Friday, November 28, 2008

இந்திய அரசே.. இந்தியர்களை காப்பாற்று

மும்மையில் தீவிர வாதத்தின் பிடியில் சிக்கி உயிரிழந்த அனைத்து மனிதர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள். பல உயிர்களை காப்பற்ற தங்கள் உயிரை கேடையமாக்கிய காவலர்கள், இராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதியின் பணியாளர்களுக்கு எமது இரங்கல் மற்றும் வணக்கங்கள்.

இழப்பின் கொடுமை தமிழினத்தைவிட வேறு எந்த இனமும் அதிகமாக அனுபவித்திருக்காது. அந்த அடிப்படையில் இந்திய அரசை இவ்வாறு கோருவதில் எமக்கே அதிக கடமை இருக்கிறது.

"இந்தியர்களை பாது காக்க இந்திய கடற்படை மற்றும் அனைத்து படைகளையும் பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு ஒரு நாட்டுக்கு வாடகைகு அனுப்பியதால்தான் இந்த விளைவுகள் என்பதை சொல்ல இந்தியன் என்ற தகுதி போதுமென்றே நினைக்கிறேன்."

Friday, November 7, 2008

அரசியல் சதுரங்கம் 1

ஆட்சி, பதவி, மரியாதை, ஒப்பத்தங்கள் என்ற பல பரிமானங்களில் பயணம் செய்யும் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் விமர்சனம் செய்யும் தகுதி தனக்கில்லை என்றாலும் அவர்களின் செயல்கள் ஏதாவது ஒருவகையில் தன்னை பாதிக்கவே செய்கிறது என்ற பாமரனின் குரல் பெரும்பாலான நேரங்களில் கவனிக்கப் படுவதில்லை.

தி மு க - கலைஞர்

தன் இளம் வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு திராவிட கொள்கைகளையும், பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டையும் மக்களிடம் கொண்டுசேர்த்ததில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார் என்பது கழகம் அவருக்கு கொடுத்த பதவிகள் சொல்லும். அடிமட்ட தொண்டனில் தொடங்கி தலைமை பொறுப்பை தன்வசப் படுத்த, அற்பணிப்பை விட அவரின் அரசியல் சாமர்த்தியம் முக்கிய காரணம். போரில் போர் தர்மங்கள் எப்படியோ, அதே போல் அரசியலில் தர்மம் இருக்கக் கூடாது என்பதுதான் அரசியல் தர்மம். அன்று இருந்த கலைஞர் தான் இன்றும் இருக்கிறார் என்றால் அவரிடம் சில கேள்விகள்,

1. அறியாமை இருளகற்ற தொடங்கிய இயக்கத்தின் தலைவர், மக்களின் அறியாமையைய் தன் ஆட்சிக்கு படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டது, பகுத்தறிவா?

உதாரணம்:

1. இலவச தொலைக்காட்சியினால் ஒரு குடும்பத்தை வருமையில் இருந்து உயர்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு பகுத்தறிவா?.

2. ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தனிமனிதனின் வருமானம் ஒரு ரூபாய் அரிசி வாங்கும் அளவிலேயே வைத்திருப்பதுதான் பகுத்தறிவு கோட்பாடா?

3. பெரியாரின் கொள்கைகளை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் இத்தனை ஆண்டுகள் பரப்பியும் சாதியையும், சாமியின் பெயரால் நடக்கும் கூத்துக்களையும் ஏன் ஒழிக்கமுடியவில்லை?

4. பொதுவுடமை தத்துவத்தில் வளர்ந்த இயக்கத்தில் எத்தனை முதலாலிகள், மக்கள் வரிப்பணத்தை தின்றுகொண்டு அமைச்சர் பதவி அனுபவிக்கிறார்கள் என்று தெரியுமா, தலைவருக்கு?

5. மக்களாட்சி தத்துவத்தை முன்னெடுக்கும் இயக்கம் மன்னராட்சி முறைபோல் வாரிசுக்கு பட்டம் கட்டுவது ஏன்? ஸ்டாலினும், அழகிரியும், கணிமொழியும் இயக்கத்துக்காக உழைத்தவர் என்றால் கழகத்தில் வேறு யாருமே உழைக்கவில்லையா? அப்படியானால் உழைக்காத தொண்டர்களை உருவாக்கியது யார்?

6. உங்களைப்போல் அடிமட்ட தொண்டன் இன்று தலைமை பதவிக்கு வரக்கூடிய சூழலை (உங்கள் குடும்பத்தை தவிற)இயக்கம் வைத்திருக்கிறதா?

இவையெல்லாம் அடிப்படை கோட்பாட்டின் கீழ் அமைந்த கேள்விகள். அன்றாட அரசியலில் அர்த்தம் புரியாம் தவிக்கும் பாமரனின் மனதில் ஆயிரம் கேள்விகள்.