Monday, August 31, 2015

மொழியும் உரிமையும்

சமூக ஊடகங்களில் நடக்கும் இந்தித் திணிப்புப் பற்றிய விவதங்களும் அதன் அடுத்த நகர்வும் சரியான பாதையில் நகர்வதாகவே நான் நினைக்கிறேன். இது தொடர்பாக ஒரு கவன ஈர்ப்பு முன்னெடுப்பை "மொழி சமத்துவத்தை" முன்வைக்கும் ஆர்வலர்கள் டிவிட்டரில் எழுகுறல் குறிச்சொற்களை (டிரெண்டிங் ஹாஸ் டாக்) பயன்படுத்திக் கொண்டனர். இது அரசின் பக்கம் பெரிய மாற்றத்தை உடனே கொண்டு வராவிட்டாலும், மக்களிடையே இது தொடர்பான கருத்தாடல்களை உருவாக்கியது, பரவலாக இது குறித்து மக்கள் விவாதித்தனர். இதன் அடுத்த படியாகத் தமிழ் இந்து நாளிதழ் பிஏ கிருஸ்ணன் என்பவரின் கட்டுரையை அச்சில் வெளியிட்டு மின்ணூடகம் தாண்டி கருத்து விவாதத்தை மக்களிடம் கொண்டு சேத்தது. தன் வேலையுண்டு, தானுண்டு என்று இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு சமூக, மொழி அக்கறை கிடையாது என்ற குற்றச்சாட்டை இது போன்ற நிகழ்வுகள் பொய் என்று நிரூபித்துச் செல்கிறது.

எதிர்க் கருத்தை முன் வைத்தாலும், பி ஏ கிருஸ்ணன் விவாதத்தைப் பரவலாக்கியிருப்பதால், அவர் நன்றி கூறப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. அவரின் கட்டுரை தொடர்பாக பல்வேறு ஊடகங்களும் அறிஞர்களும் கருத்து தெரிவித்து கட்டுரைகள் வெளியிட்டு வரும் நிலையில் நாம் இந்த கருத்தாடல்களில் நமக்கு கிடைக்கும் செய்தியை உள்வாங்கிக் கொள்ள இந்த கட்டுரை உ தவும் என்றே நம்புகின்றேன்.

அவர் தனது முதல் கட்டுரையில் பின்வரும் வாதத்தை வைக்கிறார்


  1. அரசியல் சட்டத்தின் எட்டாவது பிரிவில் இருக்கும் 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று சற்று எள்ளலுடன் குறிப்பிடுகிறார்.
  2. இந்தி திணிப்பு இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கும்.
  3. தன்னுடைய முப்பதாண்டு அரசு வேலையில், எந்த இந்தி பேசும் மாநிலத்திற்கும் இந்தியின் மூலம் கடிதம் எழுதியதில்லை. ஆங்கிலத்தில் எழுதி இந்தி மொழி பெயற்பிற்கு அனுப்பிவிட்டு அது வந்த பின் இந்தியில் கையெழுத்திட்டு அனுப்பிவிடுவேன் என்று குறிப்பிடுகிறார்.
  4. மொழியுரிமை போராட்டக் காரர்களின் கோரிக்கையை சோதிக்க ஏன் மாநிலங்களில்(குறிப்பாக தமிழ்நாட்டில்) பல்வேறு மொழி பேசும் மக்கள் இருக்கும் இடத்தில், இங்கு பேசும் மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கூடாது? என்று வினவி, இது சாத்தியமே இல்லாத ஒரு கோரிக்கை என்று முடிக்கிறார்.
  5. இந்தி நம்மிடம் நுழைந்து ரத்தத்தை கொதிக்க வைப்பதாகவும், தான் ஒரு வங்கிப்படிவத்தில் இந்தியை மட்டுமே பார்த்துக் கொதித்தாகவும் குறிப்பிடுகிறார்.
  6. மாநிலங்களில் செயல்படும் அரசு அலுவலகங்களில், மாநில மொழி பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டுப்பாடுமில்லை என்றும், மொழிப் பிரச்சினைகளுக்குத் தொழில் நுட்பத்தின் துணையுடன் தீர்வு காணலாம் என்கிறார் (இருபத்தி இரண்டு மொழிகளையும் ஆட்சிமொழியாக்கும் சிக்கலைத் தவிர).
  7. ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்க ஒத்துக்கொள்பவர்கள், இந்தி ஆட்சி மொழியாக இருப்பது, தங்கள் இன மானத்திற்கு ஊறு விளைவிப்பதாக (தமிழ்) மொழி ஆர்வலர்கள் கருதுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.
  8. 22 மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 1968ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உயிர் கொடுக்கப் போராளிகள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்பார்களா? - என்கிறார்.
  9. அரசியல் சட்டத்தின் பாகம் 17ல் இருக்கும் பிரிவுகளில் இந்தியை பரவலான ஆட்சி மொழியாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர, 'மொழி மானப் புலிகள்' தங்கள் அரசியில் பிரதிநிதிகளை நிர்பந்திக்க வேண்டுமென்றும், பெரும்பான்மை கிடைக்காததால் அவர்கள் நாட்டிலிருந்து பிரிந்து போகக் கோரிக்கை விடுப்பார்கள் என்கிறார்.


திரு கிருஸ்ணன் அவர்களின் கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டியவை, ஆனால் அவர் அதை முன் வைக்கும் முறையில் ஒரு எதிர்த் தாக்குதலை எதிர்பார்த்துக் காய் நகர்த்தியிருப்பது தெரியும். மொழியுரிமை கோருபவர்களை 'புலிகள்; என்றும் 'பிரிவினை வாதிகள்' என்றும் குறிப்பிடுகிறார். நாம் அவரைக் குறை பட்டுக் கொள்வதற்கு பதிலாக, சோறு போட்ட மத்திய அரசிற்கு நன்றிக்கடன் செலுத்துவதாக எடுத்துக் கொண்டு அவர் கருத்தை ஆராயவேண்டும்.

முதலில் மொழி என்பது ஒரு தொடர்பாடலுக்கு உதவும் கருவி என்பதும், எந்த மொழியை உரையாடுபவர் பேச வேண்டும் என்று ஒரு தரப்பு சொல்வது, ஒன்று அறியாமை அல்லது சர்வாதிகாரம். மொழி என்பது புலமை, எல்லா மொழிகளும் எல்லோருக்கும் வந்துவிடாது, கற்றுக் கொண்டாலும். அது போன்றதொரு சூழலில் மத்திய அரசு எப்படி சூலூரில் இருக்கும் விவசாயிக்கு இந்தியில் விவசாயக் கடன் பற்றிய தகவலைச் சொல்லி அவருக்கு உதவ முடியும்?.

இந்த சிக்கலுக்கு மற்ற நாடுகளை உதாரணமாக எடுத்துக்கொண்டு அங்கு இது போன்ற சிக்கலுக்குத் தீர்வு எப்படி கண்டுள்ளனர் என்பதை தெரிந்து கொண்டால், அது இந்தியாவில் சாத்தியமா என்பதை விளங்கிக் கொள்ளலாம். அமெரிக்காவைப் பொருத்தவரை ஆங்கிலம் பேசுபவர்களும், ஸ்பானிஸ் பேசுபவர்களும் அதிகம். அதனால் எந்தச் சேவை வழங்கும் நிறுவனங்களும் பயணாளருக்கு இரண்டு மொழிகளில், எந்த மொழியில் தொடர்பாடல்கள் வேண்டும் என்பதைக் கேட்டுக்கொண்டு அந்த மொழியிலேயே சேவை வழங்குவர். பள்ளிகள் இன்னும் ஒரு படி மேலே போய், உலகத்தில் உள்ள எந்த மொழியில் வேண்டுமானாலும் பிள்ளைகளின் கல்வி நிலைபற்றி பெற்றோருக்குத் தகவல் அனுப்புவார்கள். நம் மொழித் தேர்வு தமிழாக குறிப்பிட்டால், மொழிபெயர்ப்புக் கருவிகளைப் பயன்படுத்திக் கடிதங்கள் வரைந்து அனுப்புவார்கள்.

இங்கு நீங்கள் தெரிந்துகொள்வது, சேவையோ, தகவலோ தான் முக்கியத்துவம் பெறுகிறது, மொழியல்ல. ஆனால் இந்தியாவில் மொழித் தேர்வும், உரிமையும் ஒரு பிரச்சனையாக உருவாக்கப்படுகிறது. இந்த உரிமையை எதிர்ப்பவர்களும், குழப்பத்தை உண்டு செய்பவர்களும் யாரென்று பார்த்தால், அதே ஆதிக்க வர்க்கம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இவர்களுக்கு எப்போதுமே, மற்றவர்களின் உரிமையை தாங்கள்தான் வைத்துக் கொண்டிருப்பதாகவும், வேண்டியவர்கள் தங்களிடம் போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் இழந்துவிட்ட அதிகாரத்தை, இருப்பது போல் மற்றவரிடம் காட்டிக்கொண்டு எல்லோரையும் தன்னிடம் கையேந்த வைக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில் நாம் இவர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியதில்லை, மாறாக அரசியல் சட்டத்தில் மாற்றம் ஏற்ப்படுத்திக் கொள்ள தேவையான முயற்சிகளையும், உரிமைப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். மொழிச் சமத்தும் சாத்தியம் என்பதை நாம் இவர்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் இவர்கள் எழுப்பும் கேள்விகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மொழிப்போரை தன் அரசியலாகக் கொண்ட திராவிடக் கட்சிகளின் பிரதிநிதிகள், பாரளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டும். தனி நபர் மசோதா கொண்டு வந்த திருச்சி சிவாவும், கனிமொழியும் ஏன் ஒரு சட்டத் திருத்த வரைவை முன்வைக்கக்கூடாது. அதே போல் நாம் அதிமுக வையும் நிர்பந்திக்க வேண்டும். 

கிருஸ்னனின் கட்டுரையை வெளியிட்ட, பல நாட்கள் ஆங்கிலத்திலேயே வந்துகொண்டிருந்த தி இந்து, இன்று பொது சனங்களையும் சேரவேண்டும் என்று 'தமிழ் இந்து' வாக வடிவெடுக்கும் காலமிது. நம் நகர்வுகள் அரசியல் கட்டமைப்பிற்குட்பட்டதாகவும், வெற்றியளிக்கக் கூடியதாகவும் திட்டமிட்டு நகரவேண்டும்.

Friday, August 28, 2015

பட்டேல்கள் சொல்லும் சேதி

இப்போது நடந்துவரும் பட்டேல்களின் இதர பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் சமூகநீதியை மீளாய்வுக்குட்படுத்தும் நிலை என்ற வட்டத்தைத் தாண்டி அது நவீன உலக ஒழுங்கையும், மாறிவரும் பொருளாதார சூழலையும் சார்ந்து நிற்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. வைரம், ஆடை உற்பத்தி, மளிகை மற்றும் இன்னபிற வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பட்டேல்கள் இன்று வியாபாரம் நலிவடைந்த பின் பிழைப்பிற்கு அரசு வேலைகளையும், தனியார் துறையில் வேலை வாய்ப்பளிக்கும் கல்வியையும் தேடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது நாடுகடைப்பிடித்துவரும் பொருளாதாரக் கொள்கையின் விளைவின் ஆரம்பப் புள்ளியே. இது போன்ற சூழல் மற்ற நாடுகளிலும் வந்தது. ஆனால் அங்கு வந்த பாதிப்புகள் அரசை நோக்கி இட ஒதுக்கீடு கேட்காமல் அரசை வேறு வகையான நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்தின. அமெரிக்கா போன்ற நாடுகள் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வரும் அந்நியர்கள் மீதான கட்டுப்பாடாகவும், அமெரிக்க உற்பத்திச் சந்தைக்கு முக்கியத்துவமும், சந்தையை ஊக்குவிக்க பல்வேறு வரிச்சலுகைகளையும் நோக்கித் திருப்பியது. இது அமெரிக்காவின் மிக நுண்ணிய வர்க்க வித்தியாசத்திற்கு உகந்த செயல்பாடாக இருந்தது. 


ஆனால் இந்தியா போன்ற நீண்ட வர்க்க இடைவெளி உள்ள நாட்டில் ஒருகாலத்தில் முதலாளிகளாக இருந்தவர்களை இன்று ஒரு வேலையாளுக்கான சலுகைகளை தேடி ஓட நிர்ப்பந்திக்கிறது. இட ஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள செலுத்துகிறது. 

மனிதரை மனிதன் சார்ந்து இருந்த சமூக பொருளாதார சூழல், இயந்திரம் சார்ந்த உறப்பத்தியை நோக்கிச் சென்றதன் விழைவுகள் தான் இப்போது நாம் பார்ப்பது. இந்தச் சிக்கலுக்கு இட ஒதுக்கீடு ஒரு தற்காலிக தீர்வாகத்தான் இருக்க முடியும் அல்லது காலப் போக்கில் ஒரு தீர்வாக இருக்க முடியாது என்ற புரிதலையும் நமக்கு ஏற்படுத்தலாம். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இன்னும் முழுமையாகக் காலடி எடுத்து வைக்காத நிலையிலேயே உள்ளூர் வணிகர்கள் உலக சந்தை மாற்றத்தினால் பாதிக்கப் படும்போது, பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை இந்திய நகரமெங்கும் விரித்த பிறகு ஏறக்குறைய எல்லலா உள்ளூர் வணிகர்களும் வேலைக்காரர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரகர்களாகவும் மாறும் சூழல் ஏற்படும். இயந்திரமயமான சூழலில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் தேவையும் குறைந்து போகும். அதுபோன்ற ஒரு சூழலில் மக்கள், அரசை இது போன்ற பல நெருக்குதல்களுக்கு உட்படுத்துவார்கள். 

அடுத்த நிலையாக நாடு உலக அரசியல் பொருளாதாரத்தில் எந்த ஆளுமையும் செய்யாத ஒரு நிலையில் இருந்தால், தன் வளங்களை இழந்தது போக, தன் மக்களை பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் பலி கொடுப்பதைத் தவிர வேறெந்த வழியுமில்லாமல் தனித்து விடப்படும். ஒரு வேளை சென்னைக்கும், பெங்களூருக்கும் வேலை தேட தேவையான கல்விக்குக் கேட்கும் இட ஒதுக்கீட்டை, கலிபோர்னியாவிற்க்கும், நியூயார்க்கிற்க்கும் வேலைதேடும் தளத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராடும் நிலை வரலாம். அந்தப் போராட்டத்தில் சாதி பேதம் ஏதும் இருக்காது என்றும் நம்பலாம். 

இது போன்ற சிக்கலுக்கு, எல்லாத் தரப்பு மக்களையும் அடக்கிய அரசியல் பொருளாதார கட்டமைப்பை நாடு உருவாக்கிக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால் இது ஒரு சுயசார்புக் கொள்கையை நோக்கி நகரும் வட்டைப்பாதையே. பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மக்களிடம் மட்டுமே கொண்டு சேர்க்கும் கொள்கைகள் மாறி அது சமுதாயத்தின் பல்வேறுபட்ட மக்களின் தொழில்கள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையை நோக்கிய ஒன்றாகவும் இருக்கலாம்.தேவைக்கேற்ற உற்பத்தி, பொருளுக்கேற்ற மதிப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படாமல் இருக்கும் காலமாக அது இருக்கலாம்.