Thursday, May 14, 2015

பொய்

கதிரேசன் கணக்கு வாத்தியாரைக் கண்டாலே டிராயரை நனைத்துவிடுவான். அவர் 'கை' படாமல் எந்த ஸ்டூடெண்டும் அந்த கொவுட்(Govt) பாய்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலில் பாசானதில்லை. கதிரேசனின் சொந்த ஊரில் ஸ்கூல் இருந்தும் இந்த கணக்கு வாத்தியாரை நம்பி அவனது தந்தை பக்கத்து ஊரில் உள்ள இந்த ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அதற்க்கு இரண்டு காரணங்கள் ஒன்று - கதிரேசனுக்கு அவர்தான் சரியான வாத்தியர் என்று நம்பியது. இரண்டு- பள்ளிக்கூடத்திற்க்கு கட் அடித்துவிட்டு பல நேரங்களில் பள்ளத்து பசங்களுடன் கிரிக்கெட் மைதானத்தில் ஆடிகளித்தது வெகு நாட்களுக்கு பழைய பள்ளிக்கூடத்திற்க்கும் அவருக்கும் தெரியாமல் இருந்தது."வீட்ல கட்டி மேய்க்க முடியலேன்னுதான் பள்ளிக்கூடத்துல சேத்துனது. அங்க இவன் வர்ரான இல்லையான்னு தெரியாத அளவுக்கு கட்டி மேய்க்கிறாங்க" ன்னு புலம்பிக்கொண்டு விசாரித்ததில் இந்த வாத்தியாரை பற்றி கேள்விப்பட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்திவிட்டுட்டார்.

கதிரேசனுக்கு அறிவியல், சமூக அறிவியல், வரலாறு ஏன் சில சமயங்களில் தமிழ் கூட புரிந்து கொள்ள முடிந்தது, அல்லது புரிந்ததுபோல் தலையாட்டிவிட்டு வகுப்பில் அமர்ந்திருக்க முடிந்தது. ஆனால் இங்கிலிசும் கணக்கும் தலையை ஆட்டினாலும், கேள்விகேட்டு நிற்கவைத்து விடுவார்கள். இன்னொன்று இந்த இரண்டு பாடத்தையும் நடத்துவது "வாத்தியார்கள்". முன்னைய மூனு பாடத்தையும் நடத்துவது "டீச்சர்கள்".

செவ்வாய்க்கிழமை முதல் பிரியட் இங்கிலிஸ். அது என்னவோ இந்த இங்கிலிஸ் கிளாஸ்ல சார் நடத்துற பாடம் பர்ஸ்ட் பெஞ்சு பசங்களுக்கு மட்டும் புரியுது. நாலவது அஞ்சாவது பெஞ்சுக்கு ஒன்னும் விளங்க மாட்டேங்குது. கிளாஸ் ஆரமிச்சு 20 வது நிமிசம் கேள்வி கேக்க ஆரம்பிச்சிருவாரு. கேள்விய கடைசி பெஞ்சிலருந்து கேக்க ஆரம்பிச்சார்னா வரிசையா ரெண்டு பெஞ்சும் தலைய குனிஞ்சிட்டே எந்திருச்சுரும். 

அவரும் "நீங்கள்ளாம் எதுக்குதான் ஸ்கூலுக்கு வர்ரீகன்னு தெரியல... கவனிக்க முடியலேன்னா வீட்ல ஆடு மாடு , மேச்சிட்டு இருக்க வேண்டியதுதானே... இடியட்ஸ்" அப்படி இப்படின்னு ஒரு பத்து நிமசம் பேசுவார். கதிரேசனக்கு இது இரண்டாவது ப்ரேயர் மாதிரி இருக்கும். 

கதிரேசனும் டிக்ஸனரியில் பார்த்து ஆங்கில வார்த்தைக்கு புத்தகத்தில் ஆங்காங்கே தமிழ் வார்த்தை மொழியாக்கம் செய்து எழுதி வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து பாத்தான். என்னதான் மனப்பாடம் செய்தாலும் வாத்தியார் ஒவ்வொரு நாளும் சொல்லும் பாடத்தில் வரும் வார்த்தைகள் புதிதாகவே இருந்தது. அதனாலேயோ என்னவோ இங்கிலீஸ் பேசுற வெள்ளைக்காரர்களும் நம்ம ஊரு மாநிறத்துக்காரர்களும் அறிவாளிகள் என்று நம்பினான்.

கணக்கு வாத்தியார் மாரிமுத்து பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருப்பார். வகுப்பில் பாடம் நடத்தும்போது மெல்லிய குரலில் பேச ஆரம்பித்து கணக்குகளை போர்டில் எழுதி சொல்லிக்காட்டி விட்டு அப்படியே எதிரிலுள்ள சுவற்றை பார்த்து "இங்க யாருக்காவது சூத்திரம் புரியலேன்ன்னா இப்பவே கேளுங்க..நாளைக்க டெஸ்டு வச்சு சூதிரம் தப்பா போட்டைன்னா.. வகுந்துடுவேன்" என்று சொல்லி முடிக்கும் போது குரல் உச்சத்தில் இருக்கும். அப்படியே பார்வையை கீழே திருப்பும்போது ஒவ்வொருத்தனுக்கும் கால் நடுங்கிக் கொண்டிருக்கும் எங்கே தன்னை சூத்திரத்தை சொல்லச்சொல்லிவிடுவாரோ என்று. 

ஒரு நாநூறு பேர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் பசங்க பயப்படுறது இந்த மாரிமுத்து வாத்தியாருக்குத்தான். சில சமையங்களில் பாடத்தை வகுப்பிற்க்கு வெளியிலிருக்கும் அரச மரத்தடியில் வைத்து சொல்லிக்கொடுப்பார். அபோது கேள்விக்கு பதில் சொல்லாத கடைசி வரிசைக்காரர்களை புறட்டி புறட்டி அடிப்பது பக்கத்து கிளாசில் இருப்பவனுக்கு வியர்த்துவிடும். புதன் கிழமை எப்போதும் டெஸ்ட் வைப்பார். அன்றைக்கு எல்லோரும் பேண்ட் போட்டிக்கொண்டுதான் வருவார்கள். கடைசி பெஞ்சு பசங்களெல்லாம் இரண்டு மூன்று டிராயர்களை போட்டுக்கொண்டு வருவர். தேர்வு முடிந்ததும் பேப்பர் திருத்தி மார்க்கு கொடுப்பதற்க்ககவே அடுத்து வரும் அறிவியல் வகுப்பை கடன் வாங்கிக் கொள்வார். முப்பத்தியஞ்சு மார்க்குகு குறைவா வாங்குனவனுக்கெல்லாம் அன்னைக்கு சர்க்கஸ்தான். கதிரேசன் பல நேரங்களில் முப்பத்தியைந்து, முப்பத்தி ஏழு வாங்கி பாசகிவிடுவான். ஒருமுறை இருபத்தியேழு வாங்கி பிரம்பால் வாங்கிக்கொண்டது ஒவ்வொரு புதம் கிழமையும் அவனுக்கு வலிக்கும்.

"சர் சர் சார் சார் இனிமே நல்லா படிக்கிறேன் சார் சார்" அப்பிடின்னு பிரம்பை அடிப்பதற்க்கு ஓங்கும்புன் கைகள் இரண்டையும் பின்னால் வைத்து அடி விழுவதை தடுக்கலாம் என்று முயற்ச்சிப்பர். அடியை விட அவருக்கு வரும் கோபத்தில் நாக்கை மடக்கிக்கொண்டு வருவதை பார்த்தாலே நடுங்க ஆர்ம்பித்து விடுவார்கள் பையன்கள். சில நேரங்களில் அவர் முதலில் அடிவாங்கிய பயல்களில் சத்தத்தால் பிறகு அடிவாங்குபவனுக்கு பாதி அடிவாங்கிய அனுபவம் ஏற்ப்பட்டு உச்சா போய்விடுவார்கள். பெயிலானவர்கள் ஒவ்வொரு கணக்கையும் பத்து முறை நோட்டில் போட்டு அடுத்த நாள் அவரது வகுப்பில் ரெடியாக வைத்திருக்க வேண்டும். பாடம் முடித்தவுடன் நோட்டை புறட்டி கணக்குகளை சரி பார்ப்பதைவிட சமக்குறியை கணக்கு நோட்டின் இரண்டாவது கோட்டின் மேல் நேராக போட்டிருப்பதையே கவனிப்பர். அவரைப்பொருத்தவரை கணக்கின் விடையை விட கணக்கு போடும் நேர்த்திதான் முக்கியம்.

ஒவ்வொரு முறை பிராக்ரஸ் கார்டு கொடுக்கும்போதும் கதிரேசன் பல்வேறு திட்டங்களை போட்டுக்கொண்டிருப்பான். "இந்த முறை இங்கிலீஸ் கால வாரி விட்டது. அப்பங்கிட்ட காட்டினா அங்கொரு பூசை விழும். ரெண்டு நாள் வச்சிருந்து ஏதாவது காய்ச்சல் டிராமா போட்டு கையெழுத்து வாங்கியிரலாம்", "நேத்துதான் புதுசா ஒரு பேட் வாங்குறதுக்க பசங்க கேட்ட அஞ்சு ரூபாய்க்கு, கணக்கு நோட்டு வாங்கவேணும்னு கேட்டு வச்சிருந்தேன், இப்ப பிராக்ரஸ் ரிப்பொர்ட காட்டுனா வாங்குன மார்க்குக்கு வாத்தியார வந்து பாக்குறேன்னு கிளம்பி வந்துட்டா பேட் காசு கிடைக்காம மாட்டிக்குவேனே" என்றவாறு யோசித்து குழப்பத்தில் இருப்பது பருவம் தவறாமல் நடக்கும் நிகழ்வு.

ஒரு வழியாக பத்தாம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வு வரை எப்படியோ பிராக்ரஸ் ரிப்போர்டை வீட்டுக்கு காட்டியும் காட்டாமலும் ஓட்டிவிட்டான். இந்த பாலா போன எஸ் எஸ் எல் சி பரிட்சை முடிவுகளை மாலை மலரிலும் அடுத்த நாள் தினத்தந்தியிலும் போட்டு விடுவார்கள். ரிசல்ட் ஊருக்கே தெரிந்து விடும். வந்து போகும் ஆடு மாடு முதல் மிச்ச சொச்ச சொந்தக்காரன் வரை என்ன மார்க்கு வாங்குவே, பாசாகியிருவையா, பரிச்சை நெம்பர் குடுன்னு குடுத்த வச்ச மாதிரி கேட்டுத்தொலைப்பாங்க. பரிச்சை எழுதி பாசோ, பெயிலோ ஆகித்தொலையறது என்னவோ நான், ஆனா இவிங்க காட்டுல விளஞ்ச தக்காளிக்கு வெலை பேசுரமாதிரி அத்தனை அக்கறை.

இந்த பாலாப்போன உலகத்து நினைப்புல மண்ணு விழுகிற மாதிரி மார்க்கு வாங்கி பாசாயிட்டன்னா டிப்ளமோ காலேஜ்ல போய் படிக்கலாம். இல்லைன்ன கரட்டடில் இருக்குற ஐ டி ஐ ல டீசல் மெக்கானிக் படிச்சுட்டு உள்ளூருக்குள் கடைவச்சு கிடந்து இவனுக கூட புழங்கனும். பாசாகிறது ரொம்ப கஸ்டம்தான்னு பரிட்சை எழுதி முடிச்ச பிறகு உள் மனசு சொல்லுச்சு. "சும்மாவே சுத்தி சுத்தி அடிப்பாரு அந்த மாரிமுத்து. அப்பனும் கூட சேந்து கொண்ணே போடுவாங்களே". எதும்கும் இருக்கட்டுமே என்று முன்னெச்சிரிக்கையாக கிளாஸ்ல நல்லா படிக்குற சரவணன் நம்பரை எல்லோருக்கும் தனது என்று கொடுத்துவைத்திருந்தான். ரிசல்டு வரும் இரண்டு மாதத்திற்க்குள் சேலஞ்சர்ஸ் கப் டோர்னமெண்ட் விளையாடி கொஞ்ச காலம் சந்தோசமாக இருந்துக்கலாம் என்று சமாதான படுத்திக்கொண்டான். பள்ளி நாட்களைவிட விடுமுறை நாட்கள் வேகமாக பறந்தது. பளீக்கூடமே மறந்து போன நிலையில் "எஸ் எஸ் எல் ஸி தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. செய்தி கேட்டதிலிருந்து வயிறு ஒரு மாதிரி பிசகிக்கொண்டே இருந்தது. அப்பனுங்கூட நம்மமேல வச்சிருக்குற நம்பிக்கையில் கோபியில இருக்குற பாலிடெக்னிக்கு அப்லிகேசன் வாங்கிட்டு வந்துட்டாரு. எப்படியும் ரிசல்ட் அவிக நெனைக்கிற மாதிரி இருக்காது. நாளைக்கு நடக்கும் கலவரத்தை நெனச்சா கண்ணுக்குள்ள கரண்டு வந்து வந்து போகுது.

பெரிய சுமையுடன் பார்ப்பவரைக் கடப்பது வெகு சிரமமாக இருந்தது அவனுக்கு. அட் நீ நல்ல பரிச்சை எழுதீருக்கிற, அப்புறம் ஏன் மூஞ்சிய தொங்கபோட்டுட்டு சுத்துரே என்று ஏதோ ரகசியம் தெரிந்தவன் போல பக்கத்து வீட்டு டிரைவர் கணேசண்ணன் கேட்டு வச்சார். ரேடியோவிலும் டிவியிலும் எஸ் எஸ் ல் சி தேர்வு முடிவுகள் இன்று வரவிருக்கிறது என்று சொல்லும்போது அவனுக்கு பெருமாள் கோவிலில் தாசர்கள் ஊதும் சங்கு சத்தம் கேட்டது. அவனுடைய வகுப்ப பசங்களுடன் பேப்பர்கடை முன் காலையிலிருந்து தூரமா வர்ர பஸ்யே பார்த்து பார்த்து அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். மூணு மணி சாந்தா வில்தான் மாலைமலர் ஈரோட்டிலிருந்து வரும் என்று பேப்பர்கடைக்காரர் சொன்னது கூட ஒரு காரணமாக இருக்கலாம். சூரியன் மேலே நின்று சிரித்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தான். மே மாச வெயில் முடிஞ்சு ஜீலை கடைசில கொன்சம் அக்கினி வெயில் கம்மியாகும்னு பார்த்தா, ஒன்னு கொறையற மாதிரி காணோம்". கதிரேசனுக்கு தலை சுற்றுவது போல் ஆனது. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பெரிய கிணறு இருக்கும் மேற்கு தோட்டத்தை பார்த்து நடந்தான். 

ஒரு வழியாக பேப்பர் வந்து சேர்ந்து கூட்ட நெரிசலில் முட்டு மோதி கதிரேசனின் அப்பாவும் ஒரு பேப்பரை வாங்கிவிட்டார். அவன் கிளாஸ் பசங்கள் எல்லோரும் அவரவர் நம்மரை தேடிக்கொண்டிருந்தனர். இரண்டு மூன்று பேரைத்தவிர பெரும்பாலோனோர் முகத்தில் சிரிப்பு. ஒரு சிலர் பேப்பர் பிரிண்டிங் மிஸ்டேக், சரியா நம்பர் பிரிண்ட் ஆகலை, நாலைக்கு தினத்தந்தியில் பார்க்கனும் என்று ஒற்றைக்குறலாக கூட்டத்தை விட்டு விலகிச்சென்றனர். சில பையன்கள் அங்கே தெரிந்தவர்களுக்கு சாக்லேட் மிட்டாய் கொடுத்து தான் பாசாகிவிட்டதை தெரியப்படுத்திக்கொண்டிருந்தனர். கதிரேசனின் தந்தை தேடிப்பார்த்தும் கதிரேசன் நம்பர் இல்லாததால் பக்கத்தில் இருந்த கடைக்காரரிடம் சொல்லி பேப்பரை சளித்துக்கொண்டிருந்தனர். கடைக்காரரால் நம்பரை கண்டு பிடிக்க முடியாமல், "பையன் பாசாகிலியாட்ட இருக்குதுங்க. நம்பர காணமுங்க" என்று அவன் கடமையை முடித்துக்கொண்டான். அவருக்கு அவமானமாகவும் தன் பிள்ளையாவது படிச்சு அண்ணன் பையன் மாதிரி டிப்ளமோ முடிச்சு கோயம்புத்துர்ல வெலைக்கு போயி நாலு காசு சம்பளம் வாங்குவான் என்ற நம்பிக்கையில் இடி இறங்கியது.  "வரட்டும் அவன் வீட்டுக்கு, மட்டைய எடுத்துட்ட பள்ளத்துள போயி எப்ப பார்த்தாலும் கிரிக்கெட்டு வெளையாடி வெளியாடி இன்னைக்கு பெயிலாப்போய் இருக்கறதுக்கு சாட்ட வார்ல வாங்குனாத்தான் புத்திவரும். இவனை நம்பி ஊரு பூறா பாலிடெக்னிக்போறான்னு சொல்லீட்டு திரிஞ்சனே, இன்ன அவிய மூஞ்சில எப்படி முழிப்பேன். காரித்துப்பவானுவளே" என்றவாறு கோபத்துடன் வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தார்.

கதிரேசன் நிச்சையம் பாசாகி விடுவான் என்று நம்பிய முதல் வரிசைக்காரன் பெயிலாகவிட்டான். கதிரேசனுடைய நம்பர் பேப்பரின் நடுவில் யாருடைய விரலும் படாமல் அப்படியே கிடந்து குப்பைக்கு போனது. Wednesday, May 13, 2015

அநியாயத்தை தட்டி கேட்க அவதரிப்பாரா?


ஒரு தனி மனிதனுக்கு அரசின் மீதும், அரசியல் அமைப்பின் மீதும் இருக்கும் நம்பிக்கை அவனுடைய உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிக்கும் என்ற உத்தரவாதம்தான். எங்கெல்லாம் இந்த நம்பிக்கை சோதனை செய்யப்பட்டு தோல்வியடைகிறதோ அங்கெல்லாம் குடிமகன் தன்னை நாட்டிலிருந்து விலக்கி சிந்திக்கத்தொடங்குகிறான். மாற்று தத்துவங்களும் சித்தாந்தங்களும் அவன் ஆற்றமைக்கு வடிகாலாகும்போது அதன்மீது அமைக்கப்பட்ட மாற்று அரசியல் வாழ்வியலை தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். அது மார்க்ஸியமோ, மாவோயிஸமோ அல்லது சந்தியாசமோவாக இருக்கலாம். 

நிகழ்காலத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கு நாட்டில் இருக்கும் சட்டத்தின்மீதும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவல் துறை மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்து வருவது நிதர்சனம். அது கடுங்குற்றம் செய்தும் தன்னுடைய அரசியல் மற்றும் செல்வாக்கினால் சட்டத்தின் தண்டனையிலிருந்து ஒரு நபர் தன்னை விடுவித்துக்கொள்ளும் போது பார்வையாளனாக நிற்க்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்ட அமைப்பின் மீதிருக்கும் நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தில் விரிசல் ஏற்ப்படுகிறது. இது ஒரு சாதரண மனிதன் செய்யாத தவறுக்கும் அல்லது சிறு குற்றத்திற்கும் பெரிய தண்டனையை/ பாதிப்பை அடையும்போதும், அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாதபோது ஏற்ப்படும் விரக்திக்கு சற்றும் குறைந்ததல்ல. ஆனால் முன்னைய நம்பிக்கை உடைப்பு, பார்வையாளனாக இருக்கும் பரவலான மக்களை சென்றடைகிறது. பின்னையது பாதிக்கப்பட்டவனுடன் தங்கி விடுகிறது.

ஒரு பண்பாட்டு வளர்ச்சியடைந்த சமூகத்தில் இது போன்ற சமுதாய கட்டமைப்பையே உடைக்கும் நிகழ்வுகளை வளரவிடாமலும் உடனுக்குடன் ஒரு தீர்வை ஏற்ப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கை ஏற்ப்படுத்த முயல்வர். அரசுகள் தன் குடிகள் எப்போதும் தம்மீது நம்பிக்கையிழக்காமல் வைத்துக்கொள்ளும்போதே நிர்வாகத்தை திரமுடன் நடத்தமுடியும். நிர்வாகத்தில் ஆயிரம் குளருபடிகள் இருந்தாலும் அவை பொது மக்களுக்கு எளிதில் தெரியாத அல்லது புரியாத வண்ணமும் பார்த்துக்கொள்ளும்.

மக்கள் கூடி வாழும் சமூக அமைப்பை கட்டிக்காக்கவே சட்டங்களும் அரசு நிர்வாகமும் கட்டமைக்கப்படுகிறது. அதே மக்கள் குழு தனது அமைப்பின்மீது நம்பிக்கையிழக்கும்போது அது அந்த அமைப்பையே மாற்றியமைக்க சிந்திக்கச்செய்கிறது. தற்கால கட்டத்தில் சிறிய அளிவிலோ பெரிய அளவிலோ லஞ்சம் கொடுகாமல் நம்மால் வாழ்க்கையை நகர்த்தமுடியாது. அது பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதிலிருந்து பள்ளி சேர்க்கை, வேலை வாய்ப்பு, சொத்து பரிவர்த்தனை (வாகனம், நிலம் இன்னும் பல) என்று நீண்டு கொண்டே இருக்கிறது. எங்கெல்லாம் ஒரு தனி மனிதனுக்கு பொருளாதார இலாபம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஊழல் உள்ளது. 

முதலில் தனக்கு வேண்டியதை லஞ்சம் கொடுத்து வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற சூழலுக்கு மக்களை தள்ளுவது சட்டங்கள். அவை கடுமையாக இல்லாவிட்டாலும் அவற்றை பின்பற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு சிலவேலைகளில் ஏற்படுத்தும் பொருளாதார இழப்பு லஞ்சதொகையுடன் ஒப்பிடும்போது லஞ்சம் கொடுத்து வேலையை முடிப்பது எளிதாக இருக்கிறது. இது நீங்கள் புதிதாக கட்ட இருக்கும் வீட்டிற்கான அரசின் அனுமதியாக இருக்கலாம், அல்லது நீங்களாகவே ஓட்டுனர் உரிமமோ அல்லது வாகனப்பதிவோ செய்யும் போதாகவும் இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தவறு என்று உணர்ந்துகொள்ளும் மனம் இப்போது யாரிடமும் இல்லை. ஒன்று - அது மரத்துபோய்விட்டது அல்லது அலுத்து பழகிக்கொண்டுவிட்டது. இந்த நிலை மனித சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லுவதற்கு பதில் ஒரு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே நம்பிக்கையிழந்து நிற்கும் மக்களிடம் நிலம் கையகக்படுத்தும் சட்டம், ஒரு அரசு தன்னுடைய உடமையை எந்த முன்னறிவிப்புமின்றி கையகப்படுத்த முடியும் என்பது அதிர்ச்சியாகவும் கையறு நிலையையும் அவர்களுக்குள் ஏற்படுத்திவிடுகிறது. காவல் நிலையத்தில் எந்த ஒரு சட்ட மீறலையும் மக்கள் தாமாக முன்வந்து புகாரளிக்க முடியாத நிலையில் காவல் நிலையங்கள் இருக்கின்றன. பல தலைமுறைகளை கடந்து வந்த ஆற்று நீரும், மணலும் கொள்ளைபோவதை மக்கள் இன்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். மணல் கொள்ளைபோகும் போது ஆற்றின் பண்பு, நிலத்தடி நீரளவு மாறுவது உடனே தெரியாவிட்டாலும் ஒரு புற்று நோயைப்போல ஒரு கால கட்டத்தில் அதன் பாதிப்பை வெளிக்காட்டும். அன்று அதற்கு மருந்து எந்த அரசாலும் கொடுக்க முடியாது. அந்த நிலப்பகுதி மனிதன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்று அறிவிக்கப்பட்டு மக்கள் குடிபெயற்கப்படுவர். இது இயற்கையின் கட்டமைப்பான காடுகளுக்கும், தாது வளங்களுக்கும், கல் மலைகளுக்கும் பொருந்தும். இந்த வளங்கள் மீது நடத்தப்படும் அத்து மீரல்கள் சாமனியனால் கேள்விகேட்க முடியாத நிலையில் உள்ளது.

அரசியல் தலைவர்களும் பெருஞ்செல்வந்தர்களும் குற்றமிழைத்துவிட்டு எளிதில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியுமென்பது சட்டத்தின் மீது தனிமனிதனுக்கிருக்கும் நம்பிக்கையை பெயர்தெடுக்கிறது. மறுபுறம் இந்த நாட்டில் எந்த தவறும் செய்துவிட்டு அரசியல் மற்றும் செல்வாக்கின் மூலம் சட்டத்தை வளைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்திவிடுகிறது.

அரசியல் சீர்கேடும், சமூகப்பாதுகாப்பின்மையும் மக்களை இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் விடிவை நோக்கிய பாதையை தேட நகர்த்தும் அல்லது அந்த பாதையை அவர்களே அமைக்க வழிவகுத்துவிடும். 

எங்கெல்லாம் அநீதியும் அராஜகமும் தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலை நாட்ட ஒருவர் கடவுள் அவதாரம் எடுக்கிறார். சில நேரங்களில் அவர் மனித உடலில் ஒரு கிஷ்ணனாகவோ, வீரப்பனாகவோ, பிரபாகரனாகவோ, நேதாஜியாகவோ வந்து விட்டு போகவும் செய்வார்.ஐடி துறையை தேர்ந்தெடுக்கலாமா?

என்னிடம் தற்போது நண்பர்களும் உறவினர்களும் அதிகம் கேட்கும் ஆலோசனை 'ஐடி துறை பிள்ளைக்கு எடுக்கலாம் என்று இருக்கிறேன். இப்போது ஐடி துறைக்கு மார்கெட் எப்படி இருக்கிறது?' இன்னொன்று 'மகன்/மகள் BE ஐடி அல்லது அது சம்பந்தமான படிப்பை முடித்து விட்டார், வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர், வேலை தேட உதவ முடியுமா?'.

முதலில் இரண்டாவது கேள்விக்கு விடை கொடுக்க முயல்கிறேன். அந்த ஆலோசனை சரியாகப்பட்டால் முதல் கேள்விக்கான பதிலை நீங்களே உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த ஆலோசனையை உங்கள் பிள்ளைகளையே நேரடியாக படிக்கச்சொல்லுங்கள். ஏனென்றால் இலவசமாக வழங்கும் எதற்க்கும் மதிப்பு கிடையாது. ஏன் இந்த ஆலோசனை இலவசமில்லை(உங்களிடம் நான் காசு கேட்பதில்லை மாறாக உங்களுக்கு சில வேலைகள் காத்திருக்கிறது) என்பதை படிக்க படிக்க புரிந்து கொள்வீர்கள்.

உங்களுக்கான முதல் வேலை, ஆலோசனை சொல்லுமளவுக்கு நான் தகுதிபடைத்தவனா என்று தெரிந்து கொள்ளுங்கள். எப்படி?... BE படித்து முடித்த உங்களுக்கு என் பெயரை வைத்து உங்களால் என்னை பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லையென்றால், இத்துடன் இந்த வாசிப்பை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால் "தேடல், ஆர்வம்" இரண்டும் ஐடி துறையில் வேலை செய்ய முக்கியமான தகுதிகள். அடுத்து, சொல்வதை/கேட்பதையெல்லாம் அப்படியே வாங்கிக்கொண்டு செயல்பட்டால் உங்களால் நிலைக்கமுடியாது. கேள்வி கேட்க வேண்டும். உங்கள் கேள்வி நியாமனதாக, தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும் இருக்க வேண்டும். கேட்டு வைப்போமென்று எதையாவது கேட்டீர்களானால் அதற்கு தகுந்தாற்போல் பதில் கிடைக்கும்.

ஐடி யை புரிந்து கொள்ளுங்கள்

இந்த துறையை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த துறை மீதான ஒரு மதிப்பீட்டை நீங்களாகவோ அல்லது வேறொருவரைப் பார்த்தோ உருவாக்கியிருப்பீர்கள். நான் சொல்லப்போவது என்னுடைய 15+ ஆண்டுகால அனுபவத்தில் நான் புரிந்து கொண்டவற்றை. இது உங்களுக்கு பொருந்தலாம் அல்லது பொருந்தாமலும் போகலாம். இது ஒரு முழுக்க முழுக்க சேவை (இலவசமல்ல) வழங்கும் துறை. சேவை என்றால் - ஐடி துறை ஒரு தனியான துறை கிடையாது. இது மற்ற மூல(Core - Manufacturing, Logistics, Finance etc) துறைகளுக்கு சேவை செய்யும் துறை. எப்படி? நமக்கெல்லாம் மிகவும் பழக்கமான வங்கி துறையை எடுத்துக்கொள்வோம். அந்த வங்கியின் தொழில், முதலீட்டாளர்களிடம் பணத்தை வைப்பாக (Deposits) ஒரு வட்டி விகிதத்திற்க்கு வாங்கிக்கொண்டு, அதே பணத்தை நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் அதிக வட்டிக்கு கடனாக வழங்கும். முன்பொரு காலத்தில் வங்கிகள் கணினிகளில்லாமல் வெறும் தாள்களை வைத்துக்கொண்டு இயங்கிய காலத்தில் ஒரு வாடிக்கையாளரை கையாள அரை மணி நேரத்திற்கும் குறையாமல் எடுத்துக்கொள்வார்கள். அதுவே கணினி வந்தபிறகு ஏடிம் மூலம் பணபரிவர்தனை 10 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விடும். கடன் கொடுப்பதும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் முடிவெடுத்து விடுவார்கள். இது போன்ற திறனேற்றும் சேவையையே ஐடி துறை செய்கிறது.

பணி வகைகள்

ஐடி துறையில் மற்ற துறைகளைப்போலவே பல்வேறு வகையான பணிகள் இருக்கிறது. ஒரு புதிய வாடிக்கையாளர் (அ) கிளையண்ட்/கஸ்டமரை கண்டறிந்து அவருக்கான சேவை ஒப்பந்தம் (Service Agreement) முடிக்கும் வேலையை விற்பனைப்பிரிவு (Sales/ Marketing) வல்லுநர்கள் செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் வேறு துறையில் விற்பனையில் சாதிதவர்களாக இருப்பார்கள். காரணம் ஐடி துறையின் வயது முப்பத்தைந்து. ஒரு MBA முடித்து நல்ல நிறுவனத்தில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் சிறிது கணிப்போறி மற்றும் விற்கப்போகும் சேவை அல்லது செயலிகளில் (Application Software) ஓரளவு செயல்பாட்டறிவு(Business Knowledge/ Application Knowledge) கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்கு புதிய வாடிக்கையாளுக்கு செயலியின் செயல்பாட்டை விளக்கவும் கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும். அடுத்தது புதிய செயலிகளை உருவாக்குவதற்க்கு கிடைக்கும் விற்பனை வாய்ப்புகளுக்கென தனியாக திட்டக்குழு (Project Team) உருவாக்கப்படும். இந்தக்குழு வாடிக்கையாளரின் நெறிகளுக்கேற்ப்ப (Terms) அதன் செயல்முறை, செயலி வெளியீட்டுக்காலம் (Software Release) ஆகியவற்றை வகுத்துக்கொள்ளும். இந்த திட்டக்குழுவிற்க்கு பிரத்தியேகமாக ஒரு திட்ட மேலாளர் (Project Manager) இருப்பார். இந்த திட்டம் வாடிக்கையாளர் இடத்திலும் (Onsite) ஐடி நிறுவனத்தின் இந்திய நகரிலும் (Offshore) செயல்படுத்தப்படும்போது ஒரு திட்ட மேலாளர் வாடிக்கையாளர் இடத்திலும் ஒருவர் ஐடி நிறுவனத்தின் இந்திய நகரத்திலும் இருந்து திட்டத்தினை கவனித்துகொள்வர். திட்டக்குழுவில் செயலிகள் உருவாக்கும் திறன் வாய்ந்தவர்கள் (Programmers) சேர்த்துக்கொள்ளப்பட்டு திட்டம் செயல் படுத்தப்படும். குழுவின் அளவைப்பொருத்து ஒருவரோ அல்லது இருவரோ அந்த நுட்பத்தில் தேர்ந்தவராக இருப்பர்(Architect / Lead). ஏனையோர் ஓரளவு நுட்பம் தெரிந்தவராக இருப்பர், ஆனால் அவர்களுக்கு குழு நுட்ப தலைவரின் ஆலோசனை தேவைப்படும் (Senior Software Engineer/ Analyst). மூன்றவது கல்லூரிகளில் இருந்து வளாகத்தேர்வில் தெரிந்தெடுக்கப்பட்டு ஏதாவது ஒரு நுட்பத்தில் பயிற்ச்சியளிக்கப்பட்டு திட்டத்தில் கற்றுக்கொண்டு பணியாற்ற இணைக்கப்பட்டிருப்பர் (Freshers/ Programmer Analyst Trainees). இவர்களுக்கு பெரும்பாலும் வாடிக்கையாளர் சிறிது காலம் ஊதியமேதும்(Billing) கொடுக்க மாட்டார். ஐடி நிறுவனமே அவருக்கான செலவை ஏற்றுக்கொண்டு பின்னாட்களில் அனுபவத்தை பொருத்து வாடிக்கையாளரிடம் ஊதியத்தை (Billing) பெற்றுக்கொள்ளும். அதே போல, உருவாக்கப்படும் செயலியை தர ஆய்வு (Quality Check/ Assurance) செய்து உறுதிப்படுத்த ஒரு தரவாய்வுக்குழுவும் அமைக்கப்படும். அவர்கள் ஒவ்வொரு வெளியீட்டின்போதும் செயலியின் செயல்பாடுகளை ஆய்ந்து (Testing) தரப்படுத்தி கண்டுபிடித்த பிழைகளை (Defects/ Bugs) செயலி உருவாக்கிகளிடம் (Programmer) கொடுத்து பிழைகளை களைந்துகொள்ளச்செய்வர். பிழைகள் களைந்த செயலிகள் (Applications) மீண்டும் ஆய்விற்க்குட்பட்டு தரக்கட்டுப்பாட்டு குறியை (Quality Metrics) எட்டியபிறகு செயலி வாடிக்கையாளரின் பயன்பாட்டிற்கு தரப்படும் (Production Deployment). இந்த தர ஆய்வுக்குழுவிலும் பிரத்தியேக அனுபவமும் தொழில் நேர்த்தியும் கொண்டவர்கள் (Test Lead/ Tester)  இடம்பெற்றிருப்பர். மேலும் இந்த இரு குழுக்களுக்கும் தொழில்(Business) சார் பயன்பாட்டு நிபுனத்துவத்திற்கு உதவிட ஓரிரு தொழில் நிபுனர்கள் (Business Analyst) குழுவில் இடம்பெற்றிருப்பர்.

வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள்

மேற்ச்சொன்ன ஒவ்வொரு பணிப்பிரிவிற்க்கும் பல்வேறு வகைப்பட்ட குழு உறுப்பினர்கள் தேவைப்படுவர். இவர்களில் பலர் கல்லூரியில் வளாகத்தேர்வில் தெரிந்தெடுக்கப்பட்ட வளர் செயலி எழுதுபவர்கள்/ தர ஆய்வு நிபுனர்களான இவர்களுக்கு சில அடிப்படை குணங்கள்/ பண்புகளை கொண்டிருப்பது அவரின் தகுதியை உயர்த்தி பணியை எளிதாக கையாள உதவும். தனக்கு விருப்பமான தொழில் நுட்பம்/பயன்பாட்டை தெரிந்தெடுத்த பிறகு அதைக்கற்றுக்கொள்ளுதல், பிறகு அதில் ஆளுமை(Expertise) பெறுவது மிகவும் முக்கியம். அதற்கு ஆர்வமும் தேடுதல் மற்றும் பணிவும் அவசியம். பணிவு - குழுவில் இடம்பெற்றுள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த நிபுனரின்(Architect/ Lead) உதவியை பெற மிகவும் இன்றியமையாதது. அவரும் நம்மைப்போலவே தன்னிடம் கற்றுக்கொள்ள வருபவர் ஆர்வத்துடனும் கேட்டுக்கொண்டு புரிந்து செயல்படுபவராகவும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பு கொண்டிருப்பார். உங்களுக்கு அவரை விடவும் அதிகம் தெரிந்திருந்தாலும் அவர் சொல்லுவதில் உள்ள தகவல்கள்/ அனுபவத்தை பெற்றுக்கொள்ள பொருமையாக கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளல் நலம். பல்வெறு மொழி பேசுபவர்கள் இரு குழுவில் இருக்கும்போது ஆங்கிலத்தை பொது மொழியாக பயன்படுத்துவது தவிற்க்க முடியாது. அதனால் உங்கள் கருத்துக்களை/கேள்விகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்துமளவிற்கு ஆங்கிலம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தில் நம்மை விட ஆந்திரக்காரர்கள் சுட்டி. முழுமையான ஆங்கிலம் தெரியவில்லையென்றாலும் பிறரைப்பற்றி கவலைகொள்ளாமல் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து உரையாட முயற்சிப்பர். ஆனால் நம் மக்கள் உரையாடுவதை தவிர்த்து அமைதி காத்து செயலியில் குழப்பம் ஏற்படுத்திவிடுவர். இது பெரும் சிக்கலில் கொண்டு சேர்த்து விடும்.

சரி.. வளாகத்தேர்வில் தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நிறுவனமே ஒரு பயிற்ச்சியளித்து வழிகாட்டிவிடும். ஆனால் வளாகத்தேர்வில் தேர்வாகதவர்கள் எந்தெந்த தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு வேலைவாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ளலாம் என்ற கேள்வி எழுந்தால் மேலும் தொடருங்கள்.

ஐடி துறையைப்பற்றிய புரிதல் ஓரளவிற்க்கு உங்களுக்கு வந்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்தது நிறுவனங்கள் (Companies) எப்போதெல்லாம் புதிய செயலியை தங்களுக்கு உருவாக்க திட்டமிடுவார்கள் என்று தெரிந்து கொண்டால் அவர்களின் தேவையை புரிந்து கொள்ளலாம். ஒரு நிறுவனம் தனது தொழிலில் திறனைக் கூட்டவும் இலாபத்தை அதிகரிக்கவும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கும். பெரு நிறுவனங்கள் இந்த தொடர் முன்னேற்ற (Continues Improvement) முயற்ச்சிக்கென்று ஆண்டுதோரும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கிக்கொள்வார்கள். இந்த நிதியைக்கொண்டு புதிய செயலிகளை வடிவமைக்கும் திட்டங்களை மேற்க்கொள்ளுவர். சில நேரங்களில் நிறுவனங்கள் புதிதாக செயலிகளை உருவாக்குவதற்க்கு பதில் ஏற்க்கனவே சந்தையில் புகழ்பெற்ற செயலிகளை வாங்கிக்கொள்வர். இது அவர்களுக்கு காலத்தையும் நிச்சைய வெற்றியையும் உறுதிப்படுத்த உதவும்.

உதாரணம் Infosys - Finacle, SAP, People Soft போன்ற அடுக்கடி(Off the Shelf) மென்பொதிகளை எளிதில்  வாங்கி பயன்படுத்திக்கொள்வர். அந்த நேரங்களில் அந்த செயலிகளில் நிறுவத்திற்கு ஏற்ப சில மாற்றங்களைச்செய்துகொள்ள சிறிய அளவில் திட்டக்குழுவை வைத்துக்கொள்வர்.

என்ன தொழில் நுட்பத்தை படிப்பது?

நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தை தெரிந்தெடுத்துக்கொள்ள கீழ்க்காணும் காரணிகளை முக்கியமாகக்கொள்கின்றனர்.

1. உருவாக்கச்செலவு(Cost of Building a Solution).
2. உருவாக்கும் காலம் (Time to Build an Application).
3. வெற்றி பெருவதற்க்கான சாத்தியம் (Potential to Succeed)

இவற்றையெல்லாம் விட இந்த செயலி என்ன வியாபர ரீதியான இலாபத்தை  (Business Benefit) தரப்போகிறது என்ற ஆய்வின் முடிவு (Analysis Report).

தற்போதுள்ள பொதுவான தொழில் நுட்பங்களில் ஜாவா சார்ந்த தொழில் நுட்பம் ஓரளவு உருவாக்கச்செலவு குறைந்தது. காரணம் ஜாவா உபகரணங்கள் (Tools) மற்றும் இயங்கு தளங்கள் (Servers) இலவசமாக கிடைக்கிறது. செயலி உருவாக்குபவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் செலவாக இருக்கும். ஆகையால் நிறுவனங்கள் ஜாவா தொடர்பான செயலிகளில் அதிக ஆர்வம் காட்டும்.

அதைப்போலவே மைக்ரொசாப்டின் டாட் நெட் நுட்பமும் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த நுட்பத்தில் செயலிகளை உருவாக்க உபகரணங்கள் மற்றும் இயங்கு தளங்களுக்கு மைக்ரோசப்டிற்கு கொஞ்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

செயலிகளை வடிவமைப்பதில் தகவல்களை சேமித்து மற்றும் பயன்படுத்தும் மென்பொருள் தொழில் நுட்பங்களும் (Database) அதிக வேலை வாய்ப்பை தரும். ஆரக்கிள்(Oracle), டிபி 2 (IBM DB2), SQL Server போன்ற தரவுப்பொதி  (Database) நுட்பங்களுக்கு அதிக தேவையிருக்கிறது.

செயலிகள் இயங்கும் இயங்கு தளங்களான(Server) யுனிக்ஸ் மற்றும் விண்டோஸை நிர்வகிக்கும் நிபுனர்களுக்கான (Administrator) தேவையும் இருக்கிறது.

இவையல்லாமல் அடுக்கடி மென்பொருள் பொதிகளான SAP, ஆரக்கில் இ ஆர் பி (Oracle ERP) போன்ற செயலி தொழில் நுட்பங்களும் அதிக வேலை வாய்ப்பை அளிகும். 

ஒரு இளம் தகவல் தொழில் நுட்ப வல்லுனர் தன்னை செயலி வடிவமைப்பாளராகவோ (Programmer), தர ஆய்வாளராகவோ (Tester) அல்லது தொழில் நிபுனராகவோ(Business Analyst/ Expert) உருவாக்கிக்கொள்ள வாய்புகள் அதிகம். இதில் தன்னுடைய திறமைக்கும் ஆர்வத்திற்க்கும் ஏற்றார் போல் தேர்ந்தெடுத்து அதற்க்கான பயிற்ச்சிகளை முடித்துக்கொள்ளுதல் அவசியம்.


திறமை மேம்படுத்தல்

இந்த தொழில் பயிற்ச்சிகளை கோவை, சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் அதிக பயிற்ச்சி நிறுவனங்கள் வழங்குகின்றன. எல்லா குக் கிராமங்களிலிலும் இது போன்ற பயிற்சி வழங்கும் பள்ளிகள் இருந்தாலும் வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் உள்ள பெரு நகரங்களில் பயிற்ச்சியெடுத்துக் கொண்டால் பயிற்ச்சியின்போதோ, பயிற்ச்சியின் முடிவிலோ நேர்முகத்தேர்வு, வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரங்களைக்கொண்டு நிறுவனங்களை எளிதில் அனுகலாம். பயிற்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும்போதே வேலைவாய்ப்பு எப்படியுள்ளது என்று தெரிந்து கொள்ள அவ்வப்போது பிரபல வேலைவாய்ப்பு தகவல் தரும் தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

சுய விவரம்

எல்லாவற்றிற்க்கும் முதன்மையாக உங்கள் சுயவிவரத்தை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சுயவிவரத்தை ஒரு நிறுவந்த்திற்கு அனுப்பிய பின் மனித வள அதிகாரி ஓரிரு நிமிடத்திற்க்கு மேல் உங்கள் சுயவிவரத்தில் நேரம் செலுத்த மாட்டார். காரணம் அவரிடம் ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருக்கும். அதில் அவர் தேடியெடுக்கும் முறை கணினி சார்ந்த தேடுதலாக இருக்கும். ஆகவே உங்களுக்கு தெரிந்த தொழில் நுட்பங்களை, அனுபவத்தை பயிற்ச்சியை எளிதாக தேடும் வகையில் உங்கள் சுய விவரத்தில் குறிப்பிடுங்கள்.

முதலில் உங்கள் பெயர், தொலைபேசி எண், இ மெயில் முகவரியை குறிப்பிடுங்கள். அஞ்சல் முகவரி, பிறந்த நாள் போன்றவை தேவையில்லை.

பிறகு உங்கள் கல்வியை குறிப்பிடுங்கள். முதலில் சமீபத்திய(Recent) கற்றலை குறிப்பிட்டு அடுத்து முன்னைய கல்வியை குறிப்பிடுங்கள். பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு கல்வியை குறிப்பிடத்தேவையில்லை.

தனியாக நீங்கள் எடுத்துக்கொண்ட தொழில் நுட்ப பயிற்ச்சியை சற்று விரிவாக குறிப்பிடவும். பிறகு உங்களுடைய துறைசார்ந்த வேலை அனுபவத்தை இரண்டு பத்திகளில் தெளிவாக குறிப்பிடவும். அனுபவம் இல்லையென்றால் உங்கள் கல்லூரியில் பயிலும் போது செய்த செயல் திட்டங்களை தெளிவாக குறிப்பிடவும். சில வேளைகளில் உங்கள் சுய விவரம் ஒரு பக்கத்தில் முடிந்து விடும்-  கவலைப்படத்தேவையில்லை, அவர்களுக்கு தேவையான தகவல்களை தெளிவாக குறிப்பிட்டிருந்தால் போதும். எப்போதும் உள்ளதை உள்ளபடி உங்கள் சுய விவரத்தில் குறிப்பிடுங்கள். தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில் பின்நாளில் நேர்முகத்தேர்வில் எப்படியும் கண்டுபிடித்து வெளியேற்றி விடுவார்கள். ஏனென்றால் இது போன்று பல நிகழ்வுகளைக்கடந்து தான் தேர்வாளர்கள் வந்திருப்பார்கள். 

தொடர்ந்து அறிவை மேம்படுத்துதல் மற்றும் சலிக்காமல் வேலை தேடுவது மிகவும் இன்றியமையாத பண்புகள் ஒரு வளர் செயலி உருவாக்குனருக்கு. எனக்கு தெரிந்த பலர் இந்த முயற்ச்சியில் சலித்து தோல்வி கண்டு வெளியேறியவர்கள் இருக்கிறார்கள். விடா முயற்ச்சி விஸ்பரூப வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சில இலவச ஐடி வேலை வாய்பு தகவல் தளங்கள். இவை அனைத்திலுமே உங்கள் சுய விவரத்தை தெளிவாக தேடும் சொற்க்களுடன் பதிவு செய்துகொள்ளுங்கள். நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர்கள் உங்களை தொடர்புகொண்டு மேலும் விவரங்களை பகிர்ந்துகொள்வர்.

www.naukri.com
www.jobstreet.com
www.monsterindia.com
www.indeed.co.in
www.timesjobs.in

இவ்வளவு பயிற்சி, முயற்ச்சியெடுத்த பின் நீங்கள் ஒரு வேலையாளாகத்தான் பணியில் சேர்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் வேலைக்கு சேர்ந்தபின் ஏக காலத்திற்க்கும் ஓரே மாதிரியான வேலைதான் பெரும்பாலும் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் புதுமை விரும்பியாகவோ, சாகசக்காரராகவோ இருந்தால் உங்களுக்கு இந்த துறை ஒவ்வாமல் போகலாம். கற்றுக்கொள்ள ஏதுமில்லை என்ற தருணம் உங்களை சலிப்படையச்செய்யுமென்றால், ஒரு ஐந்து முதல் பத்தாண்டுகளில் அந்த நிலையை அடைந்து விடலாம். 

இந்திய இளம் தலைமுறையைப் பொருத்தவரை தன்னுடைய தொழில் பற்றிய பெரும் திட்டமேதுமில்லாமலே இருக்கின்றனர். பெரும்பாலும் படித்து முடித்தவுடன் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தால் தன் தொழில் நோக்கு நிறைவடைந்ததாகக் கருதி ஒரு இயந்திரத்தை போலாகிவிடுகின்றனர். சுயமாக சிந்திக்கும் திறனிருந்தாலும், முன் முயற்ச்சியெடுக்கும் பண்பிருந்தாலும் பலர் தோல்வியச்சம் காரணமாக எந்த கடின முயற்ச்சியும் எடுக்காமல் ஐடி துறையை தேர்ந்தெடுக்கின்றனர். இதுவே மேலை நாடுகளில் திறனும் ஆர்வமும் உள்ளவர்கள் தாமாக ஒரு முயற்ச்சியை முன்னெடுத்து அதை வியாபரமாக மாற்றி ஒரு முதலாளியாக பரிமளிக்கின்றனர். இன்று புகழ்பெற்ற கூக்ள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் கல்லூரி நண்பர்கள் கூடி செய்த முயற்ச்சியால் உருவானவை. அவர்கள் நம்மைப்போல ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தால் இந்த மாபெரும் சாதனைகள் நிகழ்ந்திருக்காது. நம் இளைய தலைமுறையிடமும் அது போன்ற உத்வேகமும் கனவும் நிச்சையம் இருக்கும். ஆனால் பெற்றோரின் எதிர்பார்ப்பு, சக தோழர்களுடன் தன்னை ஒப்பிட்டு எப்படியாவது ஒரு வேலையை பிடித்து செட்டில் ஆகிவிடவேண்டுமென்று செயல்படத்தூண்டுகிறது.

ஆயிரம் வேலைக்காரர்கள் உருவாக்குவது எளிது. ஆனால் துடிப்புள்ள இளைய முன் முயற்ச்சியாளர்கள் உருவாவது அரிது. உங்களிடம் அப்படியொரு துடிப்பும் ஆர்வமும் இருந்தால் உங்கள் சுயவிவரத்துடன் உங்கள் திறமை ஆர்வம் திட்டம் பற்றி ஒரு மடல் எழுதுங்கள். என்னால் என்ன உதவி செய்ய முடியுமென்று பார்க்கிறேன்.

எனது மின்னஞ்சல் : thiruchenthil@gmail.com

Saturday, May 9, 2015

தீர்ப்பிற்குப் பின்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மே 11 திங்கட்கிழமை வெளி வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளும் தலைவர்களின் காய் நகர்த்தல்கள் எப்படியிருக்கும் என்ற அலசல்.

முந்தைய தீர்ப்பின்போது ஓரளவிற்க்கு அனுதாப அலை வீசியது. ஆனால் இந்த முறை அமைச்சர் நத்தம் விஸ்வனாதன் முதல் அக்ரி கிருஸ்ணமூர்த்தி வரை ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அரசு ஊழியர்கள் தற்க்கொலைக்கு தூண்டப்படுமளவிற்க்கு அரசாட்சி சந்தி சிரிக்கிறது. ஜெயலலிதாவைப் பொருத்தவரை தன்னை விட அதிமுக வில் தலைவரில்லை என்ற தோற்றத்தை உருவாக்கியது, இப்போது அவரின் கட்சிக்கே ஆபத்தாக முடியப்போகிறது. கடந்த நான்கைந்து மாதங்களில் அரசு ஸ்தம்பித்து போனதும், அமைச்சர்களெல்லாம் மக்கள் பிரச்சினைகளை பின்னுக்குத்தள்ளி அம்மாவின் விடுதலைக்காக பாலாபிசேகம், அக்கினி குண்டமிதிப்பு என்று சுற்றியதில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டிருக்கின்றனர். மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளில் அரசு கவனம் செய்யாமல் சுனக்கம் கண்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

தீர்ப்பு: தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறை செல்ல நேரிடும்

திமுக: நீண்ட சட்டப் போராட்டத்திற்க்குப் பிறகு ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் தண்டனை வாங்கிக்கொடுத்து விட்ட வெற்றிக் கழிப்பு. இந்த வெற்றியை தேர்தல் வெற்றியாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பு. சென்ற தேர்தலில் மக்கள் காட்டிய கோபம் ஓரளவிற்க்கு குறைந்திருக்கிறது. ஆனால் கட்சியை நம்பி மக்கள் ஓட்டுப்போடுமளவிற்க்கு தயார் படுத்தப்படவில்லை. நல்ல கூட்டணியமைத்து அ தி மு க வை தனிமைப்படுத்தி வெற்றி பெருவது ஒரு உத்தி. ப ஜ க ஜெயலலிதாவிற்க்கு மறைமுக அழுத்தம் தந்து நிலம் கையப்படுத்தும் சட்டத்திற்க்கு ஆதரவு வாங்கியதன் மூலம் இரு கட்சிகளுக்கும் ஏதொவொரு ஒப்பந்தமிருப்பதை ஓரளவு ஊகித்துக்கொள்ள முடிகிறது. ஆதலால் ப ஜ க வை நம்பி ஆற்றில் இறங்கக்கூடிய நிலையில் தி மு க இல்லை. விஜய காந்தின் தே மு தி க, கம்யூனிஸ்டுகள், வி சி க வுடன் கூட்டணி ஏற்ப்படுத்துவது ஓரளவிற்க்கு முடிந்துவிட்டது. கடந்த காலத்தைப்போலவே ஸ்டாலினை ஊழலுக்கெதிரான உத்தமர் போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி கூட்டணிக்கட்சிகளுடன் தேர்தலை சந்திப்பது சாமர்த்தியம். காங்கிரஸ் கட்சியை வழக்கம்போலவே ஒரு கைக்குட்டையைப்போல பயன்ப்டுத்திக்கொள்ளலாம்.

அ தி மு க: வழக்கின் தீர்ப்பு கட்சிக்குள் குழப்பத்தையும் அதிகார மைய்யத்தை கண்டுகொள்வதில் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் குழப்பமேற்ப்பட்டிருக்கிறது. சோ முதலான நலன் விரும்பிகளின் ஆலோசனைப்படி ப ஜ க வைத்தவிர பெரிய கூட்டணி நம்பிக்கை இல்லை. தீர்ப்பு கொஞ்சம் அனுதாபத்தை யேற்ப்படுத்தியிருந்தாலும் அது ஓட்டுக்களை சேர்க்க எந்த அளவு உதவும் என்பது கேள்வி. இருக்கும் பத்து மாதத்திற்க்குள் எவ்வளவு காசு சேர்க்க முடியெமென்று அமைச்சர்களும் கட்சியும் திட்டங்களை நிறைவேற்ற நிதியை கரைப்பார்கள். சேர்த்த பணத்தை தேர்தலில் இரைத்தும், காவிரி, முல்லைபெரியாறு, மூவர் தூக்கு என்று ஏதாவது தமிழர்கள் பதட்டமடையும் சிக்கலை கையிலெடுத்து தமிழர்களை காப்பதற்க்கு தன்னைவிட்டால் யாருமில்லை என்ற உருவகத்தை உருவாக்கி வெற்றிபெற முயர்ச்சிப்பது ஒரு உத்தி. 

காங்கிரஸ்: ஆட்சியில் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்துவதில் ஓரளவு ஸ்கொர் செய்து விட்டார் இளங்கோவன். ஆனால் அதை நம்பி மக்கள் ஓட்டுபோடுவார்களா என்பதும், தேசிய தலைமயின் மேல் தமிழகத்திற்க்கு இருக்கு வெறுப்பு இன்னும் குறையாதது எதிர் மறை அலையை குறைக்கவில்லை என்பதி உணர்ந்தே இருக்கிறது. என்னதான் வெளியில் தைரியமாக இருப்பதுபோல் நடித்தாலும் கூட்டணியில்லாமல் தேர்தலை சந்திக்குமளவிற்க்கு கட்சி தயாராகவில்லை என்பதை தலைமை உணர்ந்தே இருக்கும். தேர்தலை சந்திக்க இரண்டு வழி, திமுக வுடன் கூட்டணியேற்ப்படுத்திக் கொள்வது அல்லது மூன்றாவது அணி அமைக்க முயற்ச்சிப்பது. மாநில தேர்தலைப்பொருத்த அளவு காங்கிரசின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு பாதிப்பை ஏற்ப்படுத்யிருந்தாலும் சொந்த கட்சிக்கு எந்த நன்மையையும் ஏற்ப்படுத்தப்போவதில்லை. நாடாளு மன்றத்தேர்தல் வரை ஒரு நிழல் எதிர்க்கட்சிபோல் செயல்பட்டு தி மு க வை ப.ஜ.க பக்கம் சாயாமல் பார்த்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் கூட்டணியேற்ப்படுத்த முயலலாம்.

ப ம க: இப்பொதைக்கு தி மு க விற்க்கும் அ தி மு க விற்க்கும் மாற்று தேவைப்படும் இன்றைய சூழலை பயன்படுத்திக்கொண்டு தன் வாக்கு வங்கியை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். தே மு தி க வை நேரடியாக எதிர்த்து அந்த இடத்திற்க்கு சண்டைபோடுவதை விட்டுவிட்டு இரண்டு பெரிய யாணைகளுடன்(தி மு க மற்றும் அ தி மு க) மோதினால் தோல்வி கண்டாலும் அந்த போராட்டம் தே மு தி க வைவிட செயல்திறன் கொண்ட எதிர் கட்சியாக உருவெடுக்க உதவும். இந்த மதிப்பைக்கொண்டு தேர்தலில் ப ஜ க, மற்றும் சில பிராந்திய கட்சிகளுடன் கூட்டணியமைத்து தேர்தலை எதிர்கொண்டு கணிசமான தொகுதிகளைப் பெற்று தமிழகத்தில் தி மு க, அ தி மு க விற்க்கு மாற்றாக ப ம க என்ற நிலையை கொண்டு வந்து விடலாம். இது தே மு தி க வின் வாக்கு வங்கி( தி மு க, அ தி மு க வை பிடிக்காதவர்களின் வாக்கு)யை ஓரளவு தன் பக்கம் கொண்டுவந்து விஜயகாந்தின் செல்வாக்கை குறைத்துவிடலாம். 

 ஆம் ஆத்மி, மற்றும் பிற கட்சிகளின் நிலை யில் பெரிய மாற்றமில்லை. அவர்கள் இன்னும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளில் பங்கெடுத்து மக்களுடன் ஒரு நெருங்கிய உறவை பேணுவது பின்வரும் காலங்களில் உதவும்.

Friday, May 8, 2015

வேட்டி-ராஜ்கிரண்-விளம்பரம் - இன்னொரு கோணம்

ராஜ்கிரண் ஒரு வேட்டி விளம்பரத்தில் நடிக்காமல் தவிர்த்ததற்க்கு கூறும் காரணத்தால் அவரை மெச்சி நாம் நாம் பகிர்ந்து கொண்ட ஒளிப்படத்தைபற்றியது இந்த பதிவு. இதில் ராஜ்கிரணையோ அவரது உணர்வுகளையோ விமர்சனத்திற்க்குள்ளாக்குவது நமது நோக்கமல்ல. மாறாக ஒரு செய்தியை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் எனபதைப்பற்றியே. 

முதலில் ராஜ்கிரண் தன் பேட்டியில் ஒரு வேட்டி கம்பெனி (Ramrajஆக இருக்கலாம்) தன்னை அதன் விளம்பரத்திற்க்கு அழைத்ததாகவும் அவர்கள் இரண்டுகோடிவரை கொடுத்தும் தான் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். அதற்க்கு அவர் சொல்லும் காரணம் தனக்கு கொடுக்கும் சம்பளத்தை வேட்டியின் விலையை உயர்த்தி வேட்டிகட்டும் ஏழையிடம் பறித்துக்கொள்வார்கள் என்று... நிற்க்க

முதலில் வேட்டி கட்டுபவரெல்லாம் ஏழையா? ஏழை விவசாயி இந்த பெரு நிறுவனங்களின் வேட்டியைத்தான் கட்டுகிறானா? விளம்பரத்திற்க்காக செலவு செய்யும் பணத்தை நிறுவனங்கள் விலையை ஏற்றித்தான் ஈடுகட்டிக்கொள்ள முடியுமா? 

முதலில் ஏழை விவசாயி தன்னுடையை ஆடைத்தேவைகளை நகரங்களில் இருக்கும் பெரும் ஆடை அங்காடிகளில் நிறைவேற்றிக்கொள்வதில்லை. மாறாக ஊர்க்கடைகளிலிலும் காதிபவன் மற்றும் ரேசனில் கொடுக்கும் வேட்டியின் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறான். நூறு ரூபாய்க்கான வேட்டி இங்கேதான் கிடைக்கிறது. 

பெரும் ஆடை அங்காடிகளில் விற்க்கப்படும் வேட்டிகளின் விலை சுமார் ரூ 350 ல் இருந்து ஆரம்பிக்கிறது. இந்தவகை வேட்டிகளை வாங்குபவர்கள் ஏழையென்றே எடுத்துக்கொண்டாலும் ராஜ்கிரணின் விளம்பரத்தால் ரூ 1000 ரூபாயகவா மாறிவிடப்போகிறது. அப்படியே மாறினாலும் அதை வாங்க முடியாதவர் ரூ 350 க்கு என்ன பிராண்டு கிடைக்குமோ அதை வாங்கிக் கொள்வார்.

ஒரு வேளை ராஜ்கிரண் நடித்து அந்த விளம்பரத்தால் வேட்டி விற்ப்பனை அதிகமாகும்போது நிறுவனம் விலையை அதிகரிக்காமலே விளம்பரச்செலவை ஈடுகட்டிக்கொள்ள முடியும். உதாரணம் : விளம்பரத்திற்க்கு முன் மாதமொன்றுக்கு ஒரு லட்சம் வேட்டிகள் விற்ப்பனையாகிறதென்று எடுத்துக்கொண்டால் 100000x350 = ரூ 35000000.00 = 35 கோடி. இதுவே இராஜ்கிரண் நடித்ததால் விற்ப்பனை அதிகமாகி ஒரு பத்தாயிரம் வேட்டிகள் அதிகமாகிறது என்று வைத்துக்கொண்டால் அதன் மதிப்பு(விலை மாற்றம் செய்யாமல்)  = 110000x350 = 38.5 கோடி. ராஜ்கிரணுக்கு கொடுத்தது போக மீதி ஒன்றரைக்கோடியை நிறுவனம் லாபமாக ஈட்டிக்கொள்ளும். வேட்டி விற்ப்பனை அதிகமாகும்போது அதை உற்ப்பத்தி செய்யும் ஆட்களின் அளவு அதிகமாக தேவைப்படும், அது போலவே விற்ப்பனை செய்யும் ஆட்களின் அளவும். இது கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குமல்லவா? மேலும் வேட்டி உற்ப்பத்திக்கு தேவைப்படும் பருத்தியின் தேவை அதிகமாகும், பருத்தி உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படும்போது, பருத்தி விவசாயிக்கு கூடுதல் விலை, வருமானம் கிடைக்கும்.

மேற்க்கண்ட பல்வேறு நலன்கள் ஏழை விவசாயிகளுக்கு ராஜ்கிரன் தன் விளம்பர நிராகரிப்பால் கிடைக்காமல் செய்துவிட்டார் எனவும் கொள்ளலாமல்லவா?

மேலும் இப்போது ராஜ்கிரண் நடிக்காமல் போனதால் அந்த நிறுவனம் வேறு சில மலையாள நடிகர்களைக்கொண்டு அந்த விளம்பரத்தையெடுத்து அந்த வருமானத்தை கேரளாவுக்கு கொண்டுபோக அனுமதித்திட்டாரல்லவா? அதவாது தமிழர் வாங்கும் வேட்டியில் பங்கு மலையாளிகளுக்கு போகிறது....

விளம்பரத்தை தவிற்க்காமல், தான் நடிப்பதால் வேட்டியின் விலையை ஆறுமாதத்திற்க்கு அதிகரிக்க கூடாதென்றும், தனக்கு இரண்டு கோடிக்கு பதில் ஒரு கோடி கொடுத்தால் போதுமென்று ஒப்பந்தத்தில் விளம்பரத்தில் நடித்திருந்தால் மேற்ச்சொன்ன எந்த பாதிப்பும் ஏழைகளுக்கும் தமிழர்களுக்கும் நடந்திருக்காதல்லவா.

பதிவை அப்படியே பகிர்ந்து பாலாபிசேகம் செய்யும் முன் உங்கள் அறிவையும் கொஞ்சம் பயன்படுத்தி கருத்து திணிப்பை தவிர்த்திடுங்கள்.

https://m.youtube.com/watch?v=ny8ynZSF3oo

பி.கு: எனக்கு ராஜ்கிரனை மிகவும் பிடிக்கும். உள்ளபடியே அவரின் வெள்ளந்தி மனம் பேட்டியில் தெரிந்தது. அதனாலேயே அவரும் நாமும் நம்மையே ஏமாற்றிக்கொள்ளவேண்டியதில்லை.