பாலாவின் கைதிற்கு திருநெல்வேலி ஆட்சியர்தான் காரணம், பாலா வரைந்த அந்த அம்மண ஓவியம்தான் காரணம் என்று நீங்கள் நினைத்தால், அது காவி கும்பலின் வெற்றியே..
பாலாவின், எழுத்துக்களையும், ஓவியங்களையும் linesmedia.in இல் போய் பாருங்கள். அவை பெரும்பாலும் காவி கும்பல் மற்றும் அதன் கைப்பாவை எடப்பாடியின் அரசை விமர்சிக்கும் ஓவியங்களும் கட்டுரைகளாகவே இருக்கும்.
பாலாவின் கைதிற்கு ஒரு அம்மண ஓவியத்தைக் காரணமாக்குவதன் மூலம், சப்ஜக்சட் (அ) பேசுபொருள் ஓவியம் மட்டுமே என்றாகிவிடுகிறது.
காவிகளின் அரசியலுக்கு எதிர் அரசியல் செய்யும் குறிப்பிடத்தக்கவர்கள் கூட இந்தக் கைதிற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், கைதை வரவேற்பதைப் பார்க்க முடிகிறது. இதைத்தான் காவி கும்பல் எதிர்பார்க்கிறது. அவர்களின் எதிரிகள் எப்படி இயங்குவார்கள் அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டார்கள்.
நாளை ஸ்டாலின் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டினார் என்று கைது செய்யலாம்..
வைகோவை வருமான வரி கட்டவில்லை என்று கைது செய்யலாம்...
இவையெல்லாமே சட்டப்படி சரிதான். ஆனால் அவர்கள் தவறு செய்தார்களா, இல்லையா என்று நீதிமன்றம் தீர்ப்பெழுதும் முன்னறே இங்கு அரசியல் குழப்பங்களை தொடர்ந்து நிறைவேற்றலாம். அதன் பலனை குறிப்பிட்டவர்கள் அனுபவிக்கலாம்.
ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் விமர்சனம் செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும்போது, நீங்கள் சர்வாதிகாரத்தின் பிடியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதே போலத்தான் ஒரு முறை சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். என்ன காரணம் சொல்லித் தெரியுமா? வழியில் சென்ற ஒருவரைத் தாக்க முயற்சித்ததாக.
உண்மையான காரணம் அவர் அன்றைய ஆட்சியாளர்களின் அதிகார அத்துமீரல்களை வெளியிட்டார் என்ற கோபத்தில்தான்.
உங்கள் தர்க நியாயங்கள் வெறும் அரசு சொல்லும் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்குமானால், உங்கள் அரசியல் அறியாமையை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.
கெளரி லங்கேசைக் கொன்றவர்களுக்கும் ஒரு "அரசியல் சரி" இருந்தது. அதைப்போலவே இலங்கையில் லசந்த் விக்ரமசிங்கவைக் கொன்றவர்களுக்கும் ஒரு "அரசியல் சரி" இருந்தது. அதைப்போலவே இப்போது பாலாவை கைது செய்தவர்களுக்கும், அதை ஆதரிப்பவர்களுக்கும் ஒரு "அரசியல் சரி" இருக்கிறது.
ஆனால் அந்த "அரசியல் சரி" களுக்கு எதிராக உலகமே கண்டனக்குரல் கொடுத்தது.
எது சரி எது தவறு என்பது வெறும் ஒற்றை நிகழ்வில் தீர்மானிக்கப்படுவதில்லை.
பாலா வெளியே வந்தவுடன் இந்தக் கைதிற்குப் பின் உள்ள உண்மைகள் வெளியே வரும். அப்போது பாலா கார்ட்டூனிஸ்டாக இருக்கமாட்டார். ஒரு அரசியல் காற்றாறாகவே இருப்பார்..
No comments:
Post a Comment