நிறுவனங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் மனிதர்கள் பெரும்பான்மையான நேரங்களில் தங்களுக்கு ஆதாயம் தரும் செயல்களையே செய்கின்றனர். அதிலும் குறிப்பாக மாதச் சம்பளம் வாங்கினாலும் அவர்களுக்கு வேலையில் ஒரு விருப்பமும், உற்சாகமும் கிடைப்பது அவர்களின் உழைப்பிற்கு கிடைக்கும் மரியாதையிலேயே என பல ஆய்வுகள் மூலம் உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.
சேவை அதாவது ஊதியமில்லாமல், பலனை எதிர்பார்க்காமல் செய்பவர்கள் எப்படி அந்த வேலையை முழு மனதுடன், உற்சாகமாகச் செய்கிறார்கள்?
உண்மையில் மனிதனின் இயல்பு, பலனை எதிர்பார்த்தே எதையும் செய்கிறது. ஒரு சிலர் அப்படி எதையுமே எதிர்பார்க்காமல் சேவை செய்யலாம், ஆனாலும் அதில் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஏதாவது ஒன்று இருந்தால்தான் அவர்களால் தொடர்ந்து அந்த வேலையைச் செய்ய முடியும்.
டிராபிக் ராமசாமி அவர்களை எடுத்துக் கொண்டால், அதிகாரிகளின் மெத்தனத்தை நீதிமன்றங்கள், சட்டங்கள் மூலம் கேள்விக்குள்ளாக்கி பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட வைக்கிறார். அவருக்கு உற்சாகம் சமூகத்தில் நன்மதிப்பு, அதிகாரிகளும் அவருக்கு அஞ்சும் போக்கு என்ற பொருண்மை சாராத பலன்களாக இருக்கலாம்.
ஆனால் அரசியல் வாதிகளுக்கு. அதிகாரம், பதிவி தருகின்ற பலன்கள் அவர்களைத் தொடர்ந்து தேர்தல் அரசியலில் இயங்கச் செய்கிறது. பொருன்மியப் பயன்களை எதிர்பார்க்காமல் ஒருவர் அரசியலில் இயங்க முடியுமா? என்றால் அப்படி இயங்குபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். இது மனித இயல்பு.
சரி அரசியலில் சாதாரண மக்கள்? அவர்களும் பலனை எதிர் பார்க்கிறார்கள். அந்தப் பலன் நேரடியான பொருண்மியப் பலனோ அல்லது விரைவில் உணரக்கூடிய பலனோ இல்லாத நிலையில் அது மக்களை உற்சாகப் படுத்துவதில்லை. அதனால்தான் அரசியல் பங்கேற்பு, ஓட்டளித்தலில் கவனம் செலுத்துவதில்லை.
அவர்களை உற்சாகப் படுத்தவே தேர்தலில் ஓட்டுக்குக் காசு, கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகள்.
ஆனால் வளர்ந்த நாடுகளில் இப்படி இல்லையே?
வளர்ந்த நாடுகளில் தேர்தல் வாக்குறுதிகள் நேரடியான பொருண்மியப் பலன்களைக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கான உற்சாகம், வாழ்கைத் தரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தாங்கள் பங்கெடுக்கவில்லையென்றால் சிஸ்டம் சீர்கெட்டுப் போய்விடும் என்று தங்கள் பங்களிப்பைத் தவறாமல் செய்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்த அளவில் நாம் உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்க வேண்டுமானால் இதைச் செய்யலாம், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு அரசே ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து ஓட்டுப் போட்டபின் அதை மக்களின் கணக்கில் வரவு வைத்து விடலாம். ஏற்கனவே மானியங்களை ரத்து செய்தபின் அவர்களுக்கு அரசியல் பங்கெடுப்பில் ஆர்வத்தை உண்டு செய்ய இது எளிதான வழி.
அரசியல் கட்சிகள் மக்களுக்கு நேரடியாகப் பணத்தைத் தருவதை தேச துரோகத்தின் கீழ் கொண்டுவரலாம். இதன் மூலம் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடல்லாமல், பணம் கொடுப்பவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்யலாம்.
தேர்தலில் வெற்றி பெற்று சேவை செய்ய வருபரின் சொத்துக்களை அரசுடைமையாக்கிக்கொண்டு அவரின் குடும்பத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் ஊதியம் தரலாம்.
கடைசியாக சொத்துக்களை வழி வழியாக சென்றடைவதைத் தடுத்து, ஒருவரின் சொத்துக்கள் அவர் இறந்தபின் அரசுடைமையாக்கப் படவேண்டும். (இந்த முறைதான் அமெரிக்காவில் இருக்கிறது)
No comments:
Post a Comment