அதிகமாக ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறை என்றாலே கொண்டாடும் மனசு.. இரண்டு மாதம் மனைவி அளித்துச் சென்ற விடுமுறையைக் கொண்டாடாமல் விட்டுவிடுமா என்ன?.. இந்த வாரம்... அடுத்த வாரம் என்று தள்ளிப் போன பயணம் நேற்று உறுதியாகவிட்டது.. நண்பர்களுடன் மூவருமாக காலை 9 மணிக்கெல்லாம் பயணம் தொடங்கியது. வழக்கமாக ஜூலையில் கொளுத்தும் வெய்யில் நேற்று குழுமை காட்டியது. மூன்று மணி நேர பயணத்தில் மேகமலைகளில் உள்ள சோமேசுவரர் ஆலையத்தை மதியம் 1 மணிக்குச் சென்றடைந்தோம்.
மலை மீது இருக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்வது இதுதான் முதல் முறை. ஆங்காங்கே வழிகாட்டிகள் வைத்திருந்தாலும் கவனத்துடனேயே கோவிலை அடைந்தோம். கோவிலை அடைந்த நேரம் சிவலிங்கத்திற்கு உச்சிக்கால பூசை செய்து கொண்டிருந்தார் பூசாரி. பெருங்கூட்டமில்லையென்றாலும் வார இறுதியில் குறிப்பாக சனிக்கிழமை வரும் வழமையான ஆசுவில் பக்தர்கள் கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பூசாரி தேவ பாசையில் பாடல் பாடி நம்மையும் திரும்பப் பாடச் செய்தார். பூசை நடந்து கொண்டிருக்கும் போதே பக்தர் ஒருவர் மயக்கமடந்தார். சனிக்கிழமை பட்டினி இருந்து வழிபாடு செய்ய வந்திருப்பார் போலும். தேங்காய்த் தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளியவைத்தனர் பூசாரி குடும்பத்தினர். பூசாரி வழிபாட்டின் இடையே மயக்கமானவருக்கு உதவி செய்ய தன் மகனை பணித்துக் கொண்டே பூசையைத் தொடர்ந்தார். பூசை முடியும் தருவாயில் கோவிலை ஒட்டியுள்ள உணவகத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற அறிவிப்பைச் செய்தார். அதைக்கேட்டதும் "சிவனை நேரில் பார்க்கும் பரவசம்" உண்டாகியது. ஒரு வழியாக சிவ தரிசனம் முடித்து வெளியே வந்து உணவகத்தைக் கண்டு பிடித்து முதலாளாக இல்லாவிடிலும் முதல் பத்து நபர்களுள் சிலராக நாங்கள் இருந்தோம். பன்னிரண்டு டாலருக்கு புளிச்சோறு, சாம்பார், சோறு, டார்ட்டிலா, உருளைக்கிழங்கு மசாலா, பொங்கல், தயிர் மற்றும் தேனீர் எனக்கொடுத்து சிவனைக் கண்ட நிறைவைக் கொடுத்தனர்.
வெளியே வந்து புகைப்படக் கருவிகளைக் கொண்டு கண்ணில் பட்ட இயற்கை அழகை கருவி வசப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்து சேர வேண்டிய இடத்தைப் பற்றிய குறிப்புகளை இணையத்திலிருந்து நண்பர் அரவிந்த் படித்துக் கொண்டே வந்தார். காட்டு வழிப்பாதையில் சென்று சின்ன பிராட்லி அருவியை அடைவதைப் பற்றிய குறிப்பைக் கேட்கும் போதே சாகச உணர்வு ஏற்பட்டது.
வழிகாட்டும் கருவி துணைகொண்டு அருவி இருக்கும் இடத்திற்கு வந்தால் அங்கு சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக அறிவுப்புப் பலகையும் சாலைத் தடுப்புகளும் வைத்திருந்தார்கள். ஓ.. அருவிக்குச் செல்லமுடியாது போல என்று திரும்ப எண்ணுகையில் நான்கு யுவதிகள் மறிக்கப்படிருந்த சாலையிலிருந்து வெளியே வாகனங்கள் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்தனர். நண்பர் அரவிந்த் அவர்களிடம் அருவியைப் பற்றிக்கேட்டார். அவர்கள் அருவியை அடைய அந்தச் சாலை வழி சிறிது தூரம் சென்றதாகவும் அங்கு சாலைப்பணிகள் நடந்ததால் தங்களால் அதற்கு மேலே செல்ல முடியவில்லை என்று திரும்பிவிட்டதாகவும் சொன்னார்கள். சரி.. அருவியைப் பார்க்க முடியாது போல என்று சொல்லிக்கொண்டு வண்டியை நகர்த்த முனைந்த போது நண்பர் மணி, நாமும் போய் ஏதாவது வழியைக் கண்டுபிடித்து அருவியைக் காணலாம் என்று ஆர்வத்தைத் தூண்டினார்.
அவரின் சொல்லில் உற்சாகமடைந்த அனைவரும் மறிக்கப்பட்டிருந்த சாலையில் நடக்கத் தொடங்கினோம். அழகிய வளைவுகள் கொண்ட அந்தச் சாலையில் சற்றேரக்குறைய ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்த பின் சாலைப்பணிகள் நடக்கும் இடத்தை அடைந்தோம். செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறம் காட்டுக் கொடிகள் மரங்களின் மீது படர்ந்து ஒரு போர்வையைப் போலக் காட்சியளித்தது. சில இடங்களில் அது குகைகள் போலவும் சிலைகள் போலவும் காட்சியளித்தது. மேலும் செல்லும் வழி இறக்கமாக இருந்ததால் சலிப்படையவில்லை. அங்கே நின்றிருந்த வாகனமொன்றில் இருந்த பொறியாளர் ஒருவரிடம் அருவி பற்றி விசாரித்தததில், அருவிக்கு இன்னொரு வழி இருப்பதாகவும் அது நாங்கள் வண்டி நிறுத்தியிருந்த இடத்தின் அருகில் காட்டுக்குள் ஒரு ஒத்தையடிப்பாதையின் வழியாகச் செல்லலாம் என்றார்.
மீண்டும் வண்டி நின்றிருந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இந்த முறை சாலை ஏற்றமானதாக இருந்தது. களைப்பைக் கலைக்க பகடிகள் பேசி ஒருவழியாக வண்டி நின்றிருந்த இடத்திற்கு வந்த போது சிவன் கோவில் உண்டி வியர்வையாக வழிந்து சட்டையை நனைத்திருந்தது. பிறகு சாலையின் ஓரத்தில் பிரியும் ஒத்தையடிப்பாதையைத் தேடினோம்.
கடைசியில் அது வண்டி நிறுத்தியிருந்த மரத்தடியில் தொடங்கியது. வழியைக் காட்ட அங்கு இரண்டு சாலைப் பணிகளில் பயண்படுத்தும் கூம்புகளைக் கூட வைத்திருந்தனர். வழக்கமான வழிகாட்டிகள் இல்லாததால் எதிரே இருந்த வழியை விட்டுவிட்டு அதைத்தேடி இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து கண்டுபிடித்தது எதையோ நமக்குச் சொன்னது.
அருவிக்கான பாதை தெரிந்தவுடன் அருவியில் குளிக்கத் தேவையான ஆடைகளை மாற்றிக்கொண்டு காட்டு வழியில் பயணத்தைத் தொடர்ந்தோம். இது சாலைப் பணிகள் தொடங்கிய பின் உருவாக்கப்பட்ட பாதை என்பதால் மனிதர்கள் கால் நடையில் உருவான சிறு பாதையாக இருந்தது. வழியில் கிடந்த மரக் கிளைகளை கைத்தடியாக மாற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஆங்காங்கே விழுந்திருந்த மரங்களைத் தாண்டித்தான் நடக்க வேண்டியிருந்தது. ஒரு சில இரங்களில் மண்சரிவுகூட ஏற்பட்டிருந்தது. பாதை சீராக இல்லை. ஒரு இடத்தில் 15 அடிகள் செங்குத்தாக சரிவில் இறங்க வேண்டியிருந்தது. இன்னொரு இடத்தில் வழி முடிந்து ஓடையொன்றை அடைந்தோம். அந்த ஓடையின் பாதையில் சிறிது தூரம் நடந்த பின் மீண்டும் கால்தடம் உருவாக்கிய பாதை தென்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வழியாக அருவியைச் சென்றடந்தோம். வழியெங்கும் அருவியின் சலசலப்புக் கேட்டுக் கொண்டே இருந்தது.
அருவிக்கு அருகில் பல காட்டுப் பாதைகள் பிரியும் சந்திப்பு ஒன்று வந்ததது. வந்த வழியை அடையாளப் படுத்த நண்பர்கள் கிளைகளை மரத்தின் மீது சாய்த்து வைப்பதும், தரையில் குறியீடுகளை எழுதுவதுமாக சில செயல்களைச் செய்தனர். திரும்பி வரும்போது இந்த அடையாளங்கள் வந்த வழியைக் கண்டுபிடிக்க மிக்க உதவியாக இருந்தது.
அருவியைச் சென்றடைந்த போது அங்கு சில இளைஞர்களும் ஒரு யுவதியும் நணபர்களாக அருவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாம் அவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தாமல் இருக்கக் கையசைத்து "ஹாய்.." சொல்லிவிட்டு அருவியை படமெடுக்கக் களத்தில் இறங்கினோம். சிறிது நேரத்தில் அவர்கள் தனிமை பாழ் பட்டதை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
அருவியில் கால், தலை நனைத்து, அருவி கொண்டு வந்து சேர்த்த புனலில் ஆடிக் குதித்து ஆசை தீரப் படங்கள் எடுத்துக் கொண்டாடினோம். நண்பர் மணியின் புகைப்படக்கருவியில் எங்களை பதிந்து கொள்ள பல வகைகளில் நயனங்கள் செய்தோம். அந்தப் புகைப்படங்களை இன்று பார்க்கையில் அவ்வளவு எழிலாக இருந்தது.
ஒருவழியாக அங்கு எங்கள் கொண்டாட்டத்தை முடித்து மீண்டும் காட்டு வழிப் பயணத்தை நகைச்சுவையுடன் காணொளிப் பதிவு செய்து வாகனத்தை அடைந்தோம். ஆடைகளை மாற்றிக் கொண்டு அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தோம் மிக அழகிய அனுபவங்களோடு.
No comments:
Post a Comment