Wednesday, May 13, 2015

அநியாயத்தை தட்டி கேட்க அவதரிப்பாரா?


ஒரு தனி மனிதனுக்கு அரசின் மீதும், அரசியல் அமைப்பின் மீதும் இருக்கும் நம்பிக்கை அவனுடைய உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிக்கும் என்ற உத்தரவாதம்தான். எங்கெல்லாம் இந்த நம்பிக்கை சோதனை செய்யப்பட்டு தோல்வியடைகிறதோ அங்கெல்லாம் குடிமகன் தன்னை நாட்டிலிருந்து விலக்கி சிந்திக்கத்தொடங்குகிறான். மாற்று தத்துவங்களும் சித்தாந்தங்களும் அவன் ஆற்றமைக்கு வடிகாலாகும்போது அதன்மீது அமைக்கப்பட்ட மாற்று அரசியல் வாழ்வியலை தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். அது மார்க்ஸியமோ, மாவோயிஸமோ அல்லது சந்தியாசமோவாக இருக்கலாம். 

நிகழ்காலத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கு நாட்டில் இருக்கும் சட்டத்தின்மீதும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவல் துறை மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்து வருவது நிதர்சனம். அது கடுங்குற்றம் செய்தும் தன்னுடைய அரசியல் மற்றும் செல்வாக்கினால் சட்டத்தின் தண்டனையிலிருந்து ஒரு நபர் தன்னை விடுவித்துக்கொள்ளும் போது பார்வையாளனாக நிற்க்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்ட அமைப்பின் மீதிருக்கும் நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தில் விரிசல் ஏற்ப்படுகிறது. இது ஒரு சாதரண மனிதன் செய்யாத தவறுக்கும் அல்லது சிறு குற்றத்திற்கும் பெரிய தண்டனையை/ பாதிப்பை அடையும்போதும், அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாதபோது ஏற்ப்படும் விரக்திக்கு சற்றும் குறைந்ததல்ல. ஆனால் முன்னைய நம்பிக்கை உடைப்பு, பார்வையாளனாக இருக்கும் பரவலான மக்களை சென்றடைகிறது. பின்னையது பாதிக்கப்பட்டவனுடன் தங்கி விடுகிறது.

ஒரு பண்பாட்டு வளர்ச்சியடைந்த சமூகத்தில் இது போன்ற சமுதாய கட்டமைப்பையே உடைக்கும் நிகழ்வுகளை வளரவிடாமலும் உடனுக்குடன் ஒரு தீர்வை ஏற்ப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கை ஏற்ப்படுத்த முயல்வர். அரசுகள் தன் குடிகள் எப்போதும் தம்மீது நம்பிக்கையிழக்காமல் வைத்துக்கொள்ளும்போதே நிர்வாகத்தை திரமுடன் நடத்தமுடியும். நிர்வாகத்தில் ஆயிரம் குளருபடிகள் இருந்தாலும் அவை பொது மக்களுக்கு எளிதில் தெரியாத அல்லது புரியாத வண்ணமும் பார்த்துக்கொள்ளும்.

மக்கள் கூடி வாழும் சமூக அமைப்பை கட்டிக்காக்கவே சட்டங்களும் அரசு நிர்வாகமும் கட்டமைக்கப்படுகிறது. அதே மக்கள் குழு தனது அமைப்பின்மீது நம்பிக்கையிழக்கும்போது அது அந்த அமைப்பையே மாற்றியமைக்க சிந்திக்கச்செய்கிறது. தற்கால கட்டத்தில் சிறிய அளிவிலோ பெரிய அளவிலோ லஞ்சம் கொடுகாமல் நம்மால் வாழ்க்கையை நகர்த்தமுடியாது. அது பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதிலிருந்து பள்ளி சேர்க்கை, வேலை வாய்ப்பு, சொத்து பரிவர்த்தனை (வாகனம், நிலம் இன்னும் பல) என்று நீண்டு கொண்டே இருக்கிறது. எங்கெல்லாம் ஒரு தனி மனிதனுக்கு பொருளாதார இலாபம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஊழல் உள்ளது. 

முதலில் தனக்கு வேண்டியதை லஞ்சம் கொடுத்து வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற சூழலுக்கு மக்களை தள்ளுவது சட்டங்கள். அவை கடுமையாக இல்லாவிட்டாலும் அவற்றை பின்பற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு சிலவேலைகளில் ஏற்படுத்தும் பொருளாதார இழப்பு லஞ்சதொகையுடன் ஒப்பிடும்போது லஞ்சம் கொடுத்து வேலையை முடிப்பது எளிதாக இருக்கிறது. இது நீங்கள் புதிதாக கட்ட இருக்கும் வீட்டிற்கான அரசின் அனுமதியாக இருக்கலாம், அல்லது நீங்களாகவே ஓட்டுனர் உரிமமோ அல்லது வாகனப்பதிவோ செய்யும் போதாகவும் இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தவறு என்று உணர்ந்துகொள்ளும் மனம் இப்போது யாரிடமும் இல்லை. ஒன்று - அது மரத்துபோய்விட்டது அல்லது அலுத்து பழகிக்கொண்டுவிட்டது. இந்த நிலை மனித சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லுவதற்கு பதில் ஒரு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே நம்பிக்கையிழந்து நிற்கும் மக்களிடம் நிலம் கையகக்படுத்தும் சட்டம், ஒரு அரசு தன்னுடைய உடமையை எந்த முன்னறிவிப்புமின்றி கையகப்படுத்த முடியும் என்பது அதிர்ச்சியாகவும் கையறு நிலையையும் அவர்களுக்குள் ஏற்படுத்திவிடுகிறது. காவல் நிலையத்தில் எந்த ஒரு சட்ட மீறலையும் மக்கள் தாமாக முன்வந்து புகாரளிக்க முடியாத நிலையில் காவல் நிலையங்கள் இருக்கின்றன. பல தலைமுறைகளை கடந்து வந்த ஆற்று நீரும், மணலும் கொள்ளைபோவதை மக்கள் இன்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். மணல் கொள்ளைபோகும் போது ஆற்றின் பண்பு, நிலத்தடி நீரளவு மாறுவது உடனே தெரியாவிட்டாலும் ஒரு புற்று நோயைப்போல ஒரு கால கட்டத்தில் அதன் பாதிப்பை வெளிக்காட்டும். அன்று அதற்கு மருந்து எந்த அரசாலும் கொடுக்க முடியாது. அந்த நிலப்பகுதி மனிதன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்று அறிவிக்கப்பட்டு மக்கள் குடிபெயற்கப்படுவர். இது இயற்கையின் கட்டமைப்பான காடுகளுக்கும், தாது வளங்களுக்கும், கல் மலைகளுக்கும் பொருந்தும். இந்த வளங்கள் மீது நடத்தப்படும் அத்து மீரல்கள் சாமனியனால் கேள்விகேட்க முடியாத நிலையில் உள்ளது.

அரசியல் தலைவர்களும் பெருஞ்செல்வந்தர்களும் குற்றமிழைத்துவிட்டு எளிதில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியுமென்பது சட்டத்தின் மீது தனிமனிதனுக்கிருக்கும் நம்பிக்கையை பெயர்தெடுக்கிறது. மறுபுறம் இந்த நாட்டில் எந்த தவறும் செய்துவிட்டு அரசியல் மற்றும் செல்வாக்கின் மூலம் சட்டத்தை வளைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்திவிடுகிறது.

அரசியல் சீர்கேடும், சமூகப்பாதுகாப்பின்மையும் மக்களை இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் விடிவை நோக்கிய பாதையை தேட நகர்த்தும் அல்லது அந்த பாதையை அவர்களே அமைக்க வழிவகுத்துவிடும். 

எங்கெல்லாம் அநீதியும் அராஜகமும் தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலை நாட்ட ஒருவர் கடவுள் அவதாரம் எடுக்கிறார். சில நேரங்களில் அவர் மனித உடலில் ஒரு கிஷ்ணனாகவோ, வீரப்பனாகவோ, பிரபாகரனாகவோ, நேதாஜியாகவோ வந்து விட்டு போகவும் செய்வார்.



No comments:

Post a Comment