Wednesday, May 13, 2015

ஐடி துறையை தேர்ந்தெடுக்கலாமா?

என்னிடம் தற்போது நண்பர்களும் உறவினர்களும் அதிகம் கேட்கும் ஆலோசனை 'ஐடி துறை பிள்ளைக்கு எடுக்கலாம் என்று இருக்கிறேன். இப்போது ஐடி துறைக்கு மார்கெட் எப்படி இருக்கிறது?' இன்னொன்று 'மகன்/மகள் BE ஐடி அல்லது அது சம்பந்தமான படிப்பை முடித்து விட்டார், வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர், வேலை தேட உதவ முடியுமா?'.

முதலில் இரண்டாவது கேள்விக்கு விடை கொடுக்க முயல்கிறேன். அந்த ஆலோசனை சரியாகப்பட்டால் முதல் கேள்விக்கான பதிலை நீங்களே உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த ஆலோசனையை உங்கள் பிள்ளைகளையே நேரடியாக படிக்கச்சொல்லுங்கள். ஏனென்றால் இலவசமாக வழங்கும் எதற்க்கும் மதிப்பு கிடையாது. ஏன் இந்த ஆலோசனை இலவசமில்லை(உங்களிடம் நான் காசு கேட்பதில்லை மாறாக உங்களுக்கு சில வேலைகள் காத்திருக்கிறது) என்பதை படிக்க படிக்க புரிந்து கொள்வீர்கள்.

உங்களுக்கான முதல் வேலை, ஆலோசனை சொல்லுமளவுக்கு நான் தகுதிபடைத்தவனா என்று தெரிந்து கொள்ளுங்கள். எப்படி?... BE படித்து முடித்த உங்களுக்கு என் பெயரை வைத்து உங்களால் என்னை பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லையென்றால், இத்துடன் இந்த வாசிப்பை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால் "தேடல், ஆர்வம்" இரண்டும் ஐடி துறையில் வேலை செய்ய முக்கியமான தகுதிகள். அடுத்து, சொல்வதை/கேட்பதையெல்லாம் அப்படியே வாங்கிக்கொண்டு செயல்பட்டால் உங்களால் நிலைக்கமுடியாது. கேள்வி கேட்க வேண்டும். உங்கள் கேள்வி நியாமனதாக, தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும் இருக்க வேண்டும். கேட்டு வைப்போமென்று எதையாவது கேட்டீர்களானால் அதற்கு தகுந்தாற்போல் பதில் கிடைக்கும்.

ஐடி யை புரிந்து கொள்ளுங்கள்

இந்த துறையை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த துறை மீதான ஒரு மதிப்பீட்டை நீங்களாகவோ அல்லது வேறொருவரைப் பார்த்தோ உருவாக்கியிருப்பீர்கள். நான் சொல்லப்போவது என்னுடைய 15+ ஆண்டுகால அனுபவத்தில் நான் புரிந்து கொண்டவற்றை. இது உங்களுக்கு பொருந்தலாம் அல்லது பொருந்தாமலும் போகலாம். இது ஒரு முழுக்க முழுக்க சேவை (இலவசமல்ல) வழங்கும் துறை. சேவை என்றால் - ஐடி துறை ஒரு தனியான துறை கிடையாது. இது மற்ற மூல(Core - Manufacturing, Logistics, Finance etc) துறைகளுக்கு சேவை செய்யும் துறை. எப்படி? நமக்கெல்லாம் மிகவும் பழக்கமான வங்கி துறையை எடுத்துக்கொள்வோம். அந்த வங்கியின் தொழில், முதலீட்டாளர்களிடம் பணத்தை வைப்பாக (Deposits) ஒரு வட்டி விகிதத்திற்க்கு வாங்கிக்கொண்டு, அதே பணத்தை நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் அதிக வட்டிக்கு கடனாக வழங்கும். முன்பொரு காலத்தில் வங்கிகள் கணினிகளில்லாமல் வெறும் தாள்களை வைத்துக்கொண்டு இயங்கிய காலத்தில் ஒரு வாடிக்கையாளரை கையாள அரை மணி நேரத்திற்கும் குறையாமல் எடுத்துக்கொள்வார்கள். அதுவே கணினி வந்தபிறகு ஏடிம் மூலம் பணபரிவர்தனை 10 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விடும். கடன் கொடுப்பதும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் முடிவெடுத்து விடுவார்கள். இது போன்ற திறனேற்றும் சேவையையே ஐடி துறை செய்கிறது.

பணி வகைகள்

ஐடி துறையில் மற்ற துறைகளைப்போலவே பல்வேறு வகையான பணிகள் இருக்கிறது. ஒரு புதிய வாடிக்கையாளர் (அ) கிளையண்ட்/கஸ்டமரை கண்டறிந்து அவருக்கான சேவை ஒப்பந்தம் (Service Agreement) முடிக்கும் வேலையை விற்பனைப்பிரிவு (Sales/ Marketing) வல்லுநர்கள் செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் வேறு துறையில் விற்பனையில் சாதிதவர்களாக இருப்பார்கள். காரணம் ஐடி துறையின் வயது முப்பத்தைந்து. ஒரு MBA முடித்து நல்ல நிறுவனத்தில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் சிறிது கணிப்போறி மற்றும் விற்கப்போகும் சேவை அல்லது செயலிகளில் (Application Software) ஓரளவு செயல்பாட்டறிவு(Business Knowledge/ Application Knowledge) கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்கு புதிய வாடிக்கையாளுக்கு செயலியின் செயல்பாட்டை விளக்கவும் கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும். அடுத்தது புதிய செயலிகளை உருவாக்குவதற்க்கு கிடைக்கும் விற்பனை வாய்ப்புகளுக்கென தனியாக திட்டக்குழு (Project Team) உருவாக்கப்படும். இந்தக்குழு வாடிக்கையாளரின் நெறிகளுக்கேற்ப்ப (Terms) அதன் செயல்முறை, செயலி வெளியீட்டுக்காலம் (Software Release) ஆகியவற்றை வகுத்துக்கொள்ளும். இந்த திட்டக்குழுவிற்க்கு பிரத்தியேகமாக ஒரு திட்ட மேலாளர் (Project Manager) இருப்பார். இந்த திட்டம் வாடிக்கையாளர் இடத்திலும் (Onsite) ஐடி நிறுவனத்தின் இந்திய நகரிலும் (Offshore) செயல்படுத்தப்படும்போது ஒரு திட்ட மேலாளர் வாடிக்கையாளர் இடத்திலும் ஒருவர் ஐடி நிறுவனத்தின் இந்திய நகரத்திலும் இருந்து திட்டத்தினை கவனித்துகொள்வர். திட்டக்குழுவில் செயலிகள் உருவாக்கும் திறன் வாய்ந்தவர்கள் (Programmers) சேர்த்துக்கொள்ளப்பட்டு திட்டம் செயல் படுத்தப்படும். குழுவின் அளவைப்பொருத்து ஒருவரோ அல்லது இருவரோ அந்த நுட்பத்தில் தேர்ந்தவராக இருப்பர்(Architect / Lead). ஏனையோர் ஓரளவு நுட்பம் தெரிந்தவராக இருப்பர், ஆனால் அவர்களுக்கு குழு நுட்ப தலைவரின் ஆலோசனை தேவைப்படும் (Senior Software Engineer/ Analyst). மூன்றவது கல்லூரிகளில் இருந்து வளாகத்தேர்வில் தெரிந்தெடுக்கப்பட்டு ஏதாவது ஒரு நுட்பத்தில் பயிற்ச்சியளிக்கப்பட்டு திட்டத்தில் கற்றுக்கொண்டு பணியாற்ற இணைக்கப்பட்டிருப்பர் (Freshers/ Programmer Analyst Trainees). இவர்களுக்கு பெரும்பாலும் வாடிக்கையாளர் சிறிது காலம் ஊதியமேதும்(Billing) கொடுக்க மாட்டார். ஐடி நிறுவனமே அவருக்கான செலவை ஏற்றுக்கொண்டு பின்னாட்களில் அனுபவத்தை பொருத்து வாடிக்கையாளரிடம் ஊதியத்தை (Billing) பெற்றுக்கொள்ளும். அதே போல, உருவாக்கப்படும் செயலியை தர ஆய்வு (Quality Check/ Assurance) செய்து உறுதிப்படுத்த ஒரு தரவாய்வுக்குழுவும் அமைக்கப்படும். அவர்கள் ஒவ்வொரு வெளியீட்டின்போதும் செயலியின் செயல்பாடுகளை ஆய்ந்து (Testing) தரப்படுத்தி கண்டுபிடித்த பிழைகளை (Defects/ Bugs) செயலி உருவாக்கிகளிடம் (Programmer) கொடுத்து பிழைகளை களைந்துகொள்ளச்செய்வர். பிழைகள் களைந்த செயலிகள் (Applications) மீண்டும் ஆய்விற்க்குட்பட்டு தரக்கட்டுப்பாட்டு குறியை (Quality Metrics) எட்டியபிறகு செயலி வாடிக்கையாளரின் பயன்பாட்டிற்கு தரப்படும் (Production Deployment). இந்த தர ஆய்வுக்குழுவிலும் பிரத்தியேக அனுபவமும் தொழில் நேர்த்தியும் கொண்டவர்கள் (Test Lead/ Tester)  இடம்பெற்றிருப்பர். மேலும் இந்த இரு குழுக்களுக்கும் தொழில்(Business) சார் பயன்பாட்டு நிபுனத்துவத்திற்கு உதவிட ஓரிரு தொழில் நிபுனர்கள் (Business Analyst) குழுவில் இடம்பெற்றிருப்பர்.

வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள்

மேற்ச்சொன்ன ஒவ்வொரு பணிப்பிரிவிற்க்கும் பல்வேறு வகைப்பட்ட குழு உறுப்பினர்கள் தேவைப்படுவர். இவர்களில் பலர் கல்லூரியில் வளாகத்தேர்வில் தெரிந்தெடுக்கப்பட்ட வளர் செயலி எழுதுபவர்கள்/ தர ஆய்வு நிபுனர்களான இவர்களுக்கு சில அடிப்படை குணங்கள்/ பண்புகளை கொண்டிருப்பது அவரின் தகுதியை உயர்த்தி பணியை எளிதாக கையாள உதவும். தனக்கு விருப்பமான தொழில் நுட்பம்/பயன்பாட்டை தெரிந்தெடுத்த பிறகு அதைக்கற்றுக்கொள்ளுதல், பிறகு அதில் ஆளுமை(Expertise) பெறுவது மிகவும் முக்கியம். அதற்கு ஆர்வமும் தேடுதல் மற்றும் பணிவும் அவசியம். பணிவு - குழுவில் இடம்பெற்றுள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த நிபுனரின்(Architect/ Lead) உதவியை பெற மிகவும் இன்றியமையாதது. அவரும் நம்மைப்போலவே தன்னிடம் கற்றுக்கொள்ள வருபவர் ஆர்வத்துடனும் கேட்டுக்கொண்டு புரிந்து செயல்படுபவராகவும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பு கொண்டிருப்பார். உங்களுக்கு அவரை விடவும் அதிகம் தெரிந்திருந்தாலும் அவர் சொல்லுவதில் உள்ள தகவல்கள்/ அனுபவத்தை பெற்றுக்கொள்ள பொருமையாக கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளல் நலம். பல்வெறு மொழி பேசுபவர்கள் இரு குழுவில் இருக்கும்போது ஆங்கிலத்தை பொது மொழியாக பயன்படுத்துவது தவிற்க்க முடியாது. அதனால் உங்கள் கருத்துக்களை/கேள்விகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்துமளவிற்கு ஆங்கிலம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தில் நம்மை விட ஆந்திரக்காரர்கள் சுட்டி. முழுமையான ஆங்கிலம் தெரியவில்லையென்றாலும் பிறரைப்பற்றி கவலைகொள்ளாமல் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து உரையாட முயற்சிப்பர். ஆனால் நம் மக்கள் உரையாடுவதை தவிர்த்து அமைதி காத்து செயலியில் குழப்பம் ஏற்படுத்திவிடுவர். இது பெரும் சிக்கலில் கொண்டு சேர்த்து விடும்.

சரி.. வளாகத்தேர்வில் தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நிறுவனமே ஒரு பயிற்ச்சியளித்து வழிகாட்டிவிடும். ஆனால் வளாகத்தேர்வில் தேர்வாகதவர்கள் எந்தெந்த தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு வேலைவாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ளலாம் என்ற கேள்வி எழுந்தால் மேலும் தொடருங்கள்.

ஐடி துறையைப்பற்றிய புரிதல் ஓரளவிற்க்கு உங்களுக்கு வந்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்தது நிறுவனங்கள் (Companies) எப்போதெல்லாம் புதிய செயலியை தங்களுக்கு உருவாக்க திட்டமிடுவார்கள் என்று தெரிந்து கொண்டால் அவர்களின் தேவையை புரிந்து கொள்ளலாம். ஒரு நிறுவனம் தனது தொழிலில் திறனைக் கூட்டவும் இலாபத்தை அதிகரிக்கவும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கும். பெரு நிறுவனங்கள் இந்த தொடர் முன்னேற்ற (Continues Improvement) முயற்ச்சிக்கென்று ஆண்டுதோரும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கிக்கொள்வார்கள். இந்த நிதியைக்கொண்டு புதிய செயலிகளை வடிவமைக்கும் திட்டங்களை மேற்க்கொள்ளுவர். சில நேரங்களில் நிறுவனங்கள் புதிதாக செயலிகளை உருவாக்குவதற்க்கு பதில் ஏற்க்கனவே சந்தையில் புகழ்பெற்ற செயலிகளை வாங்கிக்கொள்வர். இது அவர்களுக்கு காலத்தையும் நிச்சைய வெற்றியையும் உறுதிப்படுத்த உதவும்.

உதாரணம் Infosys - Finacle, SAP, People Soft போன்ற அடுக்கடி(Off the Shelf) மென்பொதிகளை எளிதில்  வாங்கி பயன்படுத்திக்கொள்வர். அந்த நேரங்களில் அந்த செயலிகளில் நிறுவத்திற்கு ஏற்ப சில மாற்றங்களைச்செய்துகொள்ள சிறிய அளவில் திட்டக்குழுவை வைத்துக்கொள்வர்.

என்ன தொழில் நுட்பத்தை படிப்பது?

நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தை தெரிந்தெடுத்துக்கொள்ள கீழ்க்காணும் காரணிகளை முக்கியமாகக்கொள்கின்றனர்.

1. உருவாக்கச்செலவு(Cost of Building a Solution).
2. உருவாக்கும் காலம் (Time to Build an Application).
3. வெற்றி பெருவதற்க்கான சாத்தியம் (Potential to Succeed)

இவற்றையெல்லாம் விட இந்த செயலி என்ன வியாபர ரீதியான இலாபத்தை  (Business Benefit) தரப்போகிறது என்ற ஆய்வின் முடிவு (Analysis Report).

தற்போதுள்ள பொதுவான தொழில் நுட்பங்களில் ஜாவா சார்ந்த தொழில் நுட்பம் ஓரளவு உருவாக்கச்செலவு குறைந்தது. காரணம் ஜாவா உபகரணங்கள் (Tools) மற்றும் இயங்கு தளங்கள் (Servers) இலவசமாக கிடைக்கிறது. செயலி உருவாக்குபவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் செலவாக இருக்கும். ஆகையால் நிறுவனங்கள் ஜாவா தொடர்பான செயலிகளில் அதிக ஆர்வம் காட்டும்.

அதைப்போலவே மைக்ரொசாப்டின் டாட் நெட் நுட்பமும் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த நுட்பத்தில் செயலிகளை உருவாக்க உபகரணங்கள் மற்றும் இயங்கு தளங்களுக்கு மைக்ரோசப்டிற்கு கொஞ்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

செயலிகளை வடிவமைப்பதில் தகவல்களை சேமித்து மற்றும் பயன்படுத்தும் மென்பொருள் தொழில் நுட்பங்களும் (Database) அதிக வேலை வாய்ப்பை தரும். ஆரக்கிள்(Oracle), டிபி 2 (IBM DB2), SQL Server போன்ற தரவுப்பொதி  (Database) நுட்பங்களுக்கு அதிக தேவையிருக்கிறது.

செயலிகள் இயங்கும் இயங்கு தளங்களான(Server) யுனிக்ஸ் மற்றும் விண்டோஸை நிர்வகிக்கும் நிபுனர்களுக்கான (Administrator) தேவையும் இருக்கிறது.

இவையல்லாமல் அடுக்கடி மென்பொருள் பொதிகளான SAP, ஆரக்கில் இ ஆர் பி (Oracle ERP) போன்ற செயலி தொழில் நுட்பங்களும் அதிக வேலை வாய்ப்பை அளிகும். 

ஒரு இளம் தகவல் தொழில் நுட்ப வல்லுனர் தன்னை செயலி வடிவமைப்பாளராகவோ (Programmer), தர ஆய்வாளராகவோ (Tester) அல்லது தொழில் நிபுனராகவோ(Business Analyst/ Expert) உருவாக்கிக்கொள்ள வாய்புகள் அதிகம். இதில் தன்னுடைய திறமைக்கும் ஆர்வத்திற்க்கும் ஏற்றார் போல் தேர்ந்தெடுத்து அதற்க்கான பயிற்ச்சிகளை முடித்துக்கொள்ளுதல் அவசியம்.


திறமை மேம்படுத்தல்

இந்த தொழில் பயிற்ச்சிகளை கோவை, சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் அதிக பயிற்ச்சி நிறுவனங்கள் வழங்குகின்றன. எல்லா குக் கிராமங்களிலிலும் இது போன்ற பயிற்சி வழங்கும் பள்ளிகள் இருந்தாலும் வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் உள்ள பெரு நகரங்களில் பயிற்ச்சியெடுத்துக் கொண்டால் பயிற்ச்சியின்போதோ, பயிற்ச்சியின் முடிவிலோ நேர்முகத்தேர்வு, வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரங்களைக்கொண்டு நிறுவனங்களை எளிதில் அனுகலாம். பயிற்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும்போதே வேலைவாய்ப்பு எப்படியுள்ளது என்று தெரிந்து கொள்ள அவ்வப்போது பிரபல வேலைவாய்ப்பு தகவல் தரும் தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

சுய விவரம்

எல்லாவற்றிற்க்கும் முதன்மையாக உங்கள் சுயவிவரத்தை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சுயவிவரத்தை ஒரு நிறுவந்த்திற்கு அனுப்பிய பின் மனித வள அதிகாரி ஓரிரு நிமிடத்திற்க்கு மேல் உங்கள் சுயவிவரத்தில் நேரம் செலுத்த மாட்டார். காரணம் அவரிடம் ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருக்கும். அதில் அவர் தேடியெடுக்கும் முறை கணினி சார்ந்த தேடுதலாக இருக்கும். ஆகவே உங்களுக்கு தெரிந்த தொழில் நுட்பங்களை, அனுபவத்தை பயிற்ச்சியை எளிதாக தேடும் வகையில் உங்கள் சுய விவரத்தில் குறிப்பிடுங்கள்.

முதலில் உங்கள் பெயர், தொலைபேசி எண், இ மெயில் முகவரியை குறிப்பிடுங்கள். அஞ்சல் முகவரி, பிறந்த நாள் போன்றவை தேவையில்லை.

பிறகு உங்கள் கல்வியை குறிப்பிடுங்கள். முதலில் சமீபத்திய(Recent) கற்றலை குறிப்பிட்டு அடுத்து முன்னைய கல்வியை குறிப்பிடுங்கள். பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு கல்வியை குறிப்பிடத்தேவையில்லை.

தனியாக நீங்கள் எடுத்துக்கொண்ட தொழில் நுட்ப பயிற்ச்சியை சற்று விரிவாக குறிப்பிடவும். பிறகு உங்களுடைய துறைசார்ந்த வேலை அனுபவத்தை இரண்டு பத்திகளில் தெளிவாக குறிப்பிடவும். அனுபவம் இல்லையென்றால் உங்கள் கல்லூரியில் பயிலும் போது செய்த செயல் திட்டங்களை தெளிவாக குறிப்பிடவும். சில வேளைகளில் உங்கள் சுய விவரம் ஒரு பக்கத்தில் முடிந்து விடும்-  கவலைப்படத்தேவையில்லை, அவர்களுக்கு தேவையான தகவல்களை தெளிவாக குறிப்பிட்டிருந்தால் போதும். எப்போதும் உள்ளதை உள்ளபடி உங்கள் சுய விவரத்தில் குறிப்பிடுங்கள். தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில் பின்நாளில் நேர்முகத்தேர்வில் எப்படியும் கண்டுபிடித்து வெளியேற்றி விடுவார்கள். ஏனென்றால் இது போன்று பல நிகழ்வுகளைக்கடந்து தான் தேர்வாளர்கள் வந்திருப்பார்கள். 

தொடர்ந்து அறிவை மேம்படுத்துதல் மற்றும் சலிக்காமல் வேலை தேடுவது மிகவும் இன்றியமையாத பண்புகள் ஒரு வளர் செயலி உருவாக்குனருக்கு. எனக்கு தெரிந்த பலர் இந்த முயற்ச்சியில் சலித்து தோல்வி கண்டு வெளியேறியவர்கள் இருக்கிறார்கள். விடா முயற்ச்சி விஸ்பரூப வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சில இலவச ஐடி வேலை வாய்பு தகவல் தளங்கள். இவை அனைத்திலுமே உங்கள் சுய விவரத்தை தெளிவாக தேடும் சொற்க்களுடன் பதிவு செய்துகொள்ளுங்கள். நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர்கள் உங்களை தொடர்புகொண்டு மேலும் விவரங்களை பகிர்ந்துகொள்வர்.

www.naukri.com
www.jobstreet.com
www.monsterindia.com
www.indeed.co.in
www.timesjobs.in

இவ்வளவு பயிற்சி, முயற்ச்சியெடுத்த பின் நீங்கள் ஒரு வேலையாளாகத்தான் பணியில் சேர்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் வேலைக்கு சேர்ந்தபின் ஏக காலத்திற்க்கும் ஓரே மாதிரியான வேலைதான் பெரும்பாலும் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் புதுமை விரும்பியாகவோ, சாகசக்காரராகவோ இருந்தால் உங்களுக்கு இந்த துறை ஒவ்வாமல் போகலாம். கற்றுக்கொள்ள ஏதுமில்லை என்ற தருணம் உங்களை சலிப்படையச்செய்யுமென்றால், ஒரு ஐந்து முதல் பத்தாண்டுகளில் அந்த நிலையை அடைந்து விடலாம். 

இந்திய இளம் தலைமுறையைப் பொருத்தவரை தன்னுடைய தொழில் பற்றிய பெரும் திட்டமேதுமில்லாமலே இருக்கின்றனர். பெரும்பாலும் படித்து முடித்தவுடன் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தால் தன் தொழில் நோக்கு நிறைவடைந்ததாகக் கருதி ஒரு இயந்திரத்தை போலாகிவிடுகின்றனர். சுயமாக சிந்திக்கும் திறனிருந்தாலும், முன் முயற்ச்சியெடுக்கும் பண்பிருந்தாலும் பலர் தோல்வியச்சம் காரணமாக எந்த கடின முயற்ச்சியும் எடுக்காமல் ஐடி துறையை தேர்ந்தெடுக்கின்றனர். இதுவே மேலை நாடுகளில் திறனும் ஆர்வமும் உள்ளவர்கள் தாமாக ஒரு முயற்ச்சியை முன்னெடுத்து அதை வியாபரமாக மாற்றி ஒரு முதலாளியாக பரிமளிக்கின்றனர். இன்று புகழ்பெற்ற கூக்ள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் கல்லூரி நண்பர்கள் கூடி செய்த முயற்ச்சியால் உருவானவை. அவர்கள் நம்மைப்போல ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தால் இந்த மாபெரும் சாதனைகள் நிகழ்ந்திருக்காது. நம் இளைய தலைமுறையிடமும் அது போன்ற உத்வேகமும் கனவும் நிச்சையம் இருக்கும். ஆனால் பெற்றோரின் எதிர்பார்ப்பு, சக தோழர்களுடன் தன்னை ஒப்பிட்டு எப்படியாவது ஒரு வேலையை பிடித்து செட்டில் ஆகிவிடவேண்டுமென்று செயல்படத்தூண்டுகிறது.

ஆயிரம் வேலைக்காரர்கள் உருவாக்குவது எளிது. ஆனால் துடிப்புள்ள இளைய முன் முயற்ச்சியாளர்கள் உருவாவது அரிது. உங்களிடம் அப்படியொரு துடிப்பும் ஆர்வமும் இருந்தால் உங்கள் சுயவிவரத்துடன் உங்கள் திறமை ஆர்வம் திட்டம் பற்றி ஒரு மடல் எழுதுங்கள். என்னால் என்ன உதவி செய்ய முடியுமென்று பார்க்கிறேன்.

எனது மின்னஞ்சல் : thiruchenthil@gmail.com

No comments:

Post a Comment