Tuesday, May 5, 2009

உரசல்

நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவனுடைய பேச்சில் பிடிப்பில்லாமல் இருப்பதை அறிந்து அவனிடம் என்னவென்று வினவினேன். அவனுடைய மனைவிமேல் அவனுக்கு அளவுகடந்த வெறுப்பு உண்டாகி விட்டதென்றும் அதனால் அவர்களிடையே விரிசல் விழுந்ததாகவும் சொன்னான். எனக்கு இதைக்கேட்டதும் அதிர்ச்சி!. ஏனென்றால் அவனுடைய திருமணம் காதல் திருமணம். அதுவும் நான்கு வருட கல்லூரி காதல். எனக்கு தெரிந்து இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்தது. திருமணத்திற்க்கு முன் அவளை பற்றி பேசும்போது சிறிது கூட விட்டுக் கொடுத்ததில்லை. அப்படியிருந்த அவன் எதனால் இப்படி பேசிகிறான் என்று புரியாமலும், இது அவனுடைய இல்வாழ்க்கை தொடர்புடையதும் ஆதலால், சிறிது தயக்கத்துடனேயே வினவினேன். பொதுவாக மனதிலுள்ள பாரம் மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால் குறைந்துவிடுமென்பார்கள். என்னைப்பொறுத்தவரை அது யாரிடம் சொல்கிறோம் என்பதை பொறுத்து. சிலரிடம் மனதில் உள்ள பாரத்தை சொன்னால் அடுத்த நாள் அது இருமடங்காகி விடும்.

அவன் மனைவி பற்றி அவன் சொல்கையில், "இப்போதெல்லாம் அவள் அவளுடைய வீட்டு உறவுகளைப்பற்றியே அதிகம் கவலை படுகிறாள். சின்ன சின்ன பிணக்கு என்றாலும் விழுந்து விழுந்து உதவி செய்கிறாள் என்றான்".

"சரி அது நல்லதுதானே" என்றேன்.

"மேலோட்டமாய் பார்க்கும்போது அது நல்லதுதான். ஆனால் அதிகமுறை அதுவே எங்களுக்குள் சண்டைக்கு காரணமாகிறது" என்றான்.

"புரியவில்லையே?".. என்றேன்

"அவள் செய்கிற உதவி என்னைப் பாதிக்காத வரையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனல் சிலநேரங்களில் எனக்குப் பிடிக்காததை அல்லது அந்த உதவியினால் எனக்கு வரும் பாதிப்புகளை அறியாமல் அல்லது அறிந்தோ அவள் செய்யும் போது எனக்கு கோபம் வருகிறது. அதனால் வாய்ச்சண்டையில் தொடங்கி இரண்டு மூன்று நாள் பேசாமல் இருந்திருக்கிறோம்" என்றான்.

"இதுபோலத்தான் சென்ற மாதம் அவளுடையா அம்மாவுக்கு கால் வலி என்று சொல்லி மருத்துவ மனையில் சேர்த்து ஒருவாரம் பார்த்தோம். அதற்க்கு மட்டுமே பதினைந்தாயிரம் செலவு செய்தேன். அதற்க்குப் பிறகு கடைகளுக்கும் மற்றபிற இடங்களுக்கும் எளிதில் செல்ல மார்கெட்டுக்குப் பின் புறம் உள்ள என்னுடைய இன்னொருவீட்டை அவர்களுக்கு தந்துவிடலாம் என்றாள். என்னால் சரி என்று சொல்லவும் முடியவில்லை, முடியாது என்று சொல்லவும் முடியவில்லை. அதில் வரும் நாலாயிரம் வாடகையை தான் என் பெற்றோருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

சரிடா இதெல்லாம் எல்லோர் வீட்டிலும் இருக்கும் சிக்கல் தான். காலப்போக்கில் சரியாகிவிடும். இந்த சிக்கலில் உனக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி உன் மனைவியிடம் சொன்னாயா? என்று கேட்டேன்.

இல்லைடா.. இதைப்பத்தி எப்படி அவகிட்ட சொல்லறதுன்னு...... என்றான்

இதிலென்ன இருக்கு.. அப்புறம் நீ என்ன நினைக்கிறேன்னு அவங்களுக்கு எப்படி தெரியும்? என்றேன்

எனக்கென்னமோ பிரச்சினைக்கு காரணம் உங்க ரெண்டு பேருகிட்டையும் சரியான புரிதல் இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன்.

"என் கணவர் என்னை நேசிப்பது போலவே என் பெற்றோரிடமும் அன்பாக இருப்பார் " என்ற எதிர்பார்ப்பு உன் மனைவியிடம் இருந்துச்சுன்னா?

அவனிடம் பதிலில்லை...

"எந்த ஒரு மனிதனையோ அல்லது அவன் செயலையோ எப்போதும் நல்லது அல்லது தீயது என்று அறுதியிட்டு கூற முடியாது. ஏனென்றால் அவை மனிதனுக்கு மனிதன், இடத்துக்கு இடம், சூழ்நிலைக்கு தகுந்தாற்ப்போல் அவற்றின் பொருள் மாறுபடும்" என்பதற்க்கு இவர்கள் சரியான உதாரணம்.

பொதுவாக காதலிக்கும் போது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. மனதுக்கு பிடித்த பிறகுதான் காதல் பிறக்கிறது, அதனால் அங்கு மூளைக்கு வேலையில்லை. கல்யாணத்திற்க்கு பிறகுதான் மூளை வேலை செய்கிறது. ஆனால் மூளையின் அறிவை இதையத்தின் அன்பு வெல்லும் என்பது பொதுவாக அறியப்படாத உண்மையாகவே இருக்கிறது.

காதல் என்பது உடலைதாண்டி வளரும்போதே அதன் உன்னதம் புரியப்படுகிறது.

2 comments: