக்ட் ரிலீஸ் சம்பந்தமான வேலைகள் இறுக்கவே, அவனால் முகநூல் பக்கம் போக முடியவில்லை.

உலகம் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. யாரும் விலை வாசியைப் பற்றி கவலைப் படவில்லை. அறை நண்பனுக்கு, கவலையெல்லாம் தளபதி படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸ் ஆகவேண்டும் என்று. மேனெஜருக்கோ டிக்கெட் எஸ் எல் ஏ வைக் கடக்கக் கூடதென்று. டிராபிக் சிக்னலில் ஹெல்மெட் போடதவருக்கு தூரத்தில் நிற்கும் காக்கிச்சட்டைக் காரரின் கண்ணில் படக்கூடதென்ற கவலை.

வழக்கமான அலுவல்கள் முடித்த பின், பேஸ்புக்கை திறந்தான். அவனது மெஸெஞ்சரில் அவரது நண்பரிடம் இருந்து பல செய்திகள் காத்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக படிக்க ஆரம்பித்தான்.

"ஹாய்"..

"நேற்று குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விவதம் நடந்தது"

"உங்களை நண்பர் ராஜேஸ் எதிர்பார்த்திருந்தார். நான் தான் அவருக்கு உங்கள் நிலையைச் சொன்னேன்"

"ஜனநாயகத்திற்கெதிரான இந்த நகர்வை நாம் தடுப்பதென உறுதி மொழி எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக இதில் சட்ட ஆலோசனை செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நகர்வாக ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்டு ஒரு போராட்டத்தை ஒருங்கினைக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் வரும் 14ம் தேதி, வெள்ளிக் கிழமை காலை காந்தி மண்டம் அருகே நடைபெற உள்ளது". என்று முடிந்திருந்தது.

அவனக்கு அந்த குழுவின் நடவடிக்கைகள் நியாயமாகப் பட்டது. 

"நன்றி. நிச்சையம் பங்கேற்கிறேன்" என்று பதிலளித்திருந்தான்.

அவனுக்கு ஜனநாயகத்தின் முறைகளின் மேல் நம்பிக்கை வந்திருந்தது. அநீதியை எதிர்க்க ஜனநாயகத்தில் வழிகளும் இருக்கிறது என்று நம்பினான்.

சிறிது நேரத்தில் அவனுக்கு செய்தி வந்தது.

"நன்றி.. போராட்ட ஏற்ப்பாடுகள் குறித்து மாலை தெரிவிக்கிறேன். போராட்டத்திற்கும், சட்ட முன்னெடுப்பிற்கும் பொருட் செலவு ஆகும். உங்களால் முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றாலும் பராவியில்லை" என்று பதில் வந்திருந்தது.

அவனுக்கு அந்தச் செய்தி ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது. "இல்லையென்றாலும் பராவியில்லை" - எப்படி நம்மைப் பற்றி அவர் இந்த மாதிரி ஒரு மதிப்பீடு செய்திருந்தார். "எனக்கும் இந்த நாட்டின் மீது அக்கறையிருக்கிறது" என்று அவனுக்கு ஒரு குரல் பேசியது.

"நிச்சயம் உதவி செய்கிறேன். வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புங்கள்" என்று பதிலளித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர் பதிலளித்திருந்தார்.

"நன்றி. வங்கிக் கணக்கு, XXXXXXXXXXX".

அதற்கு முகிலன், "அனுப்புகிறேன். நமது முயற்சி வெற்றி பெற என்னாலான உதவிகளைச் செய்கிறேன்" என்று பதிலளித்தான்.

"நன்றி. நிச்சயம் போராட்ட நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்" என்று நண்பர் கோரிக்கை வைத்தார்.

"நிச்சயமாக" என்று பதிலளித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தனது வங்கிக் கணக்கிலிருந்து நண்பர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ஐந்தாயிரம் ரூபாய்களை அனுப்பி வைத்தான்.

இப்போது ஒரு நிறைவான அனுபவத்தை உணர்ந்தான். தான், நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ளவனாகவும், அநீதிக்கெதிராகக் குரல் கொடுப்பதையும் நினைத்து பெருமிதமாகவும் உணர்ந்தான்.

அரசியல் போரட்டங்கள் மூலம் ஜனநாயக வழியில் போராடி தனியார் நிறுவனங்கள், பொதுமக்களின் சொத்தை கொள்ளையடிக்கும் போக்கிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று உறுதியாய் நம்பினான். போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டான். அவனது இணைய நண்பனிடம் காந்தி மண்டபம் அருகே எங்கு சந்திப்பது என்ற தகவலைப் பெற்றுக்கொண்டான்.

வெள்ளி.......சனி...... ஞாயிறு.......... எப்போதும் போல் கடந்து சென்றது.

இன்று திங்கட் கிழமை மதியம்.....அவனது அலுவலகத்தில் அவனது இருக்கை காலியாகவே இருந்தது. தலைக்குமேல் இருந்த வேலைகளைச் செய்ய மேனஜர் முகிலனைத் தேடிக்கொண்டிருந்தார். அவனது செல்போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

அன்றைய மாலை மலரில் செய்தி இப்படியாக இருந்தது....

'சென்னையில் நக்சலைட் கைது'......

தமிழக காவல்துறையின் புலனாய்வுத்துறை மற்றும் சைபர் கிரைம் இணைந்து நடத்திய ஆப்பரேசனில், முகிலன் என்ற நக்சலைட்டை, சென்னையில் மடக்கி கைது செய்தனர். அவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குழைக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டியபோது போலிசாரால் வலைவிரித்து பிடிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் எஞ்சினியரான முகிலன் கடந்த சில நாட்களாக நக்சலைட்களுடன் தொடர்பு கொண்டு இயங்குவதை மோப்பம் பிடித்த காவல்துறை, அவரை லாவகமாக ஒரு இடத்திற்கு வரவைத்து பிடித்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திவரும் காவல் துறை, பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு செய்தி..

'நாட்டு மக்களனைவருக்கும் தட்டுப்பாடில்லாத, சுகாதாரமான குடிநீரை கொண்டு சேர்க்கும் 'அனைவருக்கும் தண்ணீர்' சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேரியது. இந்த சட்டத்தின் மூலம், சுகாதாரமான குடி நீர் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைய, அரசு வழி வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு இரண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளது. குடிநீரை சுத்தீகரித்து மக்களிடம் வினியோக்கும் செலவுளுக்கு அரசு  இந்த நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு, இருபத்தி நாலாயரம் கோடி ஒதுக்கியிள்ளது.

................

முற்றும்.

Sunday, November 15, 2015

ஒரு லைக்... ஒரு லைப் - ரியல் லைப் சிறு கதை - 2

பகுதி 1 படிக்கே இங்கே

முகிலனுக்கு இது மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தான் இதுவரை செலவிட்ட நேரம் வீண்போகவில்லை என்பதை அறிந்தும், கண்டுணர்ந்த உண்மைகள் ஆனித்தரமானவை என்பதையும் நினைத்துப் புத்துணர்ச்சி அடைந்தான். தன் ஏனைய நண்பர்கள், பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், அவனுக்கு முகமறியாமல் இயங்கும் இந்த சமூக இணைப்பை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இருந்தது. ஆனால் இன்று அந்த எண்ணங்களெல்லாம் பொய்யாகும் நேரம் வந்து விட்டதாக உணர்ந்தான்.

இதுபோன்ற மனிதரிடம் நட்பாகவும், தொடர்ந்து அவரது சிந்தனைகளை படிக்கவும், அவரது பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு லைக் போட்டு வைத்தான். அவ்வப்போது அந்த பக்கத்தில் கருத்துக்களையும் பதிவு செய்துவந்தான். அதிலிருந்து திடீரென அவனக்கு நட்புக் கோரிக்கைகள் குவிந்தது.

நாட்டின் விலைவாசி உயர்வு, ஒவ்வொரு மனிதனையும் பாதித்தது. அந்த பாதிப்பு சாப்ட்வேர் முகிலனையும் பாதித்தது. திடீரென உயரும் பெட்ரோல் விலை, பயணச்செலவை மட்டும் அதிகம் செய்யவில்லை. ஹோட்டல் சாப்பாட்டிலிருந்து, டூத் பேஸ்டு, காபி வரை கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு புறம் ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறும் இந்த பொருளாதாரச் சூழல் ஒரு சட்டப்படி நடக்கும் கொள்ளை என்பதாக உணர்ந்தான். 

அந்த நேரத்தில் அவனது பேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் "ஹை" என்று ஒரு செய்தி வந்தது. அது அவனைப் போலவே பேஸ்புக்கில் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் குழுவில் இருக்கும் முகம் தெரியாத நண்பர். "இந்தியாவின் பெரும் முதலாளிகள் இணைந்து ஒரு சட்ட முன் வரைவை நமது நிதி அமைச்சரின் மூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி குடி நீர் அடிப்படை உரிமைகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். மக்களுக்கு தண்ணீரை வினியோகிக்கும் கடமையை அரசின் கையிலிருந்து தனியாருக்கு மாற்றி விடும். இனி பெட்ரோல் போல் தண்ணீரும் காசிருப்பவருக்கே" என்ற தகவலைப் பகிர்ந்தார்.

அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. "இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? அப்படியெல்லாம் ஒரு சட்டத்தை கொண்டு வந்து விட முடியுமா?" என்று கேள்வி எழுப்பினான். "அந்த மசோதாவின் மீது ஓட்டுப் போட தேவையான எம்பிக் களின் ஆதரவை விலைக்கு வாங்கி விட்டனர்" என்று பதில் வந்தது.

முகிலனால் அந்த நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை. தண்ணீர் - ஜீவ ராசிகளுக்கு பொதுவானதல்லவா?. அதை மனிதனிடமும், உயிர்களிடமிருந்தும் விலக்கினால் உயிர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்காதா? காசுள்ளவன் தான் தண்ணீரை வாங்க முடியுமென்றால், ஒரு வேளை உணவுண்டு உயிர்வாழும் எண்ணற்ற மனிதர்கள் என்ன ஆவார்கள்?  விவசாயம் என்ன ஆகும்? பொதுக் குழாய்களிலிலும், ஏரிகளிலிலும், குளங்களிலும் உள்ள நீரை நம்பி வாழ்பவர் என்ன செய்வார். எண்ணற்ற பறவைகளும் விலங்குகளும் என்ன செய்யும்? பேராசை கொண்ட மனிதன் தண்ணீரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உயிர்களையெல்லாம் அழிக்க நினைக்கிறானே. இது நடக்கக் கூடாது என்று மனதிற்க்குள் நினைத்துக் கொண்டு, "இதை எப்படி தடுப்பது?" என்று கேள்வி கேட்டான்.

"உங்களைப் போலவே நமது குழுவில் உள்ள பலரும் கொந்தளித்து போயுள்ளனர். இந்த செய்தி பல பத்திரிக்கைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் கைகள், அரசின் அதிகாரத்தினால் கட்டப்பட்டுவிட்டது. மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு சென்சிடிவான விசயங்களை தனது அஜெண்டாவில் வைத்துள்ளது. மக்களின் கவனம் எப்போதும் இதன் பக்கம் திரும்பாமலிருக்க, அவை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தப்படும், ஏதாவது ஒரு அரசியல் வாதி தாக்கப்படுவார், ஏதாவது ஒரு வழக்கு விசாரணைக்கு வரும், ஏதாவது ஒரு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்படுவார். புதிய சர்ச்சைக்குறிய அறிவிப்பு, சலுகைகள், ஆணைகள் வெளியிடப்பட்டு அதன் மீது கடுமையான விவாதங்கள் நடக்கும். ஏதாவதோரு சாதிப்பிரச்சினை ஊதிப் பெருக்கப்படும்." என்றார் நண்பர்.

"சரி இதற்கு என்னதான் தீர்வு?" என்றான் முகில்.

"நாளை மாலை நீங்கள் ப்ரீயா?" என்று கேட்டார் நண்பர்.

 - தொடரும் -

Friday, November 13, 2015

மழைக்கால பாதுகாப்பு

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையைக் கொண்டாடியும், கோபித்தும் பல பதிவுகளை எழுதியாகிவிட்டது. மின்சாரமில்லை, மீட்பு நடவடிக்கைகள் இல்லை என்ற குரல்கள் ஒரு புறமும், அரசின் போர்க்கால நடவடிக்கைகள் ஒருபுறமும் நடந்து கொண்டிருக்க, நம்மாலான சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நம்மை பெரும் சிக்கல்களில் இருந்து காக்கும்.


1. மழை தொடரும் என்று வானிலை அறிக்கை தெரிவிப்பதால், தொடர்ந்து விழிப்புடன் இருங்கள். தாழ்வான பகுதியில் இருப்பதை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. இது போன்ற அவசர காலங்களில் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், எரிபொருட்களை ஒன்றிரண்டு வாரத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3. சாலைகளில் தண்ணீர் தேங்கி, சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் இருந்தால், அந்த சாலையை தவிர்திடுங்கள். மழையின் நீரோட்டத்தால் பாலங்கள், சாலைகள் உடைந்து பெரும் குழிகள் இருப்பது மேலிருந்து பார்த்தால் தெரியாது. அது போன்ற இடங்களில் பயனிக்கும் போது வாகனத்துடன் நீரீல் மூழ்கும் அபாயம் உண்டு. அவ்வாறான சூழல்களில் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடவேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முடிந்த அளவு பயணங்களைத் தள்ளிப் போடுவது பாதுகாப்பானது.

4. மரங்கள், மின் கம்பங்கள், கட்டிட வேலை நடக்கும் இடங்களில் வசிப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழையினால் இவை பாதிப்படைத்து விழுவது மட்டுமல்லாமல் பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விடும்.

5. மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ அல்லது தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தாலோ, அருகில் நெருங்க வேண்டாம். உடனடியாக மின் வாரியத்திற்கும், உங்கள் பகுதி உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கவும். வேறு யாரும் நெருங்காமல் இருக்க, சிவப்பு துணிகொண்டும்/ தடுப்புகள் அமைத்தும் எச்சரிக்கை செய்யுங்கள்.

6. மழை காலங்களில் தண்ணீர் நிலத்தில் தேங்கும் போது, நிலத்தில் வாழும் பாம்பு, எலி போன்ற உயிரினங்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வெளியே வரும். கவனமுடன் இருப்பது நல்லது.

7. மழைக் காலங்களில் நிலவும் ஈரப்பதம் மற்றும் தண்ணீரில் பரவும் கிருமிகள் காரணமாக நோய்த்தொற்று ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இவற்றுள் காலரா, டெங்கு போன்ற நோய்களும் அடங்கும்.

8. வீட்டிற்குள் நுழைந்தவுடன் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

9. உணவுப் பண்டங்கள் எளிதில் கெட்டுப் போகும். பாதுகாக்கப்படாத உணவுப்பண்டங்களை தவிர்த்திடுங்கள்.

10. கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரையே பருகுங்கள்.வெளியிடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

11. கொசுக்கள் வளராமல் சுற்றுப் புறத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

திப்புவும் - திருவும்

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி கோவை, பாலக்காடு வரை தனது கட்டுப்பாட்டில் வத்திருந்தார் திப்பு சுல்தான். கோயம்புத்தூரைக் கைப்பற்ற கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய இரண்டு போர்களில் திப்புவிடம் தோல்வியுற்று 'இந்தப்பக்கம் தலைகாட்டுவதில்லை' என்று எழுதிக்கொடுத்து ஓடி விட்டனர். திப்புவின் மரணத்திற்குப் பின் மூன்றாவது போரில் கோயம்பத்தூர் பிரிட்டிஸ்காரர்கள் ஆட்சியின் கீழ் வந்தது.

சரி - திப்புவும்கும் திருவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?.. இருக்கிறது...

திப்பு மைசூரிலிருந்து தனது பரந்த விரிந்த சாம்ராஜ்யத்தை பார்வையிட சாம்ராஜ்நகர், நஞ்சன்கூடு, சத்தியமங்கலம் வழியாக கோவை நோக்கிப் பயணித்த சாலை, புன்செய்ப் புளியம்பட்டியின் வழியே அமைந்தது. அந்த சாலை இன்றும் 'திப்பு சுல்த்தான் சாலை' என்றே அழைக்கப்படுகிறது. அனேகமாக நான் நடந்த முதல் நடை இந்த சாலையிலாகத்தான் இருக்கும். ஏனென்றால் எங்கள் வீட்டின் வாசலை ஒட்டியே திப்பு சுல்தான் சாலை அமைந்துள்ளது. 

தேசிய நெடுஞ்சாலை NH209 திப்புவின் கால் தடத்திலேயே அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, November 12, 2015

ஒரு லைக்... ஒரு லைப் - ரியல் லைப் சிறு கதை

முகிலன் சமீபத்தில் தான் இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் நிறுவத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். கன்னியாகுமரியில் இருந்து வந்தவனுக்கு சென்னை கார்ப்பரேட் வாழ்கை ஆச்சர்யமாகவும் பெருமிதம் தருவதாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஐடி கார்டை அணிந்து கொள்ளும்போதும் அவனுக்குள் ஏதோ மெடலை அணிந்துகொள்வது போன்ற ஒரு அனுபவத்தை உணர்ந்தான். இருக்காதா பின்னே..., இப்படித்தானே படித்து முடித்து வேலைக்குச் சேரும் ஒவ்வொரு இளைஞனும் இந்த 21ஆம் நூற்றாண்டில் உணர்கிறான்.
ஒரு வழியாக ஜாவா டிரெயினிங் முடித்து ஒரு அமெரிக்க மருந்து கம்பெனியின் அப்ளிகேசனை சப்போர்ட் செய்யும் டீமில் இடம்பிடித்து, வெள்ளைக் காலர் பட்டாளத்தில் ஒருவானாகினான். முதல் இரண்டு மூன்று மாதங்களுப்பிறகு வேலை நுணுக்கங்களை ஓரளவு கற்றுக்கொண்டிருந்தான். வேலை மீதிருந்த அதீத பயம் விலகி, ஒரு மாட்டை பழக்கி, பால் கறக்கும் பக்குவத்தை அடைவது போல், சாப்ட்வேர் வேலையையும் பழகிக் கொண்டான்.
அப்ளிகேசனை தெரிந்து கொண்டதால் அவனுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை சீக்கிரமே முடித்துவிட்டு கூகுள் குரோம் உலவியில் அறிவுத்தேடலைத் தொடங்கியிருந்தான். அப்போது எதேச்சையாக தமிழில் எழுதப்பட்ட "உலகப் பொருளாதாரம்" என்ற ஒரு கட்டுரை அவன் கண்ணில் பட்டது. அது 'ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்" என்ற ஆங்கில நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை. அதுவரை அவன் நகர வாழ்க்கை, கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது கொண்டிருந்த பிம்பங்களை அந்த கட்டுரை உடைத்தது. அவனால் அந்த கட்டுரையை நம்ப முடியவில்லை. அதன் தொடர்சியாக சில தரவுகளை கூகுளில் தேடினான். வந்து கொட்டிய தகவலை படித்த முடித்தபோது அவனால் அமைதி கொள்ள முடியவில்லை. அவன் வளர்ந்த விதமும், பணியில் சேர்ந்தபின் தன் வாழ்கை பற்றி அவன் கொண்டிருந்த கனவும் கேள்விக்குள்ளாக்கப் படுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இரண்டொரு நாள் கூகுளின் பக்கம் போகமல் இருந்தான். ஆனால் அவனுடைய தேடல் முற்றுப் பெறாமலும் முழுமையடையாமலும் அவனைத் துளைத்தது. தன் டீம் மேட்டிடம் இதைப்பற்றி தெரிந்து கொள்ள, "எகானமி ஹிட்மேன்" பற்றி தெரியுமா என்று கேள்வி எழுப்பினான். "அது என்ன புதிய அர்னால்டு படமா?" என்று வந்த பதிலில் ஒருவாறு தெளிவு பெற்றான், தன் டீம் மேட் தெளிவாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அவனிடம் அது பற்றிய பேச்சை பின்நாளில் எடுக்கவே இல்லை.
ஆனால் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த டர்புலன்ஸை கட்டுப்படுத்த முடியாமல் அந்த கட்டுரையின் ஆசிரியர் யார் என்று தேடினான். "விடுதலை பாண்டியன், சென்னை" என்ற பெயருடன் அவரின் பேஸ்புக் புரொபைலை பெஸ்ட் பெட்டாக கூகுள் கொண்டுவந்து நிறுத்தியது. அதுவரை பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத அவன், அந்த புரொபைலின் முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள ஒரு அக்கவுண்டை உருவாக்கினான். பிறகு அவர் மிகச்சிறந்த சிந்தனைவாதியென்றும், அவர் இதற்கு முன் இந்திய அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் குறிப்பிடத்தக்க உறுப்பினராக இருந்தாரெனவும், மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிகழவிருந்த பெரும் ஸ்டாக் மார்கெட் சரிவை தன்னுடைய ஆலோசனையின் பேரில் தடுத்து விட்டதாகவும், பின்நாளில் தன்னுடைய வாழ்க்கை - பெரும் பொருளாதாரக் காணல் நீரைச் சுற்றி அலைந்து வீனாகப் போய், ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை உணர்ந்து அது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துருவாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதைக் கடமையாகச் செய்து கொண்டிருப்பதாக அவரது டைம்லைன் போஸ்டுகளும், லிங்க்குகளும் காண்பித்தது.

....தொடரும்.....

Sunday, November 1, 2015

திண்ணைப் பேச்சு

ராமசாமி: இந்த வருச விஜய தசமி திருவிழா சிறப்பா இருந்துச்சைய்யா.. ஆனா வர வர ஊர்வலப் பந்தல் எண்ணிக்கை கொறைஞ்சுட்டே போகுதய்யா... பத்து வருசத்துக்கு முன்னாடி, சாமி ஊர்வலப்பாதையில் பத்தடிக்கொரு பந்தல் இருக்கும்...இப்ப மொத்தமே நாலு பத்தல்தான்..

முனுசாமி: இப்பத்த மக்களுக்கு எங்கைய்யா அதுக்கெல்லாம் நேரம்.. அப்பல்லாம் ஏதாவது ஒரு வேண்டுதல வெச்சு, பந்தல் போட்டுட்டு இருந்தாங்க.. இப்ப வேண்டுதலையும் கம்ப்யூட்டர்லயே முடிச்சிருவாங்களா இருக்கும்...
ராமசாமி: ஆமாமாம்...காலம் மாறிருச்சு.. வாத்தியர் கிருஸ்ண மூர்த்தி வரார்...
கிருஸ்ண மூர்த்தி : என்ன நேரத்திலியே திண்ணைல கூடிட்டீங்களாட்டிருக்கு.. இன்னைக்கு செய்தி யாரோ கோவன்னனு ஒருத்தரை கைது பண்ணிப் போட்டாங்களாமா.. பேப்பர்ல அதான் செய்தி..
முனுசாமி: யாருங்க அவரு... ஏதும் தீவிர வாதிங்களா?
கிருஸ்ண மூர்த்தி: அது வேற கதையய்யா.. சோட்டா ராஜன். இது நம்ம மாதிரி சாதரண ஆள்தான்யா.. மக்கள் கலை இலக்கிய மன்றம் அப்படிங்கற பேர்ல, இடது சாரி கருத்துக்களை ஊர் ஊரா பொய் பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்யறவுரு..
ராமசாமி: நக்சலைட்டா இருக்குமய்யா..
கிருஸ்ண மூர்த்தி: நக்சலைட்டெல்லாம் இல்லைய்யா.. இடது சாரின்னா நக்சலைட்டா.. இவரு சமீத்துல டாஸ்மாக் கடைகளை எதிர்த்து பிரச்சாரம் பண்ணும் போது ஒரு சில பாடல்கள் பாடி பிரச்சாரம் பண்ணியிருக்கார்...பாட்டுல கடைய மூடனும்னு சொன்னதோட இல்லாம, முதலமைச்சரையும் கொஞ்சம் கடிஞ்சு வரிகள் அமைச்சிருக்கார்.. அதனால அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைச்சிருக்காங்களாமா.
முனுசாமி: இப்பதான் போராட்டமெல்லாம் முடிஞ்சு போய், மாட்டுக்கறி பத்தி பேச ஆரம்பிச்சாச்சே.. அப்ப இவர் இன்னும் பிரச்சாரத்தை நிறுத்தலையா?
கிருஸ் : ஆமாம், நீங்க சொல்றது சரிதான்.. இவர் பாடுனது இரண்டு மூனு மாசத்துக்கு முன்னாடி.. இப்ப ஏதோ காரணத்துக்காக இவரைப் புடிச்சு உள்ள போட்டிருக்காங்க..
ராமசாமி: இந்த அரசியல் வாதிகளுக்கு ஏதாவது பிரச்சினைன்னா, ரோட்ல போறவன புடிச்சி வெச்சி பிரச்சினையை திசை திருப்பியுட்டுறுவானக..
கிருஸ்: இருக்குமய்யா.. இருக்கும்.. நேத்து தான் இந்த முதலமைச்சரோட தோழி சசிகலா ஏதோ பெரிய தியேட்டரை வெலைக்கு வாங்குச்சாமா.. அது பத்திரிக்கையிலும், கலைஞரும் அறிக்கை விட்டு எழுதியிருக்காங்க.. ஒரு வேளை அதை மக்கள்கிட்ட இருந்து திசை திருப்ப இப்படி செய்றாங்களோ என்னமோ...
ராமசாமி: இருக்கும்.. இருக்கும்..நமக்கெதுக்கு ராஜங்க ரகசியமெல்லாம்..தேசிய பாதுகாப்பு சம்பந்தமானதுன்னு வேற சொல்ற.. எதுக்கு அந்த பாதுகாக்கப்பட்ட தேசிய சொத்தை பற்றி நாம பேசணும்...
கிருஸ்: ஆமாம்..நேரமாகுது.. வீட்டுக்கு கறி ஒரு கிலோ எடுத்துக் குடுக்கணும், பொறவு வரேன்.
ராமசாமி: சரி சரி.. நானும் கெளம்பிறேன். முனுசாமி, அப்படியே சைக்கிள்ள என்னைய அந்த ரோட்டுக் கடைவரைக்கும் எறக்கி விட்டுடு.