Saturday, December 13, 2008

பாடம்

நண்பர்கள் கூடி கேக் வெட்டி இருபத்தொன்பதாவது பிறந்த நாள் கழிக்கப்பட்டு விட்டது. எத்தனை மாற்றங்களை இயற்கை வாழ்வில் ஏற்படுத்தியிருந்தாலும், சக்கரம் கட்டிய கால்களுடன் ஊரைச்சுற்றி திரிந்து, அப்பா கொடுத்த பத்து பைசாவுக்கு இரண்டு பால்கோவா கட்டி வாங்கி ஒன்றை அக்கா முன் தின்று வெறுப்பேற்றி அழ வைத்து பிறகு மற்றொன்றை அவளுக்கு தந்து அதனையும் பங்கு கேட்டு வாங்கித்தின்ற அந்த நாட்கள் அசை போட மட்டுமல்ல மீண்டும் அனுபவிக்க ஏக்கம் தருபவை.

மங்கிய தெரு விளக்கு வெளிச்சத்தில் மணலில் வீடுகட்டி நண்பர்களுடன் விளையாடிய நாட்களை சோடியம் வேப்பர் வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் அம்மா அடித்தால், பாட்டியிடம் ஓடி தஞ்ச மடைந்து கொள்வேன். அவளுக்கென்று ஒரு தனி உலகம் இருந்தது. அங்கு என்னைத்தான் ராஜாவாக வைத்திருந்தாள். வெளியே எங்கு போனாலும் என்னையும் கூட்டிச்செல்வாள். என் தாத்தா எப்போது என்னை வெளியில் கூட்டிச்சென்றாலும், தோழில் வைத்துத் தான் தூக்கி செல்வாராம். அவர் தலையில் அமர்ந்து ஊரை சுற்றியது, பின்பொரு நாளில் 10 பைசாவுக்கு செய்த யானை சவாரியை போல் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவர் மறைந்த பின்பு பாட்டிதான் எனக்கு தாத்தாவும். ஆனால் அவளால் தாத்தா போல் என்னை தோழில் தூக்கி வைக்க முடியாது. ஏதொ காரணத்தால் அவள் முதுகு கூண் விழுந்து குணிந்து தான் நடப்பாள். இருந்தும் அவள் என் கை பிடித்து அழைத்து செல்வது தாத்தாவுடன் போவது போன்றே இருந்தது. தன் நண்பர்களிடம், "எம் பேரன்" என்று இருமாப்புடன் சொல்வதை கவனித்திருக்கிறேன். அவர்களோ என் தாத்தாவை போலவே இருக்கிறேன் என்பதும், அதற்கு ஆமாம் என்பது போல், "அக்காங்... அவுங்க அப்பாராட்ட ஒரெடத்தில அடங்கிறதில்லை" என்று என் பெருமைகளை சொல்லத் தொடங்குவாள். அவளின் செல்லப்பரிசு கரும்பு சர்க்கரை. அவள் சொல்லும் வேலைகளை செய்ததும் எனக்குத் தருவாள் அந்த பரிசை. பாலில்லாத காபியில் அந்த சர்க்கரை சேர்த்த சுவை எனக்கு கசப்பை தரும். ஆனால் அவள் விரும்பிக் குடிப்பது அதுதான்.

வியாழன் என்பது எனக்கும் என் சகோதரிக்கும் வாரத்தில் இன்னொரு ஞாயிற்றுக் கிழமை. அன்று அம்மா சந்தைக்கு போய்விடுவாள் என்பதால் எங்களுக்கு பள்ளி விடுமுறைவிடப்பட்டு பாட்டியிடம் ஒப்படைத்து விடுவார்கள். எப்படியும் விளையாட்டில் இரண்டு மூன்று தடவை அக்காவை அழ வைத்துவிடுவேன். அப்போதெல்லாம் பாட்டிதான் எனக்கு நற்சான்று வழங்குவாள் என் பெற்றோரிடம். அதையும் மீறி என்னை திட்டினால், அன்று வீடு போர்களம் தான். அதனால் அதற்கான பூசை வேறொரு நாள் வழங்கப்படும்.

அந்த நாட்களில் அந்த வீதியில் தொலைக்காட்சிப் பெட்டியிருந்தது எங்கள் வீட்டில் மட்டும் தான். அதனால் தூர் தர்சனில் ஜீனோ, ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக் கிழமை தமிழ்ப்படம் போடும் நேரங்களில் எங்கள் வீடு ஒரு திரையரங்கு போல காட்சியளிக்கும். பாட்டிதான் அருகில் அமர்ந்திருப்பாள். அவள் மடியில் அமர்ந்துதான் எல்லா பார்வையாளர்களையும் கவனித்துக் கொண்டிருப்பேன். பிறகு எல்லோர் வீட்டிலும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்தும் எங்கள் வீட்டில் மட்டும் கருப்பு வெள்ளை பெட்டியில் படம் பார்த்தபோதும் பாட்டிதான் அருகில் அமர்ந்திருப்பாள்.

தேர்தல் நேரங்களில், பாட்டிக்கு அவ்வளவு மரியாதை இருக்கும். காரில் வந்து கூட்டிச்செல்வார்கள் வாக்களிக்க. துணையாக என்னையும் கூட்டிச்செல்வாள். வாக்குச் சாவடி செல்வது அதுதான் முதல் தடவை. துப்பாக்கியுடன் நின்ற காவலரை பார்த்து சிறிது பயந்து கால்கள் அடியெடுக்க மறுக்கும். பாட்டிதான் இழுத்துச் செல்வாள். "பேரனா?" என்று கேட்டு உள்ளே அனுமதிப்பார் அந்த காவலர். பாட்டிக்கு கருப்பு மை வைத்தபின் எனக்கும் வைகச்சொல்லி கேட்டு வாங்கி வைத்துக் கொள்வேன். ஓட்டுப்பெட்டிவரை கூட்டிச்சென்று, என்னைத்தான் சின்னம் சொல்லி முத்திரை குத்த சொல்வாள். ஓட்டு போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வருவோம். எப்படியும் ஒன்றிரண்டு பெரிசுகள் துணைக்கு சேர்ந்து அரசியல் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்வோம்.

அப்பொதெல்லாம் எனக்கு தெரிந்து அவள் உடல் நிலை சரியில்லையென்று மருத்துவரிடம் சென்ற நினைவில்லை. திருநீரு மந்திரித்து பாடம் சொல்லும் பெரியவரிடம் தான் மாலை நேரத்தில் என்னையும் அழைத்து செல்வாள். எனக்கும் பெரும்பாலான நேரங்களில் அவர்தான் பாடம் போட்டிருந்தார். அவர் தன்னை ஒரு பெரிய மந்திரவாதி போலெல்லாம் காட்டிக் கொண்டதில்லை. மெலிந்த தேகத்தோடு நெற்றி நிறைய திருநீரு வைத்து,சட்டை அணிந்து கொள்ளாமல் வெள்ளை வேட்டி மட்டும் அணியும் காங்கிரஸ் காரர். ஏதொ ஒரு வகையில் அவர் எங்களுக்கு உறவுக்காரர் என்பதால், அங்கு உபசரிப்பும் நலம் விசாரிப்புகளும் எப்போதும் இருக்கும். அவரின் பிளைப்பு நெசவுத்தொழில் தான். அப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் அதுதான் தொழிலாக இருந்தது. நாங்கள் சென்றதும் அவர் மங்கிய ஒளியில் இருக்கும் வீட்டில், தறியிலிருந்து வந்து நலம் விசாரிப்பார். பாட்டி சிறிது நேரம் கதைகளை பேசிக்கொண்டே தன் கழுத்து வலியையொ, காய்ச்சலை பற்றியோ சொல்வாள். கழுத்து வலியாக இருந்தால் இரண்டு உலக்கைகளை பாட்டொயின் இரண்டு கைகளில் கொடுத்து சிறிது நேரம் நிற்க வைத்து விடுவார். பின்னார் தனது பூசை அறையில் உள்ள அனைத்து சாமிகளிக்கும் பாட்டு பாடி திரு நீரு கொடுப்பார். அதனை நெற்றியில் பாட்டி இட்டுக்கொண்டு எனக்கும் வைத்து விடுவாள். சிறிது நேரம் பேசிக்கொண்டு பாட்டி தான் நிவாரணம் அடைந்ததாக உணர்ந்ததையும் சொல்லுவாள். பின் பெரும்பாலான நேரங்களில் அங்கேயே உணவு உண்டுவிட்டு கிளம்புவோம். மந்திரம் சொல்லும் பெரியவர் வருபவர்களிடம் கேட்கும் ஒரெ பொருள் கற்பூரம்.

அப்போதெல்லாம் எனக்குள்ளே அவரைப்பற்றி நிறைய கேள்விகள் எழும். வருமையில் இருந்த அவர் ஏன் வைத்தியம் செய்ததற்கு காசு வாங்குவதில்லை? அவர் சொல்லும் பாடம் மற்றும் மந்திரத்தினால் எப்படி வலியும் பயமும் நோயும் குணமாகிறது? போன்ற கேள்விகள் விடையில்லாமல் இன்னும் இருக்கின்றன.

1 comment:

  1. எனக்கும் எங்க பாட்டி தான் ரொம்ப புடிக்கும்... இதை படிக்கும்போது அவங்க ஞாபகம் கண்ணுல தண்ணியா வருது.. :(

    ReplyDelete