Showing posts with label கவிதை - பொது. Show all posts
Showing posts with label கவிதை - பொது. Show all posts

Wednesday, September 7, 2016

திருமணம் - திரும்பிப் பார்க்கிறேன்.

துணையிருந்த சிறுமிகள்
தாயாகிவிட்டனர்
ஆசீர்வதித்த பெரியவர்கள்
பரலோகமடைந்து விட்டனர்
முடி நிறைந்த தலை
முடி துறந்து நிற்கிறது
அடிதொழுத மனைவி
முடியாட்சி செய்யும்
நினைவு-நிகழ்வு இணைகாட்சி
திருமணக் காணொளிப்பதிவு காண்கையில்.

Friday, September 2, 2016

இதயம் வென்றான்

இமயம் வென்றான் என்றார்,
இதுவரை அவர் பாதை இங்கிருப்பவர்
எவர் கண்டார்..
கடிதொழில் செய்து கருகிச்
சேர்த்ததெல்லாம் கள்ளும்,
மானம் விற்ற காணற் கலையுமாகவல்லவோ
கரைக்கின்றார்...
வானளந்த புகழ் கொண்ட வரலாற்று
நாயகர்களை ஏடுகளில் மட்டும் கொண்டு
மோடியென்றும், மோகனென்றும்
அவர்பாதத்தில் தலையணைக்க
தவம் கிடக்கிறார்...
சூதும் வாதும் செய்வதை சுட்டாலும்
ஏற்றுக்கொள்ளாத அறம் தள்ளி,
அரசியல் சூதானம் தெளிந்தவர் என்று
புகழெடுத்து-
இங்கத்தவர் நாடாள
வாய்த்த பேரை அங்கத்தவர் ஆயினும்
அவர் அரசியல் சங்கறுத்து
தன்னை நிறுத்துக் கொண்ட
தலைகொண்ட உடலன்றோ இன்நிலம்...
அரிதினும் அரிதாய் அமைந்த
தென்னவர் ஏறும் அரியாசனத்தை
மன்னவர் போற்றும் மாண்பெய்தும்
செயல்விடுத்து,
கள்ளர் மாண்டுகொள்ளும் வன்னம்
குடிஉடை மடியினில் மறைத்து
இனியொரு மாமாங்கம் பழி வாழ
வழிசெய்தார் ஆங்கோர் அடிமைக்கு அடிமை..
பொன்னைத் தின்றார், போதவில்லையென்று
இணைகொடி தோண்டி மண்ணைத்தின்றார்,
மட்டுறார் மாவணிகன் வாய்ச்சோற்றையும் தின்னக்கேட்க,
வாழ்ந்து சேர்த்த சிறப்பை
தாழ்ந்து கெடுக்க முனையார்- அவர்
எரியும் நெருப்பணைக்கத் தாங்கும்
கங்கணைத்தார்..
அறம் போற்ற வாழும் வாழ்வு துறந்தார்
தம்மினம் மாண்பு துறந்து சாக வழிசெய்தார்..
வாழிய அவர் புகழ் இவ்வையம் வாழும் வரை..
இமயம் வேண்டாம் - மக்கள்
இதயம் வெல்லும்
"இதயம் வென்றான்" அல்லவோ
எமக்கின்று வேண்டும்?!..

Wednesday, August 3, 2016

ஜக்கியும் ஜாக்கியும்


மீடியா சொல்லுவதையெல்லாம் அப்படியே நம்பவேண்டியதில்லை என்பதற்கு பல உதராணங்கள் இருக்கிறது.
இப்போது ஜக்கி வாசிதேவ் ஈசா மையத்தைப்பற்றி. இப்போது மீடியா ஈசா மையத்தைப் போட்டு குதறிக்கொண்டிருக்கிறது. 1997 வாக்கில் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் ஈசா யோக மையத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது தியான மண்டபம் மற்றும் ஓரிரு கட்டிடங்கள் இருந்ததாக நினைவு. வாசுதேவை தூரத்திலிருந்து ஒரு முறை பார்க்க நேர்ந்தது. ஒளிவட்டமேதும் தெரியவில்லை.
நகர வாழ்கையின் சக்கர சுழற்சியிலிருந்து விடுபட வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தியானத்துடன் கூடிய ரிசார்ட் அது. வசதிக்கேற்ப பேக்கேஜ் உண்டு. ஈசா ஆரம்பித்ததிலிருந்து வன ஆர்வலர்களாலும், உள்ளூர் மக்களாலும் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுகிறார்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகும்போது, சூழல் கேடு முதல் வன உயிர்ச்சூழல் கேடு வரை பல கேடுகள் நடக்கிறது என்று எழுப்பப்படும் புலம்பல்களைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வெள்ளியங்கிரி மலையைச் சுற்றியுள்ள காடுகள் யானைகளின் வாழ்விடம். புலி, சிறுத்தை போன்ற அருகி வரும் மிருகங்களின் உறைவிடம். ஈசா யோகமையம் அங்கு அமைந்ததன் பின் யானைகள் அந்தப்பகுதியைப் பயன்படுத்த முடியாமல் வேறு புதிய பாதை தேடுவதில் ஊருக்குள் வருவதும், ரயிலில் அடிபட்டு இறப்பதும் அன்றாட செய்தி. யானைகள் இல்லையென்றால் அந்தக்காடுகள் அழிந்து விடும் என்பது பல்லுயிர்ச்சூழல் விஞ்ஞானிகளின் கருத்து.
இதைப்பற்றிப் பேசாத ஊடகங்கள் இப்போது மேஜராகிய இரண்டு பெண்கள் ஈசாவில் துறவரம் மேற்கொண்டிருப்பதை அவர்களின் பெற்றோரின் மனுவை வைத்து ஊதிப் பெரிதாக்குகின்றன. இதனால் யாருக்கு லாபம்?
ஊடகங்களுக்கு. எப்படி? ஊடகங்களின் சத்தத்திற்கேற்ப அவர்களின் சேனல்களின் விளம்பரர்தாரர் நிகழ்ச்சியாக காலையில் சத்குரு அருளுரை நிகழ்த்துவார். செய்தியாளர்களுக்கு பெட்டிகள் சேரும். பிறகு அமைதியாகும் ஊடகங்கள் வேறு ஏதாவது பிரச்சினையைத் தேடும்.
சட்டமீறலான வன ஆக்கிரமிப்பையே தடுக்காத அரசமைப்பு, சட்டத்திற்குட்பட்ட வயதுவந்தவர் எடுக்கும் தனிமனித முடிவுகளில் என்ன செய்ய முடியும்? சத்குரு தனிமனிதரா? இல்லை.. அவர் அரசியல் கட்சிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரின் வணிகத்தின் முகம்.
சத்குரு சத்குருவே.. ஊடகங்கள் ஊடகங்களே.. நீங்களும் நானும்தான் இதைப்பற்றிப் பேசி முட்டாள்காளாகிக் கொண்டிருக்கிறோம்..

Thursday, January 15, 2015

ஏற்கப்படாத நட்பு

முகநூலில் நீண்ட நாளாய்
என் நட்பு அழைப்பை
கிடப்பில் வைத்துவிட்டான்
நெடுநாள் நண்பன்
என் மேல் அவனுக்கென்ன
அவ்வளவு கோபம் - அவன் முகநூலில்
இன்னும் கணக்கு வைத்திருப்பதால்
என்ன பயன்?
விசாரித்ததில் இன்னொரு நண்பன்
சொன்னான் - அவன் இந்த உலகில்
அவனுடைய கணக்கை முடித்து
மூன்று மாதமாகிவிட்டத்தென்று..
முகநூல் கணக்கு மட்டும் போதுமா
இந்த உலகில் (நட்பில்) இருப்பதை
உறுதிப்படுத்திக்கொள்ள?...
இனிமேல் அவன் என் நட்பின் 
அழைப்பை எப்போதுமே
ஏற்க்கப்போவதில்லை என்று தெரிந்தபோது
என் (மனதில்) நிலையில்
வெட்கமும் துயரமுமே எஞ்சியிருந்தது..

Sunday, January 4, 2015

திவாளி

அம்மா செய்யும் கை முறுக்கு
அப்பா ஆசையாய் 
வாங்கி வரும் புத்தாடை

தாத்தா பாட்டி தரும் 
நோம்பி காசு
அக்காவை சீண்டும் 
கம்பி மத்தாப்பு

பட்டுதாவணியில் பவனிவரும் 
(எங்க ஊரு) தேவதைகள்
அவர்கள் தரிசனம் தேடி 

என்னையும் சுமந்து சைக்கிள் 
மிதிக்கும் நண்பன்

இவை எல்லாம் 
இருக்கும் பேரரசு
இல்லாமல் இருக்கும் சிற்றரசன் 
கொண்டாடும் திவாளி!
ஹேப்பி திவாளி! ஹேப்பி திவாளி!


12-10-2013

Saturday, November 28, 2009

எங்கள் தலைவன்

எங்கள் தலைவன் - டாஸ்மாக் உள்ளே போகும் முன்

ஐந்துவேலை சோறும்
அசதிபோக்க ஆடல் பாடல்
கேளிக்கை தொலைக்காட்சிகளும்
இருக்க எனக்கென்ன கவலை இந்த உலகத்திலே!

இருக்கிறார் எங்கள் தலைவர்
பசி தீர்க்க ஒரு ரூபாய் அரிசி போட
பொறுக்கிக் கொள்வோம் அவர்போடும் பிச்சையய் ஆசையாய்
அவர்பாதம் எம் தலைமேல் வைத்து
துதிபாடுவோம் எந்நாளும் அவர் புகழ் ஓங்க!

மூட்டைதூக்கி முதுகுவலி வந்தாலும்
சாக்கடை சுத்தம் செய்து நளிந்துபோனாலும்
ஆண்டு முழுதும் தூக்கமில்லாமல் ஆடை நெய்தாலும்
ஆதவனின் அன்புப் பிள்ளை எம் தலைவன் எழுதும்
ஆபாசக் கவிதை படித்தால் எம் துன்பம் பறந்து போகுமே!

(டாஸ்மாக் ஊள்ளே )

தன் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் ஊரார்பிள்ளை
தானெ வளரும் என்ற தத்துவம் கண்ட தற்கால சாக்ரடீசே!
எத்தனை துரோகம் செய்தாலும் உனக்குத்தான் என் ஓட்டு
மறக்காமல் குவாட்டர் மட்டும் தொடர்ந்து ஊத்து!

எவன் மாய்ந்தால் எனக்கென்ன?
எவன் எந்த நதியைய் தடுத்தால் எனக்கென்ன?
எவன் எங்கு குண்டு போட்டால் எனக்கென்ன?
என் பிள்ளை நாளை எவனுக்கு அடிமையய் இருந்தால் எனக்கென்ன?
எனக்கு இப்போது நீ குவாட்டர் ஊத்து!

சீனாக்காறான் கச்சத்தீவில் குண்டுபோடும்
களம் அமைத்தால் எனக்கென்ன?
அவன் நாளை என் மீது குண்டு போட்டால்
எனக்கென்ன?
இப்போ நீ எனக்கு குவாட்டர் ஊத்து!

தக்காளி! நீதாண்டா தமிழன தலைவன்!
புறநானூற்றின் வீரம் சொறிந்து சொறிந்து
புறமுதுகெல்லாம் புண்ணானபோதும்
உடன்பிறப்பை உசிப்பிவிட்டு ரசிக்கும் ரசிகனே!

தொலைபேசி தரகில் லட்சம் கோடி அமுக்கிவிட்டு
அதைபத்தி பேசாமல் உலகச் செம்மொழி மாநாடு
கும்மியடிக்கும் உன் திறன் வியந்து செயல்மறந்து
வாய் பிளக்கிறேன்... அந்த குவாட்டரை கொஞ்சம் ஊத்து!


அந்த குவாட்டரை கொஞம் ஊத்து!!!

- குவாட்டருடன் உடன் பிறப்பு

Monday, May 18, 2009

அகதி

மார்தட்டி கொள்வோம்
எங்கள் குலதெய்வம் நீ யென்று!
யார் சொல்லியும் உண்மையாகுமோ
ஆதவன் இல்லையென்று!

நாளை அவர் போல் புகழ்கொள்வாயென்று
உன் பேர் சொல்லி
வளர்த்தாள் அன்னை என்னை அன்று!

வீரம் கொண்ட வரலாறு எமதென்று
நாவினில் வாள் சுழற்றும்
கோமகன்கள் வாழும் காலமொன்றில்

கங்கைகொண்டான், கடாரம் வென்றான்
அவன் மீண்டும் வந்து நின்றான் எம்முன்
யாழ்தீபம் தரித்த அனல் பிழம்பென்று!

வேல்தாங்கி நிற்க்குமிந்த
அக்கினிக் குன்றுள்ளவரை
எதிரிக்கு தெரியும்
வெற்றி என்பது கனவென்று!

அவனைக் கொன்று விட்டால் யார்கேட்பார்
இந்த நாதியற்ற மக்களை தீண்டிணாலென்று
கொக்கரிக்கும் குருடர் கூட்டம் தெரிந்து கொள்ளும்
"விடுதலை தேசம்" எமதென்று!

அவர்கள் ரத்தம் கொண்டு
வெற்றித் திலகமிடும் நாள் சொல்லும்
எமது வீரம் எதுவென்று!

வெறி கொண்ட யானை வென்று
அதன்மேல் எம்மன்னன் ஊர்வலம் வரும்ப்போது
புத்தனும் இவன்மேல் ஆசைகொள்வான்
வெற்றி வீரன் இவனென்று!

அதுவரை சொல்லமாட்டோம்
உலகிற்கு நாம் தமிழனென்று,
மறக்கமாட்டோம்
"அகதி" என்பதே எமது இனமென்று!

- "அகதி" திரு

Tuesday, February 17, 2009