Sunday, June 7, 2020

கொரோனா என்னும் பித்த மருந்து

உடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்டுக்காரன் பொறாமைக்காரன். உதவிகேட்டால் கடங்காரன், கொடுத்த காசு திரும்பி வரவில்லையென்றால் ஏமாற்றுக்காரன், இப்படி எல்லோருக்கும் நல்ல பெயர் கொடுத்து நாமும் நல்ல பெயர் வாங்கி வைந்திருக்கிறோம். நாளைக்கு தன்  தலையெழுத்தை மாற்றப்போகும் அரசியல் எது என்று தெரியாமல்  தங்களுடைய அரசியலுக்கு ஏற்ற ஆட்களைத் தலைவராக எடுத்து வைத்து சொற்போர் செய்கிறோம். பிரித்தாளுவது அரசியல் என்ற நிலை போய், அரசியலே ஆட்களைப் பிரிப்பது என்றாகிவிட்டது.
இப்படி ஓடி ஓடி ஓடி.. ஒரு முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில்..

எங்கோ சீனாவில் வைரஸ் காச்சல் வேகமாக பரவி ஆட்களைக் கொள்கிறது என்ற செய்தி வருகிறது. எப்பவுமில்லாதது போல் என்ன புது வைரஸ்? எதாவது மருந்து கம்பெனிக்காரன் பரப்பி விட்டுருப்பான் என்ற எதார்த்த புரிதலைத்தாண்டி "வைரஸ் - ஆபத்தானது" என்று அச்சுறுத்துமளவு ஆட்பலி எண்ணிக்கை ஏறி நிற்கிறது. அமெரிக்காவிடம் அடங்கிப்போக அமெரிக்கா செய்த சதிவேலையோ என்று செர்லாக் கோம்ஸ் போல் துப்புத் துலக்குகிறது அப்பாவி மனது.

எதுக்கு ஏறுது எதுக்கு எறங்குது என்று ஒரு நெப்பு நிதானமில்லாமல் குடிகாரன் போல ஏறி இறங்கிய பங்குச் சந்தைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. போயிங் கொண்டுபோனதை டெஸ்லா கொண்டுவந்துரும்னு நம்பிக்கொண்டிருந்த காலத்தில் விக்ஸ் தடவி ஆறுதல் கொடுக்கிறது சந்தை.
வைரஸ் பரவினால் ஆட்கள் பலியாவது உறுதி. அதனால் வேலைக்குப் போவது குறையும். ஆலைகள் உற்பத்தி செய்ய முடியாது. உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்ற நிலையில், வைரஸ் காய்ச்சலுக்கு வட்டி குறைத்து நிலவேம்பு கசாயம் கொடுக்கப் பார்க்கிறார் டிரம்ப். இது சப்ளை பிராப்ளம் இல்லை, டிமாண்ட் பிராப்ளம் இதுக்கு எதுக்கு வட்டியைக் குறச்சு கைக்காச வீணாக்குகிறாய் என்று கேட்கத் தோணுகிறது. இதையும் வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு மீண்டும் பசியெடுத்துக் காத்திருக்கிறது பங்குச் சந்தை.

இன்று 8 பில்லியன் டாலர் கொராணா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா செலவிட முடிவெடுத்த செய்தியறிந்தவுடன் துள்ளிக் குதித்து விளையாடிவிட்டான் குட்டிசுவர்த் தெருக்காரன்.
ஊரில் யார் இறந்தாலும் தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டம். ஒன்று தேவைப்படுபவன் 10 ஹாண்ட் சனிட்டைசர்களை கடையிலிருந்து அள்ளிச் செல்கிறான். அத்தியாவசியத் தேவைக்குக் கூட இல்லாமல் சுத்தமாக வளித்து வைத்திருக்கிறார்கள் எல்லா பலபொருள் கடைகளிலும். வைரவஸ் கூட நல்ல வியாபரம்தான் இங்கே..

சளியும் காய்ச்சலும் இருந்தால் கொரோன அறிகுறியாம்.. சளி வந்துவிட்டது.. காய்ச்சல்தான் இன்னும் வரவில்லை... எதற்கும் இஞ்சிக்கசாயமும், நிலவேம்பு கசாயமும் தயாரக வைத்திருக்கிறேன். எந்த வைரஸ் வந்தாலும் தமிழனின் கண்டுபிடிப்பான நிலவேம்புக் கசாயம் முறியடித்துவிடும் என்ற உண்மை தெரிந்தபின் எதற்குக் கவலை..?

"சாகும் நாள் தெரிந்துவிட்டால், வாழும் நாளெல்லாம் நரகம்" என்று சூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து எழுதிய வசனம் எவ்வளவு மொக்கையானது என்று இப்போதுதான் தெரிகிறது.
சாகப்போகிறவன், சந்தோசமாகவே இருக்கிறான். அவன் மனிதர்களை கூடுதலாக நேசிக்கத் தொடங்குகிறான். இருக்கப்போகும் ஒவ்வொரு விநாடியையும் வாழ நினைக்கிறான். வாழும் வரை இருப்பவர் நினைவில் தன் நல்ல பிம்பத்தை பதியவைக்க நினைக்கிறான். அவனிடம் இழப்பதற்கு எதுவுமில்லாத மன நிலையில், இந்த உலகில் இருப்பதெல்லாம் அவனுடையதாகிவிடுகிறது. அங்கு போட்டிகளில்லை, பொறாமையில்லை..


அன்பும் பேரின்பமும் மட்டுமே நிறைந்திருக்கிறது...

ராஜா சவுண்டு சர்வீஸ்

ஒரு ஊரில் ஒரு சவுண்டு சர்வீஸ்.. அதன் பெயர் ராஜா சவுண்டு சர்வீஸ்... எல்லாக் கடைகளையும் போல அந்தக் கடையும் ஊரின் கடைவீதியில் மக்கள் கூடுமிடத்தில் இருந்தது. திருமண விழாவிற்கு ஒலி பெருக்கிகள், பொதுக்கூட்டங்களுக்கு மைக் செட், கூம்பு ஒலிபெருக்கிகள் முக்கிய வீதிகள் எங்கும் உயர்ந்த மரங்களில் கட்டி உணர்ச்சிகர அரசியல் உணர்வை ஊராருக்கு ஊட்டியதில் பெரும் பங்கு ராஜா சவுண்டு சர்வீசுக்கு உண்டென்றால் அது மிகையில்லை... கடவுள் மறுப்பு, சுயமரியாதை என்று புரட்சிகர சிந்தனைகளை விதைத்துவிட்டு புரட்டாசி, கார்த்திகையில் அம்மன் அருள், முருக கவசம், ஐயப்ப கோசங்களைக் காற்றில் பரவவிட்டு ஊரைக் கடவுளிரின் கட்டுப்பாட்டுக் கொண்டுவந்துவிடுவர்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு, கோவில் திருவிழாக்களுக்கு, பொதுக்கூட்டங்களுக்கு சிறந்த முறையில் ஒலிப்பெருக்கி, மைக் செட், அலங்கார விளக்குகள் அமைத்திட அணுகவும் "ராஜா சவுண்ட் சர்வீஸ்.. ராஜா சவுண்ட் சர்வீஸ்.. சத்தி மெயின்ரோடு.. புஞ்சை புளியம்பட்டி" என்று எக்கோவில் இடையிடையே விளம்பரம் செய்துகொள்ளும் அந்த மல்லிகைப்பூ.
இந்தச் சமூகக் கடமைக்கிடையில் ஆல் இந்திய ரேடியோவின் சென்னை, கோவை வானொலிகள் வழியே கட்டுப்பாட்டில் தவழ்ந்த இளையராஜாவின் இசையை கட்டற்ற காட்டருவியாக்கிய பங்கும் ராஜா சவுண்டு சர்வீசுக்கு உண்டு. T Series 60, 90 என்ற கேசட் (ஒலி நாடா) மூலம் விருப்பமான பாடல்களை எழுதிக் கொடுத்தால் இரண்டொரு நாளில் பாடல்களை கண்டெடுத்து கணகச்சிதமாக பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். 60 நிமிடம் ஓடக்கூடிய ஒலிநாடாவிற்கு 60 ரூபாயும், 90 நிமிடம் ஓடக்கூடிய ஒலிநாடவிற்கு 75 ரூபாயும் கட்டணம். 60 நிமிட ஒலி நாடாவில் ஒரு பக்கத்தில் 5 முதல் ஆறு பாடல்கள், அடுத்த பக்கம் இன்னொடு 5 பாடல்கள் பதிவு செய்து கொடுப்பார்கள்.
Echo Recording Company - Home | Facebook
ஒரே படப்பாடல்களை மட்டுமே கம்பெனிக்காரர்கள் ஒரிஜினல் கேசட்டுகளாகக் வெளியிட்ட வேளையில், தனக்குப் பிடித்த வெவ்வேறு படப் பாடல்களை ஒரு தொகுதியாக ஒரு ஒலி நாடாவில் கேட்பது அன்றைய ஜூக் பாக்ஸ் பிளே லிஸ்ட். வானொலியில் விரும்பிய பாடல்கள் அவ்வப்போது ஒலி பரப்பினாலும் அவற்றைக் கேட்க அவர்கள் விருப்பப் பட்ட நேரத்தில் தான் முடியும். ஆனால் ஒரு இசை ரசிகனுக்கு, குறிப்பாக ராஜாவின் ரசிகனுக்கு காதிலியின் நினைவை மீட்டெடுக்கும் வேளையில், கையில் காசில்லாமல் கவலை குடிகொண்டிருக்கும் நேரத்தில், செல்ல நாயின் மறைவு, காரணமில்லாத சோகம் மற்றும் மகிழ்ச்சியைக் கரைக்க ராஜாவின் கங்கை அருவியை ராஜா சவுண்டு சர்வீசில் பதிவு செய்து வாங்கிய ஒலிநாடாக்களே கட்டவிழ்க்கும்.
ஒரு நேரத்தில் ஒரு பாடல் இளையராஜவினுடையா பாடல் எந்தப் படத்தினுடையது என்ற விவாதத்தில் அந்த இளைஞர்கள் 10 ரூபாய் பந்தையம் வைத்து ராஜா சவுண்டு சர்வீஸ் அண்ணனின் உதவியை நாட.. அவர் இரண்டு பேரும் சொல்லும் படத்தின் பாடல்களை ஒலிக்கவிட்டு தீர்ப்பை வழங்கினார்.. அவர் வெறும் ஒலி அமைப்பாளரில்லை.. நீதி தேவன் என்றும் அமைதியாக நிரூபித்துவிட்டார்..

செல்வம் சலூன், பாபு டெய்லர் கடைகளில் எப்போதும் இளையராஜா பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கும். சலூன் கடை ஸ்பீக்கர்கள் மற்றும் ஆம்ளிபையர் ராஜாவின் இசையைக் கொஞ்சம் தூக்கலாகக் கொடுக்கும். அது டிவிக்கள் ஆக்கிரமிக்காத சலூன்கடைகளின் ராஜ போதைக் காலம். பாபு டெய்லர் கடையில் தைக்கும் நாலைந்து டெய்லர்களும் 30 வயதைத் தாண்டியவர்கள். அங்கு பாபு என்னும் தலைமை டெய்லர் வாடிக்கையாளரின் அளவெடுத்து அதற்கேற்ப அவர்கள் வாங்கிக் கொண்டுவந்த துணிகளை வெட்டி சக டெய்லர்களிடம் கொடுப்பார். அவர்கள் பாடல்களை ரசித்தபடி கால்கல் தையல் மெசினை மிதிக்க கைகள் வளைத்து வளைத்து துணிகளை ஊசியின் குதிரைகளுக்கிடையில் நகர்த்தி அழகான ஆடைகளை உருவாக்கிவிடுவர். காஜா பாய் என்றொரு சிறுவனும் இருப்பான். அவன் புதிதாக தையல் கற்றுக்கொண்டு வருங்காலத்தில் பாபுவைப் போல பெரிய தையல்காரனாக வேண்டும் என்ற கணவு கொண்ட அப்ரண்டீஸ். சர்ட் மற்றும் பேண்டுக்கு பட்டன் தைப்பது, பட்டன் நுலையும் ஓட்டை காஜா, அதைக் கையால் தைப்பது போன்ற வேலைகளை செய்வான்.

இவர்கள் அதிகம் பேசிக்கொள்வது ராஜாவின் இசை வழியேதான். எலோருக்குள்ளும் எதையோ எடுத்தும், வைத்தும், தைத்துக் கொண்டே இருக்கிறார் ராஜா.. அவரவர்க்கான அளவுகளில்..காலை மற்றும் மாலை வேளைகளில் கடந்து செல்லும் இளங்கன்னிகளுக்கென்ற பாடல்கள்

வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுது...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...

ஒரு ஜீவன் அழைத்தது மறு ஜீவன் துடித்தது...

ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.. (பள்ளி.. கல்லூரிகள் விடுமுறையான சனி மற்றும் ஞாயிறு..)

அந்தந்த நேரத்தில் ஒலிக்கவிடப்படும். 10க்கு 10 தான் கடையின் அளவு, ஆனால் அதற்குள் அந்த ஐயவரின் பேரண்டத்தை அடைத்து வைத்திருந்தார் ராஜா.
வேலைக்குச் செல்வோர், கல்லூரிக்குச் செல்வோர்களை பயணக்களைப்புத் தெரியாமல் நகர்த்துவதும் ராஜாதான். ராஜாவின் பலநூறு முத்துக்களில் பத்திருபதைக் கோர்த்து அந்தக் காலையையும் மாலையையும் காதலால் நிறப்பிவிடுவார் அந்தப் பெரும் ரசிகரான ஓட்டுனர்.

ஒரு நாளும் உனை மறவாத வரம் வேண்டும்...

புண்ணை வனத்து குயிலே...

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ...

நீதான நீதான அன்பே நீதானா...

ராஜ ராஜ சோழன் நான்....

அந்த இளைஞனும் கன்னியும் காதல் வயப்பட்டுப் பின்னாளில் பேசாமலே பிரிந்து சென்ற போனபோதாகட்டும், அந்த இளமையான காதலை அவர்கள் வாழ்நாள் முழுதும் அவர்கள் இருக்கு இரு துருவங்களில் அசைபோட்டக் கொள்ள வைப்பதுவும் ராஜாவின் இசை மதுவே.

இப்படி காற்றைப்போல கலந்திருக்கும் ராஜாவின் இசையை ஆக்சிசன் சிலிண்டரைபோல கேசட்டில் நிறப்பி மூச்சை நிறுத்த விருப்பமில்லாத ஜீவன்களின் மூச்சுக் காற்றாகக் கொடுத்த ராஜா சவுண்டு சர்வீஸ் ஒரு சஞ்சீவிதான். அந்த ராஜா சவுண்டு சர்வீசுக்கு மூச்சைக் கொடுத்த ராஜா ஒரு கடவுளே..

Tuesday, March 12, 2019

பொல்லா ஆட்சி


சட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும்.
ஆனால் அதிகாரமும், பணமும் இணைந்தால் இந்தியத் திருநாட்டில் எந்தத் தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் குடிப்பது தவறு என்பதால் மறைந்து குடித்தனர். ஆனால் இன்று குடிப்பது சமூகத்தில் இயல்பான செயலாக மாறிப்போனது.
திருட்டு, கொலை, கற்பழிப்பு, கொள்ளை எல்லாவற்றையும் எந்தக் குற்றவுணர்வின்றிச் செய்துவிட முடிகிறது இன்றைய இளைஞர்களால். பாதிக்கப்பட்டவர் நம்மில் ஒருவராக இல்லாதபோது அனைத்தையும் ஒரு செய்தியாகக் கடந்துவிடுகிறோம்.
அறத்தின் அளவுகோள் மாறிப்போனது. எத்தனை காசைக்கேட்டாலும் கொடுத்துத் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு எந்தக் கேள்வியுமில்லாமல் இடம் வாங்கிப் படிக்க வைக்கிறார்கள். என்ன படிக்கிறார்கள் என்ற கவலை யாருக்குமில்லை. மனித வாழ்க்கையின் அடிப்படை அறத்தைக் கற்றுக்கொடுக்கும் கல்வி மறைந்துவிட்டது. இண்டர் நேசனல் ஸ்கூல் என்று உலகத்தில் இல்லாததைக் கற்றுக் கொடுக்கிரார்கள். கல்வியின் நோக்கமே மிகுந்த பொருளீட்டும் வாழ்க்கையைப் பெறுவதாக மாறிவிட்டது. அறமற்ற வாழ்கை வாழ எவருக்கும் குற்றவுணர்ச்சியில்லை.
காசுக்காகப் பொய் சொல்வது, திருடுவது, பலமில்லாதவர்களின் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அதிகாரத்தை வைத்து காரியம் சாதிப்பது, பணமிருந்தால் எதையும் செய்யலாம் என்ற மனவலியைப் பெறுவது என அடிப்படையே தவறாக வந்து நிற்கிறது.
சட்டத்தைக் காக்கும் காவல் துறையும் அதை இயக்கும் அரசும் மக்களைத் தவறு செய்ய அனுமதிக்கிறது. மக்கள் செய்யும் தவறுகளே அவர்களுக்கு மூலதனம். தாங்கள் செய்யும் தவறுகளை மக்கள் கேள்விகேட்கும் தார்மீக உரிமையை அழிக்க எளிதான வழி.
வெகுதூரம் பயணித்துவிட்ட அறமற்ற வாழ்க்கையைத் திருத்துவதெல்லாம் அவ்வளவு எளிதில்லை. நடந்த கொடுமைகளை தேர்தல் நேரத்தில் கையிலெடுத்து எதிர்கட்சிகள் ஆதாயம் தேடுகின்றன. எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் பெயரளிவில்தான் வேறுபாடு. அவர்கள் கையில் அதிகாரமிருந்தபோதும் இந்தக் கொடுமைகள் நடந்ததற்கு நாளிதழ் செய்திகள் சான்று.
வெளியே வந்தது ஒரு பொள்ளாச்சி, பொல்லா ஆட்சியில் வெளியே வராத பொள்ளாச்சிகள் எத்தனையோ?
குற்றம் எப்படி நடந்தது என்பதை மட்டுமே காவல்துறை விசாரிக்கும்.
குற்றம் ஏன் நடந்தது, அதற்கான காரணிகளை எப்படி சரி செய்வது, எதிர்காலத்தில் குற்றங்கள் நடக்காமல் எப்படித் தடுப்பது என்பதை அரசு செய்யவேண்டும். அதற்கு விசாரணைகளைத் தாண்டிய சமூக உளவியல் ஆய்வு நடத்தப்படவேண்டும். அதனடிப்படையில் சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கப்படவேண்டும்.
என்கவுண்டரில் போட்டால் எல்லாம் சரியாகிவிம் என்றால் ஆளுக்கொரு துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதுவா ஆரோக்கியமான சனநாயகம்?

Sex Offenders - பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கென தனியான ஒரு பதிவேடு அமெரிக்காவில் உண்டு. ஒரு முறை குற்றமிழைத்தாலும் அவர்கள் வாழ்க்கையே முடிந்தது. வேலைக்கான பின்புல ஆய்வில் இவை வெளிப்படும். இவர்களுக்கு நிறுவனங்கள் வேலை கொடுக்கத் தயங்கும். இவர்கள் பற்றிய பதிவேடு பொதுமக்கள் எவராலும் எப்போதும் பார்வையிடமுடியும்.
இன்னும் கொஞ்சம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வந்தால் நமது செல்லிடப்பேசிகள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும்படி செய்ய முடியும். அவர்கள் இருக்கும் இடத்தை வரைபடத்தில் பார்த்து அவர்களைத் தவிர்த்துவிடலாம்.
இதை இந்தியாவில் செய்ய நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவல் நிலையத்தில் பதியப்பட்ட புகார்கள் மற்றும் தனி நபர் புகார்களின் அடிப்படையில் தனியான அமைப்பு நடத்தும் வலைத்தளமாகவே செய்யலாம்.

கடைசியாக பொள்ளாச்சி புகழ் பெற்றது 1965ல் நடை பெற்ற மொழிப்போராட்டத்தில். இந்தித் திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பிப் 12 அன்று ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அதன் பின் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். சரியாக 54 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கும் சூழலில் பெண்களைச் சீரழிக்கும் போக்கு வளர்ந்து நிற்கிறது.
இது பெரியார் பிறந்த மண். இது திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்த மண்.
அதிகாரத் திமிரில், ஊழல் செய்து சேர்த்த செல்வத்தில் குற்றங்களை கூச்சமில்லாமல் செய்வது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு சாமரம் வீசும் அரசு அதிகாரிகள்.
இவைதான் 54 ஆண்டுகால சாதனைகள்..

சந்தோசின் தமிழ்ப் பாடங்கள் - 1

வார இறுதியில் நடக்கும் தமிழ்ப் பள்ளிக்குச் செல்வது சந்தோசிற்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. வாரத்தின் ஒவ்வொரு நாளும் பள்ளியில் நடத்தப்படும் பாடங்களைப் படிப்பதும், வீட்டுப்பாடங்களைச் செய்வதும் சுமையாக இருப்பது போதாதென்று பெற்றோர்கள் ஆசைக்காக இப்போது தமிழ்ப்பள்ளியில் பாடம் கற்பது இன்னும் சுமையை அதிகமாக்கியதாக உணர்ந்தான். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடுவது, போர்ட் நைட் கேம் விளையாடுவது என்று கொண்டாட்டமாக இருக்கும். இப்போது ஞாயிற்றுக் கிழமையில் ஒரு பாதி தமிழ்ப் பள்ளியால் வீணாகி விடுகிறது.

ஞாயிற்றுக் கிழமை பாடம் கற்பதை விட கொடுமை இந்த உலகத்தில் இல்லை என்பதுபோல் சலித்துக் கொண்டான் அவன். எதற்காக தமிழ் படிக்க வேண்டும். பள்ளியில் கற்பது போதாதா? பக்கத்து வீட்டு ராகேசோ, ஆரியனோ தமிழோ, குஜராத்தியோ படிப்பதில்லையே.. நான் மட்டும் ஏன்..? என்றெல்லாம் கேள்விகேட்டு தமிழ்ப் பள்ளிக்கு வருவதற்கெதிரான காரணங்களை மனதிற்குள் சேர்த்துக்கொண்டே போனான்...

தன்னைப்போலவே தமிழ்ப்பள்ளியின் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களும் உணர்வதுபோல் தெரிந்தது அவனுக்கு. ஒரு சில பெண் பிள்ளைகள் மட்டும் வெகு ஆர்வமாக பாடம் படித்தனர். ஆசிரியர் சொல்வதை அப்படியே கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏன் தமிழ் கற்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லையா? எப்படி இப்படி வரட்சியாக வகுப்பில் இருக்க முடிகிறது? என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தாலும் அவனால் அவற்றை வெளிக்காட்ட முடியவில்லை.

அ, ஆ என்று தொடங்கி இப்போது க், ங், ச் என்று போக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஓரிரு பாடல்கள், ஓரிரு கதைகள் என்று பாடம் போய்க்கொண்டிருக்கிறது. இப்போதுதான் நிலை 1. அடுத்த ஆண்டு நிலை 2, அதற்கடுத்த ஆண்டு நிலை 3 என்று 8 நிலைகள் முடிக்க வேண்டும். முடித்த பின்? முடித்தால் என்ன கிடைக்கும்? ஏன் முடிக்க வேண்டும்? என்று ஒவ்வொரு முறையும் தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான்.

இன்று நடந்த வகுப்பில் தமிழ்ப் பாடம் நடந்து கொண்டிருக்கும்போது நடுவில் தூங்கிவிட்டான் சந்தோசு. ஆசிரியர் அவனை எழுப்பி முகம் கழுவி வரச்சொன்னார். சலிப்புடன் சென்று முகம் கழுவி வந்தான். ப், ம், வ் என்று பாடம் நகர்ந்து கொண்டிருந்தது. பொறுமை இழந்தவன் எழுது நின்றான். ஆசிரியர் அவனை வியப்புடன் பார்த்தார். இப்பொழுதுதான் கழிவரைக்குப் போய்வந்தான், மறுபடியும் போக வேண்டுமா? என்பது போல் பார்த்தார்.

ஆனால் அவன் ஒரு கேள்வியைக் கேட்டு ஆசிரியரை அதிர்ச்சிக்குள்ளாக்கினான். "ஏதற்குத் தமிழ் படிக்க வேண்டும்?" என்று கேட்டுவிட்டு அமர்ந்தான். ஆசிரியருக்கு தொண்டை வரண்டுவிட்டது. அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரக் குடித்துக் கொண்டு பதில் சொன்னார்.

தமிழ் நமது தாய்மொழி. அது 2000 வருடத்திற்கு முன் உருவான பழமையான மொழி. அதை நாம் படிப்பது அவசியம் என்று பதில் சொன்னார். ஆனால் சந்தோசிற்கு அது திருப்தி அளிக்கவில்லை. அவர் சொன்ன பதில் தமிழ் மொழியைப் படிக்கத் தேவையான காரணமாகத் தெரியவில்லை.

புரிந்து கொண்ட ஆசிரியர் சிறிது அமைதிக்குப் பின் பாட புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அருகில் வந்து நின்று பேசினார். நியூட்டன் யார் என்று தெரியுமா என்று கேட்டார். தெரியும்.. இயற்பியல் ஆய்வாளர் என்றான் சந்தோசு. நல்லது. அவர் என்ன ஆராய்ச்சி செய்தார்? பொருட்களின் அடிப்படை இயக்கம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கியவர் என்றான்.

சரி.. அவர் எப்போது பிறந்தார் என்று தெரியுமா? என்றார். தெரியாது என்றான். 16ம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் என்று ஆசிரியர் பதிலளித்தார். புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிராற்றலைக் கொடுப்பது சூரியன். சூரியன் இல்லையென்றால் பூமி வெறும் பனிக்கோளமாக இருக்கும். சூரியனி ஒளி மற்றும் வெப்பம் மற்றும் கதிராற்றலால்தான் புவியிலுள்ள தாவரங்கள், மற்ற உயிரினங்கள் தங்கள் வாழத் தேவையான ஆற்றலைப் பெறுகிறது.

இதை நியூட்டனுக்கு முன் 1600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். தமிழ் இலக்கியங்கள் 2000 வருடங்கள் பழமையானவை. அதில் ஒன்றான திருக்குறளில் இந்த சூரிய ஆற்றல் பற்றி திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். அந்தக் குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்களுக்கெல்லாம் மூலம் அகரம் அதுபோல உலகின் உயிர்களுக்கு மூலம் ஆதவன் என்கிற சூரியன் என்பதுதான் அதன் பொருள் என்று விளக்கமளித்தார்.

சந்தோசிற்கு சந்தோசம் பொங்கியது. தான் தமிழ் படிப்பது என்பது வீணானது இல்லை என்பதை உணர்ந்து கொண்டான். மேலும் தமிழாசிரியர் சொன்னார் "தமிழ் இலக்கியங்கள் ஒரு புதையல். நீங்கள் படிக்கும் தமிழ் மொழியானது அந்தப் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரைபடம்" என்று இன்னொரு தகவலைச் சொன்னார். அவனுக்கு டோராவின் நினைவு வந்தது.

அவன் தமிழ் கற்பதில் பெருமிதம் கொள்ளத் தொடங்கினான். அந்த பெருமிதம் பெரும் மகிழ்ச்சியாக அவனது முகத்தில் தெரிந்தது. தொடர்ந்து தமிழ்ப் பாடத்தைக் கூர்மையாகக் கவனித்து கேள்விகள் கேட்டுப் படிக்க ஆரம்ப்பித்தான் சந்தோசு.

Monday, March 11, 2019

தாய்மொழி நாள்

பால் கலாநிதி என்ற இந்திய வம்சாவளி நரம்பியில் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஆய்வாளர் “மூச்சு வெறும் காற்றாகும்போது” என்னும் நூலில் மரணத்துடனான தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். புற்றால் பின்நாளில் மரணித்துப் போகும் அவர் தன் அனுபவத்தை நூலாக வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஒரு அனுபவத்தைச் சொல்லும்போது, மனித மூளையில் மொழியைப் புரிந்துகொள்ளவும், மொழியின் வழி உரையாடவும் என இரு பகுதிகள் இருக்கிறது. அந்தப் பகுதியில் மூளையில் புற்றுக் கட்டி உருவான ஒருவர் நாம் பேசுபவற்றை புரிந்துகொள்வதும், பதிலை வெறும் எண்களில் “4523” சொல்லும் நிகழ்வொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
மொழி என்பது வெறும் தொடர்புகொள்ளும் கருவியல்ல. அது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவனின் சிந்தனையை, ஆற்றலை தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. தாய் மொழியில் சிந்திப்பவர்கள் திறன் இயல்பாகவே கூடுதலாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.ஆங்கிலம், ஸ்பானிஸ், மாண்டரின் என எல்லா மொழிகளையும் கற்கலாம். ஆனால் தாய்மொழியைக் கற்றுக்கொண்டு அதன் வழி சிந்திப்பதும், விளங்கிக் கொள்வதும் இயல்பாக கூடுதல் ஆற்றலை ஒருவருக்குத் தரும்.இவ்வாறான நிலையில் ஆங்கிலம் உயர்ந்தது, இந்தி சொறுபோடும், சமசுக்கிருதம் மோட்சம் தரும் என்று தமிழை அரசு அதிகாரத்தின் வழி ஒரு பிரிவினர் அழிக்க முயல்வதை புரிந்து கொள்ளவேண்டும். மொழியை அழிப்பதன் மூலம் ஒருவரது அடையாளத்தை, சிந்திக்கும் ஆற்றலை அழித்துவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதற்கு நம்முடனே இருக்கும் சில கோமாளிகளும் துணை நிற்கிறார்கள்.தமிழ் மொழி ஒரு அறிவியல் மொழி. அதன் ஒலி, சொல்லமைப்புகள் தற்செயலானதல்ல. வலி மிகுந்த ஒலியை ஏற்படுத்தும் சொற்கள் உணர்ச்சியை அப்படியே வெளிப்படுத்துவை. மூளை தான் சொல்ல வருவதை வாய் அப்படியே வெளிப்படுத்துகிறது. பூசி மெழுகிச் சொல்லும் தேவை தமிழில் இல்லை. தமிழில் ஒரு சொல்லில் வெளிப்படுத்தும் உணர்வை வேறு மொழிகளில் சொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது பண்பட்ட மொழிக்கே உள்ள சிறப்பு. தமிழுக்கு யாரும் செம்மொழி அங்கீகாரம் கொடுக்கும் முன்னும் அது செம்மொழியாகவே இருந்தது.

“தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!” என பாரதிதாசன் பாடியது மிகுந்த பொருள் கொண்டது.
உலகத்தினருக்கு தாய்மொழி தின வாழ்த்துகள்
தமிழருக்கு உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள்..

Monday, February 18, 2019

புல்வாமா குண்டு வெடிப்பு

இந்திய ராணுவத்தின் ரிசர்வ் படையினர் விடுமுறை முடிந்து ஜம்முவில் உள்ள படை முகாமுக்குச் செல்லும் வாகனத்தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 45 வீரர்கள் உயிரழந்த செய்தி வேதனையளிக்கிறது. இராணுவத்தில் சேர்வது என்பது நாட்டுப்பற்றைத் தாண்டிய தனிப்பட்ட குடும்பத்தின் சுமையைக் குறைக்கத் தன்னை அற்பணித்துக்கொள்ளும் தியாகச் செயல் என்பதுதான் உண்மை.

இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட வறுமையும் மனித வளமும் மிகுதுள்ள நாட்டில் காலாட்படைக்கு எப்போதும் ஆட்கள் சேர்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களின் இழப்பிற்குப் பிறகு அவரை இழந்த குடும்பத்திற்குக் கிடைக்கும் இழப்பீடும் அவ்வளவு பெரிதாக இருக்காது. அவர்கள் தியாகத்தை ஒன்றிரண்டு நாட்களுக்கு முகநூலில் எழுதிவிட்டு பிறகு வேறு ஏதோ பிரச்சினையைப் பிடித்துக் கொண்டு காலந்தள்ளும் இந்தச் சமூகம்.

இந்தக்குண்டு வெடிப்பிற்கு மற்றவர்கள் போல் கருப்பு வெள்ளையாக என்னால் ஒரு தெளிவான முடிவில் எழுத முடியவில்லை. இந்தக் குண்டு வெடிப்பு குறித்த சில ஹைப்போதீசை முன் வைத்து வேண்டுமானல் எழுதலாம்.

எந்த ஒரு தாக்குதலுக்குப் பின்னும் ஒரு அரசியல் அல்லது படை இலக்கு இருக்கும். அது எதிரிக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது, நிலங்களை கைப்பற்றுவது, உலகில் எதிரியின் வலிமையைக் கேள்விக்குள்ளாக்குவது, உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளாக இருக்கலாம். அந்த அடிப்படையில் சில ஹைப்போதீசிஸ்

ஹைப்போதீசிஸ் 1: பாகிஸ்தான் புத்திசாலி, இந்தியா அப்பாவி

பாக்கிஸ்தானின் இலக்கு காசுமீரம் தாண்டி ஜம்முவுக்குள்ளும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும். மோடி அரசு சொன்னதுபோல் தாங்கள் பயந்து தாக்குதலை நடத்தாமலிருக்கவில்லை என்று ஒரு சேதியைச் சொல்கிறார்கள்.

இந்தியாவின் தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளது கடந்த தேர்தல்கள் உணர்த்துகிறது. இந்த நிலையில் இந்திய மக்களைத் தண்டிக்க ஒரே வழி இந்த ஆட்சியாளர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே.

ஹைப்போதீஸ் 2: பாகிஸ்தான் முட்டாள், இந்தியா புத்திசாலி

இது போன்ற தாக்குதல்கள் உள்ளூரில் கட்சி, மத நம்பிக்கை தாண்டி மக்களை ஒன்றிணைத்துவிடும். அந்த ஒற்றுமையை தனக்குத் துறுப்புச் சீட்டாக வைத்து தற்போதைய இந்திய அரசு, அதுவும் இந்துத்துவத்தை முன்னிறுத்தும், இந்தியப் பிரிவினையை எதிர்க்கும் அரசு ஒரு பெரும் தாக்குதலை அல்லது பாகிஸ்தானை மேலும் உலக அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளும் என்ற கணிப்பு இல்லாமல், தானாகவே மக்களின் செல்வாக்கை இழக்கும் ஆளும் அரசு வரும் தேர்தலில் ஆட்சியை இழக்கும் முன் அவசரப்பட்டு தாக்குதலை நடத்திவிட்டது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில்லாமல் கவர்னரின் ஆட்சி நடக்கும் போது இரணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து இந்திய அரசும், இந்துத்துவர்களும் காசுமீரில் ஒரு போர்க்களத்தை உருவாக்கி இசுலாமியர்கள் வேட்டையாடப்படலாம் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் ஒரு தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திவிட்டது பாகிஸ்தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆளும்கட்சி சிறிய அளவிளான போரை நடத்தி அதில் தன் இலக்கை அடைந்துவிட்டதாக நிறுவி மக்களிடம் மீண்டும் ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு தேர்தலைச் சந்திக்க வழி ஏற்படுத்துவது. மீண்டும் ஆட்சிக்கு வந்து தொடர்ந்து சண்டைபோட்டுக் கொண்டிருப்பது.

ஹைபோதீசிஸ் 3: பாகிஸ்தான் அப்பாவி, இந்தியா புத்திசாலி

பாகிஸ்தான் குண்டுவெடிப்பை நிகழ்த்தவில்லை, அதற்கு அப்படி ஒரு தேவை இப்போது இல்லை. இந்தியாவின் தற்போதைய ஆட்சி தானாக தேர்தலில் தோல்வியடைந்து விலகும் வரை படை நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது.

இந்த மூன்று ஹைப்போதீசிஸ் இல்லாமல் வேறெதுவும் இருக்கலாம். ஆனால் அவற்றிற்கான அரசியல் முக்கியத்தும் இன்றைய சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி அதை ஆராயலாம்.
இந்தியாவைக் கட்டுக்குள் வைக்க சீனாவிற்கு பாகிஸ்தான் தான் தற்போதை துருப்புச்சீட்டு. அது ஒரு போதும் பாகிஸ்தான் வீழ்வதை விரும்பாது. இரஸ்யா இந்தியாவிற்கு நேரடியாக ஆதரவைத் தெரிவித்தாலும் சீனாவின் பின்ணணியில் நடக்கும் பாகிஸ்தான்- இந்தியா போரில் இரஸ்யா இந்தியாவின் பக்கம் நிற்குமா என்பது விடைகிடைக்காத கேள்வி. ஏனென்றால் மத்திய ஆசியாவில் நடைபெறும் போர், எண்ணைச் சந்தையின் சரிவு என ஏற்கனவே அதன் பொருளாதரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. இப்போது இந்தியாவின் பக்கம் நின்று அது எந்த இலாபத்தை அடையப்போகிறது என்ற கேள்விக்கான விடையிலேயே அதன் ஆதரவு அமையும்.
அமெரிக்கா வெளி நாடுகளில் இராணுவ நடவடிக்கைள் செய்வதைக் குறைத்து தன் செலவுகளைக் குறைத்து வருகிறது. அதற்கு சீனா என்ற கடங்காரன் பொருளாதார வீழ்ச்சி அடைவது விரும்பத்தக்க விளைவு. ஆனால் அதற்கு இந்தியா அமெரிக்காவை பாகிஸ்தானைப் போல தனது மண்ணில் செயல்பட அனுமதிக்காது. மேலும் இந்தியா அமெரிக்காவை முழுமையாக எப்போதும் நம்பியதில்லை, அதற்கான சூழல் இன்னும் ஏற்பட்டதகாத் தெரியவில்லை.
உலக நாடுகளின் முழுமையான ஆதரவில்லாமல் சீன ஆதரவு பாகிஸ்தானுடனான முழுமையான போருக்கு இந்தியாவின் பொருளாதாரம் தாயாராக இருக்கிறதா என்பதும் ஆராயப்படவேண்டும்.
ஆக இந்த குண்டுவிடிப்பில் உயிரிழந்த 45 உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்கள் குடும்பத்திற்கு நம்மால் ஆன உதவியைச் செய்து அமைதியாக இருப்பதே இப்போதைக்கு நமக்கும் நாட்டிற்கும் நல்லது.

Tuesday, February 12, 2019

ரைட்டு விடு...

நம்ம ஊரில் நம்மை ரோசக்காரன் என்றால் பெருமை கொள்வோம்..

மானஸ்தன் என்றால் இன்னும் அதிக பெருமை கொள்வோம்..

ஆனால் இந்த மானம், ரோசம் என்றால் என்ன? இதன் வரைறைதான் என்ன? மானம், ரோசமெல்லாம் எல்லோர்க்கும் ஒன்றேதானா?

அப்படி மான ரோசத்தோடு வாழ்ந்து சாதித்தவர்கள் ஒரு பத்துப் பெயரைச் சொல்லுங்கள்?

அதற்காக மானம், ரோசமில்லாமல் வாழவேண்டுமென்று சொல்லவில்லை... சும்மா எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பார்க்க முடியாத மான ரோசத்திற்காக முடிவெடுத்து வீணாய்ப்போனவர்களை நிறயப் பார்த்திருக்கிறேன். பல தற்கொலைகள், கொலைகள் இந்த "மான ரோசத்திற்காக" நடந்திருக்கிறது.

சமீபத்தில் கூட ஒரு வாடகைக் கார் ஓட்டுனர், காவலர்களின் சகிக்க முடியாத வசையை (அதுவும் ஒரு பெண் முன்னே) கேட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்..

இன்னும் கிராமப்புறத்தில் இப்படி உணர்ச்சிவசப் படுபவர்கள் ஏராளம்...

எங்கள் தாத்தா கூட தங்கள் ஊரில் பாவு தோய்ந்தபோது அங்கு சிந்தியிருந்த கஞ்சி மீது கால் வைத்து வழுக்கி விழுந்துவிட்டாராம். அதைச் சுற்றியிருந்தவர்கள் பார்த்து சிரித்து விட்டார்களாம்..
அவ்வளவுதான்.. வந்தது ரோசம்.. பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு புளியம்பட்டி வந்துவிட்டாராம்.. அவருக்குப் பெயர் வயக்காட்டுக்காரார்... அந்த வயக்காடு எங்கிருக்கிறது, யாரிடம் இப்போது இருக்கிறது என்றெல்லாம் தெரியாது..

முதலிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்..

நானும் கூட மேலாளர் திட்டியதற்கெல்லாம் ரோசப்பட்டு வேலையை விட்டு வந்திருக்கிறேன்.. (ஆனால் அதனால் பெருமைப் படும் அளவில்தான் இருக்கிறேன்). அன்றைய காலத்தில் அது குடும்பத்திற்குச் சுமையை ஏற்படுத்தியிருந்தது என்பது மறுக்க முடியாது..

எல்லோருமே நம்மைப்போலத்தான் ரோசக்காரர்களா? மானஸ்த்தர்களா? .. வெற்றி பெற்றவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் மற்றவர்கள் வசவால் ஒருபோதும் தங்களை மானமிழந்தவர்களாகக் கருதிக்கொண்டு முடிவுகளெடுப்பதில்லை..

இன்னும் சொல்லப்போனால் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அதற்கு ஏற்ப மான ரோசத்தை இழந்துதான் அந்த உயரத்தை அடைந்திருப்பார்கள்.. குறிப்பாக விற்பனைப் பிரிவில் இருப்பவர்கள்..

ஆக.. சும்மா மானம் போய்விட்டது, மரியாதை போய்விட்டது என்று உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளெடுத்து வீணாய்ப் போவதைவிட அந்தக் கோபத்தை, உணர்ச்சியை நம் மானத்தை வாங்கியவரின் மானம் போகும் படியாக வாழ்ந்து காட்ட வேண்டும்..

எப்படி?

கடுங்கோபம் வந்தால் ஒரு ஆணை எப்படித் திட்டுவார்கள்.. அவன் தாயைப் பழித்தால் அவனுக்குக் கோபம் வரும் என்பதால் அதைச் செய்வார்கள்..

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிசோ அந்த (க்கெட்ட?)வார்த்தைக்கு பொருத்தமான ஆள்.. அவரும் அதைக் கேட்டு கடந்து வந்திருப்பார்தான்..

ஆனால் இன்று வெற்றி பெற்று பெரும் பணக்காரராக நம் முன் வந்து உரையாடும் போது சொல்கிறார்..

"எனது தாய் உயர் நிலைப்பள்ளியிலேயே என்னைக் கருத்தரித்தாள். எனது தந்தை, அதாவது உண்மையான தந்தை மைக், ஒரு கியூப வந்தேறி, என் உயிரியல் தந்தையல்ல. (கவனியுங்கள் தன் பிறப்பிற்குக் காரணமானவரை உண்மையான தந்தை என்று சொல்லவில்லை). என் பெற்றோர்கள் எனக்குக் கிடைத்த வரம்" என்கிறார்.

கோபப்படுவதும், ரோசம் கொள்வதும், மயிர் நீத்தால் மாண்டு விடும் மான் போல் வாழ வேண்டும் என்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு மிகையுணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. சில நேரங்களில் வடிவேல் போல் இருந்துவிட்டு கடந்து சென்றுவிட வேண்டும்.

ஆக இனி "மானங்கெட்டவனே என்று திட்டினால்"..

"ரைட்டு விடு" என்று கடந்துவிட்டால் நல்லது.. இல்லை.. கவரிமான் போல் மாண்டுவிடுவேன் என்று உணர்ச்சிவசப்பட்டால்

"பீ கேர்புல்"..

"யாருக்கு?"

"எனக்கு"..