கடந்த இருபதாண்டுகளில் பொருளாதார தாரளமயமாக்கல் மூலம் நமது மனிதவளத்தை கணினித்துறையில் பயன்படுத்தி வெற்றிகண்டது நமது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பெரும் சாதனை எனலாம். ஆனால் அந்த வெற்றியொன்றே நமது வருங்கால சந்ததியினருக்கும் பயணளிக்குமா? என்றால் நிச்சயம் இல்லை. வற்றாத மனிதவளத்தை வைத்து நம் நாடு தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பேற்படுத்தும் புதிய துறைகளைக் கண்டெடுத்து அதில் முதலீடு செய்யவேண்டும். அப்படி ஒரு வாய்ப்பைப் பற்றியே இங்கு பார்க்கப்போகிறோம்.
இலன் மஸ்க், அறிவியலின் மூலம் மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தான் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லும் பெரும் கனவுகள் கொண்ட மனிதர். SpaceX என்ற வின்கலன் செலுத்தும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம், Tesla என்ற மின்னாற்றலில் இயங்கும் கார்களைத் தயாரிக்கும் நிறுவனம், SolarCity என்ற சூரிய ஒளியில் மின்சாரம் உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றை உருவாக்கி நடத்தி வருபவர். பேரிஸ் சுற்றுச் சூழல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் உலக வெப்பமயமாதல் மற்றும் சூழலுக்கு கேடு விளைவிக்காத ஆற்றல் சக்திகளைப் பற்றி பெரும் விவாதங்களை உருவாக்கியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த மஸ்க், டிரம்பின் பேரிஸ் ஒப்பந்தத்தைக் கைவிடும் முடிவிற்குப் பின்னர் அதை எதிர்த்து ஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேரினார்.
நிலக்கரி, பெட்ரோல், மீத்தேன் எரிகாற்று போன்ற பூமியிலிருந்து கிடைக்கும் அத்தனை சக்தி மூலங்களும் அளவில் மட்டுப்பட்டவை. அவை எப்போதுமே கிடைப்பவையல்ல. எடுக்க எடுக்க குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலும் காலியாகிவிடக்கூடியவை. அவற்றை எடுப்பதால் பூமி எவ்வாறு பிற்காலத்தில் பாதிக்கப்படும் என்ற தொலை நோக்கு ஆராய்ச்சியெல்லாம் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. சூழலைப் பாதிக்கும் இது போன்ற ஆற்றல் மூலங்களை விட்டு விட்டு, எளிய மட்டற்ற ஆற்றல் மூலங்களான சூரிய ஒளி, வெப்பம், காற்று , கடலலைகள் போன்ற சக்திகளில் முற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள் நாட்டம் செழுத்த ஆரம்பித்து விட்டது. சுவீடன் தனது ஆற்றல் தேவை முழுமையையும், சூரிய ஒளி மற்றும் காற்றாலையின் மூலம் உருவாக்கிக் கொள்கிறது.
பெரும்பாலான நமது எண்ணைப் பயன்பாடு வாகனங்களில் பயன்படுத்தப்படும் டீசலாகவும், பெட்ரோலாகவும இருக்கிறது. உலகின் சில நாடுகளே இந்த எண்ணை வளங்களைப் பெற்றிருக்கிறது. அந்த நாடுகள் அல்லது அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடுகளே உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றன. வளரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் உற்பத்திக்குத் தேவையான ஆற்றல் மூலங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியுமானானல் உலக அரசியல் இன்று போலவா இருக்கும்?
இலன் மஸ்க்த், மின்னாற்றல் மூலம் இயங்கும் கார்களை(Tesla) உருவாக்கும் ஆலையை நடத்துகிறார். ஒரு முறை இவரிடம் காரை வாங்கிவிட்டால் அதன் ஆயுளுக்கும் கார் உரிமையாளர் எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. நாடெங்கும் பரவியுள்ள இந்த நிறுவனத்தின் மின்னூட்டி நிலையங்கள் மூலம் இந்தக் கார்களின் சக்தியை புதுப்புத்துக்கொள்ளலாம். சரி இந்த மின்னூட்டி நிலையங்களுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது? அதை சூரிய ஒளியிலிருந்து தனது மற்றொரு நிறுவனமனான சோலார் சிட்டி மூலம் உருவாக்கிக் கொள்கிறார். எளிமையான திட்டம் என்றாலும் இது எதிர்காலத்தில் வாகனப்போக்குவரத்து, சந்தைப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
அதுபோலவே தற்போது ஆராய்ச்சி செய்யப்பட்டுவரும் தானியங்கி வாகனப்பயன்பாடு. சாலையின் சூழலுக்கேற்ப வாகனங்கள் தம்மைத் தாமே இயக்கிக்கொள்ளும் நுட்பம், போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. ஒரு புறம் இது ஓட்டுனர் போன்ற வேலை வாய்ப்புகளை இல்லாமல் செய்தாலும், இந்த வாகனங்களை உற்பத்தி செய்தல், பழுதுபார்த்தல், மேலாண்மை செய்தல் என்று புதிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது.
ஊருக்கு ஊர் பொறியியல் கல்லூரிகளைத் திறந்து கணினி வல்லுனர்களை உருவாக்கிக் கணினித் துறையை இந்தியாவில் அதிகம் பயன்படுத்திக் கொண்ட தமிழகத்திற்கு, வருங்கால வாகனத் தொழில் நுட்பத்தில் மிகப் பெரும் வாய்ப்பிருக்கிறது. இயந்திரவியல் மற்றும் வாகனத் தொழில் நுட்பத்தில் கோவையை மையமாகக்கொண்ட புகழ் பெற்ற கல்வி நிலையங்களும், ஜிடி நாயுடு போன்ற அறிவியல் ஆர்வலர்களும் பல சாதனைகளைச் செய்திருப்பது இயந்திரவியலில் நமக்குள்ள அறிவுத் திறனைச் சொல்லும்.
திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலத்தில, அதாவது 1984ல் IRTT என்ற சாலை மற்றும் போக்குவரத்து தொழில் நுட்பக்கல்லூரி ஈரோ துவங்கப்பட்டது. இந்த கல்லூரியின் நோக்கம் வாகனப் போக்குவரத்துறையில் வல்லுனர்களை உருவாக்குவது. இது போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பங்களிப்பினாலும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பாகத் தொடங்கி, இன்று காலத்தின் தேவைக் கேற்ப கணினி, மின்னணுவியல் போன்ற துறைகளில் வல்லுனர்களை உருவாக்குகிறது.
தமிழக அரசு தனது கல்விக் கொள்கையில் தொழில் நுட்பக் கல்வியில் மரபுசாரா எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் நுட்பம், தானியங்கி வாகனத் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இந்த இரு பெரும் துறைகள் வருங்காலத்தில் பெரும் சந்தையை உருவாக்கப் போகிறது. அதற்கான அறிவுத்தேவையை தமிழகம் கைக்கொள்ள வேண்டும்.
அதற்கென கல்வி மையங்களை உருவாக்கி அதில் இந்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுக்கவும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள வாகனத்தயாரிப்பு நிறுவனங்களுடன் கை கோர்த்து இந்த முன்னெடுப்பைச் செய்யும்போது கூடுதல் பயன் கிடைக்கும்.
இதன் மூலம் புதிய தொழில்நுட்பச் சந்தையில் முதலிடத்தையும், புதிய வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.