Thursday, December 18, 2008

அடைகாக்கப் படும் அக்கினிக் குஞ்சுகள்

இலங்கையின் குண்டுவீச்சில் இருந்து தமிழீழ மன்னர்களை காக்கும் தாய்மார்கள்.


Wednesday, December 17, 2008

காதல், கல்யாணம்

வர வர இந்த சக்தியோட நடவடிக்கைகள் ஒன்னும் விளங்க மாட்டிங்குது.

"காலைல ஏழு மணிக்கு கோயமுத்தூர் போகனும், கூட நியும் துணைக்குவான்னு" இரவு பத்து மணிக்கு போன் பன்றான்.

"என்னடா திடீர்னு? " கேட்டேன்.

"ஒன்னுமில்லடா, அப்பாவோட பிரண்டு ஒருத்தர் பையன், பெங்களூர்ல பெரிய கம்பெனில பெரிய மேனஜரா இருக்காரம். அவர் ஊருக்கு வந்திருக்கார், அதனால எங்கப்பா அவர்கிட்ட, என் வேலை விசயமா சொல்லி, என்னை சந்திக்க சொல்லியிருக்கார்" என்றான்.

"அட.. இங்க பார்ரா... அப்பா.. பிரண்டு... வேலை... சரி.. சனியன்.. எத்தனைய கேட்டாச்சு.. இத கேக்க மாட்டமா..." - என் மனதுக்குள்..

எங்க வீட்ல "நாளைக்கு இண்டர்வியூக்கு போகனும்" அப்படின்னு சொல்லி ஒரு பிட்ட போட்டு, இருநூறு ரூபாய ஆட்டைய போடலாம்னு அம்மா கிட்ட அப்படியே பேச்சு குடுத்தா, "ஆனிய புடுங்க வேண்டாம்னு" அப்பா யார்கிட்டயோ பேசுறது காதுல விழுந்துச்சு.

அப்புறம் எங்கே....

நானும், நண்பனுக்கு நல்ல காலம் பொறக்க போகுது.. அவனுக்கு வேலை கிடச்சுடுச்சுன்னா, எப்படியும் அவன் என்னைய ரெக்கமண்ட் பண்ண வெச்சு, நானும் ஒரு வேலைய வாங்கிறலாம்னு ஏழு மணிக்கெல்லாம் பஸ்டாண்டுல வெய்ட்பண்ணிட்டு இருந்தா... பையன் எழரை மணிக்கு வந்து..

"சாரிடா மச்சான்.. பிரிபேர் ஆகி வர லேட்டாயிருச்சு.. அடுத்த பாயிண்டு பாயிண்ட்ல போயிர்லாம்" னு சமாதானப்படுத்துனான்...

சரி.. கழுதை விடுன்னு மன்னிச்சு விட்டுட்டேன்.

"மாப்ளை... என்னோட ட்ரஸ் எப்படி இருக்கு? ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா?" அப்படின்னு கேட்டு அறிச்சான்.

"என்னதான் உயரமா பறந்தாலும், காக்கா குருவியாக முடியாது" ன்னு சொல்லி அவனை கூல் பண்ணினேன். இப்ப எதுக்கு இதபத்தி ரொம்ம பீல் பண்றான்?, அப்பா பிரண்டத்தான் பாக்க போறான்!.. ஒரு வேளை அவுங்க பையன் டிசிப்ளின், டீசென்சியெல்லாம் பாப்பாறோன்னு..... நானும் "கொஞ்சம் நல்ல சட்டைய போட்டுட்டு, மேக்கப் பண்ணிட்டு வந்திருக்கலாம்" னு தோனுச்சு.....

ஏழரை மணியாகியும் பாயிண்டு பாயிண்டு வரலை. அதுக்காக எப்பவும் வெயிட்பன்ற ரெகுலர் கூட்டம், ரோட்டுலு போயி எட்டி எட்டி பாக்கிறதும், டைம் ஆபிசுல போய் விசாரிகிறதும்.. ஒன்னும் சொல்றாப்புல இல்ல... நம்ம ஆளும் பஸ்ஸை எதிர் பார்த்து எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தான்... எப்படியாச்சும் கஸ்டப்பட்டு வேலை வாங்கிரணும்னு வெறி போல... இருக்காத பின்ன.. எங்கப்பா ஒரு அண்ணா(நல்லா பேசுவார்). அவுங்கப்பா ஒரு காமரசர்(செயல் வீரர்)...

எனக்குதான் எதுக்கு நிற்கிறோம்னு தெரியாம ஒவ்வொருத்தறோட நடவடிக்கையயும் கவனிச்சுட்டு இருந்தேன். எல்லாரும் பரபரப்பா இருந்தாங்க. அந்த பக்கம் எங்க ஏரியா எதிரிங்க நின்னுகிட்டு பொண்ணுகளை பாத்து ஏதோ பாட்டெல்லாம் பாடிக்கிட்டு அவுங்களை சந்தோசப் படுத்திட்டு இருந்தானுங்க..

எங்களுக்கு அந்த பழக்கமெல்லாம் கிடையாது.. ஏன்னா நாங்க பாடுனாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க.. அப்படியே கவனிச்சிட்டாலும் அதை பாத்த பெரிசுங்க வீட்டுக்கு வந்து ப்ளாக் எழுதிட்டு போயிருவாங்க... அதனால.. பாட்டெல்லாம் பாடாம, பேசும் படம் மட்டும்தான்.

காத்துட்டு இருந்தவங்க எல்லாத்து கண்லயும் அவ்வளவு சந்தோசம். பாயிண்டு பாயிண்டு வந்தாச்சு.அடுத்து சீட் புடிக்க தயாரானாங்க... ஆன நம்ப ஆளு மட்டும் காத்து புடுங்குன பலூன் மாதிரி சுருங்கிட்டான்...ஓருவேளை "பஸ்ஸுல சீட் கிடைகாதுன்னு பீல் பன்றானோ?"

கேட்பதற்கு முன்.. "இல்லடா.. அடுத்த பஸ்ல போலாம். ஒரே கூட்டமா இருக்கு, நின்னுட்டுதான் போகனும்" னு சொன்னான். சரிதான்.. அப்படின்னு விலகி நின்னு மத்தவுங்களுக்கு வழி விட்டோம்.

அடுத்த பஸ் எப்பன்னு டைம் டேபில்ல பாத்து வச்சுகிட்டேன். அதையெல்லாம் பாக்காம அடுத்த பஸ்ஸுக்கு இப்பவே ரோட்ட பாத்து பாத்து நின்னுட்டு இருந்தான் நம்ம ஆளு. இந்த பஸ்ஸும் புறப்பட ஆரம்பிச்சது. அப்ப பாத்து டி வி எஸ்ல ஒருத்தர் ஒரு பிகரை கொண்டு வந்து பஸ் முன்னாடி நிறுத்தி ஏத்திவிட்டார். எனக்கும்,பேசாம நின்னுட்டே இந்த பஸ்ல போயிடலாம்னு தோனுச்சு. இத நம்ம ஆளுகிட்ட சொல்லி அவன் எங்க நம்மள ஒருமாதிரி கேவலமா நினைச்சுக்குவானோன்னு பீல் பண்ணி விட்டுட்டேன். ஆனா நம்ம ஆளு, "சரிடா வா இந்த பஸ்லயே போயிரலாம், இல்லேன்னா லேட் ஆயிடும்" னு சொல்லி பஸ்ல ஏறிட்டான்.

அவன் என்ன சொன்னான்னு கேட்க தோனாம நானும் ஓடி போயி அந்த பஸ்லயே ஏறிட்டேன். நின்னுட்டு போனாலும் பரவால்லைன்னு, நண்பனோட வேலை தான் முக்கியம்னு பஸ்ல ஏறி என்னை நானே சமாதனம் பண்ணிக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல நம்ம ஆளு எங்கிட்ட பணத்த குடுத்து மூனு கோயமுத்தூர் வாங்கிருன்னு சொல்லிட்டு முன்னாடி லேடிஸ் இருக்கற பக்கமா போனான்.

என்னடா மூனு டிக்கெட் வாங்க சொல்றான்னு கொழப்பத்துல நடத்துனர்கிட்ட ரெண்டுடிக்கட் மட்டும் வாங்கி வைச்சுகிட்டேன். நானும் லேட்ட வந்து பஸ்ஸ நிறுத்தி ஏறுன அந்த பிகரு இந்த பக்கம் பாக்கும், அப்படி இப்படின்னு இம்ப்ரெஸ் பண்ணனும்னு கனவுகண்டுட்டே இருந்தேன்.

நம்ம ஆளு முன்னாடி ஸ்டெப்ஸ்ல நின்னுட்டு என்னமோ அவனுக்கு அவனே பேசிட்டிருந்தான். அங்க போயி எப்படி பேசனும்னு ரிகர்ஸ் பண்ணிக்கிறான் போல... நேரம் ஆக ஆக பின்னாடி இருந்த காடையர்கள் எல்லாம் முன்னாடி போயி, அந்த பிகரின் சிக்னல் நாட் ரீச்சபில் டிஸ்டன்சுக்கு என்ன பின்னாடி தள்ளிட்டானுங்க...

அப்படி இப்படின்னு ஒரு வழியா காந்திபுரத்துல பஸ் நின்னுது. சரி இப்பவாவது அந்த பிகர பக்கத்துல போயி பாக்கலாம்னு அவசரமா கீழ இறங்கி போனா... அந்த பிகரு என்ன பாக்க நின்னுட்டு இருந்துச்சு. எனக்கு.."எகிரி குதித்தேன் வானம் விழுந்தது" மாதிரி இருந்துது...

அந்த நேரம் பாத்து நம்ம ஆளு குறுக்க வந்து நின்னான். எனக்கு வந்த கோபத்துக்கு......சரி விடுங்க.. இவனோட உதவி நாளைக்கு நானும் அந்த பொண்ணும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறப்ப தேவைப்படும்னு நெனச்சுகிட்டு அமைதியாயிட்டேன்.

ரெண்டுபேரும் கொஞ்சம் முன்னாடி போயி ஒரு ஆட்டோ பக்கத்தில் நின்றோம். அவன் ஏதோ ஆட்டோ காரர் கிட்ட பேசிட்டு இருந்தான். அந்த பிகரு என்னை பாத்து என் பின்னாலேயே வந்திட்டு இருந்த்துச்சு.. ஆஹா.. இத்தனை நாளா என்னோட அருமை எனக்கே தெரியாம போச்சே... அப்படின்னு தலைய யெல்லாம் கோதிவிட்டுட்டு போற வர்றவனை எல்லாம் ஏளனமா பாத்துட்டு இருந்தேன். "சாருக்... சாருக்.. "ன்னு யாரோ கூப்டர மாதிரி இருந்துச்சு...

நம்ம ஆளுதான்.. வாடா போலாம்னு ஆட்டோல உக்காந்துட்டு கூப்டான்.. அவனையும் அப்படியே ஒரு லுக்கு விட்டுட்டு, அந்த பிகரு இருக்கிற பக்கம் திரும்பாம.. திமிரா போயி ஆட்டோல உக்காந்துட்டு ஹலோ சொல்லனும்னு நெனச்சுட்டு ஆட்டோல உக்கார போனா.. ஏற்கனவே அந்த பிகரு உள்ள உக்காந்துட்டு...ஹலோ சொல்லுச்சு...

எனக்கா.. ஒன்னும் புரியல... என்ன நடக்குதுன்னு சுதாரிக்கரதுக்குள்ள நம்ம ஆளு அது பக்கத்துல உக்காந்துட்டு இருக்கறத கவனிச்சேன். கண்ணெல்லாம் சுத்த ஆரம்பிச்சது.. உள்ள உக்காந்ததுக்கு அப்புறம்.. சாரிடா மாப்ள... உன்கிட்ட சொல்லாம மறைச்சுட்டேன்.. ஆனா என்னைக்கு இருந்தாலும் நீதான் எனக்கு முன்னாடி இருந்து எல்லாத்தையும் செய்வேன்னு தெரியும்.. இவளும் நானும் உயிருக்கு உயிரா (உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ன்னு மட்டும்தான் எனக்கு கேட்டுச்சு) காதலிக்கிறோம்னான். எப்படியும் எங்க வீட்ல எங்க காதலுக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு தெரியும் , அதான் நாங்களே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதான் இன்னைக்கு நல்ல நேரம் பாத்து பேருர்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு.. நீதாண்ட எல்லாத்தையும் பாத்துக்கனும்னான்......

ஆனி....சாரூக்...கல்யாணம்.... வேலை.... அண்ணா ...காமராசர்..... அய்யோ............................

Saturday, December 13, 2008

பாடம்

நண்பர்கள் கூடி கேக் வெட்டி இருபத்தொன்பதாவது பிறந்த நாள் கழிக்கப்பட்டு விட்டது. எத்தனை மாற்றங்களை இயற்கை வாழ்வில் ஏற்படுத்தியிருந்தாலும், சக்கரம் கட்டிய கால்களுடன் ஊரைச்சுற்றி திரிந்து, அப்பா கொடுத்த பத்து பைசாவுக்கு இரண்டு பால்கோவா கட்டி வாங்கி ஒன்றை அக்கா முன் தின்று வெறுப்பேற்றி அழ வைத்து பிறகு மற்றொன்றை அவளுக்கு தந்து அதனையும் பங்கு கேட்டு வாங்கித்தின்ற அந்த நாட்கள் அசை போட மட்டுமல்ல மீண்டும் அனுபவிக்க ஏக்கம் தருபவை.

மங்கிய தெரு விளக்கு வெளிச்சத்தில் மணலில் வீடுகட்டி நண்பர்களுடன் விளையாடிய நாட்களை சோடியம் வேப்பர் வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் அம்மா அடித்தால், பாட்டியிடம் ஓடி தஞ்ச மடைந்து கொள்வேன். அவளுக்கென்று ஒரு தனி உலகம் இருந்தது. அங்கு என்னைத்தான் ராஜாவாக வைத்திருந்தாள். வெளியே எங்கு போனாலும் என்னையும் கூட்டிச்செல்வாள். என் தாத்தா எப்போது என்னை வெளியில் கூட்டிச்சென்றாலும், தோழில் வைத்துத் தான் தூக்கி செல்வாராம். அவர் தலையில் அமர்ந்து ஊரை சுற்றியது, பின்பொரு நாளில் 10 பைசாவுக்கு செய்த யானை சவாரியை போல் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவர் மறைந்த பின்பு பாட்டிதான் எனக்கு தாத்தாவும். ஆனால் அவளால் தாத்தா போல் என்னை தோழில் தூக்கி வைக்க முடியாது. ஏதொ காரணத்தால் அவள் முதுகு கூண் விழுந்து குணிந்து தான் நடப்பாள். இருந்தும் அவள் என் கை பிடித்து அழைத்து செல்வது தாத்தாவுடன் போவது போன்றே இருந்தது. தன் நண்பர்களிடம், "எம் பேரன்" என்று இருமாப்புடன் சொல்வதை கவனித்திருக்கிறேன். அவர்களோ என் தாத்தாவை போலவே இருக்கிறேன் என்பதும், அதற்கு ஆமாம் என்பது போல், "அக்காங்... அவுங்க அப்பாராட்ட ஒரெடத்தில அடங்கிறதில்லை" என்று என் பெருமைகளை சொல்லத் தொடங்குவாள். அவளின் செல்லப்பரிசு கரும்பு சர்க்கரை. அவள் சொல்லும் வேலைகளை செய்ததும் எனக்குத் தருவாள் அந்த பரிசை. பாலில்லாத காபியில் அந்த சர்க்கரை சேர்த்த சுவை எனக்கு கசப்பை தரும். ஆனால் அவள் விரும்பிக் குடிப்பது அதுதான்.

வியாழன் என்பது எனக்கும் என் சகோதரிக்கும் வாரத்தில் இன்னொரு ஞாயிற்றுக் கிழமை. அன்று அம்மா சந்தைக்கு போய்விடுவாள் என்பதால் எங்களுக்கு பள்ளி விடுமுறைவிடப்பட்டு பாட்டியிடம் ஒப்படைத்து விடுவார்கள். எப்படியும் விளையாட்டில் இரண்டு மூன்று தடவை அக்காவை அழ வைத்துவிடுவேன். அப்போதெல்லாம் பாட்டிதான் எனக்கு நற்சான்று வழங்குவாள் என் பெற்றோரிடம். அதையும் மீறி என்னை திட்டினால், அன்று வீடு போர்களம் தான். அதனால் அதற்கான பூசை வேறொரு நாள் வழங்கப்படும்.

அந்த நாட்களில் அந்த வீதியில் தொலைக்காட்சிப் பெட்டியிருந்தது எங்கள் வீட்டில் மட்டும் தான். அதனால் தூர் தர்சனில் ஜீனோ, ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக் கிழமை தமிழ்ப்படம் போடும் நேரங்களில் எங்கள் வீடு ஒரு திரையரங்கு போல காட்சியளிக்கும். பாட்டிதான் அருகில் அமர்ந்திருப்பாள். அவள் மடியில் அமர்ந்துதான் எல்லா பார்வையாளர்களையும் கவனித்துக் கொண்டிருப்பேன். பிறகு எல்லோர் வீட்டிலும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்தும் எங்கள் வீட்டில் மட்டும் கருப்பு வெள்ளை பெட்டியில் படம் பார்த்தபோதும் பாட்டிதான் அருகில் அமர்ந்திருப்பாள்.

தேர்தல் நேரங்களில், பாட்டிக்கு அவ்வளவு மரியாதை இருக்கும். காரில் வந்து கூட்டிச்செல்வார்கள் வாக்களிக்க. துணையாக என்னையும் கூட்டிச்செல்வாள். வாக்குச் சாவடி செல்வது அதுதான் முதல் தடவை. துப்பாக்கியுடன் நின்ற காவலரை பார்த்து சிறிது பயந்து கால்கள் அடியெடுக்க மறுக்கும். பாட்டிதான் இழுத்துச் செல்வாள். "பேரனா?" என்று கேட்டு உள்ளே அனுமதிப்பார் அந்த காவலர். பாட்டிக்கு கருப்பு மை வைத்தபின் எனக்கும் வைகச்சொல்லி கேட்டு வாங்கி வைத்துக் கொள்வேன். ஓட்டுப்பெட்டிவரை கூட்டிச்சென்று, என்னைத்தான் சின்னம் சொல்லி முத்திரை குத்த சொல்வாள். ஓட்டு போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வருவோம். எப்படியும் ஒன்றிரண்டு பெரிசுகள் துணைக்கு சேர்ந்து அரசியல் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்வோம்.

அப்பொதெல்லாம் எனக்கு தெரிந்து அவள் உடல் நிலை சரியில்லையென்று மருத்துவரிடம் சென்ற நினைவில்லை. திருநீரு மந்திரித்து பாடம் சொல்லும் பெரியவரிடம் தான் மாலை நேரத்தில் என்னையும் அழைத்து செல்வாள். எனக்கும் பெரும்பாலான நேரங்களில் அவர்தான் பாடம் போட்டிருந்தார். அவர் தன்னை ஒரு பெரிய மந்திரவாதி போலெல்லாம் காட்டிக் கொண்டதில்லை. மெலிந்த தேகத்தோடு நெற்றி நிறைய திருநீரு வைத்து,சட்டை அணிந்து கொள்ளாமல் வெள்ளை வேட்டி மட்டும் அணியும் காங்கிரஸ் காரர். ஏதொ ஒரு வகையில் அவர் எங்களுக்கு உறவுக்காரர் என்பதால், அங்கு உபசரிப்பும் நலம் விசாரிப்புகளும் எப்போதும் இருக்கும். அவரின் பிளைப்பு நெசவுத்தொழில் தான். அப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் அதுதான் தொழிலாக இருந்தது. நாங்கள் சென்றதும் அவர் மங்கிய ஒளியில் இருக்கும் வீட்டில், தறியிலிருந்து வந்து நலம் விசாரிப்பார். பாட்டி சிறிது நேரம் கதைகளை பேசிக்கொண்டே தன் கழுத்து வலியையொ, காய்ச்சலை பற்றியோ சொல்வாள். கழுத்து வலியாக இருந்தால் இரண்டு உலக்கைகளை பாட்டொயின் இரண்டு கைகளில் கொடுத்து சிறிது நேரம் நிற்க வைத்து விடுவார். பின்னார் தனது பூசை அறையில் உள்ள அனைத்து சாமிகளிக்கும் பாட்டு பாடி திரு நீரு கொடுப்பார். அதனை நெற்றியில் பாட்டி இட்டுக்கொண்டு எனக்கும் வைத்து விடுவாள். சிறிது நேரம் பேசிக்கொண்டு பாட்டி தான் நிவாரணம் அடைந்ததாக உணர்ந்ததையும் சொல்லுவாள். பின் பெரும்பாலான நேரங்களில் அங்கேயே உணவு உண்டுவிட்டு கிளம்புவோம். மந்திரம் சொல்லும் பெரியவர் வருபவர்களிடம் கேட்கும் ஒரெ பொருள் கற்பூரம்.

அப்போதெல்லாம் எனக்குள்ளே அவரைப்பற்றி நிறைய கேள்விகள் எழும். வருமையில் இருந்த அவர் ஏன் வைத்தியம் செய்ததற்கு காசு வாங்குவதில்லை? அவர் சொல்லும் பாடம் மற்றும் மந்திரத்தினால் எப்படி வலியும் பயமும் நோயும் குணமாகிறது? போன்ற கேள்விகள் விடையில்லாமல் இன்னும் இருக்கின்றன.

Friday, November 28, 2008

இந்திய அரசே.. இந்தியர்களை காப்பாற்று

மும்மையில் தீவிர வாதத்தின் பிடியில் சிக்கி உயிரிழந்த அனைத்து மனிதர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள். பல உயிர்களை காப்பற்ற தங்கள் உயிரை கேடையமாக்கிய காவலர்கள், இராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதியின் பணியாளர்களுக்கு எமது இரங்கல் மற்றும் வணக்கங்கள்.

இழப்பின் கொடுமை தமிழினத்தைவிட வேறு எந்த இனமும் அதிகமாக அனுபவித்திருக்காது. அந்த அடிப்படையில் இந்திய அரசை இவ்வாறு கோருவதில் எமக்கே அதிக கடமை இருக்கிறது.

"இந்தியர்களை பாது காக்க இந்திய கடற்படை மற்றும் அனைத்து படைகளையும் பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு ஒரு நாட்டுக்கு வாடகைகு அனுப்பியதால்தான் இந்த விளைவுகள் என்பதை சொல்ல இந்தியன் என்ற தகுதி போதுமென்றே நினைக்கிறேன்."

Friday, November 7, 2008

அரசியல் சதுரங்கம் 1

ஆட்சி, பதவி, மரியாதை, ஒப்பத்தங்கள் என்ற பல பரிமானங்களில் பயணம் செய்யும் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் விமர்சனம் செய்யும் தகுதி தனக்கில்லை என்றாலும் அவர்களின் செயல்கள் ஏதாவது ஒருவகையில் தன்னை பாதிக்கவே செய்கிறது என்ற பாமரனின் குரல் பெரும்பாலான நேரங்களில் கவனிக்கப் படுவதில்லை.

தி மு க - கலைஞர்

தன் இளம் வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு திராவிட கொள்கைகளையும், பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டையும் மக்களிடம் கொண்டுசேர்த்ததில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார் என்பது கழகம் அவருக்கு கொடுத்த பதவிகள் சொல்லும். அடிமட்ட தொண்டனில் தொடங்கி தலைமை பொறுப்பை தன்வசப் படுத்த, அற்பணிப்பை விட அவரின் அரசியல் சாமர்த்தியம் முக்கிய காரணம். போரில் போர் தர்மங்கள் எப்படியோ, அதே போல் அரசியலில் தர்மம் இருக்கக் கூடாது என்பதுதான் அரசியல் தர்மம். அன்று இருந்த கலைஞர் தான் இன்றும் இருக்கிறார் என்றால் அவரிடம் சில கேள்விகள்,

1. அறியாமை இருளகற்ற தொடங்கிய இயக்கத்தின் தலைவர், மக்களின் அறியாமையைய் தன் ஆட்சிக்கு படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டது, பகுத்தறிவா?

உதாரணம்:

1. இலவச தொலைக்காட்சியினால் ஒரு குடும்பத்தை வருமையில் இருந்து உயர்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு பகுத்தறிவா?.

2. ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தனிமனிதனின் வருமானம் ஒரு ரூபாய் அரிசி வாங்கும் அளவிலேயே வைத்திருப்பதுதான் பகுத்தறிவு கோட்பாடா?

3. பெரியாரின் கொள்கைகளை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் இத்தனை ஆண்டுகள் பரப்பியும் சாதியையும், சாமியின் பெயரால் நடக்கும் கூத்துக்களையும் ஏன் ஒழிக்கமுடியவில்லை?

4. பொதுவுடமை தத்துவத்தில் வளர்ந்த இயக்கத்தில் எத்தனை முதலாலிகள், மக்கள் வரிப்பணத்தை தின்றுகொண்டு அமைச்சர் பதவி அனுபவிக்கிறார்கள் என்று தெரியுமா, தலைவருக்கு?

5. மக்களாட்சி தத்துவத்தை முன்னெடுக்கும் இயக்கம் மன்னராட்சி முறைபோல் வாரிசுக்கு பட்டம் கட்டுவது ஏன்? ஸ்டாலினும், அழகிரியும், கணிமொழியும் இயக்கத்துக்காக உழைத்தவர் என்றால் கழகத்தில் வேறு யாருமே உழைக்கவில்லையா? அப்படியானால் உழைக்காத தொண்டர்களை உருவாக்கியது யார்?

6. உங்களைப்போல் அடிமட்ட தொண்டன் இன்று தலைமை பதவிக்கு வரக்கூடிய சூழலை (உங்கள் குடும்பத்தை தவிற)இயக்கம் வைத்திருக்கிறதா?

இவையெல்லாம் அடிப்படை கோட்பாட்டின் கீழ் அமைந்த கேள்விகள். அன்றாட அரசியலில் அர்த்தம் புரியாம் தவிக்கும் பாமரனின் மனதில் ஆயிரம் கேள்விகள்.

Friday, October 31, 2008

சாப்ட்வேர் இஞ்ஜினியர் - நேற்று - இன்று

நேற்று:

பக்கத்து ரூம் நண்பர்கள் :அவனுக்கென்னப்பா ஒன்னாந் தேதியான ரொக்கமா இருபதாயிரம், முப்பதாயிரம் சம்பளம் வாங்குறான்.
---------
ஆட்டோகாரர் : சார்.. பாத்து ஒரு நூறு ரூபா கூட போட்டு குடு சார். டைடல் பார்க்ல வேலை செய்யற... ஆட்டோக்காரங்கிட்ட கணக்குப் பாக்கிறயே சார்.

சாப்ட்:(மனதுக்குள்) டைடல் பார்க் முன்னாடியே இறங்கி கொஞ்ச தூரம் நடந்து வந்திடனும்.
-----------
டாக்டர்: என்ன வேலை பாக்குறீங்க...

சாப்ட்: (மனதுக்குள்)பல் வலிக்கு மருந்து குடுக்க நான் என்ன வேலை செய்யறேன்னு சொல்லனுமா.... சாப்ட்வேர் இஞ்ஜினியர்..

டாக்டர் : அப்படிங்களா.... இதுல உங்க பல்லு வலிக்கு மருந்து எழுதிருக்கேன். பீஸ் மூனாயிரம்.

சாப்ட் : (மனதுக்குள்)நெஞ்சு வலிக்குதுங்க டாக்டர்.

------------
போக்கு வரத்து காவலர் : ஏப்பா இவ்வளவு வேகமா வண்டிய ஓட்டிடு எங்க போற.(மத்திய கைலாஸ்-ல் நின்னுட்டு.)

சாப்ட் : சார்.. ஸ்பீடு லிமிட்ல தான் வந்தேன். (அதான் ஐடி கார்ட பாத்துட்டீங்கள்ள.. வண்டிய தள்ளிட்டு வந்தாலும், ஓவர் ஸ்பீடுன்னு புடிப்பீங்க..நேத்து லேட் நைட் வேலை செஞ்சது, காலைல கிளையன்ட் மீட்டிங்குன்னு சொன்னா விட்டுடவா போறீங்க..)

போக்கு வரத்து காவலர் : பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... எந்த கம்பெனி.. சரி ஒரு 500 ரூபா பைன் கட்டிருங்க.

சாப்ட் : பணத்தை கொடுத்து விட்டு. (மனதுக்குள்)இனிமேல் இந்த ஐ.டி கார்ட வெளிய மாட்ட கூடாது..
------------

வீட்டு புரோக்கர் : சார்.. இப்பல்லாம் வீடு கிடைக்கறதே பெரிய விசயம். நீங்க சாப்ட்வேர்ல ஒர்க் பண்றேன்னு சொல்றீங்க... உங்களுக்காக ஒரு வீடு பாத்து வச்சுருக்கேன். வாடகை பதினைஞ்சாயிரம் ரூபா. கமிசன் எழாயிரத்து ஐநூறு.

சாப்ட் : (மனசுக்குள்..) இதுக்கு முன்னாடி குடியிருந்தவர் மூவாயிரத்து ஐநூறு ரூபாதான் குடுத்துட்டு இருந்தாருன்னு பக்கத்து வீட்ல சொல்றாங்க.
----------

பெண்வீட்டார் : மாப்ளை சாப்ட் வேர் இஞ்ஜினீர்ங்கரதால நாங்க வேற எதப்பத்தியும் கவலை படலை. இந்த 100 சவரன் நகையும், காரும், ரொக்கம் 10 லட்சம்தான் என்னால என் பொண்ணுக்கு செய்ய முடியும்.

சாப்ட்: (மனதுக்குள்..) எனக்கு பொண்ணை குடுக்கிறீங்களா? இல்லை என் வேலைக்கு பொண்ணை குடுக்குறீங்களா?
... சரி இவ்வளவு தொந்தரவு பண்றதால சரி.. உங்க பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.

------------

இன்று.... நாளை..

Wednesday, October 29, 2008

செய்தி திணிப்பு 2

இன்றய செய்தி திணிப்பு

தி ஹிந்து.

1. தேஸ்முக் வட இந்தியர்களுக்கு ஆறுதல்.
2. ஆனத் உலக சாம்பியன்.
3. நில நடுக்கம் காரணமாக பாகிஸ்தானில் 170 பேர் பலி.
4. மஹாராஸ்ட்ரா வில் நடந்த சம்பவங்களுக்கு மத்திய அரசு. - மாயாவதி.
5. பாராமுலாவில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.
6. ஜெயலலிதாவுக்கு வந்த மிரட்டல் கடிதம் மீதான மனுவை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.
7. பாதுகாப்பு குறைவான மாநிலங்களுக்கு ரயில் போக்கு வரத்தை நிருத்த தயங்க மாட்டோம். - பிகார் மக்கள் மகாராஸ்ட்ராவில் தாக்கப் பட்ட சம்பவத்துக்கு லாலு பிரசாத் எச்சரிக்கை.
8. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை - கருணாநிதி.
9. தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பின் பாதுகாப்பை மீறி குண்டுகள் வீசி சென்றுள்ளனர்.

இலங்கையில் கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

தினமலர்

1.ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல்! தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை.(எழுதியது விடுதலைப் புலிகள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட வில்லை. இந்த சூழ்நிலையில் புலிகளின் இயக்கம் இது போன்ற செயல்களை செய்திருக்க வாய்ப் பில்லை என்பது அறிவுள்ள எவர்க்கும் விளங்கும்)
2. பாகிஸ்தானில் பூகம்பம்: 200 பேர் பலி.(மற்ற பத்திரிக்கை களில் 170.)
3. இலங்கை பிரச்சனைக்கு ராஜிவ் வழியில் தீர்வு காணவேண்டும். - கருணாநிதி.
4. அடுத்த தாக்குதல்! மும்பையில் உ பி வாலிபர் கொலை. அமர்சிங் மாயவதி கடும் எரிச்சல்.
5. நிதி நெருக்கடி நிலவரம். சிதம்பரம் ஆலோசனை.
6. கொழும்பு, மன்னார் முகாம்களில் புலிகள் குண்டு வீச்சு.
7. ஆனந்த் உலக சாம்பியன்.

புலிகளின் கொழும்பு விமான தாக்குதல், கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

தின தந்தி

1. பாகிஸ்தானில் நில நடுக்கம் : 170 பேர் பலி
2. இயக்குனர்கள் சீமான், அமீர் பினையில் விடுதலை.
3. இலங்கை தமிழர்களுக்கு 2 1/2 கோடி கருணாநிதியிடம் வசூல்.
4. ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்.
5. உலக சதுரங்கம் - ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.

தின மணி

1. இன்னும் பத்து நாட்களில் தனியார் நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை.
2. பாகிஸ்தானில் நில நடுக்கம் 170 பேர் பலி
3. கனடாவில் இருந்து ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்.
4. நீலிக்கண்ணீர் வடிக்கிறார் இலங்கை அதிபர் - ராமதாஸ்
5. பா ஜா கா ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு.
6. உ. பி இளைஞர் மும்மையில் அடித்து கொலை.
7. இலங்கை ராணுவத்தினர் 60 பேர் பலி.
8. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்.

தமிழர் எழுச்சியை தடுக்கும் நாளேடுகளை உங்கள் இல்லத்திலும், அலுவலகங்களிலும் தவிர்க்கவும்.