Wednesday, October 28, 2015

திராவிட ராமாயணம்

தர்மநாடு என்ற நாட்டை கபாலி என்று ஒரு ராஜா ஆண்டு வந்தாராம். அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தனராம். மூத்த மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும், மூன்றாவது மனைவிக்கு ஒரு மகளும் இருந்தனர்.

பல்வேறு இடர்களைத் தாண்டி தன் சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்து வந்த கபாலி ராஜா. பல்வேறு  சந்தர்பங்களில் தன் குடும்பத்தை காத்துக் கொள்ளச் செய்த கொலைகளும், கொள்ளைகளும் மகத நாட்டு மகராணிக்கு தெரியவந்து, கபாலி ராஜாவை தனக்கு அடிமையாக்கி தன்னுடைய சாம்ராஜ்யத்தில் கப்பம் கட்டும் அரசனாக மாற்றிக் கொண்டால். கபாலி ராஜாவிற்கு இதனால் எந்த பாதிப்பு மில்லை, காரணம் அவர் குடும்பத்திற்கும், அரச பதவிக்கும் எந்த பாதகமும் இல்லாததனால் மக்களைப் பற்றி அக்கரையில்லாமல் இருந்தார்.

அதே காலத்தில் பக்கத்து நாடான இலங்கையில் இராவணனின் வாரிசு பிறர்குபகாரி, மகத நாட்டிலிருந்து வந்த படைகளின் ஆட்சியிலிருந்து இலங்கையை மீட்க போராடி வந்தான்.

கபாலி ராஜாவின் மூத்த மகனான அழகுராஜாவிற்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்கவிடாமல் இளைய மகனான  சுடலைராஜாவிற்கு முடி சூட்ட குடும்பத்திலிருந்து வந்த பல்வேறு அழுத்தம் காரணமாக முடிவெடுக்கிறார். அதுவரை போக்கிரியாக இருந்த சுடலைராஜ முடி சூட மக்கள் ஆதரவைப் பெற நல்லவனாக நடிக்க தொடங்குகிறான். அதே வேளையில் அழகுராஜாவை வனவாசத்திற்கு அனுப்பி வைத்து விடுகிறார் கபாலி ராஜா.

சமகாலத்தில் இலங்கையில் மகதப் படைகளின் அட்டூழியங்கள் அத்து மீரவே, இராவணின் வாரிசான பிறர்க்குபகாரி கபாலி ராஜாவிடம் உதவி கேட்கிறான். கபாலி ராஜா ஏற்கனவே மகதநாட்டு ராணியிடம் அடிமையாக இருப்பதால், பேசாமல் நீயும் என்னைப்போலவே மகத ராணிக்கு அடிமையாய் இருந்து விடு. உனக்கும் என்னைப் போல் நல்ல வாழ்வு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை (மகத நாட்டு ராணியின் உத்தரவின் பேரில்) காட்டுகிறார்.

ஆனால் மானத்தை இழந்து அடிமையாக உயிர் வாழ்வதைவிட மானத்தோடு உயிர் துறப்பது மேல் என்று கூறி கபாலி ராஜாவின் ஆலோசனையை புறந்தள்ளிவிட்டான் பிறர்க்குபகாரி.

மகதாட்டுப் படைகளின் சூழ்ச்சியினால் பிறர்க்குபகாரி போரில் பின் வாங்கி, பின் சூழல் கனிந்து வரும்போது படைதிரட்டி பகைவரை விரட்டலாம் என்று தலை மறைவாகிறார். மகதநாட்டு படைகள் பிறர்க்குபகாரியின் நிலங்களையும் மக்களையும் ஆக்கிரமித்து அவர்களை அடிமைப் படுத்துகிறார்கள்.

இந்த துயரச் செய்தி தர்மநாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. கூடுதலாக பிறர்க்குபாரி உதவி கேட்டு கோரிக்கை அனுப்பியதை கொச்சைப் படுத்திய கபாலி ராஜாவின் கயமைத்தனத்தைக் கேள்விப்பட்டு கொந்தளிப்பில் இருந்தனர். இதைத் தெரிந்துகொண்ட கபாலி ராஜா, எங்கே தனது ராஜ்யம் பட்டத்து இளவரசனாக அறிவிக்கப்பட்ட சுடலைராஜாவிற்கு கிடைக்காமல் மக்கள் பறித்து வேறொருவரிடம் கொடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் அமைச்சரவையில் உளவுத்துறை மூலம் ஆலோசனை செய்கிறார். ஆலோசனைக் கூட்டத்தில் ராமாயணக் கதையை கருவாக எடுத்து, ஆரியர்கள் எப்படி ராமனை கதாநாயகக் காட்ட ராவணனை தீயவனாகக் காட்டினார்களோ அதே போல் கபாலியை கதாநாகனாகக் காட்ட பிறர்க்குபகாரியை தீயவனாக மக்களிடம் காட்ட முடிவெடுக்கப் பட்டது. அந்த ஆலோசனையின் பேரில், அவையின் ஆஸ்தான புலவர்கள் மற்றும் லகுட பாண்டிகளைக் கொண்டு வரலாற்றை மாற்றி எழுத உத்தரவிடுகிறான்.

அதன்படி மண்டபப் புலவர்களும், லகுட பாண்டிகளும் ஊருக்குள் சென்று, பிறர்க்குபகாரிதான் இலங்கை நாட்டு மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றவன். கபாலி ராஜாவின் ஆலோசனையைக் கேட்காமல் மகத நாட்டு படைகளுடன் போரிட்டு மக்களை பலி கொடுத்து விட்டார் என்று நாடகங்கள், பாடல்கள் மற்றும் ஏடுகளில் எழுதி ஊர் ஊராய் பரப்பிக் கொண்டிருந்தனர். சில லகுட பாண்டிகள் இன்னும் கொஞ்சம் மேலே போய், பிறர்க்குபாகாரிதான் படுகொலைகளைச் செய்த பாதகன் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

இதையெல்லாம் பார்த்த மக்களோ, கபாலியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு புலவர்களையும், லகுட பாண்டிகளையும் ஊரை விட்டு துறத்து, நாட்டின் ராஜ்ஜியத்தை கபாலிராஜாவிடமிருந்து மீட்டு தற்காலிகமாக ஒரு அரசரை தேர்ந்தெடுத்து அமர்த்திக்கொண்டனர்.

ஏமாற்றமடைந்த கபாலி ராஜாவும், காதுக்கெட்டியது கைக்கு எட்ட வில்லையே என்று துயறுற்ற சுடலையும் வேறு வழீன்றி நாட்டை விட்டு ஒதுங்கியிருந்தனர்.

கொஞ்சகாலம் கழித்து மீண்டும் ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற மீண்டும் ஆலோசனை செய்கிறார் கபாலி. மீண்டும் அந்த இலங்கை பிறர்க்குபகாரியை கொலைகாரணாக மக்களிடம் பரப்புரை செய்ய புலவர்களையும், லகுட பாண்டிகளையும் ஏற்பாடு செய்கிறார். அதே சமயத்தில், சுடலை ஊர் ஊராகச்  மாறு வேடத்தில் சென்று மக்களின் மன நிலையைத் தெரிந்து கொள்கிறேன் என்று கிழம்பி ஊரில் மக்கள் இன்னும் கபாலி மீது கடுப்பில் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். எப்படியாவது மக்களை ஏமாற்றி, அவர்கள் மனதை மாற்றி ராஜ்ஜியத்தை கைப்பற்ற வீதியெங்கும் வித்தைகள் செய்கிறார். ஆனால் கடைசி வரை கபாலியின் கன்வு பலிக்கவே இல்லை... சுடலை தன் ராஜ்ஜிய கனவு தகர்ந்து

வாழ்கையை வெறுத்து அலைந்து கொண்டிருந்தான். கபாலியின் பாவச் செயலுக்கு அவன் வாழ்ந்து, அவன் சந்ததி வீழ்வதைப் பார்க்கும்படியான தண்டனை அடைந்தான்.

Thursday, October 8, 2015

படிக்கச் சொல்லிக்கொடுப்போம்

கடந்த வாரம் பிள்ளைகளின் பள்ளியில் "Literacy Night" என்ற கலந்தாய்வு. இதில் குழந்தைகளுக்கு "படிப்பறிவு" எப்படி அவர்களின் கல்வித்திறனை வளர்க்கும், அதற்கு பள்ளியில் எடுக்கப்படும் முயற்சிகள், திட்டங்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. படிப்பறிவுத் தேர்வு மிகவும் முக்கியமெனவும், அது மாகான சட்டவிதிகளின் படி தேர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது என்று விளக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
நான் படித்த கற்பித்தல் முறைக்கும் இங்கு இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. நமக்கு பள்ளி புத்தகங்களைத் தவிர வேறெதையும் படிக்க கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் இங்கு குழந்தைகளின் படிக்கும் திறனுக்கேற்ற புத்தகங்கள் தினமும் 30 நிமிடம் படித்து அது பற்றிய குறிப்பை நாட்குறிப்பேட்டில் எழுதி பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் அது ஆசிரியரின் பார்வைக்குச் சென்று குறிப்பெடுக்கபடுகிறது. ஒவ்வொரு மாத இடைவேளையிலும் படிப்புத் திறனாய்வு செய்யப்பட்டு குழந்தைகள் அடுத்த நிலைக்கு முன்னேற்றப்பட்டு புத்தகங்கள் பரிந்துரைக்கப் படுகிறது.
நூலகங்களில் குழந்தைகளுக்கான பிரத்தியேக நூல்கள் கொள்ளையளவு இருக்கிறது. அவர்கள் விரும்பும் நூல்களை (ஒரு முறைக்கு 30- 40 புத்தகங்கள்) எடுத்து, அவைகளை அவர்களின் படிப்புத்திறனுக்கேற்றதாக உறுதி செய்து (கைபேசி திறன் செயலிகளில் புத்தகத்தின் கோட்டுருவை உள்ளிட்டால் அது படிக்கும் திறனில் (A-Z) வகைப்டுத்திச் சொல்லும்) எடுத்து வருவது நம் கடமை.
புத்தகங்கள்தான் குழந்தைகளுக்கு அறிவைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வெறும் பாடபுத்தகங்களில் இருப்பதைப் படித்தால் சிந்தனை அதற்குள்தான் இருக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு சூழல் நம் நாட்டிலும் வரும்போது, புத்தகங்கள் விற்கவில்லை, எழுதியதை படிக்க ஆளில்லை போன்ற புலம்பல்கள் இருக்காது என்று நம்பலாம்.

Saturday, October 3, 2015

நம் சூழலில் ஏன் புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்வதில்லை?

"ஏன் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அறிவியல் கண்டு பிடிப்புகள் நிகழவில்லை." என்ற கேள்வி அவ்வப்போது எழும். ஆனால் அதற்கான விடைதேடல் பெரும்பாலும் முடிவு பெறுவதே இல்லை. காரணம், எங்கு அதை தொடங்குவது என்பதில் இருக்கும் சிக்கல். சமீபத்தில் நண்பர்களுடன் உரையாடுகையில் இது குறித்த விவாதம் ஒன்று வந்தது. அப்போது பொதுவாக நாம் ஒரு கருத்தையோ அல்லது எண்ணத்தையோ அவ்வளவு எளிதில் வெளிச் சொல்வதில்லை. அதற்கான பல காரணங்கள், அதில் சில, "நமக்கு எதுக்கு வம்பு", "நம் கருத்து தவறாக இருந்தால், கேலி செய்யப்படுவோம் என்ற எண்ணம்", "இதைப் பற்றி கருத்துச் சொல்லுமளவிற்கு எனக்கு அறிவில்லை", முக்கியமாக "கருத்தைச் சொல்வதால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது" போன்ற எண்ணங்கள். இது போன்ற இந்தியச் சூழலும், கடந்த 8 ஆண்டுகளுக்கம் மேலான எனது அமெரிக்க வாழ்கையில் நான் உணர்ந்து கொண்டவையுமே இந்த கட்டுரை.

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் உள்ள மனிதர்களுக்கும், மனிதர்களின் கருத்துக்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதை என்னை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு சமுதாய அங்கத்தினருக்கும் கருத்துச் சொல்ல உரிமையும், ஊக்குவிப்பும் இயல்பாக வழங்கப்படுகிறது. உதாரணமாக, அலுவலகங்களில் ஒரு பிரச்சினை குறித்து விவாதிக்கும்போது, பணிப் பொறுப்பு தாண்டி, யாரும் உபயோகமான கருத்துச் சொல்லலாம். அந்த கருத்து விவாதிக்கப்படும் பொருளில் தாக்கத்தை ஏற்படுத்தப்படும் போது, கருத்துச் சொன்னவரை ஊக்குவித்து அவரிடம் மேலும் விளக்கங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்வர். பின் அந்த கருத்தோ அல்லது எண்ணமோ செயல்வடிவம் பெற்று வெற்றியைத் தரும்போது கருத்தை வழங்கியவர் பாராட்டப்ப்டுவார் அல்லது அதற்கான சன்மானம் கிடைக்கப் பெறுவர்.

இது போன்ற ஒரு சூழலை நாம் இந்தியாவில் எளிதில் பார்க்க முடியாது. ஒரு நிறுவனத்தின் பொறுப்பு அடுக்கில் கீழுள்ளவர், பொது அரங்கில் தன் மேலதிகாரியைத் தாண்டி கருத்துச் சொல்ல முடியாது. அப்படியே கருத்துச் சொன்னாலும் அவர் அந்த இடத்திலேயே அவமதிக்கப்படுவார் அல்லது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார். இது போன்ற சூழலால், அதிகாரம் இருந்தால் மட்டுமே கருத்துச் சொல்ல முடியும் என்ற ஒரு நிலை இருக்கிறது. எப்படி இந்தச் சூழல் உருவாகியிருக்கும் என்று ஆராயும் போது சில உண்மைகள் நமக்கு விளங்கும். 

பெரும்பாலான உயர் பதவியில் இருப்பவர்கள், அரசு அலுவலகமானாலும் தனியார் நிறுனங்களானாலும் அவர்கள் அனுபவத்தின் பேரில் தான் அந்த பதவியில் இருப்பார்கள். திறமையும் அறிவும் உள்ள மூத்த அதிகாரிகள் பெரும்பாலும் தனக்கு கீழுள்ளவர்களை ஊக்குவிப்பவர்களாகவே இருப்பர். ஆனால் வெறும் பணி மூப்பு அடிப்படையில் உயர்பதவி அடைந்தவர், அநியாயமாக தனக்கு கீழுள்ளவர் தனது அடிமை என்னும் மன நிலையிலேயே நடந்து கொள்கின்றனர். அதற்கு பல காரணங்கள் இருப்பினும், பெரும்பான்மை காரணம் தன்னுடைய தகுதிக் குறைபாடு வெளிப்பட்டுவிடக்கூடாதெனவும், தன் அதிகாரம் பலமிழந்து விடக்கூடாது என்பதும் தான். இவர்கள் ஒரு போதும் புது சிந்தனையை, புதிய அறிவை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக அதுபோன்ற ஒரு வஸ்து உருவாகிவிடாத ஒரு சூழலை உருவாக்கி விடுகின்றனர். இது ஒரு வகையென்றால், பிறப்பால் தான் உயர்ந்த இனம், ஏனையோர் அறிவிலும் அதிகாரத்திலும் தன்னைவிட கீழேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர் இன்னொரு வகை. முன்னவர்களிடமாவது அவர்களின் இயலாமையை நினைத்து இரக்கப்படலாம், பின்னையவர்கள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர்களுக்குள் பகிர்ந்து கீழுள்ள வேறோருவருக்கு எதனையும் கிடைக்காமல் செய்துவிடுவர், இவர்களிடம் இரக்கப்பட ஏதுமில்லை. இவர்கள் புதிய சிந்தனையை முன்னவர்போல் குண்டுக்கட்டாக நிராகரிக்க மாட்டார்கள். மாறாக சிந்தனை வட்டத்திற்கு வெளியே இருந்து, இல்லாத ஒன்றை இருப்பதுபோல் அடித்துச் சொல்லி, கருத்து தவறு என்று உருவகப்படுத்திவிடுவர். விவரம் தெரியாதவர் அதை நம்பி தன் கருத்தை மாற்றிக்கொண்டு அமைதியாக இருந்துவிடுவர். ஆனால் அவர் சொன்ன புதிய கருத்தை அந்த உயர்சாதி மேலதிகாரி, பூ வைத்து, பொட்டு வைத்து தன் மேலதிகாரிக்கு விற்றுவிட்டு பலனை அனுபவித்திருப்பார். இவர்களின் அறிவுத்திருட்டிலிருந்து தப்பிப்பதற்கு கற்றுக்கொள்ளும் வித்தைகளில் புதிய சிந்தனைகளில் செலவளிக்கும் நேரம் பாதி கடந்திருக்கும்.

மேற்ச்சொன்ன கூற்று ஒரு புறம் இருக்க, நமக்குள்ளான தேடல் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் என்பதால், நாம் நமது ஆய்வை வீட்டிலிருந்தும் ஆரம்பப்பள்ளியிலுருந்தும் தொடங்க வேண்டும். இரண்டு மூன்று வயதுவரை குழந்தைகள் அவர்கள் எண்ணம்போல் சிந்திக்கவும் செயல்படவும் உரிமை இருக்கிறது. குழந்தை எப்போது பேச ஆரம்பிக்கிறதோ, அப்போதிருந்து அதன் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஓரளவிற்கு இது குழந்தையை சமூக ஒழுங்கில் வளர்த்தெடுக்கும் முறையாக இருந்தாலும், இது குழந்தைகளின் சிந்திக்கும் திறனை கட்டுப்படுத்தும். உதாரணங்களாக, "பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது!", "சாமியைக் கேள்வி கேட்கக் கூடாது", "அவர்களுடன் பேசக்கூடாது" என்பது போன்ற கட்டுப்பாடுகள். இது தொடர்ந்து பள்ளியில் "முதலில் நான் சொல்வதைக் கேள்", "அது பாடத்திட்டத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்வி", "உன் வயசுக்கு இது போன்ற கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது" என்று கேள்வி கேட்கும் குழந்தைகளின் ஆர்வத்தை மட்டுப்படுத்தும் பள்ளியின் செயல்பாடுகள்.

கல்லூரிகள் பெரும்பாலும் பாடதிட்டத்தை தவிர்த்து ஒரு இம்மியளவுகூட சிந்தனையை உருவாக்குவதில்லை. சில நேரங்களில் பாடத்திட்டத்தில் கூட வரையறை வைத்துக் கொண்டு அதைத்தாண்டி மாணவர்கள் சிந்திப்பதை ஊக்குவிப்பதில்லை. ஒரு மாணவன் சுதந்திரமாக கேள்விகளை முன் வைத்து பதில் பெற முடியாத சூழல் பல கல்லூரிகளில் இருக்கிறது. உடையிலிருந்து உணவு வரை எல்லாவற்றிலும் கட்டுப்பாடு வைத்திருக்கும் இவர்கள் மாணவர்கள் சிந்திப்பதிலும் கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர் என்பது விந்தையல்ல.

நான் இங்கு ஒரு பெரும் வங்கியின் மிகப்பெரும் மென்பொருள் திட்டத்தில் பங்கெடுத்திருந்த போது, திட்ட மேலாளராக இன்னொரு போட்டி நிறுவனத்திலிருந்து ஒருவரைக் கொண்டு வந்திருந்தனர். போட்டி நிறுவனமாக இருந்தாலும் அமெரிக்கரான அவருடன் எனது உறவு ஆரோக்கியமாகவே இருந்தது. அவருடைய இலக்கு முழு செயல் திட்டத்தையும் அவருடைய நிறுவனம் எடுத்து நடத்துவது. எனக்கோ பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஒன்று இரண்டாகச் சேர்த்து ஒரு பெரிய குழுவை உருவாக்கி வைத்திருந்தேன். பொதுவாக இதுபோன்ற சூழலில் பாதுகாப்புணர்வும், அச்சமும் தவறுகளுக்கு வழி வகுத்து விடும் என்பதால் நான் அந்த மேலாளரிடம் நட்பாகவே இருந்து வந்தேன். ஒரு கட்டத்தில் அவரின் முயற்சி வெற்றியளிக்காத போதும், அவரும் பணியிலிருந்து விரைவில் விடுவிக்கப்படுவோம் என்றுனுணர்ந்து மனம் திறந்து என்னிடம் பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டது "எப்போதும் கட்டளைகளை வாங்கிக் கொண்டு ஒரு அடியாள் போல வேலை செய்பவரை இங்கு யாரும் விரும்புவதில்லை. மாறாக தனது சிந்தனையாலும், உழைப்பாலும் இருப்பதைவிட எப்படி அதிகமான மதிப்பை நாம் நம் வேலையில் ஏற்படுத்தி, அதனால் நமது வாடிக்கையாளருக்கு பயனை ஏற்படுத்த முடியும் என்பதே இப்போதைய தேவை. அதை நீ நன்கு தெரிந்து வைத்திருக்கிறாய். தொடர்ந்து தொடர்பில் இரு" என்பதாக இருந்தது அந்த உரையாடல்.

என்னைப் பொறுத்தவரை, எல்லா மனிதர்களும் இயல்பில் சிறந்தவர்கள்தான். அவர்களிடம் பயத்தை விலக்கி நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டால் அவர்கள் சிந்திப்பதும், சிந்தனையை வெளிப்படுத்துவதும் இயல்பாய் வளர்ந்துவிடும். அதுபோன்ற ஒரு சூழலில் அவர்களை ஒரு போட்டியாளராக கருதாமல், அவரைச் சக மனிதராய் பாவித்து, எப்படி அவரின் சிந்தனை, நாட்டினுடையதோ அல்லது நிறுவனத்தினுடைய நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்க்கவேண்டும். இங்கு வயதோ, அனுபவமோ, தகுதியோ முக்கியமல்ல. கேட்கும் பொறுமையும் கேட்பவர்மேல் நம்பிக்கையுமே வேண்டும். அவரின் கருத்து உடனடியாக ஒரு பெரும் அறிவுப் புதையலை கண்டுபிடிக்காவிட்டாலும், அறிவுப் புதையலைத் திறக்கும் சாவியாக அது இருக்கலாம். ஒருவரின் கருத்து சரியோ, தவறோ, தனக்கான கடமையும், தன்னுடைய பங்களிப்புமாக தன் சிந்தனையையும் அறிவையும் பங்களிக்க வாய்ப்பளிப்பதே ஆரோக்கியமான அறிவுவளர்ச்சிக்கான சூழல். அதை ஏற்படுத்த கொஞ்சம் விசாலமான மனதும் வினோதங்களை ரசிக்கும் குணமும் வேண்டும். அது இல்லையென்றால், வளர்த்துக்கொள்ளலாம், இன்னும் காலமிருக்கிறது என்றே நினைக்கிறேன்.