Sunday, November 30, 2014

என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 4

(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)

4. திருவள்ளுவரின் தெளிப்பு நீர்ப்பாசனம்!
----------------------------------------------

‘மன்னன், எப்படி மக்களைக் காப்பாற்றுகிறானோ, அதேபோல வானத்தில் இருந்து சுரக்கும் மழை மக்களைக் காப்பாற்றுகிறது’ என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் ‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என்று 1,800 ஆண்டுகளுக்கு முன்னரே சிலப்பதிகாரத்தில் பாடி வைத்திருக்கிறார் இளங்கோவடிகள்.

சிலப்பதிகாரம் எழுதப்படுவதற்கு முன்னரே, ‘வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந் தற்று’ (வளரக்கூடிய பயிருக்கு மேல் இருந்து நீர் தெறித்ததுபோல) என, 'அவையறிதல்' அதிகாரத்தில் சொல்லி வைத்திருக்கிறார், திருக்குறளைப் படைத்த வள்ளுவர்.

சொட்டு நீர், தெளிப்பு நீர் என்று நீர்ச் சிக்கனம் பற்றிப் பேசுபவர்களுக்கு இந்தக் குறள் கைக் கொடுக்கும். அதேபோல, களையைக் கட்டுப்படுத்திய பிறகுதான் நீர்ப் பாய்ச்ச வேண்டும் என்றும் சொல்லி வைத்திருக்கிறார் வள்ளுவர். ஆக, நீரை மேலிருந்து சொரிந்தால், நிலத்தில் நீர் இறங்கினால், நிலம் முழுவதிலும் உள்ள செடி - கொடிகள் செழிக்கும். அங்கு, பல்லுயிர் ஓம்பும். அதனால் வாழ்க்கை மலரும். இப்படிப்பட்ட வாழும் கலை, 3,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது.

சோழ மண்டலத்தில் கி.பி.900 முதல் கி.பி.1,200-ம் ஆண்டு வரைக்கும் உள்ள இடைப்பட்ட காலங்களில், மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 4,800 முதல் 7,200 கிலோ வரை நெல் விளைந்து இருக்கிறதாம். தென்னாற்காடு மாவட்டத்தில் கி.பி.1,100-ம் ஆண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில், மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 5,800 கிலோ நெல் விளைந்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. ராமநாதபுரத்தில் கி.பி.1325-ம் ஆண்டு செதுக்கப்பட்டு இருக்கும் ஒரு கல்வெட்டில், மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 8,000 கிலோ விளைந்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, கரிகாற்சோழன் காலத்தில் மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 4,200 கிலோ நெல் அறுவடை செய்துள்ளதாக சொல்லப்பட்டு இருக்கிறது. பாரதப்போர் நடந்த காலகட்டத்தில், 'உதியஞ்சேரலாதன் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் சாப்பாடு கொடுத்தான்' என்று முடிநாகராயர் பாடியிருக்கிறார். இவையெல்லாம் நமது சரித்திரமும் இலக்கியங்களும் கூறும் தகவல்கள்.

ஆனால் இன்றைய நிலை?

பச்சைப் புரட்சி காலத்தில் இருந்தே (1965) அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு... என அனைத்தையும் நாம் இறக்குமதி செய்துகொண்டு இருக்கிறோம். இயற்கையிலேயே சத்தோடுகூடிய தானியங்கள் எல்லாம் கண்ணில்கூட சிக்காமல் மறைந்துகொண்டு இருக்கின்றன. ஏரிகள் முள் காடாகவும் (விருதுநகர் மாவட்டம் நீங்கலாக), நிலங்கள் சரள் மேடாகவும் அல்லது களர் பாலையாகவும் மாறி வருகின்றன.

இயேசு பிறப்பதற்கு 3,700 ஆண்டுகளுக்கு முன்பே உழவாண்மை செழித்து இருந்த பூமி இது. இந்த பூமியில் இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கலாசாரம், நம் வாழ்வாதாரத்தையெல்லாம் சிதைத்துவிட்டது. நம்மவர்களில் பலரும் பெருமையோடு பேசிக்கொண்டு இருக்கும் மேற்குலக நாடுகளின் உழவு பற்றிய ஆராய்ச்சி, மிக சமீபத்திய காலத்தைச் சேர்ந்ததுதான்.கி.பி.1563-ம் ஆண்டில் பேலிசி என்பவர், ‘செடிகளைக் கொளுத்தும்போது கிடைக்கின்ற சாம்பல்தான், செடிகள் மண்ணில் இருந்து எடுத்தவை’ என்று எழுதினார்.

கி.பி.1561 முதல் 1624-ம் ஆண்டு வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஃபிரான்சிஸ் பேக்கன், ‘தண்ணீர்தான் செடிக்கு ஆகாரம்’ என்றார். அதே காலகட்டத்தில் ஜான் பேப்டிஸ்ட்ஸ் ஹெல்மான் என்ற மருத்துவரும் இதை ஆமோதித்தார். கி.பி.1627 முதல் கி.பி.1691-ம் ஆண்டு வரை வாழ்ந்த ராபர்ட் போயல், ‘மண்ணில் உள்ள தாதுக்களும் காற்றில் உள்ள கரிக்காற்றும் செடி வளர்ச்சிக்குத் தேவை’ என்ற முந்தைய முடிவுகளோடு, ‘செடி வளர்ச்சிக்கு உப்பு, சாராயம், மண், எண்ணெய் எல்லாம் தேவைப்படுகிறது. அவை தண்ணீரிலேயே காணப்படுகின்றன’ என்று சொல்லி இருக்கிறார்.ஜெர்மானிய விஞ்ஞானி, ஜஸ்டஸ் வான் லைபிக் (Justus von Liebig) வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில் இருந்துதான் சிக்கலே தொடங்கி இருக்கிறது. லைபிக், 1840-ம் ஆண்டில் வெளியிட்ட ‘உழவாண்மை வேதியியல்’ என்ற புத்தகத்தில், ‘கரியமிலக் காற்று, மண்ணில் உள்ள மட்கில் இருந்து வரவில்லை; காற்றில் இருந்து வருகிறது. சேற்றில் இருந்து சில வேதிப்பொருட்கள் செடிக்குத் தேவைப்படுகின்றன. எந்த வேதிப்பொருள் குறைவாக இருக்கிறதோ... அதுவே விளைச்சலைத் தீர்மானிக்கிறது’ என்று பச்சைப் பொய் ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அவர்தான், மண்வளத்தைக் கெடுத்துக் கொண்டு இருக்கும் ‘N.P.K.’ (தழை, மணி, சாம்பல் சத்து) என்று பெருமையாகப் பேசப்படும் விஷயத்துக்கு வித்திட்டவர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த மெக்காலே பிரபுவின் வாரிசுகள், ரசாயனங்களை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்தனர். தவிர, ‘மாவட்ட சாகுபடித் திட்டம்’ என்று தொடங்கி, 30 ஆண்டுகளில் இந்தியக் கடலோரங்களில் 100 ரசாயனத் தொழிற்சாலைகள் உரங்களை உற்பத்தி செய்து குவித்தன. விளைவு... கணக்கிலடங்கா நோய்கள், இயற்கை மாசுபாடுகள், நாடெங்கிலும் வறுமை, பட்டினிச் சாவுகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நின்று, கவனித்து சரியான பாதையைத் தேர்வுசெய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது.