Sunday, December 21, 2014

என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 7

(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)

பயிர்ப் பாதுகாப்புக்கு எது தேவை?

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் 2004-ம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு, மேடையிலிருந்து இறங்கினேன். என்னை எதிர்கொண்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர், ஒரு நூலை என் கையில் கொடுத்தார். 

'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் காட்டன் ஃபார்மர்ஸ்' (Friends of cotton Farmers) என்பது அந்த நூலின் தலைப்பு. அதன் பொருள்... பருத்தி விவசாயிகளின் நண்பர்கள். ‘நூலைப் படித்துப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்’ என்று அந்த அதிகாரி சொன்னார். 

அவர் வேறு யாருமல்ல... இன்று இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் அறிந்திருக்கும் இயற்கை உயிரியல் நிபுணர் நீ.செல்வம்தான்.

அவரும் இன்னும் இரண்டு விஞ்ஞானிகளும் இணைந்து எழுதிய நூல் அது. நூல் முழுவதும் இரை மீது தாவும் நன்மை செய்யும் பூச்சிகளின் வண்ணப்படங்கள் நிரம்பி வழிந்தன. தமிழகம் மற்றும் ஆந்திர மாநில வேளாண் துறை ஆணையர்கள் அந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருந்தார்கள். 

‘இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் 5 முதல் 10% வரை பருத்தி பயிரிடப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்தப் பயிர்களுக்கும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியில் 55% பருத்தியில்தான் தெளிக்கப்படுகிறது. இப்படி உழவர்கள் தாறுமாறாக நஞ்சைத் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிகிறது’ என்ற விஷயம்தான் அந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவுஉழவுத் துறை அதிகாரியாக இருந்த, டாக்டர். பழனிச்சாமி பச்சாக் கவுண்டர், அந்த நூலுக்காக எழுதியிருந்த அணிந்துரையில், ‘பருத்தி பயிராகும் நிலத்தில் 150 வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் 10 வகைப்பட்ட உயிர்கள் மட்டுமே செடியின் பாகங்களைச் சிதைக்கின்றன. 100 வகைப்பட்ட உயிரினங்கள் நன்மை பயக்கின்றன. எஞ்சிய 40 உயிரினங்கள் நன்மையோ தீமையோ செய்வதில்லை. ‘ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் பருத்தியைப் பயிர் செய்ய முடியாது’ என்று சொல்பவர்கள், ‘உயிர்ச்சூழல்’ இயல்பு அறியாதவர்களாக இருப்பார்கள் அல்லது வேறு ஏதோ காரணத்தினால் இப்படிச் சொல்கிறார்கள்’ என்று சூடாகக் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த நூலை முழுவதும் படித்து முடித்தவுடனேயே எனக்கு செல்வத்தின் மீது பற்றும் நெருக்கமும் ஏற்பட்டன. ‘பூச்சிகளைக் கொல்வது மட்டுமேதான் ‘பயிர் பாதுகாப்பு’ என்று பார்ப்பது அபத்தமானது’ என்ற உண்மையை செல்வம் அடிக்கடி சொல்வார்.

இன்னொரு சமயம் கொடைக்கானலில் நடந்த ஒரு கருத்தரங்கில், தோட்டக்கலை உதவி அதிகாரி ஒருவர், தோட்டக்கலைப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அதில் பங்கேற்ற வெளிநாட்டுக்காரர் ஒருவர் எழுந்து, "பூச்சிகளைக் கொல்லாவிட்டால் என்ன?" என்று கேட்டார். 

"பூச்சிகள், இலைகளைத் தின்றுவிடும். பிறகு, செடி செத்துவிடும்" என்று பதில் சொன்னார் அந்த அதிகாரி.

உடனே, அந்த அதிகாரியை அழைத்துக்கொண்டு ஒரு தோட்டத்துக்குள் புகுந்தார், அந்த வெளிநாட்டுக்காரர். நாங்களும் பின்தொடர்ந்தோம். அங்கு ஒரு தேக்கு மரத்தை அவர் சுட்டிக்காட்டி, "இதன் இலைகளில் புழு ஓட்டை போட்டு இருக்கிறது. அதனால், இந்தத் தேக்கு மரம் செத்துப் போகுமா?" என்று வெளிநாட்டுக்காரர் கேட்டார். முகம் சிறுத்துப்போன அந்த அதிகாரி, "இந்த மரம் சாகாது..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னார்.

இயற்கை விவசாயிகள் பலரும்கூட, செடியைத் தின்னும் பூச்சிகளை, தங்களுடைய உணவாக்கிக்கொள்ளும் தட்டான், சிலந்தி ஆகியவை மட்டுமே நன்மை செய்யும் பூச்சிகள் என்று எண்ணுகிறார்கள். ஆனால், இயற்கை விவசாய ஆசான் ‘மசானபு ஃபுகோகா’ எல்லாப் பூச்சிகளையுமே நண்பர்களாகத்தான் பார்த்தார். ஆக, தாவரங்களைத் தின்னும் பூச்சிகள் நமது நிலத்தில் வாழ்வது இன்றியமையாதது ஆகிறது. 

அப்படியானால் பயிர்ப் பாதுகாப்பு என்பது என்ன?

செடியின் இயல்பை உழவர் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் செடி தனது பகைவர்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள போராடிக் கொண்டுதான் இருக்கிறது. வேகமாக வீசும் காற்றால் கிளை முறியும்போது முறிந்த இடத்தில் ஒருவித மெழுகு சுரந்து பூச்சிகளோ, கிருமிகளோ உட்புகாமல் தடுத்துக்கொள்கிறது. அதேபோல, இலையைப் பூச்சிக் கடிக்கும்போது இலையில் ஒருவிதத் திரவம் சுரந்து பூச்சிக்குப் பசி எடுப்பதைத் தடுக்கிறது. 

ஒரு செடியைத் தாக்கி நோய் பரப்பும் பூச்சி, பக்கத்தில் உள்ள வேறொரு வகைச் செடிக்கும் அந்த நோயைக் கொண்டுபோய் சேர்க்கிறது. உதாரணமாக, தக்காளி, மிளகாய், கத்திரி... போன்ற பயிர்களை ‘சிற்றிலை நோய்’ தாக்குகிறது. இது, வைரஸ் மூலம் பரவுகிறது. 

தக்காளி பயிர் செய்யும்போது ஊடுபயிராக மிளகாய், கத்திரி... போன்றவற்றை ஊடுபயிராக பயிரிட்டால் தக்காளியில் உள்ள சிற்றிலை நோய் ஊடுபயிர்களையும் தாக்கும். இந்த வகை பயிர்களை நாம் அடையாளம் கண்டுவைத்துக் கொண்டு அவற்றை ஒரே பருவத்தில் ஒன்றாகப் பயிர் செய்வதைத் தவிர்க்கலாம். அதே சமயம், ஒரு செடியில் தாக்கிய நோய், தன்னைத் தாக்காமல் எதிர்த்து நிற்கும் செடிகளை அடையாளம் கண்டு ஒன்றாகப் பயிர் செய்யலாம்.

ஒவ்வொரு தாவரமும், தன்னுள் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை தானே கண்காணித்துக் கொள்கிறது. மண் கெட்டிப்பட்டுப் போனால், அதில் நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த மண்ணில் வளரும் செடி, பூச்சித்தாக்குதலுக்கு உள்ளாகிறது. தாவர வளர்ச்சிக்குத் தண்ணீர் அடிப்படை தேவை. தண்ணீர்ப் பற்றாக்குறை தாவரத்தின் வளர்ச்சியை பாதிப்பதைப்போல தண்ணீர் மிகுதியும் அதனை பாதிக்கும்.

அமில நிலத்தில் வாழப் பழகியச் செடிகள்... களர் நிலத்திலும், களர் நிலத்தில் வாழப் பழகியச் செடிகள்... அமில நிலத்திலும் சரியாக வளராமல் வாடிப்போகின்றன. 

தொடர்ந்து எரு இடுவதும், மூடாக்கு இடுவதும் மண்ணின் நீர்பிடிப்புத் திறனையும் நீர் வடிதிறனையும் உயர்த்துவதோடு, மண்ணின் கார அமிலத்தன்மையையும் சமன்படுத்துகிறது. 

அநேக வகையான பூச்சிகள், மனிதர்களுக்கு நேரடியாகப் பயன்தராமல் இருக்கலாம். ஆனால், அவை மறைமுகமாகப் பயன் தரக்கூடும். அதுபோலான பூச்சிகளை வரவேற்பதற்காக சிறு பூக்கள் மலரக்கூடிய செடிகளை ஓரப் பயிர்களாகவும் ஊடுபயிர்களாகவும் செய்ய வேண்டும். முள்ளங்கி மற்றும் கடுகு குடும்பத்தைச் சேர்ந்த செடிகள் இதற்கு மிகவும் பொருத்தமானவை. நிலத்துக்கு இடப்படும் மூடாக்குகூட அறுவடைக்குப் பிறகு, பூச்சிகள் மறைந்து வாழ்வதற்குப் பயன்படும். பூச்சிகள், பயிர்களை அழிப்பது நமக்குத் துயரமான விஷயம்தான். அதற்காக உடனே நஞ்சைக் கையில் எடுப்பது, இயற்கையைப் புரிந்துகொள்ளாமல் செய்யும் தவறாகும்!



No comments:

Post a Comment