இயற்கையாகவே வளர்வதுதான் நோய் எதிர்ப்புச் சக்தி!
‘பிடித்துக் கொல்... பிடுங்கி அழி...' (Catch and kill, Pull and destroy) - நான் வேளாண் கல்லூரியில் படித்த சமயத்தில், எங்கள் பேராசிரியர்கள் இந்த வசனத்தை எங்களிடம் அடிக்கடி சொல்வார்கள். அதாவது, பூச்சியாக இருந்தால் பிடித்துக் கொன்றுவிட வேண்டும். நோய் வந்தால் செடியைப் பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
இது அவர்களின் சொந்தக் கருத்தல்ல... ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட காலத்தில், அவர்களுடைய விஞ்ஞானிகள் இங்கே பதியம் போட்டுச் சென்றவற்றில் இதுவும் ஒன்று. அவை, நமது விஞ்ஞானிகளின் மூளைகளை இன்னமும் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கின்றன என்பது தான் வேதனை!
பொதுவாக மிளகாய், தட்டை, தக்காளி, துவரை... போன்ற செடிகளை வைரஸ் தாக்குவது உண்டு. அப்படித் தாக்கப்பட்ட செடியின் இலைகள், சிறுத்து ரோசாப் பூ போல அடுக்கடுக்காக காட்சி அளிக்கும். இதனை 'சிற்றிலை நோய்' என்றும் சொல்வர். உயிருள்ள நிலையிலும், உயிரற்ற நிலையிலும் வாழும் திறன் வைரஸுக்கு இருப்பதால், அது தாக்கியச் செடியைக் காப்பாற்று வதற்கு வழி இல்லை. அதனால்தான் நோய் தாக்கியச் செடிகளை அகற்றி, வேலிக்கு வெளியில் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கச் சொல்கிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால், மற்ற செடிகளுக்கும் நோய் தொற்றிவிடும் என்றும் பயமுறுத்துவார்கள். ஆனால், இயற்கை வழி விவசாயிகள் இதை ஒப்புக்கொள்வதில்லை. மனிதர்களானாலும் சரி, தாவரங்களானாலும் சரி, அவர்களைப் பொருத்தவரையில் நோய் தொற்று என்பதே கற்பனையான விஷயம்தான்.
என்ன அதிர்ச்சியாக உள்ளதா? ஆனால், அதுதான் உண்மை!
ஒரு முறை இயற்கை மருத்துவர் வெள்ளிமலையுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, ‘நோயுற்றவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டுமா..? வெந்நீர் குடிக்க வேண்டுமா?' என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். நான், ‘நோயுற்றவர்களுக்கு சுட வைத்து ஆற வைத்தத் தண்ணீரைத்தான் குடிக்கத் தருகிறார்கள்’ என்றேன்.
மீண்டும் அவர், ‘தண்ணீரைச் சுட வைக்கும்போது என்ன நடக்கிறது?’ என்றார். ‘தண்ணீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் இறந்துபோகின்றன’ என்றேன்.
அவர் விடவில்லை. ‘செத்துப்போன கிருமிகள் அப்போது தண்ணீரில்தானே இருக்கும்... அப்படியானால், கிருமிகள் உள்ள தண்ணீரைக் குடிப்பது நல்லதா? கிருமிகளின் பிணங்கள் உள்ள தண்ணீரைக் குடிப்பது நல்லதா?’’ என்றார்.
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தொடர்ந்து விளக்கிய வெள்ளிமலை, ‘அம்மை அல்லது காலராவுக்காக தடுப்பூசிகள் போடப்படும்போது, நோயை உண்டு பண்ணக்கூடிய கிருமிதான் சிறிய அளவில் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. அந்தக் கிருமி உடலுக்குள் புகுந்ததும் பெருகி, அங்கே ஏற்கெனவே இருக்கும் நோய்க்குக் காரணமானக் கிருமிகளுடன் போரிட்டு, அவற்றை வெளியே அனுப்புகின்றன. இதேபோலதான் தண்ணீரிலும். கிருமிகள் உள்ள தண்ணீரைப் பருகும்போது உடலில் எதிர்ப்புச் சக்தி வளருகிறது. கிருமியைக் கொன்ற பிறகு எதிர்ப்பாற்றல் வளராது அல்லவா?’ என்றார்.
தொடு மருத்துவத்தைக் கையில் எடுத்து இருக்கும் இன்னொரு மருத்துவர், முற்போக்கு எழுத்தாளர் உமர் ஃபாரூக். அவருடைய புத்தகத்தில் இருந்து வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.
டாக்டர். ஆண்டனி பீச்சாம், மிக நுண்ணிய உயிர்கள் மனித உடலில் இருப்பதை, ஓர் ஆய்வின்போது கண்டுபிடித்தார். அவற்றுக்கு 'மைக்ரோ சைமாஸ்' என்று பெயரிட்டார். இதையடுத்து, 1864\ம் ஆண்டு லூயி பாஸ்டர் என்பவர், ‘ஒவ்வொரு கிருமியும் ஒவ்வொரு நோயை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. இவை காற்று, நீர் போன்றவை மூலமாக உடலினுள் நுழைகின்றன’ என்று அறிவித்தார். ஆனால், முதலில் கிருமிகளைக் கண்டுபிடித்த ஆண்டனி பீச்சாம், இதை முற்றிலுமாக மறுத்தார். 'ஒரு மாமிசத் துண்டை காற்றுப் புகாத கண்ணாடிப் பெட்டியில் வைத்தால், பல மணி நேரங்கள் கழித்து அது அழுகி நோயுற்று கிருமிகளுடன் காணப்படுகிறது. காற்றின் வழியே கிருமிகள் வருகின்றன என்றால், காற்றே புகாத இந்தப் பெட்டிக்குள் எப்படி கிருமிகள் வந்தன' என சவால் விடுத்தார் பீச்சாம்.
'உடலில் தேங்கி இருக்கும் கழிவுப்பொருட்களில் இருந்துதான் கிருமிகள் உருவாகின்றன. இவை, கழிவுகளை உணவாக உட்கொண்டு உடலுக்கு நன்மை செய்கின்றன. ஒரு கட்டத்தில் கழிவுகள் தீர்ந்தால், கிருமிகள் தானே அழிந்துவிடுகின்றன' என்று சில டாக்டர்கள் விளக்கம் அளித்தார்கள்.
டாக்டர் ரேடர்மண்ட் விஸ்கான், அம்மைக் கிருமிகளை அதிகளவில் ஊசி மூலம் ஏற்றிக்கொண்ட போதும், அவர் உடலில் எந்தவிதத் தீய விளைவும் ஏற்படவில்லை. 1892-ம் ஆண்டு டாக்டர் பெட்டின் காப்பர் என்பவர், கிருமிகளை தன் உணவில் கலந்து உட்கொண்டபோதும் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. லூயி பாஸ்டர் மரணப் படுக்கையில் இருந்தபோது, ‘உடல்தான் எல்லாமே. கிருமிகள் ஒன்றுமில்லை' என்று தன்னுடைய முந்தைய ஆய்வுகளுக்கு எதிரான கருத்தை அவரே வெளியிட்டார்.
அந்த மாதிரியான சமயத்தில்தான், சாமுவேல் ஹானிமன் என்பவர், ‘கிருமிகளால் நோய்கள் வருவதில்லை’ என்று சொல்லி, ஹோமியோபதி மருத்துவத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். ஆனாலும், ‘கிருமிகளால்தான் நோய் வருகிறது’ என்று பயமுறுத்தி, இன்னமும் காலாவதியாகிப்போன கோடிக்கணக்கில் மதிப்புள்ள ரசாயன நச்சு வில்லைகளை (மாத்திரைகளை) விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வேளாண்மைக் கல்லூரியில் படித்து, விவசாயிகளுக்குத் தவறான ஆலோசனையை வழங்கிவந்து, பின் இயற்கை விவசாயத்துக்கு மாறியவர் எட்வர்டு எச்.ஃபால்ட்னர். பல ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்துவரும் இவர், ‘மண் புனரமைப்பு’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், ஃபால்ட்னரின் தோட்டத்து வழியாகச் சென்ற விவசாயி ஒருவருக்கும் ஃபால்ட்னருக்கும் இடையே நடந்த உரையாடல் இப்படி எழுதப்பட்டு இருக்கிறது.
விவசாயி: மற்றவர்கள், பீன்ஸ் செடியில் பூச்சிகளை ஒழிக்க நஞ்சுகளைத் தெளிக்கிறார்களே, நீ ஏன் தெளிக்கவில்லை?
ஃபால்ட்னர்: என்னுடையச் செடிகளில் பாதிப்பு இல்லை.
விவசாயி: வண்டு, உன்னுடையத் தோட்டத்துக்கு மட்டும் வரவில்லையா?
ஃபால்ட்னர்: வண்டு வருகிறது. என்னுடையச் செடியை உண்பதற்கு வண்டுக்கு பிரியம் இல்லை. அதனால் திரும்பிப் போய்விடுகிறது.
இதற்கு என்ன காரணம் என்று இருவரும் ஆராய்ந்தபோது, 'இயற்கை வழி சாகுபடி மூலம் நிலத்தில் தாது உப்புக்கள் அதிகரிப்பதால், பூச்சிகளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், தழைச் சத்துக்காக, ரசாயன உப்புக்களைக் கொட்டும்போது தாது உப்புக்கள் குறைவதால், பூச்சிகள் விரும்பி உண்கின்றன' என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இன்று 'வானகம்' இயற்கை வேளாண் பண்ணையிலும் இதேபோன்று ஒரு நிகழ்வை பார்க்கிறோம். மேட்டுப் பாத்திகளில் நிறைய மூடாக்குகளை இட்டு கத்திரி மற்றும் மற்ற செடிகளையும் கலப்பாக பயிரிட்டோம். அவற்றில் ஒரு கத்திரிச் செடியில் 'சிற்றிலை நோய்' வந்தது. அதனைப் பிடுங்கினால், மற்றச் செடிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் வராமல் போய்விடுமென்று, பிடுங்காமல் அப்படியே விட்டுவிட்டோம்.
எதிர்பார்த்தது போலவே நடந்தது. பக்கத்துச் செடிகளுக்கு நோய் தொற்றவில்லை. இன்னும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறோம். இதேபோல்தான் துவரையிலும். இந்த நிலங்களை இயற்கை வழிக்கு மாற்றி ஓராண்டுகூட ஆகவில்லை. மேட்டுப்பாத்தி, கழிவுகள், மூடாக்கு, இயற்கை இடுபொருட்கள், பல்வகைச் சூழல் என அனைத்தும் சேர்ந்து செடிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கின்றன.
No comments:
Post a Comment