Thursday, April 27, 2017

கல்வியும் பாடமும்

அக்கவுண்ட்ஸ்- பெயரைக்கேட்டாலே தெரிக்க வைத்த பாடம். வேறு வழியில்லாமல் இளநிலை, முது நிலை பாடங்களில் படித்து தேர்ச்சி பெறவேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் படித்தது. C, C++, Java என்று மோட்டு வளையைப் பார்த்து கனவு கண்டுகொண்டிருந்த போது, விதி Tallyஐ- வேண்டா வெறுப்பாக படித்து புலமை பெற்று பிழைப்பு நடத்த வேண்டிய சூழலை உருவாக்கியது. இப்போது வேறு ஒரு முயற்சிக்காக மீண்டும் பொருளாதாரக் கணக்கியலைப் படிக்க வேண்டிய சூழல். ஒன்றிரண்டு பாடங்கள் முடித்த பின் நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். நானறிந்த சில B.Com படித்த நண்பர்கள் தனியாக தொழில் தொடங்கி நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் தொழிலைவிட்டு வெளியேற எண்ணிக்கொண்டு சில காரணங்களைச் சொன்னார்கள். அந்தக்காரங்களுக்கான விடை அவர்கள் கற்ற கல்வியிலேயே இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்து படித்திருப்பார்களா என்று கேள்வி எழுகிறது.


ஒருவர் தன் துறையின் எதிர்காலத்தைக் கணித்து முடிவுகளெடுக்க தவறியவர். இன்னொருவர் அடிப்படைக் கணக்குகளைக்கூடச் சரிவர செய்யாதவர்.


தொழில் செய்பவர்களுக்கு முக்கியமான தேவை, Market Sense. அதாவது சந்தை அறிவு, கூடவே தனது தொழிலை சந்தைக்குத் தகுந்தாற்போல் தகவமைத்துக் கொள்வது. இதைச் சுட்டிக்காட்ட பயன்படுவதே கணக்குகளின் மூலம் கிடைக்கும் நிலைகாட்டிகள்(Indicators). அதாவது லாபம், நட்டம், இயங்கு செலவுகள், சந்தை செல்லும் போக்கு போன்றவை. மோசமான சூழலில் இவை ஒன்றைச் சொல்லும், அதாவது தொழிலை விட்டு வெளியேறும் தருணம். இதைக் கணிக்க முடியாமல்தான் இவர்கள் சுழலுக்குள் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்கள்.


ஆக கல்வியில் குறையில்லை, பாடங்களைக் கற்றுக்கொள்ளாதவர்களின் குறையே தோல்விக்குக் காரணம் என்று சொல்லலாம்.

Monday, April 24, 2017

மொழிப்போராட்டமும் புளியம்பட்டியும்

இன்று மத்திய நடுவன் அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு இயக்கங்கள் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தும், தொடர்ந்து தமிழில் பேசவும், எழுதவும் முயற்சியெடுக்கும் காலத்தில், நமக்கு முந்தைய தலைமுறை, அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த 1965களின் தலைமுறையின் அனுபவத்தை, குறிப்பாக புன்செய்ப் புளியம்பட்டியில் மொழிப்போராட்டத்தின் வீச்சு, போராட்ட வடிவங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு(2016) இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது சில முக்கியமான மொழி ஆர்வலர்கள் என்று அறியப்படுகிற மதிப்பிற்குரியவர்களிடம் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

அந்தக் காலத்திலேயே "மறைமலை அடிகள் மன்றம்" என்ற இயக்கத்தை ஆரம்பித்து தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதில் எனது தந்தையும் இடம்பெற்றிருந்ததால் மறைமலையடிகள் மன்றம் தொடர்பான ஏடுகள் சிலவற்றை சிறுவயதில் பார்த்திருந்தேன்.  பெரும்பான்மையான மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறையில் பணியாற்றியவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் புளியம்பட்டியிலும் எதிர்ப்பைத் தெரிவித்து போராட எண்ணம் எழுந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் காவல் துறை அடக்குமுறையும் பலமாக இருந்திருக்கிறது. போராட்டக்காரர்கள் என்று அறியப்படுபவர்களை உளவுத் தகவல்கள் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் வெகுவாக நடந்துவந்திருக்கிறது. அன்றைய ராஜாஜியின் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

கைது நடவடிக்கைகள் பற்றிய செய்தி புளியம்பட்டியில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது. அரசுப்பணியில் இருந்தததால் தமிழார்வலர்கள் பணிப்பாதுகாப்பைக் கருதி போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று பணியை இழந்து குடும்பங்களை தவிக்கவிட்டுவிடுவோம் என்று சிறிது தயக்கம் காட்டியுள்ளனர். சில கருத்து வேறுபாடுகள் தமிழார்வலர்களுக்குள் எழுந்திருக்கிறது. ஒரு சிலர் போரட்டம் மூலம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக் கொள்ளவும் விரும்பியிருக்கின்றனர்.

அந்த சமையத்தில், காவல் துறை மறைமலை அடிகள் மன்றத்தைப் பற்றி தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதாக உறுப்பினர்களுக்கு செய்தி வருகிறது. மன்ற உறுப்பினர்கள் சிலர் தலை மறைவாகின்றனர். காவல் துறையின் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள மறைமலை அடிகள் மன்றம் தொடர்பான ஆவணங்கள் மறைக்கப்படுகிறது. இருந்தும் காவல் துறையிலிருந்து மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு அழக்கப்பட்டிருன்கின்றனர். விசாரணைக்குச் சென்றவர்களிடம் அரசுப்பணி இழப்பு, கைது நடவடிக்கைகள் என்று அச்சுறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று கடிதம் எழுதி வாங்கி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மன்றத்தின் நடவடிக்கைகள் அதன்பிறகு வெகுவாக குறைந்திருக்கிறது.

அதே சமையத்தில் திராவிட முன்னேற்றகழகத்தினர் தமிழ்நாடெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். புளியம்பட்டியைப் பொறுத்த அளவில் பெரியவர் திரு பு.ஆ. சாமிநாதன், திரு பு.கா. ஆறுமுகம் போன்றவர்கள் போராட்ட முனைப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தசமயத்தில் நடந்த போராட்டமொன்றில் கலந்து கொண்டு சிறை சென்றவர் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு அக்பர் அவர்கள். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றதால் மொழிப்போராட்ட தியாகியாக அறியப்பட்ட அவருக்கு கழகத்தில் முக்கியப்பொறுப்புகள் வழங்கப்பட்டது.

தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பிற்கு எதிராக வலுவடைந்து  பொள்ளாச்சியில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு, பலர் கொத்தாக கைது செய்ப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்களின் பின்னும், சத்தியமங்கலத்தில் நடந்த போராட்டத்தில் திரு முத்து உயிர்த்தியாகம் செய்தார். பெரும் எழுச்சியடைந்த போராட்டம் மத்திய அரசை கலக்கியது. தலைவணங்காத தமிழகத்தின் தன்மானம் கண்டு மத்திய அரசு தன் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. அதன் பின் நடந்த தேர்தலில் முதன் முதலாக திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது வரலாறு.

Tuesday, February 28, 2017

புத்தகப் பரிசு

கடந்தவாரம் என்னைப் பின் தொடருபவர்களுள் சிலருக்கு இரா. முருகவேள் அவர்களின் முகிலினி புதினம் அன்பளிபப்பாக தருவதாகச் சொல்லியிருந்தேன். என்னுடன் நட்பில் இருந்தமைக்கும், உரையாடல் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து அவர்கள் நேரத்தை செலவிட்டமைக்கும் நன்றியாக இந்தப் புத்தகங்களைப் பரிசளிக்க எண்ணினேன். மற்றவர்க்கு அளிக்கும்போது இருமடங்காகப் பெருகும் மகிழ்ச்சியைத் தரவல்லது புத்தகமும், அறிவும். அந்த வகையில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

சிறு ஆலோசனை. ஏன் இதை முடிந்த அனைவரும் செய்யக்கூடாது? ஒரு புத்தகத்தை உங்கள் நண்பருக்கு பரிசளிக்கக் கூடாது. புத்தகம் பெற்ற நண்பரும் தன் நண்பர் ஒருவருக்கு ஒரு புத்தகத்தை பரிசளிக்கலாம்.

அதேபோல் புத்தக விற்பனை நிலையங்கள், பதிப்பகங்கள் புத்தகங்களைப் பரிசளிக்க தங்கள் இணையப்பக்கங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம்,

உதாரணமாக

1. புத்தகத்தைத் தேர்வு செய்து, பரிசளி என்ற தேர்வை வழங்கலாம்.
2. பிறகு புத்தகத்தை பெறும் நபரின் முகவரியை உள்ளீடு பெற்றுக்கொள்ளலாம்.
3. பரிசளிப்பவர் விரும்பும் வாசகத்தை புத்தகத்தில் இடம்பெறச்செய்யலாம், உதாரமாக வாழ்த்துகள்
4. பெறுபவர் பரிசாக விரும்பும் புத்தகம் பெற்றுகொள்ள பரிசுக்கூப்பன்கள் இணையத்தில் அனுப்ப வசதி

கவனத்திற்கு:

Vediyappan M Munusamy
Badri Seshadri
Kannan Sundaram
Panuval BookStore
udumalai.com
பூவுலகு
Abdul Hameed Sheik Mohamed
யாவரும்.காம்

#giftabook

Monday, February 27, 2017

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

இன்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் மாதாந்திர தமிழ் இலக்கிய தொலையுரையாடலில் திரு Aazhi Senthilnathan சிறப்பு அழைப்பளராகக் கலந்து கொண்டு தமிழ் மொழியுரிமை முக்கியத்துவம் குறித்தும், அயலில் வாழும் தமிழர்கள் இணைந்து எப்படி தமிழகத்தில் தமிழ்க் கல்வி  மற்றும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அல்லது சமவுரிமை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டது. அதில் முக்கியமாக தமிழகத்தில் நாம் பயன்படுத்தும் சேவைகளை (அரசு மற்றும் தனியார்) சேவைகளைத் தமிழில் தரக்கோரி அழுத்தம் கொடுப்பது.

ஏற்கனவே PLE மற்றும் CLEARல் இணைந்து இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், சில நாட்களுக்கு முன் இந்தியப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட அனுபவத்தை நினைவுகூறுவது பொருத்தமாக இருக்கும்.

சென்னையிலிருந்து கோவை சென்ற விமானத்தில் அறிவிப்புகள் மற்றும் சேவைகள் போஜ்புரி, இந்தி,மராத்தி மற்றும் உருதுவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அருகில் ஒரு தமிழ்க் குடும்பம், சிறு குழந்தையுடன் பயணித்தைக் கவனித்தேன். பெரும்பாலான பணிகள் தமிழர்கள்தான். ஆனால் விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லையென்றாலும் 1 மணி நேரத்தில் என்னவாகிவிடும் என்று அமைதியாக இருந்தேன். ஆனால் கூடவே பயணம் செய்த தமிழ்க் குடும்பத்தினரின் குழந்தைக்கு பசியேற்பட்டிருக்கும் போல், அழுது கொண்டே இருந்தது. பெற்றோர்களுக்கும் தமிழைத் தவிர வேறு மொழியில் உரையாட பழக்கமில்லை போலும். பிறகு ஒரு வழியாக ஒரு பழச்சாற்றை வாங்கிக் கொடுத்து அமைதிப்படுத்தினார்கள். தமிழில் சேவை வழங்கியிருந்தால் இன்னும் கூட தேவையான உணவை வாங்கியிருக்கக் கூடும். 

அதைவிட முக்கியம் அவசர கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில். எத்தனைபேர் அவசர காலத்தில் இந்த அறிவுப்புகளைப் புரிந்து நடந்திருப்பார்கள்?

இதை நாம் கேட்காமல் எளிதாகக் கடந்துவிடலாம் அல்லது ஏன் இந்தி கற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்று பண்ணையார்த்தனமாக கேட்கலாம். அவர்களுக்கு என் பதில், இந்தியைவிட தமிழ் எங்கு, எதில் குறைந்தது? எனக்கான சேவையைப் பெற ஏன் நான் இன்னொரு மொழியை கட்டாயமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்? 

அப்படி இந்தியை கட்டாயமாக்குவது ஐய்யரின் வாயில் ஆட்டுக்கறியைத் திணிப்பதற்கு ஒப்பானது. 

மேலே குறிப்பிட்ட சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கடிதமொன்று எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு பதிலளித்த அவர்கள், தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் தவறை சரி செய்ய ஆவன செய்வதாகக் கூறியிருந்தனர்.



நீங்கள் வேண்டினால் மட்டுமே உங்கள் உரிமை உங்களுக்கு. அப்படித்தான் இங்கு ஆட்சியாளர்கள் நம்மை வைத்திருக்கிறார்கள்.

Friday, February 24, 2017

அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு...

நேற்று கான்சஸின் ஓலெத் நகரத்தின் பார் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிரீனிவாசு மற்றும் அலோக் என்ற இரு இந்தியர் உட்பட மூன்று பேரை ஆடம் என்ற அமெரிக்கர் பார் ஒன்றில் சுட்டுவிட்டு ஓடித் தப்பியுள்ளார். பின் 6 மணி நேரத்திற்குப் பிறகு சம்பவம் நடந்த இடத்திலிருந்து 70 மைல் தொலைவில் வேறொரு பாரில் ஆடம் பிடிபட்டுள்ளார். அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பும் களமிறங்கியுள்ளது.

சமீபத்தில் சிரீனிவாசு உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. அலோக் மற்றும் இன்னொரு அமெரிக்கர் காயங்களுடன் உயிர் தப்பியதாகத் தெரிகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுசுமா சுவராசு தனது இரங்கலைத் தெரிவித்தது தான் சிரீனிவாசுவின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியர் இருவரும் கார்மின் என்ற ஜிபிஎஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று பாரில் விளையாட்டு போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த போது சலசலப்பேற்பட்டு வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதில் ஆடம் தம்மைவிட நீங்கள் எந்தவகையில் உயர்ந்தவர் என்று கேட்டும் தமது நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிரீனிவாசிடம் கத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆடம் மெரைனில் பணியாற்றியவர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அதிபர் டிரம்ப் பதவியேற்றபின் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதுடன் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் இங்குள்ள அமெரிக்கர்களைவிட உயர்ந்த வாழ்க்கை வாழ்வதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர்களின் வேலை வாய்ப்பு, ஊதியம், வெளியே தெரியுமாறு பயன்படுத்தும் வாகனம், வீடு, நகைகள் போன்றவை காரணமாக இருக்கிறது. அலுவலகங்களில் கூட இந்தியர்களின் முன்னேற்றம், பதவி, ஊதியம் குறித்து அமெரிக்கர்களுக்கு பொறாமையுண்டு. பதவி உயர்வு போன்ற தருணங்களில் அமெரிக்கர்களுக்கு இந்தியர் மேல் பொறாமை ஏற்படுவதைப் பார்ப்பது சாதாரணம்.

இந்த இக்கட்டான காலத்தில் இந்தியர்களோ வேறு வெளி நாட்டவரோ தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

1. தற்போதைய காலகட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை உணர்க. 

2. மக்கள் அதிகம் கூடுமிடங்கள், பார், பப் போன்ற கேளிக்கை விடுதிகளில் மது அருந்திய பின் மனிதர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பது இயல்பு. அந்த இடங்களில் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். முடிந்தால் சிலகாலம் அந்த இடங்களைத் தவிர்க்கவும்.

3. பொது இடங்களில் அரசியல் பேசுவதைத் தவிர்க்கவும்.

4. வம்புச் சண்டைக்கு யாரேனும் வந்தால், சண்டையில் பின்வாங்கிச் செல்லுங்கள். ஒருபோதும் சண்டையில் ஈடுபடாதீர்கள்.

5. பையிலோ சட்டையிலோ நிறைய பணம், கடனட்டைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றிரண்டு போதுமானது. 

6. சுத்தமாகப் பணமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து டாலர்கள் வைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் துப்பாக்கியைக் காட்டி காசு கேட்பவர்களுக்கு  கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ள வசதியாக இருக்கும். கையில் காசே இல்லையென்னும் போது உங்களிடம் காசு கேட்டு மிரட்டுபவர் ஏமாற்றத்திற்குள்ளாகி எதுவும் செய்யலாம். இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

7. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதிக நகைகளுடன் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

8. ஆடம்பரக் கார்களை பொருளாதார வித்தியாசம் அதிகம் உள்ள பகுதிகளில் பயன்படுத்துவதைத் தவிற்கவும்.

9. முடிந்த அளவு சமூகத்துடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்திய சமூகத்துடன் உறவை வழுப்படுத்துங்கள். மாநில சங்கத்தில் பங்கேற்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள்.

10. குழந்தைகளுக்கும் பள்ளியில் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க பழக்குங்கள்.

11. அமெரிக்கர்களிடம் போட்டியோ, சண்டையோ ஏற்படும் சூழலில், குறிப்பாக சூழல் நமக்கு சாதகமில்லாதபோது, தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாக வெளியேறிவிடுங்கள்.

12. சமூக ஊடகங்கள், பொது வெளிகளில் இனவெறுப்பு தொடர்பான உரையாடல்களத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

13. சேமிப்புகளியும், கைக் காசைப் போட்டுச் செய்யும் பெரும் முதலீடுகளையும் சிலகாலம் தவிர்க்கவும்.

இது நாம் வாழ வந்த நாடு. இங்கு நம்மைவிட இங்கேயே வாழ்பவர்களுக்கு அதிக முன்னுரிமை உண்டு. அவர்களின் வாழ்க்கை நம்மால் பாதிக்கப்படும் என்று அவர்கள் நினைக்கும்போது இயல்பாக வெறுப்பு எழுவது சாதாரணம். மனிதனும் ஒரு சமூக விலங்குதான். தனக்கு பாதுகாப்பில்லாமல் அச்ச உணர்வை அடையும்போது பாதுகாப்பையும், தன்னிருப்பையும் உறுதி செய்துகொள்ள Wildஆக நடந்து கொள்வது எதிர்பார்க்கக் கூடியதுதான்.

இப்போதைய நிலமையில் பாதுகாப்பிற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து இணக்கமாக வாழ வேண்டிய அவசியம் வெளிநாட்டிலிருந்து வந்து வசிப்பவர்களுக்கு எப்போதையும் விட இப்போது தேவை அதிகமாக உள்ளது.

இனவெறியர்களை எதிர்கொள்ள சிக ஆலோசனைகள்

Monday, February 20, 2017

கரை சேருமா கலிபோர்னியா...

உலகத்தின் மென்பொருள் சந்தையில் கலிபோர்னியாவின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். மைக்ரோ சாப்ட் முதல் ஆப்பிள் வரை இங்கு ஏதாவதொரு கராஜில் தான் அதன் பிரசவம் நடந்திருக்கும். அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சந்தைக்கு சாதகமான சூழல் நிலவும் கலிபோர்னியாவுக்கு ஒரு சாபம் வந்தது. இதற்கு முன் பல முறை வறட்சியை சந்தித்திருந்தாலும், சமீபத்தில்  2012ல் இருந்து மிகுந்த வறட்சியை  சந்தித்து வருகிறது. அமெரிக்கர்களுக்கு வறட்சி என்பது புதிது. காரணம் சராசரி தண்ணீர் பயண்பாடு அமெரிக்காவில் அதிகம். அது குழியல் அறையில், சமையல் அறையில், புல்வெளி, நீச்சல் குளம் என்று பல்வேறு வகைகளில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை சர்வ சாதாரணமாக செலவழித்து வாழும் வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டது. 

ஆனால் படிப்படியாக அந்த நிலை மாறி குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழல் ஒரு சில மாகாணங்களில் நிலவுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது கலிபோர்னியா. அமெரிக்காவின் மேற்கில் பசிபிக் கடலை ஒட்டியிருக்கும் கலிபோர்னியா நில அமைப்பில் பள்ளத்தாக்குகளையும் அருகில் பாலைவனத்தையும் கொண்டிருக்கிறது. கலிபோர்னியாவின் இப்போதைய வறட்சிக்கு முக்கிய கரணமாகச் சொல்லப்படுவது மூன்று காரணங்கள். அவை உலக வெப்ப மயமாதல், எல் நினோ, கலிபோர்னியாவை ஒட்டிய கடலில் நிலவும் வெப்ப மண்டலம்.

உலக வெப்பமயமாதலை பலர் இன்னும் கற்பனையே என்று எண்ணியும் வாதிட்டும் வரும் நிலையில், அது உண்மை, அதை நாங்கள் அனுபவித்து வருகிறோம் என்று கலிபோர்னிய ஆளுநரும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உலகத்திற்குச் சொன்னார்கள். பூமியின் ஆதாரமான நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களை தொடர்ந்து எரித்து வளிமண்டலத்தை வெப்ப காற்றும், புகையுமாக நிரப்பி வைத்ததும், பிளாஸ்டிக் போன்ற எளிதில் மக்காத பொருட்களின் உபயோகமும் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அடுத்து எல் நினோ. பூமியில் தற்போது நிகழும் பெரும்பான்மையான இயற்கைச் சீற்றங்களுக்கும், சீரற்ற வானிலைக்கும் இதை காரணமாகச் சொல்கின்றனர். புவியின் சுழற்சியால் வளிமண்டலத்தில் பயணிக்கும் சூடான காற்று புவியீர்ப்பு விசை மற்றும் சூடான காற்று குளிர்ந்தவுடன் கீழ்நோக்கி வரும்போது அது கடலில் நிகழ்த்தும் மாற்றம் என பல இயற்கை மாற்றங்களை எல் நினோ என்கிறார்கள். இந்த நிகழ்வு கணிக்க முடியாத அளவில் நிகழ்வதால் இதனால் ஏற்படும் இயற்கைச் சீற்றத்தையும் கணிக்க முடியாமல் போகிறது.

அடுத்து கலிபோர்னியாவை ஒட்டியுள்ள பசிபிக் கடல் பகுதியில் நிலவும் வெப்ப மண்டலம். இந்த வெப்ப மண்டலத்தில் உருவாகும் வெப்பக் காற்று கலிபோர்னியாவில் ஈரப்பதைத்தைக் குறைத்து வறட்சியை உண்டாக்குகிறது. பொதுவாக மற்ற மாகணங்களில் பனிப் பொழிவு நிகழும்போது பனி மெதுவாகக் கரைந்து அதன் மூலம் நிலத்தடி நீராக மாற அதிக வாய்ப்புள்ளது. ஆனால் கலிபோர்னியாவைப் பொறுத்தவரை அங்கு நிகழும் வெப்ப மண்டலம் காரணமாக பனிப்பொழிவு நிகழாமல் பனி உருகி மழையாகப் பெய்கிறது. இது நிலத்தை நீண்டகாலத்திற்கு குளிர்ச்சியாக வைக்காமல் விரைவில் ஆவியாக வறண்டு விடுகிறது. வறட்சியான காலங்களில் மக்கள் தண்ணீர் பயன்பாட்டிற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீரை எடுத்துப் பயன்படுத்தினர். இதன் விளைவாக நிலத்துக்கடியில் இருக்கும் நீர் காலி செய்யப்பட்டது. நிலத்தின் மேலடுக்கைத் தாங்கி நின்ற நிறைகொண்ட தண்ணீர், காலியான வெற்றிடத்தால் நிலத்தின் அடுக்கு கீழே போக ஆரம்பித்தது. இந்த நிகழ்வு மேடான பகுதிகளை சற்று தாழ்த்தியும், தாழ்வான பகுதிகளை மேழும் தாழ்த்தியும் வைத்தது. நீண்ட நாட்கள் வறட்சியால் வாடியதால் நீர்த்தேக்கங்களை அரசு பராமரிக்க வில்லை. அதனால் பலவீனமடைந்த நீர் வெளியேற்றும் அவசரகால கண்மாய்களும் அணைகளின் பலமும் பாதிக்கப்பட்டது. தற்போது பெய்துவதும் மழையினால் ஒருவில் என்ற நகரிலுள்ள அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகமாகி வருவதால் அணையிலிருந்து நீரும் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இந்த சமயத்தில் கவனிக்காமல் விட்ட அவசரகால நீரை வெளியேற்றும் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு அணையின் உறுதித்தண்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அணையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆற்றின் கீழ்ப்பகுதியில் வசிப்பவர்களையும் அவசரகால நடவடிக்கையாக வெளியேறச் சொல்லியுள்ளனர். அணையை பெரும் பாறாங்கற்களைக் கொண்டு பலப்படுத்தி வரும் அதே நிலையில் மேலும் அதிக மழையை எதிர் நோக்கியுள்ளது கலிபோர்னியா. ஒரு காலத்தில் மழையில்லாமல் வறட்சியால் வாடிய மாகாணம் இப்போது மழை வந்தும் அதை சேமிக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறது.

இயற்கை மனிதனுக்கு கட்டுப்பட்டது என்று மனிதர்கள் இறுமாப்பு கொள்ளும் நேரங்களிலெல்லாம் இயற்கை இதுபோல் ஒரு நமட்டுச் சிரிப்புடன் தன் பலத்தை காண்பித்துக் கொண்டிருக்கிறது. கலிப்போர்னியா கரைசேருமா என்று காத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Wednesday, February 15, 2017

நன்றியுள்ள நாய்...

அந்த நாய் தெருவோரம் ஆதரவில்லாமல் அநாதையாக இருந்தது. அதனால் சக நாய்களுடன் சண்டையிட்டு தன் உணவைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அது தன் பலவீனத்தால் பல நேரங்களில் பட்டினி கிடந்தது. ஒரு நாள் அந்த வழியே வந்த இறக்க மனம் படைத்த பெண்மணி அதை அரவணைத்துக் கொண்டாள். அந்த நாய்க்கு அன்றிலிருந்து சுக வாழ்வுதான். அந்த வீட்டு வேலைக்காரிக்கு அந்த நாய்க்கு மூன்று வேளையும் தவறாமல் உணவளிக்கவும் பராமரிக்கவும் ஆணை வழங்கினாள் அந்தப் பெண்மணி. அந்த நாயும் ஆரோக்கியத்துடன் வளர்ந்து வந்தது. 

ஒரு நாள் அந்தப் பெண்மணிக்கு உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் படுத்தால். அந்த நேரங்களில் வேலைக்காரி அந்த நாய்க்கு உணவளிக்கும்போது தன்னை ஒரு எஜமானியாகவே கற்பணை செய்து கொண்டு ஒய்யாரமாக உணவளித்தும், தன் பேச்சைக் கேட்காதபோது அவ்வப்போது அந்த நாயை மிரட்டியும், சாட்டையால் அடித்தும் அடக்கி வந்தாள். அந்த நாய்க்கோ தன் எஜமானியின் நிலையால் வருத்தமும், வேலைக்காரியின் கொடுமையாலும் நாளுக்கு நாள் கவலையடைந்து வந்தது. அவள் போடும் உணவைக்கிஉட உண்ணாமல் பசியோடு சிலன்நாட்கள் இருந்தது. அப்போதெல்லாம் அது தன் எஜமானியின் பெரும் அன்பையும், அவர் அளித்த ஆதரவையும் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்ளும். தன் பேச்சைக் கேட்காத நாயின் மீது வேலைக்காரிக்கு நாளுக்கு நாள் கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இந்த நிலையில் ஒரு நாள் எஜமானி நோயினால் மரணமடைந்தாள். அந்த நாய் மிகவும் கவலையடைந்த தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. அது அந்த எஜமானியின் இறுதி ஊர்வலத்தில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இறுதியில் கண்ணீருடன் பின் தொடர்ந்தது. இறுதி ம்ரியாதை முடிந்து அனைவரும் திரும்பிய பிறகும் அந்த நாய் அந்த எஜமானியின் கல்லறை அருகிலேயே அழுது கொண்டு படுத்துவிட்டது. அந்த எஜமானியின் மறைவு பெரும் இழப்பையும், தனக்கு ஆதராவக இருந்த ஒரே உறவையும் இழந்தும் தவிர்தது.

வீட்டு வேலைக்காரி தான் இனிமேல் இந்த வீட்டு எஜமானியாகிவிடலாம் என்ற எண்ணத்துடன் வீட்டில் புதிய வேலைக்காரர்களை அமர்த்திக் கொண்டால். அவள் தன் எஜமானியைப் போலவே உடை, ஆபரணங்களை அணிந்து கொண்டாள். தனது எஜமானித் தனத்தை சோதிக்க அந்த நாயைத் தேடினாள். அது அந்த வீட்டிற்கு வந்து சேரவில்லை. அது அவளை எஜமானியாக ஏறதுக்கொள்ளவில்லை என்று குறிப்பால் உணர்த்தியதோ என்னமோ. கடைசி வரை அந்த நாய் தன் எஜமானிக்கு மரியாதை செத்யும் விதமாக அது அனத வேலைக்காரியை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அது சிலநாள் அந்த சுடுகாட்டிலியே எஜமானியின் கல்லரையைச் சுற்றிச் சுற்றி வந்து பின் ஒரு நாள் இறந்து போனது. அதன் நன்றியையும் எஜமானி விசுவாசத்தையும் பார்த்த வெட்டியான் அதற்கு சகல மரியாதைகளும் செய்து எஜமானியின் காலடியிலேயே புதைத்தான். அந்த நாயும் அதன் நன்றியும் அதன் எஜமானியின் புகழைச் சொல்லி காலம் கடந்தும் நினைவு கூறப்பட்டது.