Thursday, August 2, 2018

டென்னன்ட் மலையேற்றம்

இந்தவாரம் மேகமலையில் (Smoky mountain) உள்ள டென்னண்ட் உச்சியைத் தொட மலையேற்றத்தை சார்லட் புறச் சாகசக் குழுவினர் (Charlotte outdoor adventure club) ஏற்பாடு செய்திருந்ததை நண்பர் மணி கண்டுபிடித்து பதிவு செய்துகொண்டார். அவர்கள் மூன்றரை மணி நேர தொலைவில் உள்ள மலையை அடைய அருகில் உள்ள பெல்மாண்ட் என்ற இடத்தில் கூடி தனித்தனியாக வாகனங்களில் செல்லாமல் சில வாகனங்களில் கூட்டாகச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி பெல்மாண்ட்டில் ஞாயிறு காலை எட்டு மணிக்கு சந்திப்பதாக இருந்தது.

இதற்கிடையில் குழுவில் உள்ள சிலர் மலையேற்றம் தொடர்பான வனப்பாதுகாப்பு அலுவலகத்தின் அறிவிப்பை அதன் இணையதளத்தில் படித்துவிட்டு, குழுவில் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். வனத்திற்குள் பத்துப் பேருக்கு மேலான குழுவிற்கு அனுமதியில்லை என்ற அறிவிப்புதான் அது. அந்த அறிவிப்பின் நோக்கம் அதிகமான அளவில் மக்கள் வனப்பகுதியில் நடந்தால் அங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும், அதனால் அதைத் தவிற்பதே.

ஆனால் அடிக்கடி அந்த மலையேறுபவர்களுக்குத் தெரியும் அங்கு சில நூறு பேர்களாவது இந்தக் கோடையில் மலையேறுவார்கள் என்று. பொதுவாக அமெரிக்கர்கள் சட்டதிட்டங்களை மதிப்பவர்கள். ஒரு சிலர் சட்டத்தை மீறி மலையேற்றம் திட்டமிடப்பட்டிருப்பதால், தாங்கள் மலையேற்ற நிகழ்விலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து விலகிக்கொண்டனர்.

நாமும் சட்டத்தை மதிப்பவர்களாதலால், அந்தக் குழுவுடன் இணைந்து பத்திற்கும் மேலானவர்களாக பயணித்து சட்டமீறலைச் செய்ய வேண்டாம் என்பதால், மணியும் நானும் தனிக்குழுவாக பயணிப்பது என்று முடிவானது. அதன்படி, குழுவின் மலையேறும் வழிகாட்டுதலை மட்டும் எடுத்துக்கொண்டு இருவரும் நீய்லச்சிமையத் தடம் (Blueridge Parkway) வழியே சென்று பிறகு கருங்குங்கலிக் குமிழ்ச் சாலை (Black Baksan Knowb Road) இல் உள்ள மலையேற்றத் தொடக்கப்புள்ளியை அடைந்தோம்.

முன்பே மலையேற்றத்திற்குத் தேவையான கருவிகளைத் தயார் செய்து கொண்டோம். அதன்படி மலையேற்றத்திற்குத் தேவையான கைக்குச்சிகள், காயம்பட்டால் உதவ சில மருந்துப் பட்டைகள், வலி நிவாரணக் களிம்புகள், முக்கியமாக கரடித் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள கரடி விரட்டி, பயணத்தைப் பதிவு செய்ய படப்பதிவுக் கருவிகள் மற்றும் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டோம். கைக்குச்சி மிகவும் பயணுள்ளதாக இருந்தது.

குழுவின் வழிகாட்டும் குறிப்புகளின் படி டென்னண்ட் உச்சியை இரண்டரை மயில் மலையேற்றத்திற்குப் பின் அடைந்தோம். அது 6040 அடி உயரத்தில் இருக்கும் மலை உச்சி. கெய்ரால்ட் ஸ்டோனி டென்னன்ட் என்ற மலையேற்ற ஆர்வலரின் பெயரில் அழைக்கப்படுகிறது. அவரது நினைவாக 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் இன்னும் இருக்கிறது.

tennet

அந்த மலை உச்சியில் நின்று மேகமலைத் தொடரை பார்ப்பது மிக்க அழகாக இருந்தது. மேகங்கள் நம்மைத் தொட்டுச் செல்வதும், குளிர் காற்று நம்மை அணைத்துச் செல்வதும் அற்புதமான அனுபவம். அங்கு நண்பர் மணியின் புகைப்படமெடுக்கும் திறத்தில் நமக்குச் சில நல்ல புகைப்படங்கள் கிடைத்தது.








அங்கிருந்து அரை மைல் தொலைவில் நீல பெர்ரி பறிப்பதுதான் மலையேற்றத்தின் நோக்கம். அதன்படி மேலும் அரை மைல் நடக்கத் தொடங்கினோம். அங்கொரு வெட்ட வெளியில் ஒரு சோடிகள் கூடாரம் அமைத்து தங்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசியதில், முந்தைய இரவு  அவர்கள் அருகில் வேறு ஒரு இடத்தில் தங்கியிருந்ததாகவும், இரவில் அவர்கள் உடமைகள் வைத்திருந்த பையை கரடியோ அல்லது வேறு ஏதோவொன்று எடுத்துவந்து பொருட்களைச் சிதரடித்து சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். முக்கியமான பொருட்களை கண்டெடுத்துவிட்டதாகவும் அருகிலுள்ள புதருக்குள் கரடிகள் இருக்கலாம் என்று நமக்கு எச்சரிக்கை செய்தனர்.

அவர்களைக் கடந்து சென்று நீல பெர்ரிக்களைப் பறித்து ருசித்து மகிழ்ந்தோம். மீண்டும் கீழே வர இப்போது வேறு இலகுவான பாதையை வழிகாட்டியில் குறிப்பிட்டிருந்தார்கள். அதன்படி நடக்கத்தொடங்கையில் அந்தப் பாதை வெறும் கற்கலால் நிறம்பியிருந்தது. அது ஏதோ ஒரு ஓடை உருவாக்கிய வழி போல இருந்தது. அதில் சிறிது தூரம் நடந்தபின், சிற்றுண்டி உண்ண அமைவான இடமொன்று தென்பட்டது. அங்கு சிற்றுண்டியை முடித்துவிட்டு தொடர்ந்து நடந்து வண்டிகளை நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தோம். இலகுவான பாதை இது என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் இந்தப் பாதை வழி நடந்து வந்துகொண்டிருந்தனர்.
நாங்கள் மலையேறிய பாதை சில இடங்களில் குறுகலாகவும், சில இடங்களில் தீடீர் பள்ளங்கள், அடர்த்தியான புதரில் சிறு பாதைகள், சில இடங்களில் சிறு பாம்புகள், பாறைகள் என்று சற்றுக் கடினமான பாதையாக இருந்தது. இவைகளைக் கடந்து மலையுச்சியை அடைந்து அங்கு இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தது இன்னும் பல நாட்கள் நினைவைப் பசுமையாக வைத்திருக்கும்.

No comments:

Post a Comment