Tuesday, January 27, 2009

அன்புடன்....

அன்புடைய அக்கா,தம்பி, தங்கைகளுக்கு,

அருள்மொழி காலத்தில் நம் மூதாதயர் பெருமையை தமிழம்மா சொல்லி மகிழ்ந்த காலம்

உங்களுக்கும் எனக்கும் நினைவிருக்கிறது...

என்னைவிட உங்களுக்கே அதிகம் நினைவிருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

பள்ளியில் என்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் வீர சிவாஜியும், விக்டோரியாவும் இடம் பிடித்தது போக மீதமுள்ள பக்கங்களில் எங்கள் முதல்வர்களின் வரலாறு நிறம்பிப் போனதில் அருள்மொழியும் அவன் குல வரலாற்றுக்கும் இடமில்லாமல் போனது எங்களுடைய வரலாற்று தெளிவுக்கு காரணம்.

உயிரை விட மானத்திற்கு மதிப்பளிப்பவர்கள் தமிழர்கள் என்பதற்க்கு நீங்கள் தான் சான்று.

எங்களை பாருங்கள், ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் எங்கள் வாக்குகளை விற்று மானம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோம். இறையான்மை என்றால் அம்மனமாகவும் தெருவில் நடப்போம். யாருடைய இறையான்மை என்ற பகுத்தறிவு பெரியாருடன் மறித்துப் போனது.

ஊழல், லஞ்சம், நயவஞ்சகம், பொறாமையில் ஊறிப்போன எங்களுக்கு மானத்தின் அருஞ்சொற்பொருள் விளங்காது.

பசிக்கிறதென்று உணவு கேட்டீர்கள். பாசம் வந்து பொருள் சேர்த்து அனுப்பிவைத்தோம். ஆதரவு கேட்டீர்கள். அணைக்க நீட்டிய கைக்கு முன் ஏவுகணை எறிந்தோம்.

அடுப்பூத குழல் கேட்டீர்கள், இதோ அனுப்பிவைக்கிறோம் பல்குழல் வெடிகணைகள். சிங்களவன் எரிவான் பிடித்துக் கொள்ளுங்கள்.

ஒருவேலை சோறு கேட்டீர்கள். நிலாச் சோறு தின்று அலுத்துபோன எங்களுக்கு நிலவுக்கு போய்வர நேரம் பத்தவில்லை.. போய் வந்ததும் அனுப்பி வைக்கிறோம்.

ஆசையாய் அக்காள் ஒரு சேலை கேட்டாள்...
பாசமாய் தங்கை ஒரு மிதிவண்டி கேட்டாள்...
காடுகளில் நடந்து புண்பட்ட அம்மா மிதியடி கேட்டாள்...
செல்லடித்து புறையோடிய கண்ணுக்க அப்பா மருந்து கேட்டார்..

அதையெல்லாம் வங்கத்தானம்மா நான் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறேன். நிச்சயம் அவை உங்களை வந்து சேரும் என்று நம்பியிருந்தேன். ஆனால், அதற்கு முன் நான் கட்டிய வரியில் வாங்கிய குண்டுகள் உங்களை வந்து சேர்ந்துவிட்டதென்பது தெரியாதம்மா...

இதொ புதிதாக டாங்கிகள்... இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்....
இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்...

மிச்சமுள்ளவர்களையும் முடித்துக்கட்ட வந்து சேரும், எங்கள் மானம் விற்ற காசில் வாங்கிய விமானங்கள்.

No comments:

Post a Comment