அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பது தொடர்பாக சமூக ஊடகங்கள், நண்பர்களுக்கிடையில் ஒரு கலவையான விவாதம் நடக்கிறது. அந்த உரையாடல்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு என்னளவிலான பதில்களைத்தரும் முயற்சிதான் இந்தப் பதிவு..
எதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை?
ஏன் 6 மில்லியன் டாலர் செலவு செய்து இருக்கை அமைக்க வேண்டும்?
இத்தனை செலவு செய்து அமைக்கும் இருக்கையால் தமிழுக்கு என்ன பயன்?
இத்தனை செலவு செய்துதான் தமிழை வளர்க்க வேண்டுமா?
போன்ற கேள்விகள் வைக்கப்படுகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில் பொருளாதரத்தில் நல்ல நிலையில் இருக்கும் தமிழர்களிடம் நிதி திரட்ட ஆர்வலர்கள் முனையும்போது இது போன்ற கேள்விகள் வைக்கப்படுகிறது.
ஏன் தமிழிருக்கை? ஏன் ஹார்வார்டு? ஏன் 6 மில்லியன் டாலர்கள்? என்பதற்கு தமிழ் இருக்கைக்கான தனியான வலைத்தளத்தில் தெளிவான பதில்களைக் கொடுத்துள்ளனர், அதனால் அவற்றை ஒற்றி இங்கே இடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் இந்தக் கேள்விகளுக்குப் பின்னிருக்கும் நோக்கத்திற்கான பதிலைத் தர முயல்கிறேன்.
முதலில் நிதி திரட்டுவது, யாரிடமும் பிச்சை கேட்பதல்ல.
பொதுவாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவர் பிச்சை கேட்கும் போது, “கையும் காலும் நல்லாத்தானே இருக்கு எதுக்கு இப்படி பிச்சை கேட்டு பிழைக்க வேண்டும்?” என்று கேட்பது வழக்கம்.
தமிழிருக்கைக்கு நிதி கொடுப்பது அந்த வகையில் அல்ல. அப்படி ஒருவர் நினைத்தால் தாராளமாக “இல்லை” என்று சொல்லிவிட்டு விலகிக் கொள்ளலாம்.
மாறாக, வரலாற்றில் தமிழ் வளர்ச்சிக்கு நம் காலத்தில் நம்மாலான பொருளதவியைச் செய்து, வரலாற்றுக் கடமையாற்றுவதில் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை (தமிழ் இருக்கை அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட) தன்னார்வலர்கள் நிதிதிரட்டி நமக்களிக்கிறார்கள் என்பதுதான் நியாயமான எண்ணப்பாடாக இருக்கும். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பெருமித உணர்வே நமக்குத் தேவை.
அதையும் மீறி நமக்குக் கேள்விகள் வரும்.. அதற்கான பதிலை நாம் கீழுள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் தேடிக்கொள்ளலாம்.
நமக்குத் தமிழகத்தில் வருமானம் ஈட்ட பல வழிகளிருந்தும் ஏன் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வேலைதேடி வந்தோம்?
தமிழகத்தில் வீதிக்கு வீதி கோயில் இருக்கும் போது எதற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோவில் கட்டிக் கொண்டிருக்கிறோம்?
வந்தபோது பழைய காரை வாங்கி ஓட்டிய நாம் ஏன் சாதரணக் காரை வாங்காமல் புதிய சொகுசுக் காரை வாங்கி ஓட்டுகிறோம்?
பிள்ளைகளைச் சாதாரணப் பள்ளியில் படிக்க வைக்காமல் மிகச் சிறந்த பள்ளியில் படிக்கவைக்க ஏன் முயல்கிறோம்?
இவை எல்லவற்றுக்குமான பதில்: ஆகச்சிறந்ததை அடைந்து கொள்ள வேண்டுமென்ற மனிதனின் சாதாரண வேட்கைதான். தனக்குக் கிடைக்காத வாய்ப்பை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆற்றாமைதான்.
நம் முன்னோர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள். அவர்களுக்கு நம்மைப் போல் கேள்விகளிருந்திருந்தால்? தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து தன் வாழ் நாள் முழுதும் செலவிட்டு அவை நயம்பட நமக்குக்கிடைக்க உழைத்த சாமிநாதருக்கு நம்மைப் போல் கேள்விகளிருந்திருந்தால்?
தன் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாதவனால் தன் எதிர்காலத்தை ஒரு போதும் கைக்கொள்ள முடியாது என்பது முதுமொழி.
ஆகச்சிறந்த அறவிலக்கியங்களைக் கொண்ட தமிழில் இருந்து எத்தனை மேற்கோள்களை இன்றைய உலகலவிலான படைப்புகளில் காட்டுகிறார்கள். பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் போன்றோர்களை மேற்காட்டுபவர்களுக்கு அவர்களின் படைப்பிற்கு இணையான இன்னும் சொல்லப்போனால் மேலான படைப்புகள் தமிழில் இருப்பது, அதை அறிந்தவர்கள் சொல்லாமல் எப்படித் தெரியும்?. அதை நீங்களும் நானும் சொல்லுவதை விட சாக்ரடீசையும், அரிஸ்டாட்டிலையும் ஆராய்ந்தவர்கள் சொன்னால் அதன் வீச்சு காத்திரமாக இருக்குமல்லவா?
தமிழர்கள் கடல்கடந்து தங்கள் வணிக, அரசியல் ஆளுமையைச் செய்திருக்கிறார்கள். அதன் சுவடாக உலகமெங்கும் உள்ள மொழிகளில் தமிழ் கலந்திருக்கிறது. ஊர்ப்பெயர்கள் தமிழில் இருக்கிறது. இவற்றை சான்றுகளுடன் கண்டறிந்து, இன்னும் வரலாற்றில் மறைந்து போன பக்கங்களைத் தூசிதட்டி எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.
இதைச் செய்ய உலகளாவிய, உலகத்தரத்திலான ஆராய்ச்சிகள் தேவை. இந்த ஆராய்ச்சி முடிவுகள் அரசுகளின் கட்டுப்பாடுகள், தடைகளைக் கடந்தவையாக இருக்க வேண்டும்.
கீழடியில் நடந்த ஆய்வின் முடிவை வெளியிடாமலே ஆய்விடத்தை புதைத்ததெல்லாம் தமிழகத்தில்தான் நடந்தது. இன்னும் எண்ணற்றை ஆய்வுகள் நடக்க வேண்டிய தேவையுள்ளது. இதைச் செய்து முடிக்க வேண்டிய கடமை தமிழர்களான நமக்குத்தான் உள்ளது.
அந்தக் கடமையில் ஒரு பங்குதான் ஹார்வார்டு தமிழிருக்கை. இன்னுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் பண்பாட்டு, மொழியியல் துறைகளில் செம்மொழியாம் தமிழை அதற்குரிய உயரத்தில் தூக்கிவைப்பதிலல்லவோ தமிழ்த்தாயின் பிள்ளைகளின் கடமை. அதைச் செய்வதற்கு நமக்கு யாரும் நினைவூட்டவோ, நிர்பந்திக்கவோ தேவையில்லை. நமது கடமையாக பெருமையுடன் செய்வோம்.
நாளை நமது பிள்ளைகள் தலை நிமிர்ந்து தமிழின் புகழில் உலகெங்கும் ஆளுமை செலுத்துவார்கள். அதைக்காண நாமிருப்போமா என்று தெரியாது. ஆனால் நம் தமிழன்னை நிச்சயமாக இருப்பாள்.
அவள் அரவணைப்பில் நம் சந்ததிகள் புகழ்பெறட்டும். அதற்கு அவளை நாம் கொஞ்சம் கவனித்துக் கொள்ளலாமே..
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.
எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!
-பாவேந்தர்