Sunday, July 31, 2016

டிரம்பு ஒரு டிராகனா?


டிரம்பு, கிளாரி, மோடி, மன் மோஹன், ராகுல் என்ற தனிமனிதர்களின் எண்ணப்போக்கை வைத்து அவர்களின் ஆட்சி அமையும் என்று நம்புவது முட்டாள்தனம் என்பது வரலாறு. அரசு இயந்திரம் என்பது பல்வேறு அதிகாரச் சக்கரங்கள் ஒன்றினை ஒன்று இழுத்தும் தள்ளியும் சுற்றும் அமைப்பு. முடிவெடுத்தல் கூட தன்னிச்சையாக அதிபராலோ பிரதமராலோ செய்ய முடியாது(வெளியில் அப்படித் தெரியலாம், ஆனால் உண்மையில் அப்படியில்லை), வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவது உட்பட. அதிகபட்சம் தனது தனிச்செயலாளரை வேண்டுமானால் தன் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். கேபினட் அமைச்சர்களை தேர்வு செய்ய பிரதமர் அல்லது அதிபர் என்ற தனியான பிம்பத்தால் முடியாது. அந்த தேர்விற்குப்பின் இருக்கும் அரசியலை வெற்றிகரமாக கைக்கொண்ட அரசியல்வாதி இதுவரை யாருமில்லை. தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சியமைப்புகள், உள்ளூர் தாதாக்கள், வெளி நாட்டு அழுத்தங்கள் என்று பல்வேறு காரணிகளே அமைச்சரவையை முடிவு செய்கிறது. ஒபாமா வந்தால் உலக அரசியலில் தலைகீழ் மாற்றாம் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஆனால் அவரை இரண்டாவது முறை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் கடந்த ஆட்சியின் தொடர்ச்சியாக செய்ய வேண்டியவற்றை செய்யவும், எதிர்மறை விழைவுகளைத் தள்ளிப்போடவும்தான். இந்த முறை ஒரு வேளை டிரம்பே அதிபரானாலும், அவரால் பெரிதாக எதையும் செய்ய முடியாது, நல்லனவற்றையும், தீயவையும். அரசியல் என்பது ஒரு நபரால் எப்போதும் செய்யப்படுவதில்லை, அது ஒரு கூட்டு நோக்கம் கொண்டது, வெளிப்படையாக பேசப்படாவிட்டாலும், உள்ளுணர்வால் மனிதர்கள் இணைக்கப்பட்டு இயங்குவது. அந்த உள்ளுணர்வை ஆதிக்கம் செய்வது மேலோட்டமான பொதுநலமும், ஆழமான சுயநலமுமே.

Saturday, March 19, 2016

கொஞ்சம் மனிதாபிமானத்துடன் இருங்கள்

* ஞாபக சக்தி குறைவதில் தொடங்கி குறிப்பிட்ட சில நிகழ்வுகள் முற்றிலும் மூளையிலிருந்து அழிந்து விடும்.

* முடிவெடுக்கும் செயல்திறன் குறையும். முடிவெடுப்பதற்கான காரணிகளை ஆராயும் திறம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும்.

* ஐந்து முதல் ஆறு மணி நேரம் தொடர்ந்து விழித்திருப்பது கடினமாக இருக்கும்.

* ஒரே இடத்தில் ஓரிரண்டு மணிகளுக்கு மேல் அமர முடியாது.

* கேட்கும் திறன் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் கேட்கும் திறன் அற்றுப் போகும்.

* நினைவாற்றலை இழந்து ஒரு பொருள் குறித்த ஆழ்ந்த பேச்சுக்கள் தடைபடும்.

* கை, கால்கள் வலிமையிழந்து நடுக்கத்துடனே இருக்கும். எழுதுவது போன்ற திறன்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

மேற்கண்டவை அனைத்தும் 60 வயதுக்கு மேல் மனிதர்களுக்கு ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள். இவை மருத்துவத்துறையால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இதன் காரணமாகவே வேலையிலிருந்து ஓய்வு பெரும் வயது 55 லிருந்து 65 க்குள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக இந்த வயது மீண்டும் மனிதர்களின் உடல் மற்றும் மூளை மனிதனின் ஆரம்பகால வயதின் திறனை நோக்கிக் கொண்டிருக்கும். அதாவது குழந்தை போன்ற நிலையை அடைந்து கொண்டிருப்பர். இந்த காலங்களில் பெரும்பாலும் உறவுகள் துணையுடன் சிரமாமான வேலைகளைச் செய்யாமல் மகிழ்ச்சியாக வாழ்வை கழிக்கவே மருத்துவர்கள் அறிவுரை செய்வார்கள். அதுவே அவர்கள் வயதுக்கேற்ற சிறந்த வாழ்கை முறையாகும்.

முதிய வயதில் ஒரு மனிதருக்கு கடுமையான பணி என்பது அந்த மனிதரைச் சுற்றியுள்ளவர்கள் மீதான அக்கரையின்மையாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர்களை கொடுமைப் படுத்துவதற்கு ஒப்பாகும்.

முதல்வர் பதவி, அதுவும் தமிழகம் போன்ற சவால் நிறைந்த மாநிலத்தில், குறிப்பாக பல லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலை, மாநிலத்தின் கடன், பொருளாதாராச் சுமை, செய்து முடிக்க வேண்டிய பல்வேறு பணிகள், நெடுநோக்குத் திட்டங்கள் வகுத்தல், பல்வேறு துறை சாந்த வல்லுனர்களுடன் தொடர் ஆலோசனை, பின் முடிவுகள் எடுத்தல் என்று மிகவும் சிக்கலான, Demanding பதவி அது.


வெள்ளம் வந்த போது நம் முதல்வர் உறங்கினார், இலங்கையில் போர் நடந்த போது கலைஞர் கடற்கரையில் உறங்கினார், முதல்வர் மக்களைச் சந்திப்பதில்லை, முதல்வரின் உறவினர்களே முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர், திட்டங்களை திறந்து வைப்பது கூட தொலை வழியே செய்கின்றார், மத்திய அரசின் முக்கியமான முதல்வர்கள் மாநாட்டில் முதல்வருக்கு பதிலாக வேறொருவர் கலந்து கொள்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளில் எந்த நியாயமும் இல்லை. நமது முதல்வர்களின் வயதுக்கு அவர்களால் இயன்றதை செய்கிறார்கள்.

குடும்பசூழல், கட்சி அரசியல் போன்ற பல்வேறு சிக்கல்களால் அவர்களுக்கு தங்களைத் தவிர வேறொருவரை முதல்வராக அறிவிக்க முடியாத நிலை. புரிந்து கொள்ளக் கூடியதே.


ஆனால், தமிழகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பிரசினைகள் மிகவும் ஆழமானவை. இவற்றை எதிர்கொள்ள துடிப்புடன் இருக்கும், திறன் வாய்ந்த இளையவரால்தான் முடியும். இதைச் சொல்வதால் முக்கிய கட்சிக்காரர்கள் சீறலாம். ஆனால் உண்மை அதுதான். அதையும் மீறி அவர்கள் தங்கள் தலைவருக்கு திறன் உள்ளது, அவர் எல்லாவற்றையும் திறனோடு செய்து முடிப்பார் என்று சொல்வார்களேயானால், அது அறிவியலுக்கு எதிரான, மூட நம்பிக்கை. அதை பொது சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

அந்த வகையில் தமிழக முதல்வராக சுடாலினோ, அதிமுகவில் வேறு யாரோ(பன்னீரைத் தவிற வேறு யாரையும் தெரியவில்லை), அன்பு மணியோ, வைகோவோ, திருமாவோ, சீமானோ, உதயகுமாரோ, வசீகரனோ, சுதீஸாகவோ அல்லது வீரலட்சுமியாகவோ கூட இருக்கலாம்.


நிச்சயம் அது கருணாநிதியாகவோ அல்லது ஜெயலலிதாவாகவோ இருக்க முடியாது இருக்கவும் கூடாது. அவர்களை நிம்மதியாக ஓய்வில் வைக்க வேண்டியது மனிதப் பண்புள்ள அனைவரது கடமை.

Thursday, March 17, 2016

காந்தியம் பேசும் தமிழ்த் தேசியம்

   எண்பதுகளின் அந்திமக் காலமது. பள்ளிக்குச் செல்லும் வழிகளெல்லாம் நெசாவாளிகள் வீதிகளில் கதர் வேட்டிக்கு பாவு தோய்ந்து கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரர்எதிர் வீட்டுக்காரர்இரண்டு வீதி தள்ளியிருப்பவர் என்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கூட்டாகச் சேர்ந்து, பாவு தோய்ந்து கொண்டிருப்பர். ஒருவர் வீட்டு பாவிற்கு மற்றவர்கள் வந்து உதவுவது போல் மற்றவர் வீட்டு பாவிற்கு ஏனையோர் சேர்ந்து வேலை செய்வர். அது ஒரு அற்புதமான கூட்டுறவு. ஊரில் பாவடித் தெரு என்றும் பாவடித் திடல் என்றும் இடங்கள் உண்டு. அது இப்போது 'பழைய பாவடிஎன்றாகிப்போனது. ஊன்றிய பாவடிக் கற்கள் பெயர்க்கப்பட்டுவிட்டது. கூட்டுறவு செய்த கூட்டம் பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து விட்டது.

"சர்வோதையா" - கூட்டுறவு சங்கம் மூலம் கதர் வேட்டி, கைக்குட்டை நெய்தல் அப்போது எங்கள் ஊரின் பிராதானத் தொழில். வேட்டிக்கு ஒன்பது ரூபாய் கூலி, வாரம் 8 முதல் 10 வேட்டி நெய்வதற்கு இரவு பகல் வித்தியாசமில்லாமல் தறியில் நாடா பாய்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் தந்தை தறியிலும், தாய் அடுப்பிலும், இராட்டையிலும் தங்கள் குடும்பத்திற்க்காக தேய்ந்து கொண்டிருப்பர். குண்டு பல்பு வெளிச்சமும், தறிநாடாச் சத்தமும் படித்த பாடங்களை இன்னும் ஒலி, ஒளியுடன் பசுமையாக நினைவில் நிறுத்தி வைத்திருக்கிறது.

வாரம் முழுதும் நெய்த வேட்டிகளை கட்டித் தலையில் வைத்து சனிக்கிழமை தோறும் அப்பனும், அம்மையும் சர்வோதயாவில் சேர்த்தால், கூலி ரூபாய் 100 முதல் 120 வரை கிடைக்கும். அதில் 10ஐ தொழிலாளர் வைப்பு நிதி என்று ஏதோ ஒன்றில் பிடித்தம் செய்து கொள்வார்கள். பின்னாளில் தறியை விட்ட பொழுது அதை இரண்டாயிரமாகவோ, மூன்றாயிரமாகவோ ரொக்கமாக திருப்பிக் கொடுத்தார்கள் என்று நினைவு.


மகாத்மா காந்தியின் சிந்தனையில் உருவான 'சுயராஜ்ய' சிந்தனை வடிவமே 'சர்வோதையா'. மக்கள் அனைவருக்கும் (பொருளாதார) பலமேற்படுத்தும் சோசலிச சிந்தனை அது. அந்நிய பொருட்களைத் தவிர்த்து கிராமங்கள் தோறும் உற்பத்தியைப் பரவலாக்கி, அந்த உற்பத்திப் பொருட்களை மீண்டும் மக்களிடம் சேர்ப்பதே "சுயராஜ்", "சுதேசி" அல்லது "தற்சார்பு" பொருளாதாரம் அல்லது "சர்வோதையா".

அன்றைய காலகட்டத்தில், அதாவது 1958ல் வினோபா அவர்களின் தூண்டுதலினால் தமிழகத்தில் முதன் முதலில் திருப்பூரைத் தலைமியிடமாகக் கொண்டு சர்வோதைய சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் கிளைகள் தமிழகமெங்கும் பரவலாக்கப்பட்டு, கதர் ஆடைகள், தோல் பொருட்கள், அலங்கார கைவினைப் பொருட்கள், மர வேலையில் உருவான மேசைகள், நாற்காலிகள், அடுக்கறைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, மெத்தை, சங்கு மாலைகள், சந்தன மாலைகள், சிகைக்காய் பொடி, வேம்பு சோப்புகள், தேங்காய் எண்ணை, தேங்காய் நார் கயிறுகள் என்று பல்வேறு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தன. பின்னாளில் வீட்டு உபயோக இரும்பு  சாதனங்களான இரும்பு அடுக்கு அறைகள், மேசை, நார்க்காலி என்று விரிந்து சர்வோதையா பொருட்கள் வீடுகளை அலங்கரித்தது.

பாலியெஸ்டர், ரெயான் போன்ற செயற்கை (இதை சிலர் அறிவியல் முன்னேற்றம் என்பார்கள்) இழைகள் வராத காலத்தில் கதராடைகளே மக்களின் பிராதான ஆடை. காங்கிரஸ்காரர்கள் கதராடை அணிவதை கவுரவமாகக் கருதினார்கள். தமிழத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் இந்தியதேசமெங்கும் விற்கப்பட்டது. பொருளாதாரத் தாராளமயமில்லாத, இயந்திர உற்பத்தி இல்லாத காலத்தில் ஒவ்வொரு கிராமத்தையும் பொருளாதாரத் தன்னிறைவை அடைய வைத்தது சுயராஜ் (அ) தற்சார்பு (அ) சுதேசி (அ) சர்வோதையா பொருளாதாரம். இன்று நம் அரசியல் வாதிகள் தங்கள் சாதனைகளாகப் பேசிக்கொள்ளும் மகளிர் சுய உதவிக் குழுக்களெல்லாம் காந்தியின் சர்வோதயாவின் வடிவங்களே

பின்னார் 90 களில் இந்திய சந்தை உலகத்திற்கு திறந்து விடப்பட்டதும், பருத்தி நூற்பாலை நுட்பங்கள், இயந்திரங்கள், பாலியெஸ்டர், ரெயான் இழைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை பருத்தி நூற்பாலைகளின் மையமாக மாறியது. ஒரு கட்டத்தில் தென்னிந்தியாவின் மேன்ச்சஸ்டர் என்றும் அழைக்கப்பட்டது. பருத்தி நூற்பாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், இயந்திர உதிரிப்பாகங்கள் கோவையிலேயே தயாரிக்கப்பட்டன. Laxmi Machine Works (LMW) லட்சுமி மில் குழுமம், Textool, Premier Instruments and Controls(Pricol), Premier Polytronics, Shanti Gears என்று கோவை இயந்திரமயத்தை உள்வாங்கிக் கொண்டது. வடக்கில் அம்பானியின் Reliance Industries இன் பாலியெஸ்டர் நூல் உற்பத்தி செய்தது, கதராடைகளுக்கு மாற்றாக பாலியெஸ்டர் ஆடைகள் சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

நுகர்வு சார்ந்த பொருளாதார தாராளமயமாக வந்த அந்த பாதிப்பு நெசவையே தொழிலாகக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர், தன் பெண் பிள்ளைகளின் வாழ்கைக்காக தறிகளுடன் வீட்டை விற்று, திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் கூலி வேலைக்காக இடம்பெயரச் செய்துவிட்டது.

இன்று கோவை ஆட்டோமபைல் மற்றும் பருத்தி நூற்பாலை இயந்திரங்களின் உற்பத்தி மையமாக மாறக் காரணம், மரபு சாரா அறிவியல் சிந்தனை மற்றும் கடும் உழைப்பாளிகளே. அன்றைய தொழிலாளிகள் இன்றைய முதலாளிகளாக வளரும் ஒரு வியப்புமிகு விதி கொண்டது கோவை. இன்று Bosch, Roots என்ற பண்ணாட்டு நிறுவனங்கள் கால்பதித்து வளர இங்குள்ள தொழில் நுட்பம் சார்ந்த பண்பாடே காரணம்.

உலகமயமாக்கல் ஒரு புறம் புதிய பொருட்களையும், மிகு நுகர்ச்சியைக் கொண்டுவந்தாலும் இன்னொரு புறம் அது உற்பத்தியைத் தனியார் முதலாளிகள் வசப்படுத்தியது. பெரும்பாலான மக்கள் தனித்தன்மை வாய்ந்த தொழில் நுட்பங்களை கைவிட்டு இயந்திரத்தை கையாளும் பொதுத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். தனிமனிதர் ஒருவரின் தேவையை உலக சந்தையே நிர்மானிக்கும் நிலை வந்தது. அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பின்மை பெரிதானால் சென்னையிலும், கோவையிலும் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலமை உருவானது. ஆஸ்திரேலியா சுரங்கம் தோண்டுவதை நிறுத்தினால் கோவையில் உருக்காலைகள் மற்றும் இயந்திரப்பாக உற்பத்தி நிறுவனத் தொழிலாளர் வேலையிழக்கும் நிலை வந்துவிட்டது. இது தவறில்லை என்றாலும், சீனா போன்ற அதிதீவிர வளர்ச்சி மோகம் கொண்ட நாடுகளுடன் போட்டி போட்டு நம் வளங்களை அழித்து. நாளையே கடன்காரர்களாகவும், பைத்தியகாரர்களகவும் நாம் நிற்க வேண்டியதில்லை.

அன்று நெசவை மட்டுமே தொழிலாகக் கொண்டு ஐந்து பெண் பிள்ளைகளை வளர்த்து, திருமணம் முடித்து நல் வாழ்கையமைத்து கொடுத்த என் தாத்தா, இறுதிகாலத்தில் கடனேதுமில்லாமல் ஊரில் மதிப்புடன் உலகை விட்டுச் சென்றார். இன்று ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியரின் வாழ்கை ஒன்றிரண்டு பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்குள் வீட்டுக்கடன், கல்விக்கடன், தொழில் கடன், கல்யாணக் கடன் என்று கடன்களை சேர்த்துவிட்டு மரணிக்கும் போது உலகம் விரும்பாத சரிதமாகிவிடுகிறது.

ஒரு புறம் உள்நாட்டு உற்பத்தியை விற்க உலக சந்தையை பயன்படுத்திக் கொள்வதும் இன்னொரு புறம் உள்ளூர் சந்தையை பலப் படுத்திக் கொண்டு உணவு மற்றும் இதர அடைப்படைத் தேவைகளில் சுயராஜ்ஜியத்தை அடைந்து கொள்ள முயற்சிப்பதே இன்றைய தேவை.

காந்திய சிந்தனையுடன் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தி, உற்பத்தி, சந்தை மற்றும் நுகர்வை இணைக்க வேண்டும். விவசாயத்தைத் தனியார் தொழிற் சாலைகளுக்கு இணையாகக் கருதாமல், கிராமத் தற்சார்பு உற்பத்தி சங்கங்களாக மாற்ற வேண்டும். உணவுத் தேவை துள்ளியமாக கணிக்கப்பட்டு மண் வகைகளுக்கேற்ப உணவு உற்பத்தியை முறைப் படுத்த வேண்டும். உற்பத்தியை முறைப்படுத்தி விட்டால் விவசாயிக்கு தன் உற்பத்திப் பொருளுக்கு நல்ல விலையும், நுகர்வோருக்குச் சீரான விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் முடியும். அதற்கு பல்நோக்கு திட்டம் ஒன்றின் மூலம் நீர் ஆதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள், அரசியல் தலையீடற்ற, ஊழல் இல்லா விவசாய, விற்பனை சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். பண்ணைகள் சமுதாயமயமாக்கப் படவேண்டும். இதன்மூலம் ஊரக வேலை வாய்ப்பைப் பெருக்கிட முடியும். இது ஒரு வகையில் கிராமங்களிலிருந்து நகரத்த்திற்குக் குடி பெயர்தலையும், நகரங்கள் வீங்கிப் பெருத்து வெடிப்பதையும் தவிர்க்க முடியும். தொழில்கள் மாநில முழுமைக்கும் பரவலாக்கப் படவேண்டும். இது பயணம் முதல், உரைவிடச் செலவு, சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு வகைகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

வளங்களும், அது சார்ந்த நலன்களும் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் சிந்திக்கும் தலைவர்கள்தான் இன்று நமக்குத் தேவை. வளர்ச்சி, மாற்றம் என்ற பெயரில் மக்களின் வளங்களைச் சுரண்டி தனியாருக்கு விற்று, அதை இலாபக் கணக்கில் காட்டும் வித்தகர்கள் தேவை இந்த நாட்டுக்குத் தேவையில்லை.

சீமான் முன் வைக்கும் தற்சார்பு விவசாயக் கொள்கை காந்தியின் சர்வோதையாவை கண் முன் நிறுத்துகிறது.

Sunday, January 3, 2016

நம் வாழ்க்கை நம் விரலில்...

“நமக்கெதற்கு அரசியல்... அது ஒரு சாக்கடை.. இவர்களுக்கு வேற வேலையில்லை...” இப்படி நிறைய இளம் தலைமுறையினர் எண்ணுகின்றனர். அவர்களின் நிலையில் அது சரியானதே. அதற்குக் காரணம் நம்மை ஆண்ட, நமக்கு அறிமுகமான அரசியல்வாதிகளின் நடவடிக்கை, அது நமக்கு அரசியல் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அந்தச் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. படித்த இளைஞர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இது வரை நடந்த தேர்தல்களில் வாக்களிப்பவர்கள் சதவீதம் 60-70%. ஏறக்குறைய 40% மக்கள் வாக்களிப்பதில்லை. பதிவான 60% ஓட்டுக்கள் 4 அல்லது 5 கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் பிரித்துக் கொள்கின்றனர். 25% முதல் 35% ஓட்டு வாங்குபர் எதிராளியைத் தோற்கடித்து வெற்றி பெறுகின்றார். அவர் வெற்றிபெற்ற ஓட்டுக்கள் பெரும்பாலும் கட்சியின் அடிப்படையில் காலங்காலமாக ஓட்டுப் போடுபவர்களின் ஓட்டுக்கள். அதிக பட்சமாக 5% - 10% கட்சி சாராத நடுநிலையாளர்கள், புதிய வாக்களார்களின் வாக்குகள் மூலம் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. நமது ஜனநாயக நாட்டில் 25% ஓட்டு வாங்குபவர் ஏனைய 75% மக்களுக்கான முடிவுகளை எடுக்கிறார். இந்த நிலையால் நம்மை ஆளும், ஆண்ட கட்சிகள் தங்களுக்குள் ஒரு எழுதப்படாத உடன்படிக்கை மூலம், மக்களின் வரிப்பணத்தைத் தவறாக செலவளித்து, ஊழல் செய்து பெரும் பணக்காரர்களாகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் நம் அடுத்த தலைமுறையான, மகன், பேரன்கள் இந்த நிலத்தில் வாழத் தேவையான நீர், காற்று, நிலம், காடுகள், மலைகள் இன்னும் பல இயற்கை வளங்களை சூரையாடி அழித்து லாபம் பார்க்கின்றனர்.
நாம் வாங்கும் சோப்பு, சீப்பு முதல் ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்டுகின்றோம். பெட்ரோல், டீசலுக்கு அதன் விலையை விட அதிகமாக வரி கட்டுகிறோம். டெலிபோன் பில்லில் ஒரு பகுதி, சொத்து வரியில் ஒருபகுதி கல்வி வரி கட்டுகிறோம். வாகனத்தை சாலையில் பயன்படுத்த சாலை வரி கட்டுகின்றோம். வருமானத்தில் 20 முதல் 30 சதவீதம் வரி கட்டுகின்றோம். மின்சாரக் கட்டணத்தில் வரி கட்டுகின்றோம்.
இப்படி ஒவ்வொரு அன்றாடத் தேவைகளுக்கும் வரி கட்டுகின்றோம். ஆண்டுக்கு ஒரு லட்சம் (மாதம் 8500 ரூபாய்) குடும்பச் செலவு செய்கிறவர் வரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அரசுக்கு அளிக்கிறார். இந்த வரி கல்வி, மருத்துவம், சாலை வசதி, குடி நீர் வசதி போன்றவற்றிற்காகவும், அரசு அலுவலர்களின் சம்பளமாகவும் செலவு செய்யப்படுகிறது. இந்த வரிச் செலவினங்களை நாம் முழுமையாகப் பயன் படுத்திக்கொள்கிறோமா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
கல்வி, மருத்துவத்திற்கு வரிகட்டினாலும் அந்த சேவைகள் அரசைவிட தனியாரிடம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்தச் செலவுகளை நாமே செய்து கொள்கிறோம். இந்தச் செலவுகள் தனிமனிதனின் ஆண்டு வருமானத்தில் பெரும் பங்காகச் செலவு செய்யப்படுகிறது. திருட்டிலிருந்து, பாதுகாப்பு வரை காவல் நிலையங்களை நம்பியிருக்கிறோம். ஆனால் காவல் நிலையங்கள் பெரும்பாலும் மக்கள் எளிதில் அணுகி உதவி பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பது நிதர்சனம்.
போடாத சாலையை போட்டது போல் கணக்குக் காட்டுவது, போட்ட சாலை 5 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க மதிப்பிடப்பட்டிருந்தால் அவை இரண்டு ஆண்டுக்குள் பழுதாகி மீண்டும் சாலை போடவேண்டிய நிலை. ஒவ்வொரு முறை சாலை போடும்போதும் அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் கமிசன் பெருகிறார்கள். ஆக, ஒவ்வொருமுறை அரசு பணம் செலவழிக்கப்படும் போதும் அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் லாபம் அடைவதால், செலவு செய்யத் தேவையான காரணங்களை செயற்கையாக உருவாக்குகிறார்கள். புதிய மின் உற்பத்தி நிலையங்களை அரசு உருவாக்குவதை தவிர்த்து அல்லது தாமதப்படுத்தி, மின்சாரத்தை அதிகவிலைக்கு தனியாரிடம் கொள்முதல் செய்து அதை நமக்கு வினியோகிப்பதன் காரணம் இதுதான்.
எங்கெல்லாம் தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் கமிசன், லஞ்சம் தாண்டவமாடுகிறது. டாஸ்மாக் கொள்முதலிலும் விற்பனையிலும் லாபம் பெருபவர்கள் அரசியல் வாதிகள், பலனடைபவர்கள் அதிகாரிகள். இதில் எந்த கட்டுப்பாடும், கேள்வியும், தண்டணையும் இல்லை. இது உங்கள் உழைப்பை ஒருவகையில் சுரண்டுவதற்கு ஒப்பானதாகும். ஆனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் அரிசி, கரும்பின் விலைகளில் அரசியல் வாதிக்கும், அதிகாரிக்கும் கமிசன் கிடைப்பதில்லை. அதனால் அங்கு கொள்முதல் விலை அதிகரிப்படுவதில்லை.  விவசாயி நட்டத்துடன் கடன்காரனாகத் தற்கொலை செய்து கொள்கிறான்.
அரசின் எல்லா அமைப்புகளும் நேர்மையாக இருந்தால் செலவுகள் குறைந்து, உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகமாகும். வாழ்க்கை முறை எளிதாகவும், வளமானதாகவும் இருக்கும். 60 ஆண்டுகள் தொடர்ந்து கடுமையாக உழைத்து ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்காது. 40 அல்லது 50 வயதிலேயே ஓய்வு பெற்று நிம்மதியாகக் காலம் கழிக்கலாம். உணவு, சாலை, சுற்றுச் சூழல் சரியாக இருந்தால் நோய்கள், விபத்துக்கள், மருத்துவச் செலவு குறையும்.

இவையெல்லாம் நாம் போடும் ஓட்டின் அடிப்படையிலேயே இருக்கிறது. நீங்கள் அலட்சியம் செய்யும் உங்கள் ஓட்டு, நாளை உங்களை கடன்காரர்களாகவும், நோயாளிகளாகவும் வைக்கப்போகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். நாளை மருத்துவமனையிலும், அரசு அலுவலகங்களில் சேவைகளைப் பெற வரிசையில் நிற்பதைத் தவிற்க, ஒரு நாள் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு நல்ல வேட்பாளார்களைத் தேர்ந்தெடுத்து நல்ல அரசை அமைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். நம் வாழ்க்கை நம் விரலில், ஓட்டுப்போடாத 40% இளைஞர்களும், மக்களும் ஓட்டுப்போட்டால் 25% ஓட்டு வாங்கி வெற்றிபெரும் ஊழல்வாதிகளை அப்புறப்படுத்திவிடலாம். சரியான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்திற்கு வருவார். பெரும் கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் படித்த திறமையுள்ள இளைஞர்கள் மக்களுக்கு சேவை செய்ய் தேர்தலில் போட்டி போடுவார்கள். நாடு வளம் பெரும். நாமும் வளம் பெறலாம்.

Wednesday, December 23, 2015

தமிழக அரசியலில் இன்றைய தேவை யார்?


இன்னும் மூன்று மாதத்தில் தமிழகம் தேர்தலைச்  சந்திக்க இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இரு கழகங்களின் ஆட்சியைப் பார்த்துவிட்ட மக்கள்குறிப்பாக இளம் தலைமுறையினர் அரசியல் மாற்றத்தையும் அதன் விளைவாக நிர்வாக சீர்திருத்தம்மக்களின் உரிமைகளுக்கு மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கின்றனர். எப்படி, பொருளாதார தாராளமயமாக்கல் இந்திய அரசியலில் தத்துவங்களை புறந்தள்ளி தனிமனித முன்னேற்றத்தை முன்னிறுத்தியதோஅதே போல அந்த பெரும் மாற்றத்தைக் கைக்கொள்ளும் அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இன்றைய சமூகம் முகம் கொடுத்திருக்கும் சிக்கல்கள் இது வரை ஆட்சி செய்த கட்சிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனியார் மயமான கல்விஇன்று ஒவ்வொரு பெற்றோரையும் கடன்காரர்களாகவும்அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் முக்கியக் காரணியாகவும் இருக்கிறது. எப்படி பிறப்பின் மூலம் சாதிப் படிநிலை ஒரு காலத்தில் ஒருவரின் தலைவிதியைத் தீர்மானித்ததோஅதே போல பிறப்பின் மூலம் வசதி படைத்தவர் ஒரு தரத்திலும்வசதி படைத்திராதவர் ஒரு தரத்திலும் கல்வி பெறும் சூழல் நிலவுகிறது. கல்வி ஒருவருடைய வாழ்கைத் தரத்தை உயர்த்தும் என்ற அடிப்படையையே இந்த நிலை கேள்விக்குள்ளாக்குகிறது.

வெறும் எண்களால் நிறுவப்படும் பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையை இந்த பூமிப்பந்தில் வாழ்வதற்கு வழியில்லாமல் செய்துவிடும் பொருளாதாரச் சார்பு கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏரிகள்குளங்கள்ஆறுகளை அழித்து ஆலைகள்குடியிருப்புகள் அமைக்க இப்போது எந்த தடையுமில்லை. இது எப்படி பிராய்லர் கோழிகளை முப்பது நாளில் மருந்துகள் கொண்டு எடையேற்றி கறியாக்குகிறோமோ அதைப்போல. இந்த முன்னேற்றம் நீண்ட காலத்தில் மனித சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது. இன்னொரு புறம் சாமனியன் அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலர்களுக்கு கையூட்டு கொடுத்தே ஆகவேண்டிய நிலை. எந்த ஒரு பத்திரப் பதிவும் லஞ்சம் கொடுக்காமல் நடைபெறுவதில்லை. இன்றைய நிலையில் லஞ்சம் வாங்குவதையோ லஞ்சம் கொடுப்பதையோ யாரும் குற்றமாகவோகேவலமாக பார்ப்பதில்லை. சமுதாயத்தின் மனசாட்சியின் அறத்திற்கான அளவுகள் மாறிவிட்டது. ஓட்டு கேட்க வரும் அரசியல் கட்சிக்காரர் மக்களின் காலில் விழுந்த காலம் போய்கரண்சியில் அடித்து ஓட்டு வாங்கும் நிலை நிலவுகிறது. தேர்தல் முடிந்தால் தெருவில் சாக்கடை அடைத்து விட்டாலும்சாலை பழுதானாலும் அந்த அரசியல் கட்சிக்காரரிடம் ஏதும் கேட்க முடியாது. அவருக்கு எதுவெல்லாம் லாபம் தருமோ அந்த அரசுப் பணீகளையே செய்வார். இங்கு காசுக்கு ஓட்டுப்போட்டவனின் உரிமையும் விலைக்கு வாங்கப்படும் சூழல்.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் போலமனிதனிடம் புதிய வியாதிகளும் ஆண்டு தோறும் கண்டுபிடிக்கப்படுகிறது. சில நேரங்கள் ஏதோ ஒரு மருந்தைத் தயாரித்துவிட்டு அதற்கான நோயைக் கண்டு பிடிக்கிறார்களோ என்று கூடத் தோன்றுவதுண்டு. தனியார் மருத்துவமனைகளின் பெருக்கம் அரசு மருத்துவ மனைகளின் எண்ணிக்கைக் கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் அனுமதித்தோம். ஆனால் இன்று அவையும் ஒரு நோய்போல் பரவி இன்று சாவை முன்னிறுத்திமருத்துவனைப் படியேறும் ஒவ்வொருவரிடமும் கொள்ளையடிக்கின்றன. தனிமனித மருத்துவச் செலவுகள் தனி ஒரு வரவு செலவு திட்டத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் தரமான மருத்துவமும்(சுகதாரமும்) கல்வியும் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டு அது உறுதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் மருத்துவம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அமெரிக்காவில் மருத்துவம் தனியார் வசம் இருந்தாலும்எந்த ஒரு மனிதருக்கும் பணமில்லை என்ற காரணத்தால் மருத்துவம் நிறுத்தி வைக்கப்படுவதில்லை. இந்திய அளவில் மருத்துவத்துறையில் மாற்றம் வேண்டும் என்ற போதிலும்மாநில அளவில் அதற்கான முன்மாதிரிகளைச் செய்யலாம்.

சரி... இபோது நமக்குள்ள வாய்ப்புகள் என்னதிமுகஅதிமுக ஆகியவற்றின் ஆட்சியை பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் ஆட்சி முறையில் வித்தியாசமில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் இவர்களின் ஆட்சியில் ஓட்டுக்கு காசுஇலவசங்கள்டாஸ்மாக் என்று ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கப்பட்டுவிட்டது.. இந்த முறையும் இவர்களைத் தேர்ந்தெடுத்தால்பெரிய மாற்றத்தை எதையும் நம்மால் எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக எப்படியும் இருவரில் ஒருவர் என்று முடிவுசெய்து இப்போதுபோல் ஊழலைத் தொடர்ந்து தைரியமாகச் செய்வர். அடுத்து நமக்குள்ள தேர்வுமக்கள் நலக் கூட்டணிபாமகநாம் தமிழர்ஆம் ஆத்மிகாங்கிரஸ்பாரதிய ஜனதா.

பாரதிய ஜனதாவும்காங்கிரஸும்ஆம் ஆத்மியும் தேசியத்தலைமையின் கீழ் இயங்குபவை. ஏனைய மாநிலங்களைப் போலல்லாமல் தமிழகத்தின் உரிமைகள்சிக்கல்கள் வேறானவை. இங்கு மொழியிலுருந்துஉணவு வரை ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒரு போதும் இங்கு வெளி மாநிலத் தலைமை எடுபடாது.

பாமக வின் அரசியல் அதிரடியாய் இருந்தாலும் கடந்த கால சாதி ரீதியான அரசியல் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை இன்னும் பெறவில்லை. மேலும் பாமக எல்லா மாவட்டங்களிலும் வலுவாக இல்லை. அதனால்வட மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினாலும் பாமகவின் ஆட்சியமைக்கும் முயற்சி வெற்றி பெறாது.

அடுத்து நாம் தமிழர் கட்சி. ஆரம்பம் முதலே தமிழர்கள் குறித்த அக்கறையுடன் அரசியல் செய்வதுபல தரப்பட்ட மக்களை துணை இயக்கங்கள் மூலம் அரவணைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தினாலும்அவர்கள் அறிவிக்காமலே, இன வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுபோல் மக்கள் மத்தியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதற்கான சரியான பதிலையும் செயல் பாடுகளையும் தலமை வெளிப்படுத்தும் போது தமிழகத்தில் பெரும் சக்தியாகும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்துவிஜயகாந்தின் தேமுதிக. அது அதிமுகதிமுக விற்கு மாற்றாக உருவெடுத்தது. ஒருகட்டத்தில் திமுக வை ஒழிக்க அதிமுக வுடன் கூட்டணி வைக்கும் நிலை வந்ததும்இப்போது அதிமுக வை ஒழிக்க யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்திலும் இருப்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி வைத்துள்ள விஜய காந்தினால் தனியாக ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்அவர் கட்சிக்கு விழும் ஓட்டு எதிராளியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வந்திருக்கிறது. 

கடைசியாக மக்கள் நலக் கூட்டணி. வைகோதிருமாவளவன்இடது சாரிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி பல்வேறு பரிமாணங்களில் ஆட்சியமைக்கும் நம்பிக்கையளிக்கிறது. வைகோ சிறந்த தலைவரானாலும் அவர் தமிழக அரசியலில் வெற்றி பெற முடியாததற்குக் காரணம் அவர் தமிழக அரசியல் சூழலை உள்வாங்க வில்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் தமிழக நலனில் வைகோவின் போராட்டங்களும்அரசியலும் மிகப் பெரும்பங்காற்றியது வரலாறு. அதிகாரத்தில் இல்லாதபோதும் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் முன்னின்று அரசியல் போராட்டங்களும்சட்டப் போராட்டங்களும் செய்தது யாவரும் அறிந்தது. அவருடன் இணைந்துள்ள திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதைத் தாண்டிஅனைத்து மக்களுக்குமான அரசியல் வாதியாக பரிமளிப்பது மிகப்பெரிய பலம். கூடங்குளம்ஈழப் பிரச்சினையில் கருத்தால் வேறுபட்டிருந்தாலும்அடிப்படையில் தமிழக நலன்களில் இடது சாரிகளின் போராட்டங்களும் முன்னெடுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. தனியார் மயமாக்களுக்கு எதிரான அரசியல்தொழிலாளர் நலன் சார்ந்த அரசியலுக்கு இடது சாரிகள் பெயர்போனவர்கள். இம்மூவர் கூட்டணி பல்வேறு தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. ஆனால் கூட்டுத்தலைமை என்பது தமிழகத்தைப் பொறுத்த அளவில் புதிய முயற்சி. அந்த முயற்சி பரிசோதிக்கப்படும் அதே நேரத்தில் சிறந்த நிர்வாகத்திறமையும்வெளிப்படையான அணுகுமுறையும் கொண்ட முதன்மை-அமைச்சர் தமிழகத்தின் இன்றைய தேவை. அந்த வகையில் நமக்கும் நேர்மைக்கு பெயர்போன சகாயம் ஐஏஸ் சரியான தேர்வாக இருக்கிறார்.

இதுநாள் வரைஒரு கட்சிக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவரே முதல்வராக இருந்து வந்துள்ளனர். அவரே ஒன்றிற்கும் மேலான துறைகளுக்கு அமைச்சராகவும் தன்னிச்சையாக முடிவெடுப்பவராகம் இருந்திருக்கிறார். ஒருவகையில் அதிகாரம் ஒரிடத்தில் குவிந்து அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதில் பெரும் சிக்கல்களைக் கொடுத்துள்ளது.


ஆனால் சகாயம் போன்ற ஒருவர் முதல்வராக இருக்கும்போதுஅரசியல் தலையீடுகள்சமரசங்கள் இல்லாத முதன்மை-அமைச்சராகச் செயல்பட முடியும். வைகோதிருமாகம்யூனிஸ்டுகள்தேமுதிக போன்றவை அமைச்சரவையை பகிர்ந்து கொண்டுசகாயம் அவர்களை சாரதியாக்கி தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அரசு நிர்வாகத்தில் அரசியல் வாதிகள் தலையீட்டை இது போன்ற முறையில் தடுத்திட முடியும். கொள்கைகளையும், மக்கள் பிரச்சினைகளையும் ஆட்சி இயந்திரத்தின் கவனத்திற்கு நமது அரசியல் தலைவர்கள் கொண்டு செல்லவும்அவற்றிற்கு அரசு இயந்திரத்தின் மூலம் தீர்வு காண்பது, சகாயம் அவர்களின் திறமையின் மூலம் சாத்தியமே. இது போன்றதொரு சூழலில்கட்சிக்காரர்களுக்கு காண்ராக்ட்காண்ராக்டில் கமிசன்நிறைவேற்றப்படாத திட்டங்களுக்கு செலவுக்கணக்கு போன்ற பல்வேறு ஊழல் முறைகளை அரசியல் தலையீடு இல்லாமல் அழித்துவிடலாம். இந்த ஆட்சியில் தேமுதிக வாகும் பங்கெடுத்து அரசை வழிநடத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகம் நிச்சயம் பெரும் மாற்றத்தையும்முன்னேற்றத்தையும் அடைந்திட முடியும்.

Tuesday, December 15, 2015

அதிமுக வெறுப்பு திமுக விற்கு விழும் லைக்கா?...

டாஸ்மாக் மற்றும் வெள்ள பாதிப்பு, தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் அதிமுக அரசின் இயலாமை பல்லிளிக்கும் இந்த நேரத்தில் திமுக கூடாரம் உற்சாகத்தில் இருப்பது போலும் மக்கள் அடுத்த மாற்றாக திமுக வைத்தான் தேர்ந்தடுப்பர் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஒருவகையான திமுக ஆதரவு பிரச்சாரம் மட்டுமில்லாமல், மக்களை திசை திருப்பும் உக்தியும் கூட.

கடந்த தேர்தலில் திமுக துறத்தியடிக்கப்பட்டதற்கான காரணங்கள் அப்படியேதானிருக்கிறது.

  1. 2G அலைக்கற்றை ஊழல்
  2. ஈழத்தமிழர் விடயத்தில் நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்றியது.
  3. மாவட்டச் செயலாளர்கள் முதல் ஊராட்சித் தலைவர்கள் வரை ஊரான் சொத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டுக் கொண்ட அராஜகம். அதைத் தடுக்க 'அம்மா' கொண்டுவந்த நில அபகரிப்பு தடுப்புச் சட்டம் முதல் இரண்டு மூன்று மாதங்களுப்பின் 'ஏதோ' சமரசத்திற்குப் பின் செயல்படவில்லை.
  4. டாஸ்மாக் குழாயாய் மேலும் திறந்து விட்டு சமுதாயத்தை சீரழித்தது
  5. தாது மணல், கிராணைட் கொள்ளை
  6. நதி நீர் உரிமைகளில் சமரசமடைந்தது.


இன்னும் ஏராளம்...

அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது முற்றிலும் திமுக வெறுப்பினாலன்றி வேறு காரணங்கள் ஏதுமில்லை. மேற்ச்சொன்ன ஓரிரு காரணங்களைத் தவிர்த்து அதிமுக வின் ஆட்சிக்கும் திமுக ஆட்சியின் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்.

இந்த சூழலில் திமுக வின் ஆட்சிக் கனவு மக்களின் மறதியை நம்பியே இருக்கிறது. அவ்வப்போது முகநூல் பதிவுகள் பழைய கதையை நினைவு படுத்தி மக்களை உசார் படுத்தி அந்த கனவை கலைத்து விடுகிறது.

தமிழக அரசியல் சூழலையும், மக்களுக்கு மாற்று ஒன்றை உருவாக்க மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணியயை வைகோ, திருமா மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த கூட்டணியின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அவர்களின் தொடர் பிரச்சாரம், டாஸ்மாக் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் எடுத்த நிலை, வெள்ள நிவாரணப்பணிகளில் தலைவர்கள் என்ற மமதையெல்லாம் இல்லாமல் வீதியில் இறங்கி சேற்றை அள்ளுவது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு பெரிய கட்சிகளிடமிருந்தும் விடிவு வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்கு இவர்களின் அரசியல் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் சொல்லுகிறது. ஆனால் இதையெல்லாம் மறைத்து மக்களின் எண்ணவோட்டத்தை திசை திருப்புவதில் கலைஞர் வல்லவராயிற்றே. மதிமுக வில் முக்கியமானவர்கள் விலகி திமுக வில் இணைவது ஏதோ வைகோ மேலுள்ள வெறுப்பினாலும், அவர் அதிமுக வெற்றிபெற கூட்டணி அமைத்திருப்பதனாலும், அவர்கள் திமுக வில் இணைவது இயற்கையானது என்பதுபோலவும் பரப்புரை செய்யப்படுகிறது.

உண்மை என்ன என்பது கடந்த ஆறு மாத நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும்.

செப் 17 ல் வைகோ மக்கள் நலக் கூட்டணிக்கான அத்திவாரத்தை அமைத்தபின், திமுக கொஞ்சம் ஜெர்க்காகி தாமரைக்கண்ணன் போன்ற நிர்வாகிகளை திமுக பக்கம் இழுத்தது.

இப்போது விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்வது போன்ற அறிகுறி தெரிந்தவுடன், ஜோயல்... இந்த ஜோயலுக்கு வைகோ மக்கள் நலக்கூட்டணி அமைத்தபோதும், வைகோ திமுக, அதிமுக வுடன் கூட்டணி அமைக்கமாட்டேன் என்று அறித்த ஆறு மாதத்திற்கு முன் கட்சி மாறாமல், இன்று அதிமுக வெறுப்பு மக்கள் நலக் கூட்டியக்கத்தின் மேல் விழும் அறிகுறி தெரிந்த பின் கட்சிமாறியது இயற்கையானதா?

கருணாநிதியின் அரசியல், இத்துபோன பழி பாவங்கள் சேர்ந்த அரசியல். அது இப்படித்தானிருக்கும். எப்போதெல்லாம் தனக்கு பாதிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஜோயல் போன்ற யாராவது மாற்றுக் கட்சியிலிருந்து கருணாநிதிக்கு சால்வை சாத்தும் நிகழ்வுகள் நடக்கும். அதற்கான முன்னேற்ப்பாடுகள் பல நாட்களுக்கு முன்னரே முடிக்கப்பட்டிருக்கும்.

வெள்ள நிவாரணத்தில் இவ்வளவு செலவிட்டோம், அவ்வளவு செலவிட்டோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லி கொண்டிருக்கும் அதிமுக விற்கு, திமுக விடம் எந்த கேள்விகளும் இல்லை. ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை இருந்தால், இது போன்ற ஊழல்களை ஆய்ந்து ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்றல்லவா அறிக்கை வந்திருக்க வேண்டும். ஆனால், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் திமுக விற்கு, இப்போதிருக்கும் வாய்ப்பெல்லாம் அறிவாலையம் பக்கம் போகும் ஸ்கூல் பசங்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்கள் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து திமுக விற்கு வந்து விட்டனர் என்று ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து கொண்டாடுவதுதான்.

இன்றைய இளைஞர்கள் ஊழலற்ற, மக்கள் நலன் காக்கும் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் அறிவு பெற்றவர்கள். அதானால் திமுக வைப் பற்றி திமுக காரர்களே கவலைப் பட்டுக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்கள்.