Wednesday, July 29, 2015

பிம்பங்கள்

எல்லா மனிதர்களும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு மனிதனின் பழக்க வழக்கங்கள், சுபாவங்கள் எப்போதும் மாரிக்கொண்டே இருக்கும். அவனைச்சுற்றி இருக்கும் மனிதர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்டு தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான். ஒரு வகையில் இது "அட்ஜஸ்ட்"  செய்து வாழ்தல் தான். சில நேரங்களில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் ஒரு மனிதனின் நிலையை தாழ்த்திவிடக்கூடச் செய்யும். எங்கெல்லாம் தன்னால் எதிர்வினையாற்ற முடியாதோ அங்கெல்லாம் அடங்கிப்போவதே உயிர்களின் பிழைத்தல். ஒரு நிறுவத்தில் மேலாளருக்கு அடிபணிந்து வேலைசெய்வது, அரசியல் கட்சித்தலைவருக்கு கீழ்படிந்து ஆணைகளைச் செய்வது மற்றும் மனைவியிடம் அடங்கி நடப்பதுகூட இந்த 'பிழைத்தல்' சார்ந்ததே.

இந்த 'பிழைத்தலு'க்கான வரையறை மனிதர்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்து மாறும். தன்னைவிட பலம் குறைந்தவரிடம் அடிபணிந்து போவது பிழைத்தலுக்கானது அல்லாமல், எதிர்வினையின் பாதிப்பு ஒரு தற்க்காலிக வெற்றியைத் தந்தாலும் பின்னால் கொண்டுவரப்போகும் பெரும் தோல்வியை தவிற்ப்பதற்க்காக் கூட இருக்கலாம். சில நேரங்களின் எதிர்வினையாற்றத் தேவைப்படும் காலம், ஆற்றல் விரையத்திற்கு ஈடானதாய் நம்மேல் இன்னோருவர் காட்டும் உணர்ச்சி இருக்கலாம். அம்மாதிரியான நேரங்களில் அங்கு எதிர்வினையேதும் இருப்பதில்லை. சரி இந்த தத்துவங்களை நிறுத்திக்கொண்டு ஒரு மனிதனின் வாழ்வு எப்படி நம்மிடம் உணர்ச்சிகளையும் எண்ண அலைகளையும் உருவாக்குகிறது என்பது நம்மை சுயமதிப்பீடு செய்துகொள்ள உதவும்.

படிப்பை முடித்து வேலைக்கு போக ஆரம்பித்த அரும்பு மீசை பருவத்தில் இந்தியா அணு வெடிப்பு சோதனை செய்து உலகத்திற்க்கு தானும் அழிக்கும் வலுவுள்ளவனே என்று சொன்ன தருணம். எந்த நாட்டு கிரிக்கெட் டீமுடன் இந்தியா விளையாடும்போதும் வராத நாட்டுப்பற்று பாகிஸ்தானுடன் விளையாடும்போது வெளிவந்துவிடும். அர்ஜுன் மற்றும் விஜயகாந்த் படங்கள் அதிகம் பார்த்ததனால் வந்த பாதிப்பாகக்கூட இருக்கும். அணு சோதனை செய்து இந்தியாவின் மீது பொருளாதார தடை விதித்திருந்த நேரம் அது. உலக பொருளாதாரம், அரசியல் போன்ற எந்த மண்ணாங்கட்டியும் அறியாத காலத்தில் முதன் முதலில் வாங்கிய TVS Champல் Atom Pokhran என்று மூவண்ணத்தில் எழுதி சுத்தித் திரிந்த காலம். கலாம் அந்த அணு சோதனையின் நாயகனாக எனக்கு அறிமுகமானார். பின் சுஜாதாவும் கூட அப்துல் கலாமுடன் படித்த அனுபவத்தை ஆனந்த விகடனில் பகிர்ந்திருந்ததாக ஞாயபகம். இராமேஸ்வரத்தில் பிறந்து எந்த அரசியல் பின்புலமும் இல்லாத குடும்பத்திலிருந்து மெல்ல மெல்ல இஸ்ரோவின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்த அவர் வாழ்க்கை - வாழ்க்கையின் ஆர்வத்தை தூண்டியது. "அக்கினிச்  சிறகுகள்" ஒரு சிறந்த தன்னம்பிக்கையூட்டும் புத்தகமாக என்னிடம் வந்து சேர்ந்தது. கலாமின் உதவியாளர் கலாமின் அனுபவங்களைக்கேட்டு அவரின் சுயசரிதையாக எழுதி வெளியிட்டிருந்தார். அந்த புத்தகத்தை படிக்கும் எந்தவொரு சாமனியனுக்கும் அப்துல் கலாம் ஒரு நம்பிக்கையூட்டும் விடிவெள்ளியாகத் தெரிந்தது ஆச்சர்யம் இல்லை, அது உண்மையுங்கூட.

காலப்போக்கில் அவரைச்சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்ற ஆரம்பித்தது. ஒரு முஸ்லிமாக பிறந்து தன் தேச நலனுக்காக அணு ஆயுதங்களை உருவாக்கி எதிரி நாட்டுக்கு ஒரு கலக்கத்தை உண்டுசெய்த அவர் ஒரு புரட்சியாளராக, தேசப்பற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டார். பின்னர் வந்த கார்கில் போர் கூட தேச அபிமானிகளுக்கு ஒரு வலுவான தலைவர் அப்துல் கலாம், அவர் தலைமையில் தேசம் இருந்திருந்தால் வாலாட்டும் எதிரி இல்லாமல் போயிருப்பான் என்று எண்ணத்தூண்டியது. பின்னர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுத் தலைவருக்கான அதிகார வரம்பு தெரிந்தும், கலாம் தேசத்தை புரட்டிப் போட்டு விடுவார் என்று நம்ப வைக்கப்பட்டோம். அது நிச்சயம் கலாமின் தவறு கிடையாது. குடியரசு தலைவரானாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போனார்.

ஐய்யா அவர்களின் ஆளுமை பிரதிபலித்த இஸ்ரோவின் திட்டங்களிலும் சதிஸ் தவான் மற்றும் விக்ரம் சாராபாயுடன் பணியாற்றிய அனுபவங்களையும் அவர்களிடம் கற்றுக்கொண்ட படிப்பினையையும் வைத்து தன் துறையில் பெரும் மைல் கற்களை கடந்தார். நமக்குத் தெரிந்த அரசியல் மற்றும் சமூகப் பார்வை ஒரு அரசு ஊழியரிடம் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நமது கருத்தை அவர் கொண்டிருக்க வேண்டுமென்ற அதிகப்பிரசங்கித் தனமின்றி வேறெதுவுமில்லை. அவரின் அரசியல் நிலைப்பாடுகள் நிச்சயம் அவர் நம்பும் தேசக் கட்டமைப்பு சார்ந்தது. தேசத்தின் எல்லா வியாதிகளுக்கும் அவரிடம் மருந்தை எதிர்பார்த்தது நமது அறிவின்மையே.

ராக்கெட் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் கண்டுபிடித்த பொருளைக்கொண்டு மனிதர்களுக்கு செயற்கை உறுப்புக்களை செய்து உதவமுடியும் என்று நம்பியவரிடம், அணு உலைகள் ஆபத்தானவை என்ற கருத்தை ஆதரிக்கச் சொன்னது அவருக்கும் நமக்குமான அறிவு மற்றும் அனுபவத்தின் இடைவெளிதான். நாம் சாதாரண நிலையிலிருந்து நமக்குத் தெரிந்த செய்திகளின் அடிப்படையில் அணு உலை வேண்டாமென்கிறோம். ஒருவேளை நாம் தூக்கிப் பிடிக்கும் கருத்து வெற்றியடையப்போவதில்லை என்ற உண்மை தெரியாமல் பிழைக்க முற்ப்பட்டோமோ என்னவோ தெரியவில்லை. முன்னர் தேசத்தின் விடிவெள்ளியாக தோன்றியவர் அணு உலையில் வேறு கருத்து கொண்டிருந்தார் என்பதற்காக அவர் பின் அவ்வளவாக நம் அபிமானத்திற்க்குறியவராக இல்லாமல் போய்விட்டார். பெரும் சாதனைகள் புரிந்தவர், ஏன் ராக்கெட் சயின்ஸ் தெரிந்தவராயினும் நமக்கு ஒவ்வாத ஒரு கருத்தைக் கொண்டிருந்ததனால் அவர் நம் மனதிலிருந்து விலக்கியே வைக்கப்படுவார் என்பதற்க்கு சிறந்த உதராணம் நாம் கொண்டிருந்த அவரின் பிம்பம்.

கலாம் ஒருபோதும் நாம் ஏற்ப்படுத்திக்கொண்ட 'விடிவெள்ளி' என்ற பிம்பத்திற்க்காகவும் பின் நாம் மாற்றிக்கொண்ட 'புராஜக்ட் மேனஜர்" என்ற பிம்பத்திற்க்காகவும் வாழ்ந்ததில்லை. அவர் எப்போதும் அவராக வாழ்ந்து வந்தார். இன்றைய இளைய சமுதாயம் கற்றுக்கொள்ள ஆயிரம் பாடங்களை கலாம் வாழ்க்கை நமக்கு விட்டுச்சென்றிருக்கிறது. உயர்குடியில் பிறக்காத ஒருவர் நாட்டின் உயர் பொறுப்புகளை வெற்றிகரமாக செய்து முடிக்கமுடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் கலாம். இப்போதும் கூட நமக்கு அவகாசம் இருக்கிறது, கண்ணாடிமுன் நின்று நமது பிம்பம்தான் எது என்று அறிந்துகொள்ள. நம்பிக்கை கொண்டவருக்கு எப்போதுமே கலாம் விடிவெள்ளி தான். அவர் இந்த மண்ணுலகை விட்டுச் சென்றிருக்கலாம், ஆனால் அவரின் பிம்பம் ஏற்ப்படுத்திய தாக்கம் அவ்வளவு எளிதாக நம்மைவிட்டு சென்றுவிடாது.

ஐய்யாவிற்க்கு அஞ்சலி...

No comments:

Post a Comment