Thursday, April 23, 2015

குருதி

கோடையின் வெப்பம் கொப்பளித்துக்கொண்டிருக்கும் நாட்களில் தண்ணீரையும் நிழலையும் தேடியலையும் மனிதனுக்குச் சட்டென மேகமூட்டத்தால் வானம் இருட்டி இடி மின்னலுடன் மழைத்துளி மண்ணில் படும்போது, அது ஏதோ ஒரு புத்துணர்வை, பேரானந்தத்தை, பெரு மகிழ்சிப்பிரவாகத்தை மனதில் ஏற்படுத்தும் தருணத்தில் மனித மனத்தில் கவலைகள் இருந்துகொள்ள இடமேது மில்லை. அங்கு வெறும் கொண்டாட்டமும் புத்தெழுச்சியுமே. மனிதனை விட மண்ணும் மரமும் கொள்ளும் உவகை உணர்வுள்ள உயிர்களுக்கே தெரியும் அற்புதமான காட்சி. மண்ணில் மரணித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஆகாயத்திலிருந்து அனுப்பப்படும் உயிர்த்துளி ஒவ்வொரு மழைத்துளியும். 

பிழைக்கமுடியாமல் இலைகளை உதிர்த்துவிட்டு நீரைத்தேடி வேர்களை வெகு தூரம் பரவவிட்டு வாழ்வின் கடைசி நாளை எதிர்கொண்டிருக்கும் மரமும், செடியும் அந்த மழைத்துளி பட்டவுடன் கண் விழித்துக்கொண்டு இத்தனை நாளும் மரணம் என்ற கனவை கண்டுகொண்டிருந்தோம், அது கனவு.. அது கனவு ... என்று சொல்லிக்கொண்டே தன்மேல் விழும் ஒவ்வொரு மழைத்துளியிலும் மரணம் என்ற கனவை கழுவிக்கொண்டு ஊரே அதிரும்படி கொண்டாடும் மரங்களின் மகிழ்ச்சிக்குரல் யாருக்கும் கேட்பதில்லை. கவலை வேண்டாம், வந்து விட்டாள்.. இதோ இங்கே வந்து விட்டாள்.. இன்னும் சற்று நேரத்தில் உங்களை வந்து சேர்ந்து விடுவாள் அவள்.. என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே ஒரு அரசியல் தலைவரின் வருகையைத் தெரிவிக்கும் அறிவிப்பாளனை போல் இடி - மழையை அறிவித்துக்கொண்டே வருகிறது. திடீரென வரும் விருந்தாளியை கவனிக்க அங்குமிங்கும் ஓடி பலகாரமும் கலரும் வாங்கிவந்து கவனிக்கும் பாசக்கார வெள்ளந்தியாய் எறும்புகளும், பறவைகளும், தவளைகளும் மழையை வரவேற்க அங்குமிங்கும் ஓடித்திரிகின்றன. மேகமூட்டத்தால் இருட்டிவிட்டதால் வழிதெரியாமல் தவிப்பாள் என்று மழைக்கு வழிகாட்ட அவ்வப்போது மின்னல் ஒளி விளக்கேற்றுகிறது வானம்.

வாடியே கிடந்த கோவைக் கொடி சட்டென்று சிலிர்த்து சாய்ந்திருந்த வேலி மரத்தைத் தழுவித்தழுவி தன்னிருப்பை உணர்த்திக்கொண்டிருந்தது. இந்த மழையாள் வரவில்லையென்றால் வெகுகாலம் உன்னை தாங்கி நின்ற என்னை நீ அலட்சியம் செய்துகொண்டே இருந்திருப்பாயல்லவா?.. என்று ஊடல் மொழியுடன் கொடியை தடவிக்கொண்டது வேலி மரம்.

ஒன்றாய் இரண்டாய் பலவாய் இறங்கிய ஒவ்வொரு மழைத்துளியும் ஒன்றாய் இணைந்து ஒரு குட்டி ஆறாக பிரவாகமெடுத்து மரங்களின் வேர்களை நனைத்தும், சாலைகளைக் கழுவியும் பள்ளங்களை நிறவியும் கட்டிவைத்துள்ள ஆட்டின் கால்களை வருடியும் தவழ்ந்து வேலியின் ஓரம் வெட்டிவைத்திருந்த சிறு வாய்க்காலை அடைந்ததது. அதைப்போலவே அந்த இடத்தை சுற்றியுள்ள நிலத்தைக் கடந்து பல குட்டி ஆறுகள் ஒன்று சேர்ந்து அந்தக் கால்வாயை நிரப்பிவிட்டது. 




இத்தனை நாளும் இருந்த இடம் தெரியாமல் இருந்த தவளைகள், வெளியூரிலிருந்து நீண்ட நாள் கழித்துத் திரும்ப வந்திருக்கும் கணவனை கொண்டாடும் பெண்டாட்டியைப்போல அக்கம் பக்கமெல்லாம் சத்தம் போட்டு தன்னைப் பார்க்கவே இந்த மழை வந்தது என்று தம்பட்டமடித்துகொண்டே இருந்தது. மேலிருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியையும், கல்யாணவீட்டில் தன் மேல் தெளிக்கப்படும் பன்னீரைப்போல் குனிந்து குனிந்து வாங்கிக்கொண்டது அந்தச் சிட்டுக்குருவி. சிறகுகளெல்லாம் நனைந்திருந்த போதும் நடுங்கிக்கொண்டே வந்திருக்கும் விருந்தாளி மனங்கோணாமல் வரவேற்றுக்கொண்டே இருந்தது.

எப்போதும் மௌனமாகவே இருந்த அந்த வாகை மரமும் அரச மரமும் கொட்டும் மழையில் தங்களுக்குள்ளான உரையாடலை உரக்க நடத்துகின்றன. வாகை மரம் எதையோ சொல்ல, அரசமரம் இல்லை இல்லை என்று அவ்வப்போது தலையசைத்தும், சில சமயம் இசைந்து மேலும் கீழும் கிளைகளை அசைத்து மழைக்கு நடுவே பிரசங்கம் நடத்திக்கொண்டிருந்தன. அவ்வப்போது அந்த வழியே வந்த காற்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு கடந்து விட முற்படும்போது மரங்கள் கிளைகளையும் கொம்புகளையும் வைத்து காற்றை தங்கள் கொண்டாட்டத்தில் தொடர்ந்து இருக்குமாறு இழுத்துக்கொண்டே இருந்தது.


நேரம் செல்லச்செல்ல மழை வேகம் பெருகிக்கொண்டே இருந்தது. துணையுடன் புணர்ச்சியின் உச்சத்திலிருக்கும்போது விலகிட எண்ணமில்லாமல் மயங்கிவிட்ட உயிர்களைப்போல் மரங்களும், பரவைகளும், விலங்குகளும் மயங்கி மழையை அனுபவித்துக்கொண்டிருந்தன. 

சிறுவர்கள் சிறிது நேரம் காகிதக்கப்பல் விட்டும், தேங்கி நின்ற தண்ணீரில் துள்ளி துள்ளிக்குதித்தும் களைத்துப்போய் தாழ்வாரத்தின் விளிம்பில் குத்தவைத்து கைகளால் கால்களை இருக்க கட்டிக்கொண்டு மழையை விழுங்கிக்கொண்டிருந்தனர்.

வந்த கொஞ்ச நேரத்திற்குள்லெல்லாம் காய்ந்து கருப்பு படிந்திருந்த அந்த நில மெங்கும் பச்சை வண்ணம் மிளிர்ந்தது. எங்கு தான் இத்தனை நாள் அந்த வண்ணம் ஒழிந்திருந்ததோ. ஒரு வேளை மரங்களும் கிளைகளும் கொடிகளும் வெம்மை தாழாமல் கருப்பு களிம்பு பூசிக்கொண்டதோ, இருக்கும்.. இருக்கும்.. அதனால்தான் மழை வந்து கழுவியதும் அந்தக் களிம்பு கரைந்து பச்சை நிறம் தெரிகிறது. 

கொட்டும் மழையில் யாருமே தங்களை ஏழைகளாகவும், தங்கள் கடன்களை நினைத்தும் கவலை கொண்டிருக்கவில்லை. சாகத்துணிந்தவனின் மனதில் கூட.... இனி கவலையில்லை,, எப்படியாவது தாங்கிக்கொண்டு உழுதுவிட்டால் அடுத்த மழைவரை பிழைத்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கை பிறந்தது. மழையையே பார்த்துக்கொண்டிருந்த பெருசுகள் " நாலு மாசத்துக்கு தாட்டும்.." என்றவாறு நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்தனர். குட்டை நிரம்பிவிட்டதாக எங்கிருந்தோ ஓடிவந்தவன் எப்படி உழவுக்கும் விதைப்பிற்கும் ஆள் பிடிப்பது என்ற அடுத்த கவலையில் சுரத்தில்லாமல் சொல்லி நின்றான்....

பொழுது விழுந்தும் பொழிந்து கொண்டிருந்த மழை, நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராய் விலகி உறைவிடத்தில் பதுங்கிக்கொள்ள கவனிக்க ஆளில்லாமல் தனிமையை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து நின்றபோது நடு இரவே இருக்கும். மாரியம்மனுக்குப் பூ சா(த்தி)ட்டியும், அக்கினிக் குண்டம் வளர்த்தும் வரவேற்ற மனிதர்கள் யாரும் இப்போது மழைக்குக் குடை பிடிக்கவில்லை....துளிர்த்த ஒவ்வொரு செடியும் கிளையும் உயிர் கொடுத்த மழையின் பெயரை முதலெழுத்தாய்க்கொண்டிருக்கும்...

Sunday, April 5, 2015

என்ன வாழ்க்கை இது?

ஒரு எந்திரத்தைப்போல வாழப்பழகிவிட்ட நமக்கு சக மனிதரின் மகிழ்ச்சியும், வலியும், வேதனையும் எந்த ஒரு தாக்கத்தையும் நம்மிடம் ஏற்ப்படுத்தாத அளவிற்கு ஒரு சுற்றுச்சுவர் நம்மைச்சுற்றி நாமே எலுப்பிவிட்டோம். நமது வாழ்வின் ஆகப்பெரிய குறிக்கோல் முதுமையில் மகிழ்சியாக இருக்க பொருளீட்டவேண்டும் என்பதாக இருக்கிறது. அதனுடன் பிள்ளைகள் கல்வி, வாழ்க்கை என்ற ஒரு பெரும் கனவுடன் வாழ்க்கையென்கிற இந்த அற்ப்புதமான படகை எப்போதும் கரையைவிட்டு கடலில் இறக்காமல் துடுப்பைமட்டும் ஓட்டிக்கொண்டிருக்கிறோம். எனக்குத்தெரிந்த அளவு அப்படி பொருள் சேர்த்து, பிள்ளைகளை கரையேற்றியவர்கள் தன் வாழ்நாளின் கடைசிகட்டத்தில் அவர்கள் தேக்கிவைத்திருந்த பெருங்கனவான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையப்பெருவதில்லை. வாழ்க்கையின் பெரும்பகுதியையும் தன் உழைப்பையும் தன் பிள்ளைகளுக்கு செலவிட்ட பெற்றோர்கள் தங்களின் முதுமை காலத்தை பெரும்பாலும் தனிமையிலேயே செலவளிக்கின்றனர். படித்த பிள்ளைகள் தங்கள் வாரிசுகளின் வாழ்க்கைக்கு பொருளீட்ட தன் பெற்றோரை தனிமையில் விட்டுவிட்டு கடல்கடந்து தன் பெற்றோரைபோலவே பணமீட்டும் எந்திரமாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர். எந்திரத்தின் குட்டி எந்திரமாகத்தானே இருக்கும்!

வாழ்கையின் ஏதாவது ஒரு நிமிடத்தில் சற்று இளைப்பாறி இந்த கேள்விகளை எபோதாவது உங்களியே நோக்கி கேட்டிருக்கிறீர்களா? யார் நீ? எதற்க்காக இந்த வாழ்க்கை வாழ்கிறாய்? பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கையா? எதற்க்காக இவ்வளவு சமரசங்கள்? ஏன் பல சமயங்களில் சக மனிதரின் மீது வெறுப்பும் கோபமும்? படித்த நன்னெறிகள் எதையுமே பின்பற்றாமல் வாழ்வதற்க்கு எதற்க்கு அந்த படிப்பு? ஏன் எப்போதுமே தோல்வி கவலை தருகிறது?

எல்லோருமே வாழ்க்கையில் மிகவும் வேதனையான காலங்களை கடந்து வந்திருப்போம். அதனால் அம்மாதிரியான நிலையை இன்னொருமுறை அடையக்கூடாது என்ற தவிப்பும் முன்னெச்சரிக்கையும் நம்மை எபோதும் அழுத்திக்கொண்டேயிருக்கும். ஆனால் ஆழமாக சிந்தித்துப்பார்தீர்களானால் நீங்கள் கடந்து வந்த இன்ப துன்பங்கள் எதுவுமே தவிற்க்கமுடியதவையாக இருந்திருக்கும். அதைப்போலவே இனி வருங்காலத்திலும் நிகழப்போவதை உங்களால் தவிற்க்கமுடியாது. சரி.. அப்படியானால் நாம் எதுவுமே செய்யத்தேவையில்லையா? என்ற கேள்வியெழும்.



நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த உலகையும் இயற்க்கையையும் புரிந்துகொள்வதுதான். எப்போதாவது ஒரு இரண்டுவயது குழந்தையை ஆழமாக கவனித்திருக்கிறீர்களா? ஒரு ஓடையில் நீந்திவிளையாடும் மீன்களை கவனித்திருக்கிறீர்களா? ஒரு குருவியோ காகமோ அதன் ஒரு நாள்பொழுது எப்படியிருக்குமென்று கவனித்திருக்கிறீர்களா? ஒரு விதையிலிருந்து முளைத்துவரும் செடியை நாள்தோரும் பார்த்து ரசித்திருக்கிறீர்களா? இவையெதுவும் அதனியல்பில் அப்பழுக்கற்றதாகவும், தன்னிகரற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை எப்போதும் நம்மைபோல நாளையைப்பற்றிய கவலை கொண்டிருக்கவில்லை. மாறாக தனக்குதெரிந்த அளவில் மகிழ்சியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்துக்கொண்டிருக்கின்றன, யாருடைய அனுமதியுமில்லாமல்.



வெட்டவெளியிலும், மொட்டைமாடியில் படுத்து வானத்து வின்மீன்களை எண்ணியவாரு தூங்கிய நாட்கள் உங்களுக்கு வாய்த்திருந்தால் நீங்கள் நிச்சயம் கொடுத்துவைத்தவர்கள். அதைபோன்றதொரு மகிழ்ச்சியான தருணத்தை இப்போதும் உங்களால் பெறமுடியுமென்றால் எதற்க்காக காத்திருக்கிறீர்கள்?. அதை அனுபவிக்க உங்களுக்கு பணமேதும் தேவையில்லை, உங்களுக்கு மனமிருந்தால் போதும். அப்படியான ஒரு வானத்தை நோக்கிய உங்கள் பார்வையானது எழுப்பும் எண்ணவோட்டங்கள் உங்களை உணரச்செய்யும். எத்தனை நட்சத்திறங்கள் அந்த வானில் மின்னிக்கொண்டே இருக்கின்றன. அவை எப்போதும் தன்னிருப்பை நிரூபித்துக்கொள்ள பிரயத்தனப்பட்டுக்கொள்வதில்லை. யார் அந்த நட்சத்திரங்கள் தாங்கிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்?. நீங்கள் சிறு குழந்தையாயிருக்கும்போது மிளிர்ந்த அதே நட்சத்திறங்கள் இன்னும் அப்படியே இருக்கிறதா? நம்மைப்போலவே அதுவும் வளர்ந்துகொண்டு வருகிறதா? அந்த வின்மீன்களில் நாம் காணும் ஒளி பல ஆண்டுகள் கடந்து நம்மை வந்து சேர்கிறது என்று அறிஞர்கள் சொல்கிறார்களே, அதற்க்கு அப்படியென்ன தேவை உங்களை வந்துசேர. அப்படி அது நம்மைச்சேர நம்மிடமேதும் எப்போதாவது எதையாவது எதிர்பார்த்திருக்கிறதா? அவையும் பூமியைப்போல உருண்டை வடிவமானதா? ஏன் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கக்கூடாது. நமக்குத்தெரிந்த அறிவியலின்படி தூரத்திலிருந்து பார்த்தால் எல்லாமே உருண்டைவடிவமாகத்தானே தெரியும்? ஏன் அங்கு உயிர் வாழ்வு இருக்கக்கூடாது? சூரியனில்லாத வானம் ஏன் எபோதும் இருண்டே இருக்கிறது? இருள்தான் அண்டமா? மனிதனுக்கும் மற்ற பிற உயிர்களுக்கும் இரவில் இயக்கம் நின்றுபோவதேன்? ஒருவேளை சூரியனிடமிருந்துதான் நமக்கு உயிர்ச்சக்தி கிடைக்கிறதா?.




பரந்து விரிந்திருக்கும் இந்த ஆகயத்தில் அந்த முழு நிலவு எப்படி பரிமளிக்க்க்றது? இந்த வானத்தை தவிற வேறெங்கு இந்த காட்சி கிடைக்கும். ஒரே மாதிரி உணவு வீட்டில் பிடிக்கவில்லையென்றால் கடைகளில் புசித்துப்பழகிய நமக்கு, இந்த ஒற்றைவானமும் ஒற்றை நிலவும் எப்போதும் இனிமையாய் இருக்கிறதே. நம் வாழ்நாளில் இதைப்போன்ற இன்னொரு தருணம் இருக்கப்போவதில்லை. அது இன்னொன்றாகத்தனிருக்கும், இதுவேவாக இருக்கப்போவதில்லை. அந்த நிலவுக்குகூட அடியும் முடியும் இருக்கிறதே.. அங்கே பள்ளங்களும் மேடுகளும் அழகாக ஓவியம்போல் இருக்கிறதே. யாருக்காக அவை அப்படி அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்க்கும் காரணம் தேடும் மனித அறிவு இந்தக்கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒருவேலை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகழித்து அங்கே வாழப்போகும் உயிர்களுக்காக அது அமைந்திருக்கிறதா? வெரும் கண்ணில் நாம் காணும் இந்த நட்சத்திரங்களும் வின்மீன்களும் தொலைனோக்கியில் இன்னும் அழகாக தெளிவாக தெரிகிறது. அவை எப்போதும் நமக்கு தெரிவித்துகொள்ள ஒரு செய்தியை வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் உலகம் தட்டை என்று நம்பிய உலகம் இன்று உருண்டையென்று நம்புகிறது. மனிதனின் அறியல் வளர்ச்சி அதிகமாகும்போது அது வேறு ஒரு உருவத்தில் இருக்கிறது என்று சொல்லுவார்கள். ஆனால் பூமி தன்னியல்பிலிருந்து எப்போதும் மாறவில்லை. அதைப்போலவே நமக்கு தெரிந்த பால்வெளியும் அண்டமும் இன்னும் இன்னும் ஆயிரம் புதிய பரிமாணங்களை நமக்குச்சொல்லிக் கொண்டிருக்கிறது.





மனிதனின் அறிவியல் அறிவிற்க்கு எட்டிய பால்வெளியும் ஒரு எல்லை கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான கேலக்ஸிக்களும் பால்வெளியும் பறந்து விரிந்து கிடக்கிறது. எண்ணற்ற சூரியன்களும் அவற்றைச்சுற்றிய கோள்களும் நமக்கு தெரியாமல் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. ஒரு நட்சத்திறம் இறப்பதும் பிறப்பதும் ஒவ்வொரு நிமிடமும் அண்டத்தில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது. ஒரு நட்சத்திரத்தின் பிறப்பும் இறப்பும் பல ஆயிரம் வருட நிகழ்வு. நமக்குத்தெரிந்த/ கண்டுபிடித்த கருவிகள் காட்டும் வானியல் நிகழ்வுகள் அற்புதம் கொண்டவை. அதைப்போலவே நம்மால் அறியப்படாத, அறியமுடியாத நிகழ்வுகள் ஆயிரம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. நமக்கு தெரிந்த இந்த வானம் கடந்த நூறு ஆண்டுகள் தான் உண்ணிப்பாக கவனிக்கப்படுகிறது. அண்டத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் பல ஆயிரம் ஆண்டு நிகழக்கூடியது. இன்று நாம் ஊகிக்கும் ஒரு நிகழ்வு இன்னும் பல ஆண்டுகளில் வேறு கோணத்தில் பொய்யென்று நிரூபிக்கப்படும். மனிதனால் எப்பொழுதும் புரிந்துகொள்ளமுடியாதாதாக இருக்கும் இயற்க்கை நமக்கு என்னதான் சொல்ல வருகிறது? ஒரு நிமிடம் தன்னைப்பற்றி யோசிக்கையிலேயே தான் மனித அறிவால் புரிந்துகொள்ளப்படாததாக இருப்பதாகவும், தன்னை தெரிந்துகொள்ள முயற்ச்சிப்பதுபோல் மனிதன் அவனையும் அவனுடைய மனத்தையும் புரிந்துகொள்ள முயற்ச்சிக்க வேண்டும். எதுவெல்லாம் இன்று மகிழ்ச்சி தரக்கூடியது என்று நம்புகிறோமோ அவை நாளையும் அப்படியே இருக்குமென்று சொல்லமுடியாது.



நாளையயைப்பற்றிய கவலையில் இன்றைய நாளைத்தொலைப்பதைவிட்டு விட்டு, வாழும் ஒவ்வொரு கனத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கவேண்டும். அந்த மகிழ்ச்சிகூட பிற உயிரிணத்தை மகிழ்ச்சிப்படுத்துவதில் இரட்டிப்படைகிறது. கவலைகளை (அப்படி ஒன்று இல்லவே இல்லை ) தூரப்போட்டுவிட்டு இயந்திரமான வாழ்க்கையை விட்டுவிட்டு கண்களைத்திறந்து இந்த பூமிப்பந்தில் படர்ந்துகிடக்கின்ற உயிர்களையும் இயற்க்கையையும் ரசியுங்கள், கொண்டாடுங்கள். வாழ்வதற்க்கு உணவு தேவைதான் ஆனால் அதைத்தேடுவதில் வாழ்க்கையையே தொலைத்துவிடத்தேவையில்லை.




 கடைசியாக இந்தப்பாடல் உங்களுக்காக....



Tuesday, March 24, 2015

இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா?

பல நண்பர்கள் தாங்கள் தமிழில் கருத்துக்களை பகிர விரும்புவதாகவும்   ஆனால் எப்படி அதை செய்வது என்பது தெரியவில்லை என்று தெரிவிக்கின்றனர். அவர்களின் அந்த சிக்கலை தீர்க்கவே இந்த பதிவு.

நீங்கள் விண்டோஸ் நிறுவியுள்ள கணினி பயன்படுத்தினால் கீழ்க்கண்ட முறைகளில் ஒன்றின் மூலம் நீங்கள் தமிழில் தட்டச்சு எளிதாக செய்யலாம். முக்கியமாக உங்களுக்கு தமிழ்  தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை. என்பது சிறப்பு. ஆம்..வியப்பாக உள்ளதா...மேலே படியுங்கள்.

எளிதாக ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்

ஆங்கில எழுத்துக்களைக்கொண்டு தட்டச்சு செய்யும்போது இந்த செயலிகள் தமிழில் திருத்திக்கொள்ளும் (!). உதாரணத்திற்கு வணக்கம் என்று தட்டச்சு செய்ய, vaNakkam (பெரிய ண வுக்கு Capital N, "ள்" ற்க்கு L, "ழ" விற்க்கு za) என்று தட்டச்சு செய்து இடைவெளி கொடுக்கும்போது செயலி தமிழில் திருத்திக்கொள்ளும்.


1. தமிழ் பத்திரிக்கை தளங்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம் - விகடன்.காம் ( http://www.vikatan.com/news/article.php?module=news&aid=40602)  தளத்திற்க்கு சென்று ஏதாவது ஒரு செய்தியையோ கட்டுரையையோ சொடுக்கி அந்த பக்கத்தின் கீழ் கருத்து பதியும் பகுதிக்கு செல்லவும். அங்கு உள்ள எழுது பெட்டியில் (Comment box) தட்டச்சு செய்து அதை படியெடுத்து(Copy) முகநூல் அல்லது நீங்கள் பதிய விரும்பும் தளத்தில் ஒட்டவும் (Paste).



2. அஞ்சல் பாங்கு உலவி தமிழ் தட்டச்சு பலகையை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்ய http://tamilkeyboard.com/#tam,Keyboard_ekwunitamil தளத்திற்க்கு சென்று எழுது பெட்டியில் மேற்க்குறிப்பிட்ட முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய, செயலி தமிழில் திருத்திக்கொள்ளும்.



3. அஞ்சல் பாங்கு தட்டச்சு பலகையை உங்கள் கணினியில் நிறவி இணைய இணைப்பு இல்லாமலே கணினியில் பதிந்து கொள்ளலாம். இந்த சுட்டியை www.keyman.com/tamil  சொடுக்கி அஞ்சல் பாங்கு தட்டச்சு பலகையை தரவி்றக்கம் செயது கணினியில் நிறுகிக்கொள்ளவும்.

அ. தரவிறக்கம் செய்த கோப்பின் மீது வலச்சொடுக்கி "Run as Administrator"  சொடுக்கவும்.


ஆ. பின்னர் வரும் திரையில் "I agree to license terms" ஐ தெரிவு செய்து "Install Keyman Desktop" என்ற விசையை அழுத்தவும்.


இ. கணினி மீளுயிர்ப்பெற்று வந்த பிறகு தொடக்க விசையை அழுத்தி பார்தீர்களானால்  தெரியும். 



ஈ. அதை அழுத்தும்போது, கீ மேன் செயலி செயல்பட்டு கீழ்பட்டையில் வலதுபுரம் விசைப்பலகை தெரிவு செய்ய வாய்பளிக்கும் 



உ. அந்த வாய்புகளில் அஞ்சல் பாங்கை தெரிவு செய்துவிட்டு நீங்கள் முகநூலிலோ அல்லது வேறொரு தளத்திலோ மேற்ச்சொன்ன முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது அது தமிழில் தட்டச்சாகும்.


ஊ. மீண்டும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய கீழ்ப்பட்டையில் தெரியும் கீமேன் விசைப்பலகையை சொடுக்கி  "US" ஐ தெரிவு செய்து ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொள்ளலாம்.



ஆண்டிராயிட் மற்றும் ஆப்பிள் செல்லிடப்பேசியிலும் தமிழில் எளிதாக தட்டச்சு செய்யலாம். அடுத்த பதிவில் அதை முழுவதும் விவரிக்கிறேன். உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கருத்துக்களாக பதியுங்கள், முடிந்த அளவு பதிலளிக்கிறேன்.


Sunday, March 22, 2015

மோடி அரசின் நில அபகரிப்பு திட்டம்

பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு நிலம் கையப்படுத்தல் சட்டம் 2013 ல் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பின் 2014ல் சில திருத்தங்களை கொண்டுவந்தது. ஆனால் அந்த திருத்தங்கள் நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு வெளியேறியது. பின்னர் பதவியேற்ற மோடியின் சர்க்கார் மேலும் சில திருத்தங்களுடன் இந்த சட்டத்தை மார்ச் மாதம் 2015ல் நிறைவேற்றியது. இந்த சட்டம் ஏன் பலதரப்பட்ட மக்களால் எதிர்க்கப்படுகிறது என்பதற்க்கு அந்த சட்ட திருத்தத்தின் சில முக்கியமானவற்றை தெரிந்துகொள்தல் அவசியம். 

2013 ஆண்டு இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சட்டத்தின்படி தனியார்- பொதுத்துறை நிறுவனக்கள் கூட்டு திட்டத்திற்க்கு நில உரிமையாளர்களில் 70%சத விகிதத்தினர் சம்மதம்  தேவை. தனியார் திட்டங்களுக்கு 80%வித நில உரிமையாளர்கள் சம்மதம் தேவை.  ஆனால் மோடி அரசு கீழ்கண்ட ஐந்து பிரிவுகளுக்கும் மேல் சொன்ன நில உரிமையாளர் சம்மதம் தேவை என்ற விதியிலிருந்து விலக்களித்துள்ளது.

         1. பாதுகாப்பு (defense)
         2. கிராமப்புர கட்டமைப்பு
         3. குறைந்த விலை வீடு கட்டும் திட்டம்
         4. தொழிற்ச்சாலைகள்
         5. கட்டமைப்பு திட்டங்கள் ( தனியார் பொதுத்துறை கூட்டு முன்னெடுப்புகள்)

மேற்க்குறிப்பிட்ட பிரிவுகள் மேலோட்டமாக பார்க்கும்போது மிக நல்ல பயன்பாடாக தெரியலாம். ஆனால் பிரிவு 3, 4 மற்றும் 5, நிலத்தை நம்பி விவசாயம் செய்து பிழைக்கும் ஒரு குடும்ப்பத்தை எந்த சட்டச்சிக்களுமில்லாமல் நடு தெருவுக்கு கொண்டுவந்து விடும். இது விவசாயிக்கு மட்டுமல்ல, யாருடைய நிலத்தையும் மேற்ச்சொன்ன ஒருபிரிவின் கீழ் பெரும் முதலாளிகள் எளிதாக கையகப்படுத்திவிடலாம். உதாரணமாக ஒரு நான்கு பேரைக்கொண்ட குடும்பம் விவசாயமோ அல்லது ஏதாவது ஒரு தொழிலை நிலத்தை நம்பி பிழைத்துக்கொண்டிருக்கும்போது, புதிய தொழிற்ச்சாலை, சாலை வசதி அல்லது நெடுஞ்சாலைத்துறை கிடங்கு என ஏதாவது ஒரு பிரிவில் அவரின் சம்மதம் இல்லாமலே கையப்படுத்திக்கொள்ளலாம். அதற்க்கீடக சந்தை விலையில் இருந்து மூன்று மடங்கு முதல் நான்கு மடங்கு பணம் தருவர். ஆனால் அந்த பணத்தைக்கொண்டு அவரால் வேறொரு நிலமோ அல்லது தொழிலோ நிச்சயம் செய்யமுடியாது. காரணம் சந்தை விலை என்பது அரசு நிர்ணயிக்கும் விலை. எந்த நில பரிவர்த்தனைகளும் இந்த மதிப்பீட்டில் நடைபெறுவதில்லை. எனவே வேறொரு நிலத்தை அவரால் நிச்சயம் அந்த தொகையைக்கொண்டு வாங்க முடியாது. பிழைப்புக்காக அவர் நகரத்தை நோக்கி கூழித்தொழிலாளியாகச்செல்ல இந்த திட்டம் வழிவகுக்கும். ஒரு தற்ச்சார்பு கொண்ட விவசாயி தொழிலாளியாக நகரத்தை நோக்கி தள்ளப்படுவார்.

முன்னைய 2013 சட்டத்தில் ஒரு நிலம் கையகப்படுத்தப்படும்போது அது அந்த சமூகத்தில் ஏற்ப்படும் பாதிப்புகளை ஆரய்ந்து அறிக்கையளித்தபின் முடிவுசெய்யப்படும் என்ற விதியிலிருந்து மேற்க்கண்ட ஐந்து பிரிவுகளில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு விலக்கு அளித்துள்ளது 2015 சட்ட திருத்தம்.

மேலும் 2013 ஆண்டு சட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் சில கட்டுப்படுகளை கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம் அந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. உதாரணம்: விவசாய நிலத்தின் அதிக பட்ச கையப்படுத்தும் அளவு மாநில அரசின் விதிப்படி நிர்ணயிக்கப்படும். ஆனால் 2015 ஆண்டு திருத்தம் இந்த விதையை தளர்த்தியுள்ளது.

2013 ஆண்டு சட்சத்தின்படிநிலம் கையகப்படுத்தபட்ட பின் குறிப்பிட்ட காலத்திற்க்குள் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தால், நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மோடி அரசின் சட்டத்திருத்தம் இந்த விதியை நீக்கிவிட்டது. அதாவது ஒரு திட்டம் தொடங்குவோம் என்று தனியார் முதலாளிகள் நிலத்தை உரிமையாளரிடமிருந்து கையகப்படுத்திவிட்டு ஒரு ஐந்து ஆண்டு கழித்து நல்ல விலைக்கு வேறொருவருக்கு விற்றுவிட்டு போக வழியேற்ப்படுத்திக்கொடுத்துள்ளது.

2013ம் ஆண்டு சட்டத்தின்படி தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் நிலம் கையப்படுத்துதலில் எந்த விதிவிலக்கும் சலுகையும் வழங்கவில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டு திருத்தம் இந்த இரு தனியார் தொழில்களையும் சட்டதிருத்தத்தின் மூலம் அனைத்து விதிவிலக்குகளும் சலுகைகளும் வழங்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தலின்போது தவறிழைக்கப்பட்டால் அந்த துறையின் தலைமை  அரசு அதிகாரி பொறுப்பாக்கப்படுவார். 2015 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி அரசு அனுமதித்தால்தான் அதிகாரியை பொறுப்பாக்க முடியும். இதன் மூலம் அதிகாரிகளை வைத்து தனியார் முதலாளிகளுக்கு சாதகம் செய்துவிட்டு பின் பிடிபட்டால் அவரையும் தப்பிக்க வைக்க அரசால் முடியும்.

இந்த திருத்தங்கள் நிச்சயம் பொதுமக்கள் நலன் கொண்டு உருவாக்கப்பட்டவையல்ல என்பது புரிந்திருக்கும். இது போன்ற ஒரு சட்டத்திருத்தத்திற்க்கு முந்திக்கொண்டு ஆதரவளித்த அதிமுக அரசும் மக்களுக்கு பெருந்துரோகம் இழைத்துவிட்டது. பாதிக்கப்படும் மக்கள் ஒன்றினைந்து போராடாவிட்டால் இந்த சட்டம் விவசாயிகளையும், ஏழைக்குடும்பங்களையும், சிறுதொழில் புரிவோரையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும்.

மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்ட நிலம் கையப்படுத்தும் சட்டம் என்பதைவிட நில அபகரிப்பு திட்டமென்றே சொல்லவேண்டும். இத்திட்டத்தால் பெரும் முதலாளிகள் பயன்பெருவதுதான் நிதர்சனம். 



Saturday, March 21, 2015

வி ஆர் டி - (முதலாளித்துவத்தின்) எழுச்சியும் வீழ்ச்சியும்

கொங்கு மண்டலத்தின் ஒரு மிகப்பெரும் வணிகம் மற்றும் தொழில் குடும்பத்தின் பின் புலத்தில் உருவான பருத்தி நூற்ப்பாலை -சத்தியமங்கலமத்திலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள வி ஆர் டி எனப்படு வி ஆர் டெக்ஸ்டைல்ஸ் (பி) லிட்.

சிறுமுகையில் தொழிற்ச்சாலை கொண்டிருந்த சவுத் இண்டியா விஸ்கோஸ் எனப்படும் ரெயான் நூல் ஆலையை நிறுவிய வெங்கடசாமி நாயுடு என்ற மிகப்பெரிய தொழிலதிபரின் வாரிசான வி. ரங்கசாமி நாயுடுவால் அவர்களால் 19 செப்டம்பர் 1956 அன்று நிறுவப்பட்டது. பின் நாளில் அவரின் பேரனான வி. ராதாகிருஸ்னன் அவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் வந்தது. 1960 முதல் 2000 வரை இந்த ஆலை இந்தப்பகுதியில் மிகப்பெரும் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனமாக இருந்தது. இந்த ஆலையில் நிறந்தர தொழிலாளியாக இருந்து பணிமூப்படைந்தவர்கள் நிறையபேர். 2000த்தில் ஸ்பின்னிங் மாஸ்டர் எனப்படும் பணியில் இருப்பவர்கள் முப்பதாயிரத்திற்க்கு குறையாமல் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தனர். ஏறக்குறைய புளியம்பட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும்பாலான நடுத்தரக்குடும்பங்கள் இந்த நூற்ப்பாலையை நம்பி பிழைத்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இந்திய அளவில் பருத்தி நூல் உற்ப்பத்தியில் ஏழாவது இடத்தில் இந்த நூற்ப்பலை இருந்தது. பருத்திக்கான சந்தையை நன்றாகப்பயன்படுத்திய நிர்வாகம், தொழிலார்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு என்று ஓரளவுக்கு நன்றாகவே தொழிலாளர்களை கவனித்து லாபமும் ஈட்டி வந்தது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக லட்சுமி கணேசா டெக்ஸ்டைல் என்னும் நிறுவனம் புளியம்பட்டிக்கு அருகிலேயே அமைந்திருந்தது. நிர்வாகத்திற்க்காகவும் வரி காரணங்களுக்காகவும் தனியான ஆலையாக இருந்தபோதும் தொழிலார்கள் தேவைக்கேற்ப்ப ஒரு ஆலையிலிருந்து மற்றொன்றிற்க்கு பகிர்ந்து கொள்ளப்பட்டனர்.

பின்னர் குடும்ப சிக்கல் மற்றும் நிர்வாகக் குளருபடிகளால் முதலில் லட்சுமி கணேசா டெக்ஸ்டைல் நிறுவனம் மூடப்பட்டது. ஆனால் அன்றைய கால கட்டத்தில் ஆலைக்காக உழைத்த பல்வேறு ஊழியர்களுக்கு சரியான பணி இழப்பீடு மற்றும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படியான நிவாரணம் ஏதும் வழங்கப்படாமல் ஆலையின் ஒவ்வொரு செங்கல்லும் விற்க்கப்பட்டது.

இதே போன்று சிறுமுகையில் இயங்கிவந்த ரெயான் ஆலையான சவுத் இண்டியா விஷ்கோஸ் நிறுவனமும் தொழிலாளர்களுக்கு நிவரணம் வழங்காமல்  1997 ல் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே முறையில் தற்ப்போது வி ஆர் டி ஆலையும் மூடப்படவுள்ளது. அங்கு பணியாற்றிய தொழிலாளிகள் கூறுகையில், நிர்வாகச்சீர்கேடே ஆலையின் இந்த நிலைமைக்கு காரணம் எனவும், ஆலை நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்தது எனவும் முதலாளிகளின் குடும்பச்சிக்கல் காரணமாக ஆலையின் பங்குகள் பிரிக்கப்பட்டு ஆலையின் கடன் என்றுமில்லாத அளவுக்கு அதிகமாகிக் கிடக்கிறது என்றும் கூறுகின்றனர். வேலை செய்துவந்த பல ஊழியர்களுக்கு நான்கு மாதத்திற்க்கும் மேல் ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாகவும், ஆலைக்கு வரவேண்டிய தொகைகள் கடன்கொடுத்தவர்கள் கைக்கு நேராகச்சென்று விடுவதாகவும் கூறுகின்றனர். தொழிலாளர் பாதுகாப்புப்சட்டத்தின்படி இது போன்ற சூழலில் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய ஊதியமும் இழப்ப்பீடும் கொடுத்த பிறகே ஆலையின் சொத்துக்கள் கடன் மற்றும் வர்த்தக வரவு செலவுகளுக்கு  செலவிட முடியும். ஆனால் இந்த விதி முறைகள் பெரும்பாலான நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதில்லையென்றாலும் தன்னுடைய லாபத்திற்க்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்த தொழிலாளிகளுக்கு அவர்களுக்குறிய ஊதியமும் பங்கும் கொடுக்க ஆவன செய்ய வேண்டியது மனசாட்சியுள்ள முதலாளியின் கடமை. அது அவர் குடும்பப் பாரம்பரியத்தைன்பறைசாற்றும் செயலும் கூட.

இதே சம காலத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்க்கு தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.

லம்போதரா டெக்ஸ்டைல்ஸ் லிட்- கோவை 

நிர்வாகிகள்:

சந்தோஷ் ராதாகிருஸ்ணான் - ஆண்டு ஊதியம் - 7.8 கோடி
விமலா ராதாகிருஸ்ணன்
பாஸ்கோ ஜுலியா - ஆண்டு ஊதியம் 8.4 கோடி

ஸ்ரைக் ரைட் இண்டெக்ரேடெட் சர்வீசஸ் லிமிடெட் - கோவை 

நிர்வாகிகள்:

போஸ்கோ ஜுலியா 
விமலா ராதாகிருஷ்ணன்
ரமேஷ் செனாய் கல்யான்புர்

கோடிகளை லாபமாக அள்ளிச்செல்லும் முதலாளிகள் இக்கட்டான காலகட்டங்களில் நட்டத்தை தொழிலாளியின் தலையில் கட்டிவிட்டு கடந்து சென்றுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தப்பிரச்சினையில் தற்ப்போது தொழிலாளிகளுக்காக குரல் கொடுக்க கம்யூனிஸ்டு கட்சி்யைச்சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு. சுந்தரம் அவர்கள் களமிரங்கியுள்ளார். அவரின் முயற்ச்சியின் பலனாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கு்ம் என்று தொழிலாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்குமா அல்லது ஏமாற்றம்தான் மிஞ்சுமா என்று காலம்தான் பதில் சொல்லும்.

Wednesday, March 4, 2015

நாட்டின் நிதித்திட்டம் வெளியிடப்பட்டது - உங்கள் குடும்ப நிதி திட்டம்?

ஒவ்வொரு குடும்பமும் நிதித்திட்டத்தை வகுத்துக்கொள்வது இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமானது. பெற்றோர்கள் நிதிச்சுமையை தாங்கிக்கொண்டிருந்த காலத்தில் இளைஞர்கள்(பொதுப்பால்) இதைப்பற்றியெல்லாம் கவலையடையாமல் தன்போக்கிற்க்கு செலவுசெய்து வாழ்க்கையை கொண்டாடியிருப்பர். பிறகு கல்யாணம் குழந்தை என்றுவந்த பிறகு காசாளுமை தெரியாமல் கடனில் தவிப்பர். அவர்களுக்கும், காசாளுமை மற்றவருக்கும் பயணளிக்கும் என்ற நோக்கோடு இந்த பதிவு.
1. எவ்வளவு சிறிய/பெரிய வருமானம் கொண்ட குடும்பமானாலும் அன்றாட வரவு செலவுகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதத்தொடங்குங்கள். இதன் விளைவை ஒருமாதம் கழித்தி இங்கு வந்து கருத்துப்பதியுங்கள்.

2. அத்தியாவசிய தேவை தவிர மற்ற செலவுகளை தள்ளிப்போட்டுக்கொண்டே இருங்கள். எப்போழுது அது அத்தியவசியமாகிறதோ அப்பொழுது அந்த செலவு பற்றி முடிவெடுத்துக்கொள்ளுங்கள். எது அத்தியவசியம் எது அனாவசியம் என்பதில் தெளிவிருத்தல் மிகவும் முக்கியம்.

3. பெரிய செலவுகளான வீடு மற்றும் மகிழுந்து போன்றவற்றை கடைக்காரர் அல்லது பிரொமொட்டர் கூறியவுடன் அந்த இடத்திலேயே முடிவெடுத்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய சலுகை, நிர்பந்தம் கொடுத்தாலும் வீட்டில் பேசிவிட்டு முடிவெடுத்து நாளையோ அல்லது அடுத்தவாரமோ வருகிறோம் என்று சொல்லி வீட்டில் அமர்ந்து ஆலோசித்து முடிவெடுங்கள்.

4. குறைந்தது 20% உங்கள் நிகர வருமானம் -வருமானம் ஈட்டும் வகையில்(வட்டியுடன் கூடிய வைப்பு) வைத்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் நிகர வருமானத்தில் 20% தவிர்த்து மீதமுள்ளவற்றையே உங்கள் கையிருப்பு எனக்கருதி மாதச்செலவுகளை திட்டமிடுங்கள். கூடுதல் வருமானங்களில் (போனஸ், பரிசுகள்) 60% சேமிப்பிற்க்குச்செல்லுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

5. கடன் வாங்குவது - தீதில்லை. ஆனால் அது உங்களின் வைப்புத்தொகைக்கு கிடைக்கும் வட்டியைவிட ஒன்றறைமடங்கிற்க்கு கூடுதலாக இருந்தால், தவிர்த்துவிடுங்கள். - இது நிறுவனங்களுக்கு பொருந்தாது.

6. மிதிவண்டியில்லையென்றால், இந்த ஆண்டு ஒன்றை வாங்கிவிடுங்கள். இரண்டு அல்லது மூன்று கி மி தொலைவுக்கு குறைவான தனிப்பயணங்களை மிதிவண்டியில் மேற்க்கொள்ளுங்கள்.

7. வங்கி அட்டை(டெபிட் கார்டில்) செலவு செய்பவர்கள் முடிந்தவரை காசைக்கொண்டு ஓரிரண்டு மாதங்களுக்கு செலவு செய்து பாருங்கள். செலவு குறையவில்லையென்றால் அட்டையை தொடருங்கள்.

8. கடனட்டை பரிவர்த்தனையை தாராளமாக கையாளவேண்டாம். அது உங்கள் டெபிட் கார்டைப்போலவே கையாளுங்கள்.

9. ஒவ்வொரு ஆண்டும் அவரவர் திறணுக்கேற்ப்ப ஏதவது ஒரு சொத்தோ அல்லது முதலீடோ செய்வதை குறிக்கோளாய்கொள்ளுங்கள்.

10. காசிற்க்கு மதிப்பு கொடுங்கள். அது உங்கள் உழைப்பின் அடையாளம். அதை நீங்கள் விரும்பாவிட்டாலும் அல்லது அதை மதிக்காவிட்டாலும் அது எங்கு மதிப்பிருக்கிறதோ அங்கு தானாக போய்க்கொள்ளும் - தண்ணீரைப்போல.

Sunday, March 1, 2015

மதுமயமாக்கலும் மதுமயக்கமும்

ஏற்கனவே இதே தலைப்பில் ஒரு நிலையை பதிவுசெய்திருந்த்தேன். அந்த நிலைக்கு அருகில்கூட தான் வந்த தடம் தெரியாது சென்ற பல நண்பர்கள் நேரடி உரையாடல்களில் அவர்களும் மதுமயமாக்கலை எதிர்ப்பதாகவும் அதை மது அருந்தும் தாங்கள் எப்படி வெளிப்படையாக எதிர்க்கமுடியும் என்று கேள்வி எழுப்பினர். நியாயம்தான்.. ஆனால் அந்த கேள்விக்கான பதிலை உங்களிடம் கேட்பதற்க்குப்பின் ஒரு உளவியல் நோக்கமுள்ளது. அது இந்த இனத்தையும் பண்பாட்டையும் சீரழத்து நமது அடையாளங்களை அழித்து நம்மை தனித்தன்மையில்லாதவராய் மாற்றுவது.
நாம் மதுவை ஒழிக்கச்சொல்லி போராடவோ எதிர்ப்பு தெரிவித்தோ கருத்து வெளியிடவில்லை. மாறாக மதுவை அனைவரின் கையிலும் எந்த கூச்சமும் இல்லாமல் கொண்டு சேர்ப்பதை எதிர்ப்பது நமது கடமை. "அப்படியென்றால் பெண்கள், ஏழைகள் மதுக்குடிப்பதை எதிர்க்கிறாயா?" என்று கேட்டிர்களானால், அது எமது நோக்கமல்ல. மதுப்பழக்கம் சிலருக்கு விருந்து(எப்போதாவது) சிலருக்கு மருந்து(மனதில் இறுக்கம் குறைக்க) சிலருக்கு உணவு(அன்றாடம் குடித்தல்). இதில் முதல் இரண்டு வகையினர் மது அடிமை கிடையாது. மூன்றாவது வகை மது அடிமை. முதல் இரண்டு வகையிலிருப்பவர்கள் எப்போதுவேண்டுமானாலும் மூன்றாவது வகைக்கு மாறாலாம். அது அவரின் மனச்சூழலை பொருத்தது. பெரும்பாலும் இவர்கள் மதுவினால் ஏற்ப்படும் சுய மற்றும் சமூகப்பாதிப்புகளை புரிந்து வைத்திருப்பார்கள். இவர்களால் மது இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழமுடியும். ஆனால் இந்த மூன்றாவது வகையினரை மதுப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது மிகவும் சிக்கலானது. அது பல எதிவிளைவுகளைக்கொடுக்கக் கூடியது.
நீங்கள் ஒரு விசயத்தை மறைத்து அந்த விசயம் பற்றி விவாதிக்காமல் போவதால் இரண்டு விளைவுகள் ஏற்ப்படும். ஒன்று உங்களுக்கு தெரியாத விசயங்கள் தெரியாமலேயே போய்விடும். இரண்டு, அந்த விசயத்தைப்பற்றிய உங்கள் எண்ணம் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கும் உங்களைச்சுற்றியிருப்பவர்களுக்கும் ஏதாவது பாதிப்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும். ஆதாலால் முடிந்த அளவுக்கு எந்த விடயம் உங்களை உருத்துகிறதோ அதை நம்பிக்கையுடைய நண்பர் அல்லது வாழ்க்கைத்துணையுடன் பகிர்ந்து தீர்வுகண்டுகொள்வது நல்லது. அந்த வகையிலேயே மதுவைப்பற்றிய நமது எண்ணங்களை தெளிவுபடுத்திக்கொள்வது ஒரு நல்ல விளைவை சமுதாயத்திற்க்கு ஏற்ப்படுத்தும் என்று நம்பலாம். சரி இதை எந்த பக்கச்சார்பும் இல்லாமல் அணுக சமுதாயத்திற்க்கு இன்று ஏற்ப்பட்டுள்ள சிக்கலை புரிந்துகொள்ள வேண்டும். கீழ்காணும் செய்திகள் நீங்கள் தற்ப்போது அதிகம் கேள்விப்படுபவையாக இருக்கும்,
1. குடித்துவிட்டு வண்டி ஓட்டு சாலைவிபத்தில் இளைஞர்கள் மரணம்.
2. பள்ளி மாணவர்கள் மது அருந்தி தெருவில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனர்.
3. கல்லூரிப்பெண்கள் கையில் மதுப்புழக்கம் அதிகரிப்பு.
4. குடிபோதையில் பெண் கற்ப்பழிப்பு.
5. குடிபோதையில் கொலை.
மேல்குறிப்பிட்ட செய்திகள் சில தனிமனித உரிமை சார்ந்தது. மற்றது சமுதாயத்தை பாதிக்கும் செய்திகள். இதில் சமுதாயம் சார்ந்த விளைவுகளுக்கு எதிவினையாற்றுவது நல்ல சமுதாயத்தில் வாழ விரும்புபகர்கள் கடமை. நமது சட்டங்கள் அதற்க்கு ஓரளவு வழிவகுத்து கொடுத்துள்ளது. மேலும் அதை வலுப்படுத்தவும் நிறைவேற்றவும் அரசை நிர்பந்திக்க நமக்கு உரிமை இருக்கிறது. கீழ்காணும் சில உடனடி விளைவுதரக்கூடியவை.
1. பதினெட்டு வயதுக்கு குறந்தவருக்கு மது விற்ப்பது வாங்குவது தண்டனைக்குறிய குற்றம்.
2. மது குறித்த பாதிப்பை மது வாங்குபவருக்கு தெளிவாக தெரியும்படி குறிக்கவேண்டும்.
3. கற்பமாகியிருக்கும் பெண்கள் அல்லது கற்ப்பம் தரிக்க தயாராகிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு மது குழந்தைபிறப்பில் சிக்கல் உண்டாக்கும் என்பது மருத்துவர்களால் அறிவுருத்தப்படவேண்டும்.
4. மது அருந்தி வாகனம் ஓட்டுவது ஓட்டுனர் உரிமத்தையும் பறிக்கவும், சிறை தண்ணடனைக்குறிய குற்றமாகும்.
5. மது பழக்கத்திலிருந்து விடுபடுவதற்க்கும் மறுவாழ்விற்க்கும் அரசு அனைத்து வாய்ப்புகளையும் ஏற்ப்படுத்திக்கொடுக்கவேண்டும்.
6. மதுப்பழக்கத்தால் ஒருவர் தண்டனை பெற்றால் அதை பதிவு செய்தும், வேலைவாய்ப்பு மற்றும் அரசு உதவி பெறும்போது அந்த தகவலை அடிப்படியாகக்கொண்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
7. மதுக்கடைகள் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தளங்கள் அருகில் அமைப்பது அனுமதிக்கப்படக்கூடாது.
மது விற்ப்பது அரசின் கொள்கைமுடி அதை நீதிமன்றங்கள் கேட்க முடியாது என்ற ஒரு வரி, மேலுள்ள அனைத்து விதிகளுகும் விலக்காகாது. அரசு தவறு செய்யும்போது நீதிமன்றங்கள் தலையிடமுடியும். ஏனென்றால் நீதிமன்றங்கள் மக்களை அநீதியிலிருந்து காப்பற்றுவதற்க்காக அமைக்கப்பட்டவை. மதுவிற்று வரும் வருமானத்தில் அரசு தனது நலத்திட்டங்களுக்கு செலவளிப்பது கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீதிக்கு வீதி மதுக்கடைகளைத்திறப்பதும், பள்ளி மானவர்களுக்கு மதுகிடைக்கச்செய்வதும், மது அருந்தி வாகனம் ஓட்டுவோரை தண்டணையிலிருந்து தப்பச்செய்வதும் எந்த வகையிலும் சட்டத்திற்க்குட்படாது. ஒரு அரசு மக்களின் நலத்தைப்பேனுவதை முதற்க்கடமையாகக்கொண்டு செயல்படவேண்டுமேன்பது சாசன விதி. அந்த விதி மீறப்படும்போது நிச்சயம் நீதிமன்றம் தலையிட்டு தீர்வுதருவது அதன் கடமை.
மதுவை எதிர்த்து வீதியில் போராடும் தலைவர்கள் நீதிமன்றத்தில் தீர்வு தேடுவதும், மதுமயமாக்களை எதிர்ப்பதற்க்கு மது அருந்தாமல் இருப்பது தகுதி என்று தனக்குத்தானே தடையேற்ப்பத்திக்கொண்டிருப்பவர்கள் வெளிப்படையாக மதுமயமாக்களை எதிர்க்க முன்வருவதும் இன்றைய தேவை.
நாளை உங்கள் பிள்ளைகளின் கையில் மது எளிதாகச்சேரமல் தடுப்பதற்க்கும், மதுவினால் அடுத்த தலைமுறை மீட்கமுடியாத சிக்கலுக்குள் விழாமல் தடுப்பதற்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் குரல் கொடுக்கவேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு உயர்ந்த கல்வி குடுப்பதும், நல்ல வாழ்க்கைத்துணையமைத்துக்கொடுப்பதும் அவர்களை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவாது. மாறாக ஒரு சிறந்த சமூக கட்டமைப்பை அவர்களுக்கு ஏற்ப்படுத்திக்கொடுப்பதே பெற்றோறாக நாம் நம் பிள்ளைகளுக்கு செய்யிம் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.
பெண்களும் ஆண்களும் இணைந்து எப்படி மதுமயமாக்களை எதிர்த்து மதுக்கைடையை நொறுக்கினார்களோ, அதுபோல் எங்கெல்லாம் விதிகளிமீறி மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் களத்திலிறங்கி போராடவேண்டும்.
மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு. அந்தகேட்டை ஒரு அரசு செய்வது நாட்டுக்கு செய்யும் கேடாகும். அதை கேட்பது நீதிமன்றத்தின் கடமையாகும்.