Wednesday, September 7, 2016

களிநயம் - விமர்சனம்

நெடுநாட்களுக்குப் பிறகு நண்பர் ஒருவரின் உதவியில் ஊரில் வாங்கி வைத்திருந்த தமிழ்ப் புத்தப் பொதிகள் கிடைத்தது. நல்ல புத்தகங்களை நண்பர்களின் பரிந்துரைகள், மதிப்புரைகள், ஆசிரியரின் எண்ணம், எழுத்துக்களைக் கொண்டும், எனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாகவும் அவ்வப்போது குறித்து வைத்துக் கொண்டு, பிறகு மொத்தமாக இணையத்தில் ஊர் முகவரிக்கு வாங்கிவிடுவது வழக்கம். பிறகு நானோ அல்லது நண்பர்களோ ஊருக்குச் சென்று வரும்போது புத்தகங்களை அமெரிக்கா கொண்டுவருவேன். அந்த வகையில் இந்த முறை பல புத்தங்கள் கிடைக்கப்பெற்றது. அதில் கவிஞர் மகுடேஸ்வரனின் களிநயமும் ஒன்று.

நான்கு நாட்கள் தொடர்ந்து படித்ததில், தொலைவு பிரித்த நண்பனை மீண்டும் கொண்டுவந்து சேர்த்தது. படித்து முடித்ததும், புத்தகத்தையும் நண்பனையும் பிரிய நேரும் துயரம் அப்பிக்கொண்டது. ஒரு சக மனிதனுடன் தற்கால நிகழ்வுகள், ஆலோசனைகள், சமூக மதிப்பீடுகள், அறிவுப் பரிமாற்றம் என்று பலவற்றை இந்தப் புத்தகம் கொண்டிருக்கிறது.

கல்லூரி நாட்களில் மின்ணணுவியல் பாடத்தின் போது வகுப்பே ஆசிரியர் சொல்வதை உள்வாங்கிக் கொள்வது போலும், எனக்குமட்டும் புரியாதது போலும் தோன்றும். சில நேரங்களில் வாய்விட்டு சந்தேகங்களைக் கேட்டும் புரிந்து கொள்ள முடியாமலிருக்கும். காரணம், மின்ணணுவியலில் எதையும் இயந்திரவியல் போன்று கண்கூட, தொட்டுணர்ந்தோ பார்த்து புரிந்து கொள்ள முடியாது. மின்ணிணைப்புகள், ரெஸிஸ்டர், இண்டெக்ரேடட் சர்க்யூட் எல்லாமே அவரவர் கற்பனைக்கு எட்டியவண்ணமே புரிதல் இருக்கும். ஒரு சர்க்யூட்டை விளக்கினால், ஏற்கனவே கொண்டுள்ள புரிதல்/அனுமானத்தில்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். சில பல நேரங்களில் புரிபடமால் இரண்டு மூன்று தடவை சந்தேகம் கேட்க நேரிடும்.

வகுப்பே அமைதியாய் உள்வாங்கிக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் கேட்டு எனக்கு மட்டும் புரியாமல் போன ஒரு நிலை வருத்தமளிக்கும். வகுப்பு முடிந்ததும் பக்கத்திலிருப்பன், முன் வரிசையில் அமர்ந்திருப்பன் என்று எவனிடமும் சந்தேகம் கேட்டாலும் அவர்களுக்கும் தெரியாது. பிறகுதான் புரிந்தாது, எல்லோருமே ஒரு "சோசியல் ஸ்டேடஸுக்காக" பிடித்து வைத்துள்ள பிள்ளையார் போன்று பாடம் கேட்டது.

அதைப்போல ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், நிகழ்வுகளில் நமக்கான புரிதல் ஒட்டு மொத்த சமூகத்தின் புரிதலில் இருந்து நேர்மாறாக இருக்கும். அதைச் சொல்வதால் தனித்து விடப்படுவோமோ என்ற அச்சத்தில் பெரும்பாலும் நாம் நம் கருத்துக்களை வெளியே சொல்வதில்லை. அந்த நேரத்தில் நம்மைப் போலவே அந்த பிரச்சினைகளை, நிகழ்வுகளை புரிந்து கொண்டவர், நம் சிந்தனை வடிவிலேயே ந்தம்ன்முடன் உரையாடி நம்மை அடுத்த நிலைக்குக் கொண்டு சேர்ப்பது எப்படி ஒரு இணக்கத்தைத் தருமோ, அதே உணர்வு களிநயம் படித்த பின் ஏற்பட்டது.

தன்னை ஒரு சமூகத்தின் உயர் நிலையின் எனவோ, கல்வி, கேள்வியில் ஏனையோரை விட தான் உயர்ந்தவர் என்று பக்கத்தின் ஏதாவது ஒரு மூலையில் தன்னுயர்வை வைக்காமல் எழுததாத நவீன எழுத்தாளர்களிலிருந்து வாசகனின் மனதோடு நெருக்கமாக, தனக்குள் ஒருவனாக புத்தகமெங்கும் உரையாடியிருக்கிறார்.

வாகனங்களை பராமரிப்பது முதல் ஒரு நிறுவனத்தை நடத்த வேண்டிய அடிப்படைப் பண்புகள் வரை தன் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். கடைசியில் 13 திருக்குறள்களுக்கு சமகாலத்திலிருந்து உவமைகளைக் கூறி பொருள் விளக்கமளித்திருக்கிறார்.

தன்னுடைய புத்தகத்தை காசு கொடுத்து வாங்கும் வாசகன் ஒரு போதும் ஏமாந்துவிட்டோமே என்றெண்ணாத வகையில் புத்தகத்தில் பொருளடக்கம் செய்திருப்பதில், அவர்தம் திருப்பூர் தொழில் நேர்த்தி தெரிகிறது.

நல்லதொரு புத்தகம், நட்பினை உணர்த்தும் புத்தகம். 

No comments:

Post a Comment