முகிலனுக்கு இது மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தான் இதுவரை செலவிட்ட நேரம் வீண்போகவில்லை என்பதை அறிந்தும், கண்டுணர்ந்த உண்மைகள் ஆனித்தரமானவை என்பதையும் நினைத்துப் புத்துணர்ச்சி அடைந்தான். தன் ஏனைய நண்பர்கள், பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், அவனுக்கு முகமறியாமல் இயங்கும் இந்த சமூக இணைப்பை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இருந்தது. ஆனால் இன்று அந்த எண்ணங்களெல்லாம் பொய்யாகும் நேரம் வந்து விட்டதாக உணர்ந்தான்.
இதுபோன்ற மனிதரிடம் நட்பாகவும், தொடர்ந்து அவரது சிந்தனைகளை படிக்கவும், அவரது பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு லைக் போட்டு வைத்தான். அவ்வப்போது அந்த பக்கத்தில் கருத்துக்களையும் பதிவு செய்துவந்தான். அதிலிருந்து திடீரென அவனக்கு நட்புக் கோரிக்கைகள் குவிந்தது.
நாட்டின் விலைவாசி உயர்வு, ஒவ்வொரு மனிதனையும் பாதித்தது. அந்த பாதிப்பு சாப்ட்வேர் முகிலனையும் பாதித்தது. திடீரென உயரும் பெட்ரோல் விலை, பயணச்செலவை மட்டும் அதிகம் செய்யவில்லை. ஹோட்டல் சாப்பாட்டிலிருந்து, டூத் பேஸ்டு, காபி வரை கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு புறம் ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறும் இந்த பொருளாதாரச் சூழல் ஒரு சட்டப்படி நடக்கும் கொள்ளை என்பதாக உணர்ந்தான்.
அந்த நேரத்தில் அவனது பேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் "ஹை" என்று ஒரு செய்தி வந்தது. அது அவனைப் போலவே பேஸ்புக்கில் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் குழுவில் இருக்கும் முகம் தெரியாத நண்பர். "இந்தியாவின் பெரும் முதலாளிகள் இணைந்து ஒரு சட்ட முன் வரைவை நமது நிதி அமைச்சரின் மூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி குடி நீர் அடிப்படை உரிமைகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். மக்களுக்கு தண்ணீரை வினியோகிக்கும் கடமையை அரசின் கையிலிருந்து தனியாருக்கு மாற்றி விடும். இனி பெட்ரோல் போல் தண்ணீரும் காசிருப்பவருக்கே" என்ற தகவலைப் பகிர்ந்தார்.
அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. "இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? அப்படியெல்லாம் ஒரு சட்டத்தை கொண்டு வந்து விட முடியுமா?" என்று கேள்வி எழுப்பினான். "அந்த மசோதாவின் மீது ஓட்டுப் போட தேவையான எம்பிக் களின் ஆதரவை விலைக்கு வாங்கி விட்டனர்" என்று பதில் வந்தது.
முகிலனால் அந்த நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை. தண்ணீர் - ஜீவ ராசிகளுக்கு பொதுவானதல்லவா?. அதை மனிதனிடமும், உயிர்களிடமிருந்தும் விலக்கினால் உயிர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்காதா? காசுள்ளவன் தான் தண்ணீரை வாங்க முடியுமென்றால், ஒரு வேளை உணவுண்டு உயிர்வாழும் எண்ணற்ற மனிதர்கள் என்ன ஆவார்கள்? விவசாயம் என்ன ஆகும்? பொதுக் குழாய்களிலிலும், ஏரிகளிலிலும், குளங்களிலும் உள்ள நீரை நம்பி வாழ்பவர் என்ன செய்வார். எண்ணற்ற பறவைகளும் விலங்குகளும் என்ன செய்யும்? பேராசை கொண்ட மனிதன் தண்ணீரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உயிர்களையெல்லாம் அழிக்க நினைக்கிறானே. இது நடக்கக் கூடாது என்று மனதிற்க்குள் நினைத்துக் கொண்டு, "இதை எப்படி தடுப்பது?" என்று கேள்வி கேட்டான்.
"உங்களைப் போலவே நமது குழுவில் உள்ள பலரும் கொந்தளித்து போயுள்ளனர். இந்த செய்தி பல பத்திரிக்கைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் கைகள், அரசின் அதிகாரத்தினால் கட்டப்பட்டுவிட்டது. மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு சென்சிடிவான விசயங்களை தனது அஜெண்டாவில் வைத்துள்ளது. மக்களின் கவனம் எப்போதும் இதன் பக்கம் திரும்பாமலிருக்க, அவை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தப்படும், ஏதாவது ஒரு அரசியல் வாதி தாக்கப்படுவார், ஏதாவது ஒரு வழக்கு விசாரணைக்கு வரும், ஏதாவது ஒரு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்படுவார். புதிய சர்ச்சைக்குறிய அறிவிப்பு, சலுகைகள், ஆணைகள் வெளியிடப்பட்டு அதன் மீது கடுமையான விவாதங்கள் நடக்கும். ஏதாவதோரு சாதிப்பிரச்சினை ஊதிப் பெருக்கப்படும்." என்றார் நண்பர்.
"சரி இதற்கு என்னதான் தீர்வு?" என்றான் முகில்.
"நாளை மாலை நீங்கள் ப்ரீயா?" என்று கேட்டார் நண்பர்.
- தொடரும் -
- தொடரும் -
தொடர்கிறோம்
ReplyDelete