Sunday, December 21, 2014

என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 7

(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)

பயிர்ப் பாதுகாப்புக்கு எது தேவை?

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் 2004-ம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு, மேடையிலிருந்து இறங்கினேன். என்னை எதிர்கொண்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர், ஒரு நூலை என் கையில் கொடுத்தார். 

'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் காட்டன் ஃபார்மர்ஸ்' (Friends of cotton Farmers) என்பது அந்த நூலின் தலைப்பு. அதன் பொருள்... பருத்தி விவசாயிகளின் நண்பர்கள். ‘நூலைப் படித்துப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்’ என்று அந்த அதிகாரி சொன்னார். 

அவர் வேறு யாருமல்ல... இன்று இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் அறிந்திருக்கும் இயற்கை உயிரியல் நிபுணர் நீ.செல்வம்தான்.

அவரும் இன்னும் இரண்டு விஞ்ஞானிகளும் இணைந்து எழுதிய நூல் அது. நூல் முழுவதும் இரை மீது தாவும் நன்மை செய்யும் பூச்சிகளின் வண்ணப்படங்கள் நிரம்பி வழிந்தன. தமிழகம் மற்றும் ஆந்திர மாநில வேளாண் துறை ஆணையர்கள் அந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருந்தார்கள். 

‘இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் 5 முதல் 10% வரை பருத்தி பயிரிடப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்தப் பயிர்களுக்கும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியில் 55% பருத்தியில்தான் தெளிக்கப்படுகிறது. இப்படி உழவர்கள் தாறுமாறாக நஞ்சைத் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிகிறது’ என்ற விஷயம்தான் அந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவுஉழவுத் துறை அதிகாரியாக இருந்த, டாக்டர். பழனிச்சாமி பச்சாக் கவுண்டர், அந்த நூலுக்காக எழுதியிருந்த அணிந்துரையில், ‘பருத்தி பயிராகும் நிலத்தில் 150 வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் 10 வகைப்பட்ட உயிர்கள் மட்டுமே செடியின் பாகங்களைச் சிதைக்கின்றன. 100 வகைப்பட்ட உயிரினங்கள் நன்மை பயக்கின்றன. எஞ்சிய 40 உயிரினங்கள் நன்மையோ தீமையோ செய்வதில்லை. ‘ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் பருத்தியைப் பயிர் செய்ய முடியாது’ என்று சொல்பவர்கள், ‘உயிர்ச்சூழல்’ இயல்பு அறியாதவர்களாக இருப்பார்கள் அல்லது வேறு ஏதோ காரணத்தினால் இப்படிச் சொல்கிறார்கள்’ என்று சூடாகக் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த நூலை முழுவதும் படித்து முடித்தவுடனேயே எனக்கு செல்வத்தின் மீது பற்றும் நெருக்கமும் ஏற்பட்டன. ‘பூச்சிகளைக் கொல்வது மட்டுமேதான் ‘பயிர் பாதுகாப்பு’ என்று பார்ப்பது அபத்தமானது’ என்ற உண்மையை செல்வம் அடிக்கடி சொல்வார்.

இன்னொரு சமயம் கொடைக்கானலில் நடந்த ஒரு கருத்தரங்கில், தோட்டக்கலை உதவி அதிகாரி ஒருவர், தோட்டக்கலைப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அதில் பங்கேற்ற வெளிநாட்டுக்காரர் ஒருவர் எழுந்து, "பூச்சிகளைக் கொல்லாவிட்டால் என்ன?" என்று கேட்டார். 

"பூச்சிகள், இலைகளைத் தின்றுவிடும். பிறகு, செடி செத்துவிடும்" என்று பதில் சொன்னார் அந்த அதிகாரி.

உடனே, அந்த அதிகாரியை அழைத்துக்கொண்டு ஒரு தோட்டத்துக்குள் புகுந்தார், அந்த வெளிநாட்டுக்காரர். நாங்களும் பின்தொடர்ந்தோம். அங்கு ஒரு தேக்கு மரத்தை அவர் சுட்டிக்காட்டி, "இதன் இலைகளில் புழு ஓட்டை போட்டு இருக்கிறது. அதனால், இந்தத் தேக்கு மரம் செத்துப் போகுமா?" என்று வெளிநாட்டுக்காரர் கேட்டார். முகம் சிறுத்துப்போன அந்த அதிகாரி, "இந்த மரம் சாகாது..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னார்.

இயற்கை விவசாயிகள் பலரும்கூட, செடியைத் தின்னும் பூச்சிகளை, தங்களுடைய உணவாக்கிக்கொள்ளும் தட்டான், சிலந்தி ஆகியவை மட்டுமே நன்மை செய்யும் பூச்சிகள் என்று எண்ணுகிறார்கள். ஆனால், இயற்கை விவசாய ஆசான் ‘மசானபு ஃபுகோகா’ எல்லாப் பூச்சிகளையுமே நண்பர்களாகத்தான் பார்த்தார். ஆக, தாவரங்களைத் தின்னும் பூச்சிகள் நமது நிலத்தில் வாழ்வது இன்றியமையாதது ஆகிறது. 

அப்படியானால் பயிர்ப் பாதுகாப்பு என்பது என்ன?

செடியின் இயல்பை உழவர் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் செடி தனது பகைவர்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள போராடிக் கொண்டுதான் இருக்கிறது. வேகமாக வீசும் காற்றால் கிளை முறியும்போது முறிந்த இடத்தில் ஒருவித மெழுகு சுரந்து பூச்சிகளோ, கிருமிகளோ உட்புகாமல் தடுத்துக்கொள்கிறது. அதேபோல, இலையைப் பூச்சிக் கடிக்கும்போது இலையில் ஒருவிதத் திரவம் சுரந்து பூச்சிக்குப் பசி எடுப்பதைத் தடுக்கிறது. 

ஒரு செடியைத் தாக்கி நோய் பரப்பும் பூச்சி, பக்கத்தில் உள்ள வேறொரு வகைச் செடிக்கும் அந்த நோயைக் கொண்டுபோய் சேர்க்கிறது. உதாரணமாக, தக்காளி, மிளகாய், கத்திரி... போன்ற பயிர்களை ‘சிற்றிலை நோய்’ தாக்குகிறது. இது, வைரஸ் மூலம் பரவுகிறது. 

தக்காளி பயிர் செய்யும்போது ஊடுபயிராக மிளகாய், கத்திரி... போன்றவற்றை ஊடுபயிராக பயிரிட்டால் தக்காளியில் உள்ள சிற்றிலை நோய் ஊடுபயிர்களையும் தாக்கும். இந்த வகை பயிர்களை நாம் அடையாளம் கண்டுவைத்துக் கொண்டு அவற்றை ஒரே பருவத்தில் ஒன்றாகப் பயிர் செய்வதைத் தவிர்க்கலாம். அதே சமயம், ஒரு செடியில் தாக்கிய நோய், தன்னைத் தாக்காமல் எதிர்த்து நிற்கும் செடிகளை அடையாளம் கண்டு ஒன்றாகப் பயிர் செய்யலாம்.

ஒவ்வொரு தாவரமும், தன்னுள் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை தானே கண்காணித்துக் கொள்கிறது. மண் கெட்டிப்பட்டுப் போனால், அதில் நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த மண்ணில் வளரும் செடி, பூச்சித்தாக்குதலுக்கு உள்ளாகிறது. தாவர வளர்ச்சிக்குத் தண்ணீர் அடிப்படை தேவை. தண்ணீர்ப் பற்றாக்குறை தாவரத்தின் வளர்ச்சியை பாதிப்பதைப்போல தண்ணீர் மிகுதியும் அதனை பாதிக்கும்.

அமில நிலத்தில் வாழப் பழகியச் செடிகள்... களர் நிலத்திலும், களர் நிலத்தில் வாழப் பழகியச் செடிகள்... அமில நிலத்திலும் சரியாக வளராமல் வாடிப்போகின்றன. 

தொடர்ந்து எரு இடுவதும், மூடாக்கு இடுவதும் மண்ணின் நீர்பிடிப்புத் திறனையும் நீர் வடிதிறனையும் உயர்த்துவதோடு, மண்ணின் கார அமிலத்தன்மையையும் சமன்படுத்துகிறது. 

அநேக வகையான பூச்சிகள், மனிதர்களுக்கு நேரடியாகப் பயன்தராமல் இருக்கலாம். ஆனால், அவை மறைமுகமாகப் பயன் தரக்கூடும். அதுபோலான பூச்சிகளை வரவேற்பதற்காக சிறு பூக்கள் மலரக்கூடிய செடிகளை ஓரப் பயிர்களாகவும் ஊடுபயிர்களாகவும் செய்ய வேண்டும். முள்ளங்கி மற்றும் கடுகு குடும்பத்தைச் சேர்ந்த செடிகள் இதற்கு மிகவும் பொருத்தமானவை. நிலத்துக்கு இடப்படும் மூடாக்குகூட அறுவடைக்குப் பிறகு, பூச்சிகள் மறைந்து வாழ்வதற்குப் பயன்படும். பூச்சிகள், பயிர்களை அழிப்பது நமக்குத் துயரமான விஷயம்தான். அதற்காக உடனே நஞ்சைக் கையில் எடுப்பது, இயற்கையைப் புரிந்துகொள்ளாமல் செய்யும் தவறாகும்!



Sunday, December 14, 2014

என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 6


(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)


ஒரு ஏக்கர் நிலம்... அரை கிலோ மண்... துல்லியப் பரிசோதனை?

யற்கையைப் புரிந்துகொள்வதில் அடிப்படையிலேயே தவறு நடக்கும்பட்சத்தில், அதற்காகத் தீட்டப்படும் திட்டங்களிலும் கண்டிப்பாகத் தவறுகள் இருக்கத்தான் செய்யும். அந்த மாதிரியான தவறான திட்டங்களில் ஒன்றுதான் மண் பரிசோதனைத் திட்டம். 

‘உழவுத் தொழிலில் விஞ்ஞானத்தைப் புகுத்துகிறோம்’ என்ற பெயரில், ஏகப்பட்ட மண் பரிசோதனைக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. மண்ணைப் பரிசோதனை செய்து, அதில் உள்ள தனிமங்களின் அளவுகளைச் சுட்டிக்காட்டி, பயிர்களுக்குக் குறிப்பிட்ட தனிமங்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் இடவேண்டும் என்று பரிந்துரையும் செய்கிறார்கள்.

முழுமையாக இயற்கை வழியில் உழவுத் தொழில் செய்து, அதில் உயர் விளைச்சலை எடுக்க முடியும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம். இயற்கை வழியில் பயிர் செய்பவர்கள், மண்ணை சோதிப்பதும் இல்லை; சோதனை அடிப்படையில் இடுபொருட்களைக் கொட்டுவதும் இல்லை. அவர்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் பேருயிர்களுக்கும் தீனி கொடுப்பதை மட்டும்தான் செய்கிறார்கள்.

ரசாயன விஞ்ஞானிகள் அதிகம் பரிந்துரை செய்வது, தழைச்சத்து (நைட்ரஜன்) உரத்தைத்தான். ஆனால், இந்த நைட்ரஜன் வாயு, அண்டவெளியிலும் மண்ணிலும் சேர்த்து 78% உள்ளது. தாவர, விலங்குக் கழிவுகளை மட்டும் நிலத்தில் சேர்த்தால் போதும். அதிலுள்ள நுண்ணுயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை வேரிலோ அல்லது வேருக்குப் பக்கத்திலோ சேர்த்துவிடும் என்பது இயற்கை விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும். 

ஒரு ஏக்கர் நிலத்தில் 18 சென்டிமீட்டர் ஆழத்துக்கு உழும்போது கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் கிலோ மண் புரட்டப்படுகிறது. ஆனால், மண்ணியல் நிபுணர்களோ தோட்டத்தில் அரைக் கிலோ மண்ணை ஆய்வுக்கூடத்துக்கு எடுத்துச் சென்று, அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி மண்ணைத் தண்ணீரில் கரைத்து சோதனை செய்து, துல்லியமாக ஒரு முடிவைச் சொல்கிறார்கள்.

‘இது எப்படி ஒரு ஏக்கர் நிலத்துக்கும் பொருந்தும்?’ என்று கேட்டால், ‘பொருந்தும்’ என்பது மட்டுமே பதிலாக இருக்கிறது!

உலகில் எதுவுமே துல்லியமானதாக இல்லாதபோது, மண் பரிசோதனை மட்டும் எப்படி துல்லியமாக இருக்கும். எத்தனை தடவை சோதனை செய்தாலும், எதையும் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. 

‘ஒரு செடியில், ஒரு தனிமம் நிறைய சேமிக்கப்படலாம். ஆனால், மண்ணில் இருப்பது அறியப்படாமல் இருக்கலாம். காரணம், மிகச் சிறு அளவில் மண்ணில் உள்ள தனிமங்கள் சோதனையாளர் ஆய்வுக்குள் அடங்குவதில்லை’ என்று, மண் ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஆறு அங்குல ஆழத்தில் இருந்துதான் தாவர வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்கள் கிடைக்கின்றன என்றால், ஆழமாக வேர்விட்டு ஓங்கி வளரும் தாவரங்களுக்கு எங்கிருந்து இந்தத் தாது உப்புகள் கிடைத்திருக்கும்? 

நிலத்தில் 100 அடிக்குக் கீழே உள்ள தண்ணீர்கூட, சில சமயங்களில் ‘தந்துகி’கள் (capillary) வழியாக மேல் நோக்கி வருகின்றன. அப்படி வரும் தண்ணீர், தாது உப்புக்களையும் கரைத்துக்கொண்டு வருகிறது. அதன் மூலமாகத்தான் மரங்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கின்றன. அதனால்தான் காடுகளில் உள்ள மரங்கள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. அதனால்தான் மேல் மண்ணைச் சோதிப்பவர்களின் ஆய்வில் தாது உப்புக்கள் புலப்படுவதில்லை.

ஃபிஜி தீவில் கரும்புத் தோட்டத்தில் கங்காணியாக வேலை பார்த்த வேளாண் பட்டதாரியான ‘நார்மன் கார்யூ’, ‘மண்ணில் தாவர, விலங்குக் கழிவுகள் மட்கிய நிலையில் இருந்தால், மண்ணின் மேற்பரப்பில் ‘வெடியம்’ உட்பட எல்லாத் தாது உப்புக்களும் வந்து விடுகின்றன’ என்று சொல்லி இருக்கிறார்.

ரசாயன விவசாயியான ‘எட்வர்டு ஃபால்க்னர்’ எழுதிய ‘மண்ணில் புத்துயிர்ப்பு’ எனும் நூலில், ‘ரசாயனத்தை நிறுத்திவிட்டு, நிலத்தில் கழிவுகளை மட்டுமே போடத் தொடங்கி, நான்கு ஆண்டுகளில் பெரிய அளவில் விளைச்சல் கிடைக்கவில்லை. ஐந்தாவது ஆண்டில் ஒரு ஏக்கரில் 21 டன் தக்காளிப் பழம் விளைந்தது. அந்த நான்கு வருடங்களில் ரசாயன உப்புக்களைக் கொட்டி நான் விளைச்சல் எடுத்திருக்க முடியும். ஆனால், கெடுக்கப்பட்ட நிலம் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்! என்பதை நிரூபிக்க முடியாமல் போயிருக்கும்’ என்று தன் அனுபவத்தைச் சொல்லி இருக்கிறார். 

அமெரிக்க வேளாண் துறை, 1948-ம் ஆண்டு வெளியிட்ட ஆண்டு மலரில் வெளியிட்டிருந்த சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு:

அயோடின் பற்றாக்குறையால் கழுத்துப் பகுதியில் கழலை வருவது யாவரும் அறிந்ததே. மணற்பாங்கான நிலங்களில் அயோடின் பற்றாக்குறை காணப்படுகிறது. களி நிலங்களில் அயோடின் பற்றாக்குறை காணப்படவில்லை. அமில நிலங்களில் செடிக்கு அயோடின் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. உவர் நிலங்களில் அவ்வளவு எளிதாகச் செடிகளால் அதை எடுக்க முடிவதில்லை. 

தாவர மட்கு அதிகம் உள்ள இடங்களில் அயோடின் பற்றாக்குறை இல்லை.

சுண்ணாம்பு இடப்பட்ட நிலத்தில் காப்பர் சல்பேட் இடுவதால் காப்பரின் அளவு உயரவில்லை. இதிலிருந்து, உவர் நிலங்களில் செடிகளுக்குக் கிட்டும் வடிவத்தில் அது இல்லாமல் இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

மண்ணில் உள்ள மாங்கனீசுக்கும் செடியில் உள்ள மாங்கனீசுக்கும் சம்பந்தமே இல்லை. மண்ணில், கிட்டும் நிலையில் (Available Form) மாங்கனீசு இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, களர் நிலத்தில் இது மிகவும் பொருந்தும்.

அமில நிலமானாலும் உவர் நிலமானாலும் மண்ணில் இருப்பதைப் பொருத்தே செடியிலும் ‘மாலிப்டினம்’ காணப்படுகிறது. களர் நிலத்தில் உள்ள செடி, அதிகமான மாலிப்டினத்தை எடுத்துக் கொள்கிறது. சில செடி இனங்கள், கூடுதலாகவும் எடுத்துக் கொள்கின்றன. அமெரிக்காவில் மாடுகளில் மாலிப்டினம் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தாவர, விலங்குக் கழிவுகளை நிலத்தில் இடும்போது இயற்கையிலேயே அமிலங்கள் சுரக்கின்றன. இப்படிச் சுரக்கின்ற அமிலங்களால் செம்பு, அயோடின், மாங்கனீசு போன்ற தனிமங்கள் செடிக்குக் கிடைக்கின்றன. மாடுகளில் காணப்படும் மாலிப்டினம் நஞ்சும் மறைகிறது.

Sunday, December 7, 2014

கொள்ளை லாபம் தரும் தொழில்

        மனிதனின் ஆசையும் வாழ்க்கைமுறையும் எப்படியாவது பணம் சம்பாதித்து சமுதாயத்தில் மற்றவர் மதிக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்ற நோக்கோடு கொள்கை கோட்பாடுகள் ஏதுமற்ற முறையில் பொருளீட்ட துணிந்து விட்டான். விவசாய நிலங்களை கூறு போட்டு இலவச தங்க நாணையங்கள் கொடுத்து கொள்ளை லாபம் பார்க்கும் நிலத்தரகர்களும், அவர்களைப்போன்றோரை சமுதயாத்தில் பெரியமனிதர்கள் என்று மதிக்கும் இன்றய காலநிலையில் ஊருக்கே சோறுபோடும் விவசாயமும் விவசாயியும் ஏழனமாக பார்க்கபடுகிறான்.

      நம் மேல் நாட்டு மோகமும் அறிவியல் என்ற பெயரில் எதை கொடுத்தாலும் சிந்திக்காமல் நம்பிவிடும் ஏமாளிகளை உருவாக்கிவைத்திருக்கும் இந்த சமூக கட்டமைப்பிற்க்கு அவ்வப்போது அதன் முகத்தை கண்ணாடிகொண்டு காட்டிவருகிறார்கள். அய்யா நம்மள்வார் இயற்க்கை வேளான்முறையில் செலவுகளை குறைத்து நல்ல சத்துள்ள உணவுப்பொருட்களை உருவாக்கும் முறைகளை பரப்புரைசெய்தும், வானகம் என்ற சோதனை பண்ணை மூலம் நீரூபித்து. காண்பித்துள்ளார். அது போலவே புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில் என்ற இடத்தில் இயற்க்கை சார்ந்த முறையில் கிருஸ்ணா என்ற விற்ப்பன்னர் செய்துகாட்டும் இந்த ஒளிப்பதிவு நிச்சயம் பார்க்கவேண்டிய ஒன்று. எதையுமே வெள்ளைக்காரர் சொன்னால்தான் கேட்பேன் என அடம்புடிக்கும் நம்மவர்களுக்கு இந்த காணொளியை காண்பியுங்கள்.

ஆரோவில் பற்றிய தகவலுக்கு : http://www.auroville.org/


என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 5


(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)

இயற்கையாகவே வளர்வதுதான் நோய் எதிர்ப்புச் சக்தி!

பிடித்துக் கொல்... பிடுங்கி அழி...' (Catch and kill, Pull and destroy) - நான் வேளாண் கல்லூரியில் படித்த சமயத்தில், எங்கள் பேராசிரியர்கள் இந்த வசனத்தை எங்களிடம் அடிக்கடி சொல்வார்கள். அதாவது, பூச்சியாக இருந்தால் பிடித்துக் கொன்றுவிட வேண்டும். நோய் வந்தால் செடியைப் பிடுங்கி அழித்துவிட வேண்டும். 

இது அவர்களின் சொந்தக் கருத்தல்ல... ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட காலத்தில், அவர்களுடைய விஞ்ஞானிகள் இங்கே பதியம் போட்டுச் சென்றவற்றில் இதுவும் ஒன்று. அவை, நமது விஞ்ஞானிகளின் மூளைகளை இன்னமும் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கின்றன என்பது தான் வேதனை! 

பொதுவாக மிளகாய், தட்டை, தக்காளி, துவரை... போன்ற செடிகளை வைரஸ் தாக்குவது உண்டு. அப்படித் தாக்கப்பட்ட செடியின் இலைகள், சிறுத்து ரோசாப் பூ போல அடுக்கடுக்காக காட்சி அளிக்கும். இதனை 'சிற்றிலை நோய்' என்றும் சொல்வர். உயிருள்ள நிலையிலும், உயிரற்ற நிலையிலும் வாழும் திறன் வைரஸுக்கு இருப்பதால், அது தாக்கியச் செடியைக் காப்பாற்று வதற்கு வழி இல்லை. அதனால்தான் நோய் தாக்கியச் செடிகளை அகற்றி, வேலிக்கு வெளியில் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கச் சொல்கிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால், மற்ற செடிகளுக்கும் நோய் தொற்றிவிடும் என்றும் பயமுறுத்துவார்கள். ஆனால், இயற்கை வழி விவசாயிகள் இதை ஒப்புக்கொள்வதில்லை. மனிதர்களானாலும் சரி, தாவரங்களானாலும் சரி, அவர்களைப் பொருத்தவரையில் நோய் தொற்று என்பதே கற்பனையான விஷயம்தான்.

என்ன அதிர்ச்சியாக உள்ளதா? ஆனால், அதுதான் உண்மை!

ஒரு முறை இயற்கை மருத்துவர் வெள்ளிமலையுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, ‘நோயுற்றவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டுமா..? வெந்நீர் குடிக்க வேண்டுமா?' என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். நான், ‘நோயுற்றவர்களுக்கு சுட வைத்து ஆற வைத்தத் தண்ணீரைத்தான் குடிக்கத் தருகிறார்கள்’ என்றேன்.

மீண்டும் அவர், ‘தண்ணீரைச் சுட வைக்கும்போது என்ன நடக்கிறது?’ என்றார். ‘தண்ணீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் இறந்துபோகின்றன’ என்றேன்.

அவர் விடவில்லை. ‘செத்துப்போன கிருமிகள் அப்போது தண்ணீரில்தானே இருக்கும்... அப்படியானால், கிருமிகள் உள்ள தண்ணீரைக் குடிப்பது நல்லதா? கிருமிகளின் பிணங்கள் உள்ள தண்ணீரைக் குடிப்பது நல்லதா?’’ என்றார். 

என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தொடர்ந்து விளக்கிய வெள்ளிமலை, ‘அம்மை அல்லது காலராவுக்காக தடுப்பூசிகள் போடப்படும்போது, நோயை உண்டு பண்ணக்கூடிய கிருமிதான் சிறிய அளவில் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. அந்தக் கிருமி உடலுக்குள் புகுந்ததும் பெருகி, அங்கே ஏற்கெனவே இருக்கும் நோய்க்குக் காரணமானக் கிருமிகளுடன் போரிட்டு, அவற்றை வெளியே அனுப்புகின்றன. இதேபோலதான் தண்ணீரிலும். கிருமிகள் உள்ள தண்ணீரைப் பருகும்போது உடலில் எதிர்ப்புச் சக்தி வளருகிறது. கிருமியைக் கொன்ற பிறகு எதிர்ப்பாற்றல் வளராது அல்லவா?’ என்றார்.

தொடு மருத்துவத்தைக் கையில் எடுத்து இருக்கும் இன்னொரு மருத்துவர், முற்போக்கு எழுத்தாளர் உமர் ஃபாரூக். அவருடைய புத்தகத்தில் இருந்து வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம். 

டாக்டர். ஆண்டனி பீச்சாம், மிக நுண்ணிய உயிர்கள் மனித உடலில் இருப்பதை, ஓர் ஆய்வின்போது கண்டுபிடித்தார். அவற்றுக்கு 'மைக்ரோ சைமாஸ்' என்று பெயரிட்டார். இதையடுத்து, 1864\ம் ஆண்டு லூயி பாஸ்டர் என்பவர், ‘ஒவ்வொரு கிருமியும் ஒவ்வொரு நோயை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. இவை காற்று, நீர் போன்றவை மூலமாக உடலினுள் நுழைகின்றன’ என்று அறிவித்தார். ஆனால், முதலில் கிருமிகளைக் கண்டுபிடித்த ஆண்டனி பீச்சாம், இதை முற்றிலுமாக மறுத்தார். 'ஒரு மாமிசத் துண்டை காற்றுப் புகாத கண்ணாடிப் பெட்டியில் வைத்தால், பல மணி நேரங்கள் கழித்து அது அழுகி நோயுற்று கிருமிகளுடன் காணப்படுகிறது. காற்றின் வழியே கிருமிகள் வருகின்றன என்றால், காற்றே புகாத இந்தப் பெட்டிக்குள் எப்படி கிருமிகள் வந்தன' என சவால் விடுத்தார் பீச்சாம்.

'உடலில் தேங்கி இருக்கும் கழிவுப்பொருட்களில் இருந்துதான் கிருமிகள் உருவாகின்றன. இவை, கழிவுகளை உணவாக உட்கொண்டு உடலுக்கு நன்மை செய்கின்றன. ஒரு கட்டத்தில் கழிவுகள் தீர்ந்தால், கிருமிகள் தானே அழிந்துவிடுகின்றன' என்று சில டாக்டர்கள் விளக்கம் அளித்தார்கள். 

டாக்டர் ரேடர்மண்ட் விஸ்கான், அம்மைக் கிருமிகளை அதிகளவில் ஊசி மூலம் ஏற்றிக்கொண்ட போதும், அவர் உடலில் எந்தவிதத் தீய விளைவும் ஏற்படவில்லை. 1892-ம் ஆண்டு டாக்டர் பெட்டின் காப்பர் என்பவர், கிருமிகளை தன் உணவில் கலந்து உட்கொண்டபோதும் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. லூயி பாஸ்டர் மரணப் படுக்கையில் இருந்தபோது, ‘உடல்தான் எல்லாமே. கிருமிகள் ஒன்றுமில்லை' என்று தன்னுடைய முந்தைய ஆய்வுகளுக்கு எதிரான கருத்தை அவரே வெளியிட்டார். 

அந்த மாதிரியான சமயத்தில்தான், சாமுவேல் ஹானிமன் என்பவர், ‘கிருமிகளால் நோய்கள் வருவதில்லை’ என்று சொல்லி, ஹோமியோபதி மருத்துவத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். ஆனாலும், ‘கிருமிகளால்தான் நோய் வருகிறது’ என்று பயமுறுத்தி, இன்னமும் காலாவதியாகிப்போன கோடிக்கணக்கில் மதிப்புள்ள ரசாயன நச்சு வில்லைகளை (மாத்திரைகளை) விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேளாண்மைக் கல்லூரியில் படித்து, விவசாயிகளுக்குத் தவறான ஆலோசனையை வழங்கிவந்து, பின் இயற்கை விவசாயத்துக்கு மாறியவர் எட்வர்டு எச்.ஃபால்ட்னர். பல ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்துவரும் இவர், ‘மண் புனரமைப்பு’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், ஃபால்ட்னரின் தோட்டத்து வழியாகச் சென்ற விவசாயி ஒருவருக்கும் ஃபால்ட்னருக்கும் இடையே நடந்த உரையாடல் இப்படி எழுதப்பட்டு இருக்கிறது. 

விவசாயி: மற்றவர்கள், பீன்ஸ் செடியில் பூச்சிகளை ஒழிக்க நஞ்சுகளைத் தெளிக்கிறார்களே, நீ ஏன் தெளிக்கவில்லை? 

ஃபால்ட்னர்: என்னுடையச் செடிகளில் பாதிப்பு இல்லை. 

விவசாயி: வண்டு, உன்னுடையத் தோட்டத்துக்கு மட்டும் வரவில்லையா? 

ஃபால்ட்னர்: வண்டு வருகிறது. என்னுடையச் செடியை உண்பதற்கு வண்டுக்கு பிரியம் இல்லை. அதனால் திரும்பிப் போய்விடுகிறது.

இதற்கு என்ன காரணம் என்று இருவரும் ஆராய்ந்தபோது, 'இயற்கை வழி சாகுபடி மூலம் நிலத்தில் தாது உப்புக்கள் அதிகரிப்பதால், பூச்சிகளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், தழைச் சத்துக்காக, ரசாயன உப்புக்களைக் கொட்டும்போது தாது உப்புக்கள் குறைவதால், பூச்சிகள் விரும்பி உண்கின்றன' என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இன்று 'வானகம்' இயற்கை வேளாண் பண்ணையிலும் இதேபோன்று ஒரு நிகழ்வை பார்க்கிறோம். மேட்டுப் பாத்திகளில் நிறைய மூடாக்குகளை இட்டு கத்திரி மற்றும் மற்ற செடிகளையும் கலப்பாக பயிரிட்டோம். அவற்றில் ஒரு கத்திரிச் செடியில் 'சிற்றிலை நோய்' வந்தது. அதனைப் பிடுங்கினால், மற்றச் செடிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் வராமல் போய்விடுமென்று, பிடுங்காமல் அப்படியே விட்டுவிட்டோம். 

எதிர்பார்த்தது போலவே நடந்தது. பக்கத்துச் செடிகளுக்கு நோய் தொற்றவில்லை. இன்னும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறோம். இதேபோல்தான் துவரையிலும். இந்த நிலங்களை இயற்கை வழிக்கு மாற்றி ஓராண்டுகூட ஆகவில்லை. மேட்டுப்பாத்தி, கழிவுகள், மூடாக்கு, இயற்கை இடுபொருட்கள், பல்வகைச் சூழல் என அனைத்தும் சேர்ந்து செடிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கின்றன.


Sunday, November 30, 2014

என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 4

(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)

4. திருவள்ளுவரின் தெளிப்பு நீர்ப்பாசனம்!
----------------------------------------------

‘மன்னன், எப்படி மக்களைக் காப்பாற்றுகிறானோ, அதேபோல வானத்தில் இருந்து சுரக்கும் மழை மக்களைக் காப்பாற்றுகிறது’ என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் ‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என்று 1,800 ஆண்டுகளுக்கு முன்னரே சிலப்பதிகாரத்தில் பாடி வைத்திருக்கிறார் இளங்கோவடிகள்.

சிலப்பதிகாரம் எழுதப்படுவதற்கு முன்னரே, ‘வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந் தற்று’ (வளரக்கூடிய பயிருக்கு மேல் இருந்து நீர் தெறித்ததுபோல) என, 'அவையறிதல்' அதிகாரத்தில் சொல்லி வைத்திருக்கிறார், திருக்குறளைப் படைத்த வள்ளுவர்.

சொட்டு நீர், தெளிப்பு நீர் என்று நீர்ச் சிக்கனம் பற்றிப் பேசுபவர்களுக்கு இந்தக் குறள் கைக் கொடுக்கும். அதேபோல, களையைக் கட்டுப்படுத்திய பிறகுதான் நீர்ப் பாய்ச்ச வேண்டும் என்றும் சொல்லி வைத்திருக்கிறார் வள்ளுவர். ஆக, நீரை மேலிருந்து சொரிந்தால், நிலத்தில் நீர் இறங்கினால், நிலம் முழுவதிலும் உள்ள செடி - கொடிகள் செழிக்கும். அங்கு, பல்லுயிர் ஓம்பும். அதனால் வாழ்க்கை மலரும். இப்படிப்பட்ட வாழும் கலை, 3,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது.

சோழ மண்டலத்தில் கி.பி.900 முதல் கி.பி.1,200-ம் ஆண்டு வரைக்கும் உள்ள இடைப்பட்ட காலங்களில், மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 4,800 முதல் 7,200 கிலோ வரை நெல் விளைந்து இருக்கிறதாம். தென்னாற்காடு மாவட்டத்தில் கி.பி.1,100-ம் ஆண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில், மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 5,800 கிலோ நெல் விளைந்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. ராமநாதபுரத்தில் கி.பி.1325-ம் ஆண்டு செதுக்கப்பட்டு இருக்கும் ஒரு கல்வெட்டில், மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 8,000 கிலோ விளைந்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, கரிகாற்சோழன் காலத்தில் மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 4,200 கிலோ நெல் அறுவடை செய்துள்ளதாக சொல்லப்பட்டு இருக்கிறது. பாரதப்போர் நடந்த காலகட்டத்தில், 'உதியஞ்சேரலாதன் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் சாப்பாடு கொடுத்தான்' என்று முடிநாகராயர் பாடியிருக்கிறார். இவையெல்லாம் நமது சரித்திரமும் இலக்கியங்களும் கூறும் தகவல்கள்.

ஆனால் இன்றைய நிலை?

பச்சைப் புரட்சி காலத்தில் இருந்தே (1965) அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு... என அனைத்தையும் நாம் இறக்குமதி செய்துகொண்டு இருக்கிறோம். இயற்கையிலேயே சத்தோடுகூடிய தானியங்கள் எல்லாம் கண்ணில்கூட சிக்காமல் மறைந்துகொண்டு இருக்கின்றன. ஏரிகள் முள் காடாகவும் (விருதுநகர் மாவட்டம் நீங்கலாக), நிலங்கள் சரள் மேடாகவும் அல்லது களர் பாலையாகவும் மாறி வருகின்றன.

இயேசு பிறப்பதற்கு 3,700 ஆண்டுகளுக்கு முன்பே உழவாண்மை செழித்து இருந்த பூமி இது. இந்த பூமியில் இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கலாசாரம், நம் வாழ்வாதாரத்தையெல்லாம் சிதைத்துவிட்டது. நம்மவர்களில் பலரும் பெருமையோடு பேசிக்கொண்டு இருக்கும் மேற்குலக நாடுகளின் உழவு பற்றிய ஆராய்ச்சி, மிக சமீபத்திய காலத்தைச் சேர்ந்ததுதான்.



கி.பி.1563-ம் ஆண்டில் பேலிசி என்பவர், ‘செடிகளைக் கொளுத்தும்போது கிடைக்கின்ற சாம்பல்தான், செடிகள் மண்ணில் இருந்து எடுத்தவை’ என்று எழுதினார்.

கி.பி.1561 முதல் 1624-ம் ஆண்டு வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஃபிரான்சிஸ் பேக்கன், ‘தண்ணீர்தான் செடிக்கு ஆகாரம்’ என்றார். அதே காலகட்டத்தில் ஜான் பேப்டிஸ்ட்ஸ் ஹெல்மான் என்ற மருத்துவரும் இதை ஆமோதித்தார். கி.பி.1627 முதல் கி.பி.1691-ம் ஆண்டு வரை வாழ்ந்த ராபர்ட் போயல், ‘மண்ணில் உள்ள தாதுக்களும் காற்றில் உள்ள கரிக்காற்றும் செடி வளர்ச்சிக்குத் தேவை’ என்ற முந்தைய முடிவுகளோடு, ‘செடி வளர்ச்சிக்கு உப்பு, சாராயம், மண், எண்ணெய் எல்லாம் தேவைப்படுகிறது. அவை தண்ணீரிலேயே காணப்படுகின்றன’ என்று சொல்லி இருக்கிறார்.



ஜெர்மானிய விஞ்ஞானி, ஜஸ்டஸ் வான் லைபிக் (Justus von Liebig) வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில் இருந்துதான் சிக்கலே தொடங்கி இருக்கிறது. லைபிக், 1840-ம் ஆண்டில் வெளியிட்ட ‘உழவாண்மை வேதியியல்’ என்ற புத்தகத்தில், ‘கரியமிலக் காற்று, மண்ணில் உள்ள மட்கில் இருந்து வரவில்லை; காற்றில் இருந்து வருகிறது. சேற்றில் இருந்து சில வேதிப்பொருட்கள் செடிக்குத் தேவைப்படுகின்றன. எந்த வேதிப்பொருள் குறைவாக இருக்கிறதோ... அதுவே விளைச்சலைத் தீர்மானிக்கிறது’ என்று பச்சைப் பொய் ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அவர்தான், மண்வளத்தைக் கெடுத்துக் கொண்டு இருக்கும் ‘N.P.K.’ (தழை, மணி, சாம்பல் சத்து) என்று பெருமையாகப் பேசப்படும் விஷயத்துக்கு வித்திட்டவர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த மெக்காலே பிரபுவின் வாரிசுகள், ரசாயனங்களை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்தனர். தவிர, ‘மாவட்ட சாகுபடித் திட்டம்’ என்று தொடங்கி, 30 ஆண்டுகளில் இந்தியக் கடலோரங்களில் 100 ரசாயனத் தொழிற்சாலைகள் உரங்களை உற்பத்தி செய்து குவித்தன. விளைவு... கணக்கிலடங்கா நோய்கள், இயற்கை மாசுபாடுகள், நாடெங்கிலும் வறுமை, பட்டினிச் சாவுகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நின்று, கவனித்து சரியான பாதையைத் தேர்வுசெய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது.

Saturday, October 11, 2014

ஆதிமனிதன் நீ.. இங்கே அடிமைக்கோலத்தில் அலைவது ஏனோ?

தமிழராக பிறந்ததற்க்கு பெருமை கொள்ளுங்கள். இதோ ஒரு மிகச்சிறந்த கள ஆய்வாய்வாளரான ஒரிசா பாலு அவர்களின் நேர்காணல், தென்றலில் இருந்து.

அதிலிருந்து சில துளிகள்

*அதிகபட்சம் ஒரு நாளைக்கு 80 கி மி தொலைவு செல்லக்கூடிய ஆமைகள், ஆரய்ச்சியில் பல ஆயிரம் மைல்கள் பயணிப்பது தெரியவந்தது. ஆமைகள் கடல் நீரோட்டத்தைப்பயன்படுத்துதியே அவ்வளவு தொலைவு பயனித்திருக்கிறது.

*பயணத்தில் ஆமைகள் கரையொதுங்கும் இடங்கள் பெரும்பாலும் துறைமுக நகரங்களாகவே இருந்திருக்கின்றன.

*ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளின் இந்த துறைமுக நகரங்களில் தமிழரின் நாகரீக, கலாச்சார அடையாளங்கள் காணப்படுகின்றன.

*இந்த துறைமுக நகரங்களின் பெயர்கள் தமிழில் இருக்கிறது.

*லெமூரியா கண்டம் இருந்தது உண்மை. அது சங்ககால இலக்கியத்தில் உள்ள சான்றுகள் மற்றும் இவருன் ஆய்வின் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. 

*தெலுங்கு சோழர்கள் என்ற குறிப்பு இந்த கட்டுரையில் உள்ளது. சோழர்கள் திராவிடர்களா? என்ற வினாவிற்க்கு வரலற்றாய்வாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.


Thursday, August 14, 2014

சுதந்திரம்...


சுதந்திரம்...கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாயுடன் முடிந்துவிடும் ஒரு சடங்கான நிகழ்வகிப்போன பிறகு, ஆளும் அரசாங்கம் தான் சுதந்திரத்தை பெற்றுதந்தது போல எங்கெல்லாம் சுதந்திரம் பற்றி விமர்சனம் எழுகிறதோ அங்கெல்லாம் தண்டைகாரர்களாகி கம்பு சுத்துவது தேசப்பற்றாகாது. காந்தி , நேரு மட்டுமல்ல, எங்கள் தாத்தனும் முப்பாட்டனும் சுதந்திர நாட்டிற்காக தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அதற்க்காக இந்த சுதந்திரத்தை நீங்கள் எப்படி கொண்டாட வேண்டும் என்று நான் சொல்ல முடியாது.. அதே போல் என்னிடம் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது..எங்கள் விமர்சனம், விசனம் எல்லாம், ஒரு தகப்பனை போல் நடந்து ஈழ மக்களை கப்பற்றியிருக்க வேண்டிய தேசம், கண்ணை மூடிக்கொண்டும் கருணையே இல்லாமல் எம் உறவுகளை அழிக்க அத்தனை உதவிகளை செய்து கொண்டு ஒரு கொலை காரனாய் எங்கள் முன் நின்று கொண்டு, நீ கேட்கும் மரியாதையை இந்த அரசுக்காக என்னால் செய்ய முடியாது. இந்த சுதந்திரம், இந்த அரசு பெற்றுக்கொடுததல்ல.. அது என் பாட்டன் வழி சொத்து. எனக்கான உரிமை வேறு எவர் கொடுத்ததும் வந்ததில்லை. போரில் இறந்த சிங்கள சிப்பாய்களின் உடலுக்கும் அவர்களின் மரணத்திற்கும் மரியாதையை தந்தவர், தலைவர். அவர்களின் சுதந்திரத்தையும் மதித்தவர், மதிக்க கற்றுகொடுதவர். எதிரியின் சுதந்திரத்திற்கே மரியாதை கொடுத்த இனம், இன்னொருவர் சுதந்திரத்தை எப்போதும் அவமதிக்காது. நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த ஈகிகளுக்கும் இன்னும் எல்லையில் காவல் நிற்க்கும் எமது காவல் தெய்வங்களுக்கும் இந்த சுதந்திர தினத்தில், எமது வணக்கம். மற்றபடி எம் இனத்தை கொலை செய்து கொண்டாடிய அனைவர்க்கும்.... போ.. போ..பிழைத்து போ...உங்களுக்கு உயிர் பிச்சை போட்டு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது..கொண்டாடுங்கள்...