Sunday, January 4, 2015

என்ன மாதிரியான டிசைன்?

பத்தாயிரம் மாணவர்களில் 100 அல்லது இருநூறு பேரை பல கட்ட தேர்வுகளுக்குப்பின் கேம்பஸ் மற்றும் ஆப் கேம்பஸ் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுத்தவரெல்லாம் திறமைசாளிகள் என்று நிர்வாகம் நம்புகிறது. கேம்பஸ் தேர்வுக்கு முதல் தகுதி  - சீராக உயர்ந்து செல்லும் மதிப்பெண். அதாவது முதல் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைவிட அடுத்த தேர்வில் மதிப்பெண் அதிகம் பெற்றிருக்கவேண்டும். இது அந்த மாணவரின் எதிர்கால திறன் வளர்ச்சிக்கான ஒரு காரணமாக நிறுவனங்கள் பார்க்கின்றன.

இந்த முப்பதாயிரம் பேருக்கு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின் திறமை குறந்து விட்டது எனில், அது அந்த நிறுவனத்தின் குறையாகத்தான் தெரிகிறது. நியாப்படி பார்த்தால் இது நிறுவனத்தின் குறைதான். 

இத்தனைக்கும் இன்றைய ரூபாய் மதிப்பு சரிவினால் அதிகம் லாபம் அடைந்தவை இந்த நிறுவனங்கள்தான். எந்தவித அதிக விற்ப்பனையில்லாமல் வெறும் கரன்சி கன்வர்சன் மூலமே 10 முதல் 15 சதவீத லாபத்தை இந்த காலாண்டில் பெற்றுவிட்டார்கள்.
அதே போல இந்த ஆட்குறைப்பு வழக்கமான ஒன்று என்று சொல்லும் நிறுவனம், முன்பு இதுபோல் நடந்தபோது இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியதாக எங்காவது சுட்டிக்காட்டியதாக தெரியவில்லை.

அரசங்கத்திடம் இத்தனைபேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறோம் என்று வாக்குறுதிகூறி வரி, மின் கட்டணம், ஏற்றுமதி சலுகை இன்னும் எத்தனையோ பெற்று பின் தவறான வியாபார உத்திகளால் பாதிக்கப்படும்போது முதலில் கை வைக்கப்படுவது ஊழியரின் மேல்தான். காரணம் இங்கு ஊழியர்கள்தான் சந்தைப்பொருள்(commodity).

பிரச்சினை ஒரே நேரத்தில் இத்தனை பேரை வெளியேற்றும்போது சந்தை அவர்களை ஏற்றுகொள்ளும் அளவு வளரவில்லை என்றால் இந்த முப்பதாயிரம்பேரையும் அவர்களின் குடும்பத்தையும் ஒரு நிறுவனத்தை நம்பி இவ்வளவுகாலம் வாழ்ந்த அந்த மனிதர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவே அர்த்தம். இதன் விழைவுகள் எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில் இது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக் கூடும்.

02-01-2015 TCS Layoff எதிர்வினை

திவாளி

அம்மா செய்யும் கை முறுக்கு
அப்பா ஆசையாய் 
வாங்கி வரும் புத்தாடை

தாத்தா பாட்டி தரும் 
நோம்பி காசு
அக்காவை சீண்டும் 
கம்பி மத்தாப்பு

பட்டுதாவணியில் பவனிவரும் 
(எங்க ஊரு) தேவதைகள்
அவர்கள் தரிசனம் தேடி 

என்னையும் சுமந்து சைக்கிள் 
மிதிக்கும் நண்பன்

இவை எல்லாம் 
இருக்கும் பேரரசு
இல்லாமல் இருக்கும் சிற்றரசன் 
கொண்டாடும் திவாளி!
ஹேப்பி திவாளி! ஹேப்பி திவாளி!


12-10-2013

உணவு அரசியல்

ஊரிலிருந்து அம்மா கொடுத்தனுப்பிய மிளகாய் பொடியின் காரம் கடையில் வாங்கிய மிளகாய் பொடியை பலமடங்கு மிஞ்சியது.. மிளகாயும் கூட நாட்டு மிளகாய் போல காரமில்லை... இன்றய அறிவியல்(?) கண்டுபிடிப்பை பயன்படுத்தி விதை நறுவனங்கள் கண்டுபிடித்த புதிய ரகங்கள் அதிக அளவில் பயன்படுத்தினால் தான் நமது தேவையயை பூர்த்தி செய்கின்றன(அதிக காரம் = அதிக மிளகாய்). நாட்டுரக விதைகளை அழித்து விட்டு நிவீன ரக விதைகளை விற்க்கும் வியாபர தந்திரம் நமக்கு ஏனோ இன்னும் புரியவில்லை.... ஆயுதங்களை வைத்து போர் அரசியல் செய்தது சென்ற யுகம்.. உணவை வைத்து போர் செய்வது இன்றய அரசியல்...(இந்தியாவில் விதை விற்க்கும் நிறுவனங்களின் பின்னணி தெரிந்தால்.. இந்த அரசியலும் புரியும்).

ஆட்கொல்லி

ஆட்கொள்ள முடியாத 
கால நீட்சியில் 
நான் கரைந்துபோகும் முன்

ஆட்கொல்லி 
அதை சொல்லிவிட
வேண்டுமென நங்கை 
வரும் வீதி வலம் வந்தேன்

நாட்கள் கொன்றதல்லாமல் 
வேல் விழியில் 
வீரச்சாவெதுவும் நான் 
கொண்டதில்லை ....

அதிசயமாக இன்று 
ஆற்றுவெள்ளம் நிறுத்தி 
ஆகாயம் முழுதும் 
நனைத்த அந்தி மழையாய் 
ஒரு புன்னகை செய்தாள்..
.
.
.
.
.
.
.
அப்பா... அப்பா.. நீச்சல் 

குளம் போகலாம் எந்திரிங்க... 
என மகள்..
மீண்டும் நனையபோகிறேன்..



-23-06-2013

நினைவே சுகந்தம்

கோள்களை பற்றி நிமலன் தெரிந்து கொண்டிருக்கையில் ஆதவன் உதயம் பற்றிய விளக்கத்தை நேரில் தெரிந்து கொள்ள இரவில் சன்னலோரம் அமர்ந்துகொண்டு, தான் ஆதவன் வரும் வரை விழித்திருப்பேன் என்று அமர்ந்து கொண்டான். அது அவன் மரபு என்று தெரிந்து தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டேன். அப்படியே உறங்கிப்போனான். காலை அவனை எழுப்பி ஆதவன் எழுவதை காண்பித்தபடியே புலரும் பொழுதை அனுபவித்து கொண்டிருந்தேன்... புலரும் பொழுது... புலரும் பொழுது.... 98களில் ஆரம்பகால மின்னணுவியல் பொறியாளனாக கோவைக்கு தினமும் புள்ளி-புள்ளி (Point-Point)ல் காலையில் பயணம் செல்லும் காலங்கள் மனதை நிறைத்தது... 
கோவை வானொலியின் புலரும் பொழுது, இரயில்களின் போக்குவரத்து விவரம் வாசிப்பு, வேளாண் செய்திகள், வேலை வாய்ப்புகள் என வானொலி யின் நிகழ்சிகள் இன்றும் காதில் ஒலித்த வண்ணம் உள்ளது..ராம் நகரில் உள்ள அலுவலகத்துக்கு(?) சென்று வருகையில் நண்பர்கள் என்னை ஒரு கிராமத்தான்(அவர்கள் கொயம்புதுர்க்கரர்களாம் ) என்று வகைபடுத்தி ஆரம்பகலங்களில் பழகிய விதம் இன்னும் சுவாரசியமானது.
பசூர் குளம் நிரம்பியிருக்கிறதா என்று வாரமொருமுறை விசாரிக்கும் நண்பரின் ஆவல் அவர் மாமனாரின் தோட்டம் குளத்தையொட்டி இருப்பதுவும் அதை கடந்து தினமும் நான் வருவதும்தானயிருந்திருக்க வேண்டும்.
அப்சரா திரையரங்கு மற்றும் லச்சுமி வணிக வளாகம், இளசுகளின் காலச்செலவு மையங்ககளாக திகழ்ந்தன. KMK, RKM, சிவரஞ்சனி, 70, 5, 7 பேருந்துகள் மட்டுமல்ல அவை நினைவு தாங்கிகள் கூடத்தான்.
பின் மருதமலை அடிவாரத்தில் மையங்கோண்டபிறகு திருவள்ளுவர் நகரும், வடவள்ளியும் உரைவிடங்களாயின. பின்னாளில் அங்குதான் வாழ்க்கையை களிக்க வேண்டும் என்ற கனவு காலச்சக்கரத்தாலும், நேருடமை (Real Estate) வளர்ச்சியாலும் அது இன்னும் கனவாகவே இருக்கிறது.. நினைவுகளை திரும்பிப்பார்க்கையில் தொலைந்து போன நட்புகளை முகநூலும், உட்சங்கிளியும் (LinkedIn) கண்டுபிடித்து கொடுத்துவிட்டது. அந்த நாட்களை மட்டும் காலம் எடுத்து கொண்டுவிட்டது..
கரங்கோர்ப்பு (scrum) கூட்ட நினைவூட்டி சிணுங்க, பனிக்கட்டிகளை வெட்டியெடுத்து வண்டியை வெளியே எடுத்தாகவேண்டும்.. கோயம்புத்தூரிலிருந்து சிகாகோவிற்கு ஒரு நிமிடத்தில் வந்துவிட்டேன் மனதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு…

09-01-2014

நான் ஏன் ஆம் ஆத்மியை ஆதரிக்கிறேன்

உங்கள் குழந்தைகள் எந்த மாதிரி சமூகதில் வாழவேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள். ஆரோகியமான, நேர்மையான, ஆக்கபூர்வ சிந்தனை கொண்ட சமூகதில் வாழ நீங்கள் தான் அந்த சமுகதிற்க்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பிறசவதிலுதுந்து, பள்ளியில் சேர்க்கையிலிருந்து தொடங்குகிறது இந்த சமூகதின் அவலம். நம்மை போலவே நமது குழந்தைகளும் இந்த ஊழல் சமுதாயத்தில் சிக்கி தவிக்காமல் தவிர்த்திட நாம் மாற்றத்தை நிச்சயம் கொண்டு வரவேண்டும். சரி எப்படி ஆரம்பிப்பது...எங்கு ஆரம்பிப்பது.. இந்த கேள்விகள் எழுந்தால் நிச்சயம் நாம் அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டோம்.
இந்த தேசத்திலுள்ள எல்லா மக்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை எதுவாக இருக்கும் என்று தேடினால் அது மோசமான நிர்வாகத்தால் வந்த ஊழல் தான். உங்களுக்கு பழகிய சின்னம் தெரிந்த வேட்பாளர் என்பதெல்லாம் தாண்டி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மாற்றத்தை வரவேற்க தயாராகுங்கள்.
நேர்மையில்லாத வளர்ச்சி, மனிதாபிமானமில்லா அரசை நமது தேர்வாக வைத்தால் மாற்றம் வருவதற்கான காலம் சற்று தள்ளிபோகுமே தவிற, அதை யாராலும் தடுத்து விட முடியாது..நமது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசை நமது பெற பிள்ளைகளுக்கு கிடைக்கும்.. ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது..நீங்கள் விரும்பாவிட்டாலும்..

Friday, January 2, 2015

எங்கள் பென்னிகுக் - பெருந்தகை பு ஆ சாமிநாதன்

ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதில் அங்கமாக இருக்கின்ற மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சியைக் கொண்டு அளவிடலாம். இதில் ஒவ்வொரு காரணியும் மற்றொன்றை சார்ந்திருக்கிறது. எங்கெல்லாம் கல்வியில்லையோ அங்கு பொருளாதாரமும் பண்பாடும் குலைந்து விடும். இங்கு கல்வி என்பது நல் ஒழுக்கத்தை கற்றுத்தரும் கல்வியை குறிக்கிறது. அதேபோல ஒரு சமூகம் பொருளாதரமில்லால் வருமையிலிருக்கும்போது கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி குறைந்து விடுகிறது. அது நாளடைவில் எதிர்மறை விழைவுகளைக்கொடுக்கிறது. எங்கெல்லாம் வறுமை தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் ஒழுக்கச்சீர்கேடு தலை தூக்குகிறது. பெரும்பாலான கொலை கொள்ளைகளுக்கு முக்கிய காரணம் சமூக ஏற்றத்தாழ்வும், வருமையும் தான். இல்லாமல் வாழமுடியாதவன் இருப்பவரிடம் பறித்து வாழ முயற்சிக்கிறான். அது போலவே ஒவ்வொரு ஒழுங்கீனத்தின் பிறப்பும் அந்த சமூகத்தின் முக்கிய காரணியான கல்வி, பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது.

நாம்   இப்போது நன்றியோடு நினைவுகூறும் பென்னிகுக்கிற்க்கு நம் சமூகத்தின்மீது கொண்ட அக்கறையின்பால்  உருவானதே முல்லைப்பெரியாறு அணை. பஞ்சத்தால் இடம்பெயர்ந்துகொண்டும், உயிரை இழந்து கொண்டும்   இருந்த மதுரை, தேனி மக்களின் வாழ்க்கை செழிக்க பென்னிகுக் கண்ட கனவே முல்லைப்பெரியாறு.

ஏறத்தாள  இதுபோன்ற   ஒரு நிலையில் தான் ஈரோடு, சத்தியமங்கலம் மற்றும் பவானி பாசனப்பகுதிகள்  இருந்தது. ஆங்கிலேயர்களின் திட்டப்படி 1948-1955 காலவாக்கில் கட்டிமுடிக்கப்பட்ட தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணைதான் பவானிசாகர் அணை. மேற்க்கு தொடச்சிமைலையில் பெய்யும் மழையும் ஊற்றுகளும் சேர்ந்து ஆறாக மாறி மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக சத்தியமங்கலம் வழியாக கோபி அத்தாணி, ஈரோடு என்று கால்பட்ட இடமெல்லாம் பசுமையாக்கிச்செல்லும் பவானி நதி தேக்கி வைகப்படும் இடம் ஆங்கிலேயர்களால் பவானிசாகர்(சாகர் - ஹிந்தியில் கடல்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்க்குதொடற்ச்சி மலையின் இன்னொரு பகுதியிலிருந்து பெருக்கெடுத்துவரும் மாயாறும் இந்த அணையில் கலந்து தேங்குகிறது. ஆற்றின் தண்ணீர் ஆளவு நிமிடத்தில் உயர்ந்தும் குறைந்தும் மாயம் காட்டுவதால் இந்த ஆறு மாயாறு என்றபொருளில் அழைக்கப்படுதாகக்கூறப்படுகிறது.

இந்த கட்டுரையை படிக்கும் உங்களுகொரு கேள்வி எழலாம். 

இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947, அதற்க்குப்பின் கட்டப்பட்ட அணை, எப்படி ஆங்கிலேயர்கலால் திட்டமிடப்பட்டது என்று. வரலாறு சற்று புதிரானது. ஒரு அணையைகட்ட ஏழு ஆண்டுகள்(1948-1955) வெறும் கட்டுமானத்திற்க்கே தெவைப்படும் கால அளவு. அதற்க்கு முன் நில அளவை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி திட்டமிடல் என்பது குறைந்தது ஒரு பத்துவருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் 1951-ல் தான் பாரளுமன்ற நடவடிக்கைகள் துவங்கின. ஆக இந்த அணை முற்றிலும் ஆங்கிலேய ஆட்சியர்களாலும், பொறியியல் வல்லுநர்களாலும் திட்டமிடப்பட்டு கட்டுமானபணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பலர் அந்த காலகட்டத்தில் பஞ்சத்தின் காரணமாக ஒரு நாள் வேலைக்கு ஒரு படி சோளம் கூலியாகப்பெற்றுக்கொண்டு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடையில் ஒரு முறை காலரா போன்ற ஏதொ ஒரு நோய்த்தொற்று ஏற்ப்பட்டதால் பலர் திருப்பி வந்துவிட்டதாக வாய்வழி செய்தியும் கிடைக்கிறது.

சிறுமுகை, சத்தியமங்கலம், கோபி, பவானி மற்றும் ஈரோடை சுற்றியுள்ள பகுதிகளில் பாசனவசதி பவானியாற்றை நம்பியேயுள்ளது, அவை நஞ்சை நிலங்களாக திகழ்கிறது. ஆனால் பவானிசாகருக்கு தெற்க்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனையம்பள்ளி, புளியம்மட்டி பகுதிகளில் வரட்சி தாண்டவமாடியது. காரணம் அங்கு பவானி நதியின்மீது பட்டு வரும் காற்றுகூட படமுடியாதபடி மேட்டு நிலமாக இருந்தது. அங்கிருக்கும் மக்களுக்கு குடி நீர் பிரச்சினை வெகு காலம் தொடர்ந்திருக்கிறது. புளியம்பட்டி இன்னும் புஞ்சை புளியம்பட்டியாகவே இருக்கிறது. ஒரு சில தனவந்தர்கள் வீட்டில் ஆழ்குழாய் கிணறு இருக்கும். பெரும்பாலன வீடுகளில் குடிப்பதற்க்கு தண்ணீர் அருகிலுள்ள குட்டைகள் மற்றும் ஊர்க்கிணறுகளிலிருந்துதான் கிடைத்துக்கொண்டிருந்தது. 

புளியம்பட்டி என்ற கிராமம்- ஊராட்சி வாரச்சந்தை என்ற ஒன்றை தன் பொருளாதாரமாக கொண்டிருந்தது. இந்த சந்தை தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக (பொள்ளாச்சிக்கு அடுத்து)  இன்னும் திகழ்கிறது. இந்த சந்தையின் வியாபாரிகளாக பலர் இந்த ஊரில் தொழில் செய்துகொண்டிருக்கிரார்கள். சுதந்திரப்போராட்டம், சுதேசி போன்ற இயக்கங்களிலும் செயல்பாட்டிலும் இந்த ஊர்மக்கள் அதிகம் பங்கெடுத்திருக்கிறார்கள். விடுதலை போராட்ட நாயகன் திருப்பூர் குமரனின் உறவு முறைகள் பலர் இந்த ஊரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவளர்கள் இந்த மண்ணில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விழைவால் பலர் நெசவை தொழிலாகவும் காதிபவன் போன்ற சுதேசி தொழில்கூட்டமைப்பில் பங்கெடுத்து நாடு முழுதிற்க்கும் கதராடை அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

பின்னர் திராவிட இயக்கத்தின் எழுச்சிகாரணமாக இளைய தலைமுறயினர் பெரியாரையும் அண்ணாவையும், கலைஞரையும் பின் தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு, பகுத்தறிவு பாசறைகளில் பங்கேற்றனர். பல வீடுகளில் தாத்தாக்கள் காங்கிரஸ்காரர்களாகவும், மகன் மற்றும் பேரப்பிள்ளைகள் திமுக காரர்களாகவும் இருக்கிறார்கள். திராவிட அரசியலை அன்றய காலகட்டத்தில் இந்தப்பகுதியில் வளர்த்தவர்களில் முக்கியமானவரும் முதன்மையானவரும் இருந்தவர் பு.ஆ. சாமிநாதன் அவர்கள். பேராசிரியர் அன்பழகன் மற்றும் கலைஞரின் நம்பிக்கைகுறிய தலைவராக விளங்கியவர். கலைஞரால் இன்றும் நினைவுகூறப்படும் தன்மானப்பெருந்தகை PAS என அழைக்கப்படும் பு ஆ சாமிநாதன் அவர்கள்.





PAS அவர்கள் திமுக சார்பில் (1967-1971)-ல் ஒருமுறையும் (1971-1977)-ல் ஒரு முறையும் கோபி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமையத்தில் தன்னுடைய சொந்த கிராமத்தின் முதல் பிரச்சினையான குடிநீர்ப்பிரசைனையை தீர்ப்பதற்க்காக பேராசிரியர் மூலம் சட்டமன்றத்தில் ஒரு கோரிக்கையை அன்றய முதல்வர் கலைஞரின் முன் வைக்கச்செய்தார். அது பவானிசாகர் அணையிலிருந்து புஞ்சை புளியம்பட்டிக்கும் அதனைச்சார்ந்த கிராமங்களுக்கும் குழாய்மூலம் தண்ணீரைக்கொண்டுவந்து மேல் நிலை நீர்த்தொட்டியில் தேக்கிவைத்து பின் ஊர்மக்களுக்கு வினியோகம் செய்யும் திட்டமது. அந்த திட்டம் பல கட்ட கள ஆய்வுகளுக்குப்பின் எற்றுக்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டது. அந்த மிகமுக்கிய திட்டத்தினால்தான் வாழ்வதற்க்குகந்த ஊராக இல்லாமல் இருந்த புஞ்சை நிலம் வேறு மாநிலங்களிலிலிருந்தும், ஊர்களிலிருந்தும் மக்கள் பலர் வந்து தொழில் மற்றும் வர்த்தகம் செய்து வளரக்கூடிய இடமாக மாறியது. அதன் பின் மக்கள் தொகை பெருக்கத்தால் குடிநீர் தேவை மீண்டும் அதிகரிக்க இரண்டாவது குடி நீர்த்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இன்று எவ்வளவோ தொழில் வளர்ச்சி, கல்வி அறிவு பெற்று வளர்ந்துவிட்டாலும் புளியம்பட்டியையும் அதன் சுற்றுப்புறத்தைச்சேர்ந்த ஒவ்வொருவரும், முக்கியமாக இளம் தலை முறையினரும் தெரிந்து கொள்ளவேண்டியது மாமனிதர் பு ஆ சாமிநாதன் அவர்கள் முன்னெடுத்த குடிநீர் திட்டம் இந்த ஊரின் இன்றைய வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டது என்ற வரலாறுதான். அரசியல் மாட்சரியங்கள் கடந்து சிறந்த மனிதரான அவரை புஞ்சை புளியம்பட்டியின் பென்னிகுயிக் என்று அழைப்பது சாலப்பொருந்தும்.