கடந்த வாரம் பிள்ளைகளின் பள்ளியில் "Literacy Night" என்ற கலந்தாய்வு. இதில் குழந்தைகளுக்கு "படிப்பறிவு" எப்படி அவர்களின் கல்வித்திறனை வளர்க்கும், அதற்கு பள்ளியில் எடுக்கப்படும் முயற்சிகள், திட்டங்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. படிப்பறிவுத் தேர்வு மிகவும் முக்கியமெனவும், அது மாகான சட்டவிதிகளின் படி தேர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது என்று விளக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
நான் படித்த கற்பித்தல் முறைக்கும் இங்கு இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. நமக்கு பள்ளி புத்தகங்களைத் தவிர வேறெதையும் படிக்க கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் இங்கு குழந்தைகளின் படிக்கும் திறனுக்கேற்ற புத்தகங்கள் தினமும் 30 நிமிடம் படித்து அது பற்றிய குறிப்பை நாட்குறிப்பேட்டில் எழுதி பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் அது ஆசிரியரின் பார்வைக்குச் சென்று குறிப்பெடுக்கபடுகிறது. ஒவ்வொரு மாத இடைவேளையிலும் படிப்புத் திறனாய்வு செய்யப்பட்டு குழந்தைகள் அடுத்த நிலைக்கு முன்னேற்றப்பட்டு புத்தகங்கள் பரிந்துரைக்கப் படுகிறது.
நூலகங்களில் குழந்தைகளுக்கான பிரத்தியேக நூல்கள் கொள்ளையளவு இருக்கிறது. அவர்கள் விரும்பும் நூல்களை (ஒரு முறைக்கு 30- 40 புத்தகங்கள்) எடுத்து, அவைகளை அவர்களின் படிப்புத்திறனுக்கேற்றதாக உறுதி செய்து (கைபேசி திறன் செயலிகளில் புத்தகத்தின் கோட்டுருவை உள்ளிட்டால் அது படிக்கும் திறனில் (A-Z) வகைப்டுத்திச் சொல்லும்) எடுத்து வருவது நம் கடமை.
புத்தகங்கள்தான் குழந்தைகளுக்கு அறிவைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வெறும் பாடபுத்தகங்களில் இருப்பதைப் படித்தால் சிந்தனை அதற்குள்தான் இருக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு சூழல் நம் நாட்டிலும் வரும்போது, புத்தகங்கள் விற்கவில்லை, எழுதியதை படிக்க ஆளில்லை போன்ற புலம்பல்கள் இருக்காது என்று நம்பலாம்.
No comments:
Post a Comment