Tuesday, September 11, 2018

அரிக்கேன்

"அரிக்கேன் விளக்கு" என்று ஒன்றை பாட்டி வைத்திருந்தால். அது மண்னெண்ணையில் எரியும் விளக்கு. அதற்கு காற்றில் அணையாமல் இருக்க கண்ணாடி கவசம் ஒன்று இருக்கும். அது ஏன் அரிக்கேன் விளக்கு என்ற கேள்வியெல்லாம் அப்போது இருந்திருக்கவில்லை. எவரெடி, ஹெர்குலிஸ் போல் அதுவும் ஒரு கம்பெனி பெயர் என நினைத்திருந்தேன். அந்த விளக்கு மழைக்காலங்களில் காற்றில் அணையாமல் எடுத்துக் கொண்டு பயணம் செய்வதற்குப் பயன்படுத்தியிருப்பார்கள் என்ற பாதியளவு புரிதல் பின்னாளி ஏற்பட்டது. ஆம்.. இன்று போல் அன்று வீதியில் மின்சார விளக்குகள் இல்லை. மின்சார வீதி விளக்குகள் இருந்திருந்தாலும் அவை மழைக்காலங்களில் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டிருக்கும். பிறகு எப்படி மழையில், காற்றில் தோட்டங்காட்டிற்குச் சென்று வருவது? அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாட்டுவண்டிப் பயணம் மேற்கொள்வது.? அரிக்கேன் விளக்கின் துணைகொண்டுதான்...

ஆனால் அந்த "அரிக்கேன்"? பொதுவாக நாம் இப்பொழுதும் புழங்கும் புயல்தான் அரிக்கேன். வேகமாக வீசும் காற்று. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்போனால் மணிக்கு 74 மைலுக்கு மேல் காற்று வீசினால் அது அரிக்கேன். இது ஆங்கிலேயர்கள் நமக்கு அறிமுகப்படுத்திய சொல். ஆனால் புயலை Storm என்றும் சொல்கிறோமே? மணிக்கு 39 மைல் வேகத்திற்கு குறைவானது காற்றழுத்தமாகவும் அதற்குமேல் அது Storm ஆகவும் மாறுகிறது. பொதுவாக இந்தியாவில் "புயல்" என்று பெயரிட்டு முடித்துக் கொள்கிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் Storm மற்றும் Hurricane என்பவை அதன் ஆற்றலை உணர்த்தும் சொற்களாகவே பயன்படுத்தப்படுகிறது. அரிக்கேன் கூட Category 1 (மணிக்கு 74 - 95 மைல் காற்றின் வேகம்.) , Category 2 (மணிக்கு 96-110 மைல் காற்றின் வேகம் ), Category 3(மணிக்கு 111-129 மைல் காற்றின் வேகம்), Category 4(மணிக்கு 130-156 மைல் காற்றின் வேகம்), Category 5( மணிக்கு 156 மைலுக்கு மேலான காற்றின் வேகம்). இப்போது நாங்கள் வசிக்கும் வடகரோலினா மற்றும் அருகிலுள்ள தென் கரோலினா, புளோரிடா மாகாணங்கள் இந்த அரிக்கேனில் அதிகம் பாதிக்கப்பட உள்ளது. வரும் வியாழன் அன்று அரிக்கேன் நாங்கள் வசிக்கும் பகுதியை விசிட் செய்யும் என்று இங்கத்தியை ரமணன்(கள்) கூறியுள்ளார்(கள்).

மாகாண கவர்ணர் அவசரகால நிலையை அறிவித்து பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு அதிகாரங்கள் மற்றும் வளங்களை ஒதுக்கியுள்ளார். நேற்று ஏறக்குறைய ஒரு மணி நேரம் தொலைக்காட்சி மற்றும் வானொளியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மக்கள் பாதுகாப்பாக இருக்க அருகில் அறிவிக்கப்பட்டுள்ள அரிக்கேன் பாதுகாப்பு மையங்கள் மற்றும் அவற்றில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உணவு இறுப்பு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் அரிக்கேன் வரும் வரை காத்திருக்காமல் கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கோரிக்கை விடுத்தார். கூடவே காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறையினரும் தொலைக்காட்சியில் அவசரகால பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விளக்கமளித்தனர். தொடர்ந்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது அறிவுப்புகளை வழங்கி வருகிறார்கள்.

நாங்கள் கூட வரும் வியாழனுக்கு இன்றே தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை சேமிக்கத் தொடங்கிவிட்டோம். எங்கள் ஊரில் உள்ள எல்லாக் கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் தீர்ந்து விட்டது. தண்ணீர் வைக்கும் அடுக்குகள் காலியாகக் கிடந்தது. இதன் இன்னொரு விளைவாக சில்லரை வர்த்தகம் மற்றும் வீட்டின் தட்டு முட்டுச் சாமான்கள் விற்கும் நிறுவனங்களின் பங்கு நேற்று 2 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. இன்றும் நாளையும் உயரும்.

ஆக.. அரிக்கேனோ, புயலோ... வருமுன் காப்பது வந்த பிறகு புலம்புவதற்கு மேலானதில்லையா...