Tuesday, July 7, 2015

சாதியை ஒழிக்க முடியுமா?

கேள்வி: சாதியை ஒழிக்க முடியாதா?

பதில்: இதற்க்கு விடை காண சமகால மன நிலையிலிருந்து சற்று மாறுபட்டு சாதியைப் பற்றி நாம் ஆராய வேண்டும். ஒரு காலத்தில் தொழில் அடிப்படையில் பகுக்கப்பட்டவர்கள் அது தொடர்பான பெயரில் அழைக்கப்பட்டனர். பின் அது அடையாளமாகிப்போய் இந்த சாதி இப்படி என்று ஒரு வரையறை செய்யப்பட்டது. பின்பு இந்த சாதி பொருளாதாரத்தில் இப்படி, அப்படி அவரின் பண்பு, குண நலன்கள் இப்படி இருக்கும் என ஒரு அனுமானம் ஏற்ப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய சாதிப் பாகுபாடும் சக மனிதன் மீதான ஒரு அனுமானமும் அவரை மற்றவரிடத்திலிருந்து பிரித்து விடுகிறது. உண்மையில் சாதி வெறும் 'சாதி'யின் பெயரில் இல்லை. சாதி - பகுப்பு - பல்வேறு இடங்களில் இருக்கிறது. உதாரணம்: பள்ளியில் மதிப்பெண்கள் அடிப்படையில் சுட்டி-மந்தம்-மக்கு, அலுவலகங்களில் கடை நிலை ஊழியன், மேலாளர், மேற்ப்பார்வையாளர் என்பது போல். மேற்க்கூறிய சாதிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தகுதியை வளர்த்துக்கொள்வதன் மூலம் மாறிக்கொள்ளலாம். ஆனால் நமது சாதி நிலை மாற்ற முடியாததாயிருக்கிறது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட சாதி மக்கள் செய்யும் தொழில் இப்படி இருக்கும் அதனால் அவர்கள் அந்த சாதி என்றார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லா சாதியினரும் எல்லா வேலைகளும் செய்கின்றனர். உதாரணம் உயர்சாதிப்பெண் பிணமெரிக்கும் வேலை செய்கிறார், முன்னொருகாலத்தில் வேளாண்மை செய்தவர் குடும்பம் இன்று பெங்களூரில் மிகப்பெரிய முடிதிருத்தும் நிலையம் நடத்துகிறார். இங்கு உழைப்பவன், உழைக்காதவன் என்ற இரண்டு சாதிதான் உண்மையில் இருக்கிறது. சாதிப்படி நிலைகள் அகற்றப்படவேண்டும் அல்லது சாதியை அதன் அடையாளத்திலிருந்து பிரித்து யாரும் எந்த சாதியையும் அடையாளமாக்கிக்கொள்ள வழியேற்ப்படுத்துவதைத்தவிர வேறு வழியில்லை. சாதிக்கொடுமை உயர்சாதியிடம் மட்டுமில்லை, அது தாழ்ந்தசாதி என்று பிரகடனப்படுத்துவதிலிருந்து அதை வைத்து வாழும் தலைவர்கள் வரை உயிரோடுதான் உள்ளது. ஒரு தாழ்ந்த சாதி கோடீஸ்வரர் ஒரு உயர்ந்த சாதி கைவிடப்பட்ட பெண்ணை கைப்பிடிக்க எவரும் குறுக்கே நிற்ப்பதில்லை என்பதிலிருந்து சாதியின் அடிப்படையை புரிந்து கொள்ளலாம்.

1 comment:

  1. மிகவும் கடினமான கேள்வி. நன்றாக கையாண்டிருக்கிறீர்கள். நிறைய காதல் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கப்பால் சாதியின் ஆதிக்கம் குறையலாம். நீங்கள் குறிப்பிட்டபடி பொருளாதார நிலை சாதியின் முக்கியத்துவத்தை குறைக்கின்றது.

    ReplyDelete