Sunday, August 28, 2016

விளையாட்டு

வளர்ந்த நாடுகளுக்கும் வளரவே முடியாத அளவிற்கு தற்தடைகளை வைத்துள்ள நாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், குழந்தைகள் மீதான திறன் முதலீடு. இதை நீங்கள் பள்ளி/பாட சாலை செலவு என்று புரிந்து கொண்டீர்களானால் நாம் வளரவே முடியாத நாட்டில் வசிக்கப்பழகிவிட்டோம் என்றுணர்ந்து கொள்ளலாம். காரணம், பாட சாலைக் கல்வி என்பது குழந்தைகள் திறன் வளர்ப்பில் பத்து சதவீதம்தான்.
பள்ளிகளைத் தாண்டி, சிந்திக்கும் ஆற்றல், சமூக ஒத்திசைவு மனப்பாண்மையை குழந்தைகளிடம் வளர்க்கும் காரணிகளை கடந்த இருபதாண்டுகளில் அழித்துவிட்டோம், இன்னும் இருபதாண்டுகளுக்கு அதற்கான எந்த தொலை நோக்கும் நம்மிடம் இல்லை. அவை பொது விளையாட்டுத் திடல்கள், நூலங்கள், நீச்சல் குளங்கள்.
வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு 2000 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் வாழும் கிராமங்கள்/ஊர்கள்/சிறு நகரங்கள்/ நகரங்களில் ஒரு சிறந்த நூலகம், பொது விளையாட்டுத் திடல், பொது நீச்சல் குளம் போன்றவற்றை உருவாக்கி குழந்தைகள் முதல் பெரியவர் வரை தத்தம் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. சில இடங்கள் அரசுப் பள்ளி மைதானங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முன் அனுமதியுடன் வழங்கப்படுகிறது.
சரி, இதற்கும் திறன் மேம்பாட்டிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? கூட்டு விளையாட்டுகளான கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி போன்றவை குழுக்களாக இயங்கி நோக்கத்தை அடைவதற்கான பயிற்சி, பொது நோக்கத்கிற்காக தன் நலம் விட்டுக் கொடுத்தல், இன்னும் குறிப்பாக சவால்களை விரைந்து உணர்ந்துகொண்டு அதை எதிர்கொள்ள தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளை உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொள்வது என்று பல சமூகத் திறன்களை வளர்க்க உதவுகிறது (பார்க்க இணைப்பை). கிரிக்கெட் மட்டுமே விளையாடுவதால் அது ஒரு அடுக்கு முறை மன இயல்பையும், குழுவில் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளில்லாமல் தலைவரின் கட்டளையால் அவரவருக்கு விதிக்கப்பட்டதை அவரவர் செய்து முடித்தலே அதிகபட்ச திறன் வெளிப்பாடு.
நூலகங்கள், நமது நூலகங்கள் இன்னும் தற்கால கலை, அறிவியல், வரலாற்றை முழுமையாக உள் வாங்கிக் கொள்ளவில்லை. அவை நவீன அறிவு வளர்ச்சிக்கான சாதனங்களைப் பெற்றிருக்கவில்லை. அவற்றிற்கான முதலீடுகளை அரசுகள் தேவையான அளவு செய்யவில்லை. தலை நகரில் ஒரே ஒரு அண்ணா நூலகம்!. அது போல் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் திறன் முதலீடு அமைய வேண்டும்.
இவற்றை ஏற்படுத்த மூலதனம் அரசிற்கு சவாலன விடயம். ஆனால் இதை வளர்ந்த நாடுகளை மாதிரியாகக் கொண்டால், பிரச்சினையை சரி செய்து விடலாம். அங்கெல்லாம் பள்ளி, நூலகம், விளையாட்டு மைதானம், பூங்காக்கள் அனைத்தும் உள்ளூர் நிர்வாகத்திடம். அதாவது முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் அதிகாரம் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளிடம். நிதிச் செலவில் ஒரு பங்கு மாவட்ட, மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களில் இருந்து கிடைக்கும். பெரும்பாலான நிதி உள்ளூர் வரிகள் மூலமே பெறப்பட்டு தேவைகள் நிறைவேற்றப்படும். அதை எப்படிச் செய்யலாம், செய்ய வேண்டும் என்பது தனி விவாதம்.
வசதி படைத்தவர்களுக்கு ஒரு வகையாகவும், வசதி இல்லாதவர்களுக்கு ஒரு வகையாகவும் வளர்ச்சி வாய்ப்புகளைத் தருவது முதலாளித்துவம். ஆனால் அது பொதுவுடமை ஜனநாயக நாட்டில் நடைமுறையில் இருப்பதும், முதலாளித்துவத்தை கொள்கையாகக் கொண்ட வளர்ந்த நாடுகளில் பொதுவுடமை ஜனநாயகம் நடைமுறையில் இருப்பது மெய்முரண்.

Monday, August 22, 2016

IT யும் மண்ணாங்கட்டியும்...

இது என்னய்யா புது டிரெண்டா இருக்கு, எல்லாரும் IT துறையை திடீல்னு திட்றாங்கன்னு வெம்மை கொண்டால்... கூல்... எதை எதையோ பார்த்தாச்சு, இதைப் பார்க்கமாட்டமா...
தொடர்வதற்கு முன் இந்த குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்...
வா மணிகண்டனின் குறிப்பு https://www.facebook.com/vaa.manika...
இளங்கோ கல்லாணையின் குறிப்பு: https://www.facebook.com/elango.kal...
இருவரின் கருத்துக்கள் சரி என்றோ, தவறு என்று ஒற்றை வரியில் எழுதிவிட முடியாது. காரணம், IT என்பது தனித்துறையே கிடையாது, என்னைப் பொறுத்தவரை. காரணம் இந்தத்துறை தனியாக இயங்க முடியாது. ஊரிலுள்ள அனைத்து, தொழில், வணிக, ஆராய்ச்சி, உற்பத்தித் துறைகளை அண்டிப் பிழைக்கும் ஒரு துறை. இதன் அடிப்படை நோக்கமே, எப்படி கோர் பிஸனஸ் எனப்படும் தொழில், வணிக, உற்பத்தி, ஆராய்ச்சி என இன்னும் பலவற்றின் இலாபத்தை அதிகப்படுத்துவதுதான்.
இலாபத்தை எப்படி அதிகப்படுத்தலாம்?.. தொழில் செய்பவரின் கணக்குகள்(இறுப்பு,வரவு, செலவு, லாபம், நட்டம்) முதல், உற்பத்தி அல்லது சேவையை வாடிக்கையாளரடம் கொண்டு சேர்த்து அவரிடம் காசை வசூல் செய்து நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் கொண்டுவந்து சேர்ப்பது வரை, எங்கெல்லாம் செயல் முறைகளில் அதிக செலவு, நேரம், சக்தி அதிகம் வீணடிக்கப்படுகிறதோ அவற்றைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பது.
இதை B.E அல்லது MBA படித்தவர்கள் மட்டும் செய்துவிட முடியாது. தொழில் அல்லது வணிகத்தின் இயங்கு முறை அல்லது சூட்சமம் தெரிந்தவர்கள் எளிதில் வரையறுத்து விடுவார்கள். கவனிக்க.. வரையறுத்து விடுவார்கள்.. ஆனால் செயல்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது, பெரும்பாலான நேரங்களில். அதைச் செயல்படுத்த ஒரு கங்கானி(புராஜக்ட் மேனேஜர்), உபையதாரர்(ஸ்பான்ஸர்), சில பல கொத்தடிமைகள்(புரோக்ராமர்கள்), தரக்கட்டுப்பாட்டுக் குழு என்று 5 முதல் 500 பேர் வரை கூட குழுவாக இயங்கி குறிப்பிட்ட வரையறையை செயல்வடிவம் கொடுப்பார்கள். அத்தனை பேர் வேலைசெய்தும், பெரும்பாலான நேரங்களில் சில ஓட்டைகள் இருக்கும். அதற்கு மாற்று வழி, குறுக்கு வழி என வழி கண்டுபிடித்து வண்டிக்கு பஞ்சர் போட்டு ஓட விடுவார்கள்.
சரி.. இதில் திறமை, கல்வி எல்லாம் எங்கு வருகிறது? இந்தியாவைப் பொருத்தவரை B.E or M.C.A என்பது ஐடி துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க அடிப்படைத் தகுதி மட்டுமே. ஏன் பி ஈ? ஆரம்பத்தில், பொறியியல் படிப்பில் கற்றுக்கொள்ளும் கணிதம், அறிவியல் (அதாவது ஒரு இயந்திரம் அல்லது ஒரு கட்டுமாணம் எப்படி செயல்படுகிறது என்ற அடிப்படை ஆர்வம், அறிவு) கணினி மூலம் உருவாக்கப்படும் தொழில் தீர்வுகளுக்கு உதவும் என்ற அடிப்படையில் வைத்திருந்தனர். இன்றைய நிலையில் 12 படிப்பவர் நான்கு வருடம் கழித்து அப்படியே பி ஈ முடித்து வெளியே வருகிறார், வயது மட்டும் கூடியிருக்கும். தவறு அவர்களது அல்ல. நமது கல்வி முறை.
அடுத்து, ஐடி துறையில் செய்யப்படும் பணிகள் பல்வேறு கட்டமாக இருக்கும், உதாரணம் ஒரு தீர்விற்கு அந்த தொழில் சார்ந்த தினமும் அந்த தொழிலில் புழங்கும் நபர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சிக்கல்களை புரிந்து ஆவணப்படுத்துவது. அடுத்து அந்த சிக்கல்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக ஒரு தீர்வை வைப்பது. பின் அந்தத் தீர்வை செயல்படுத்த வரைவு திட்டம் உருவாக்கி அதற்கு ஆட்களைக் கண்டெடுத்து செயல்படுத்துவது.
இதில் இந்தியாவிற்கு அனுப்பபடும் (அவுட்சோர்சிங்) வேலைகள் கடை நிலையில் செய்யப்படும் வேலை. அதாவது தீர்வுக்கான வழிமுறை சில நேரங்களில் மிக விரிவாக செயல்படுத்தும் வழிமுறையுடன் கொடுக்கப்பட்டு அதை பின்பற்றி செய்யப்படும் வேலை.இந்த வேலைக்கு பி.ஈ படிப்பு தேவையா என்றால், தேவையாய் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் இல்லை என்பதுதான் நிதர்சனம். பெரும்பாலான சிக்கலான வேலைகள் ஆன்சைட் எனப்படும் தொழில் நடக்கும் இடத்திலேயே முடிந்து விடும். இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருக்கும். இங்கிருப்பவர்களுக்கு பி ஈ தேவையா என்றால், அங்கேயும் இல்லை என்ற பதிலே வரும். காரணம் பெரும்பாலான வெள்ளைக்காரர்கள் பள்ளிப்படிப்பு முடிந்தவுடனோ அல்லது வேதியல், இயற்பியல் என்ற ஏதாவது ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை படித்து கணினியியலில் கலக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கற்றுக்கொண்டது தொழில் இயங்கும் முறை, தேவையை சமாளிக்கும் நுட்பம், ஆமாம் சாமி போட்டு வாழ்கை ஓட்ட வேண்டிய அவசியமின்மை.
கல்லாணை சொல்வது போல் எக்செல்லில் வண்ணம் தீட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தில் இயங்குபவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக பத்தாண்டுகளுக்கு முன் ஐசிஐசி வங்கியோ அல்லது ஏதாவது ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் சேல்ஸ் அல்லது மேனேஜ்மெண்ட் வேலை செய்து ஐடியில் மேலாண்மை பொன்னுசாமிகளாக பெட்டிதட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஐடி ஜார்கன்களைத் தெரிந்து வைத்துக் கொள்வதிலும் நிறுவனத்தின் தலைமையதிகாரிகளிடம் பூசி மெழுகிப் பேசுவதிலும் வல்லவர்களாக இருப்பர். இவர்கள் வாழ்கை ஓட்டுவதே கீழ்மட்ட புரோக்ராமர்களின் வேலையை வைத்தே. மற்றபடி சேர்கான் பார்ப்பதும், இன்ன பிற இதர வேலைகள் செய்வதும் அவ்வப்போது கிடைக்கும் பணி ஓய்வு அல்லது அதையே பணியாக செய்யக் கிடைக்கும் வாய்ய்புகள் பெற்றவரே. தினமும் 14 மணிநேரத்திற்கும் மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமால் பெட்டியைத் தட்டிக்கொண்டிருக்கும் பைத்தியங்களும் உண்டு.
வேலை நுணுக்கம் தெரிந்தவர் உத்தேசிக்கப்பட்ட நேரத்தில் பாதியில் வேலையை முடித்து விடுவர். மனித நுணுக்கத்தைத் தெரிந்தவர், வேலை நுணுக்கம் தெரிந்தவரை பயன்படுத்தி தன் வேலையை செய்து முடித்துக் கொள்வார். இது ஐடி மட்டுமல்ல, எல்லா துறையிலும் நடப்பதுதான். ஆனால் ஐடி துறையில் நடப்பது கண்ணாடிபோல் வெளியில் தெரிந்து விடும், காரணம் இது ஒரு தனித்துறையில்லை.
கல்வித்தகுதி என்பது ஒரு தேர்வு முறையின் அடிப்படையே. அதுவும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலை தேடும் நிலையில் தேர்ந்தெடுக்க, வடிகட்ட ஒரு வழி, அவ்வளவே. வேலைத் திறம் என்பது பெரும்பாலான நேரங்களில் கல்வியை அடிப்படையாகக் கொண்டதில்லை, மாறாக பற்றிக்கொள்ளும்(Adoption) திறமையைப் பொறுத்தே அமைகிறது.
சரி.. பிறகு என்னதான் ஐடி துறை.?...சவால்களை விரும்புவருக்கு எப்போதும் தீணியும், சோம்பேரிகளுக்கு வேலை செய்ய வாய்ப்பை நித்தமும் உருவாக்கும் ஒரு காடு. இங்கு இல்லாதது இல்லை, இருப்பதெல்லாம் நிலைத்திருப்பதுமில்லை.

Wednesday, August 3, 2016

ஜக்கியும் ஜாக்கியும்


மீடியா சொல்லுவதையெல்லாம் அப்படியே நம்பவேண்டியதில்லை என்பதற்கு பல உதராணங்கள் இருக்கிறது.
இப்போது ஜக்கி வாசிதேவ் ஈசா மையத்தைப்பற்றி. இப்போது மீடியா ஈசா மையத்தைப் போட்டு குதறிக்கொண்டிருக்கிறது. 1997 வாக்கில் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் ஈசா யோக மையத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது தியான மண்டபம் மற்றும் ஓரிரு கட்டிடங்கள் இருந்ததாக நினைவு. வாசுதேவை தூரத்திலிருந்து ஒரு முறை பார்க்க நேர்ந்தது. ஒளிவட்டமேதும் தெரியவில்லை.
நகர வாழ்கையின் சக்கர சுழற்சியிலிருந்து விடுபட வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தியானத்துடன் கூடிய ரிசார்ட் அது. வசதிக்கேற்ப பேக்கேஜ் உண்டு. ஈசா ஆரம்பித்ததிலிருந்து வன ஆர்வலர்களாலும், உள்ளூர் மக்களாலும் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுகிறார்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகும்போது, சூழல் கேடு முதல் வன உயிர்ச்சூழல் கேடு வரை பல கேடுகள் நடக்கிறது என்று எழுப்பப்படும் புலம்பல்களைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வெள்ளியங்கிரி மலையைச் சுற்றியுள்ள காடுகள் யானைகளின் வாழ்விடம். புலி, சிறுத்தை போன்ற அருகி வரும் மிருகங்களின் உறைவிடம். ஈசா யோகமையம் அங்கு அமைந்ததன் பின் யானைகள் அந்தப்பகுதியைப் பயன்படுத்த முடியாமல் வேறு புதிய பாதை தேடுவதில் ஊருக்குள் வருவதும், ரயிலில் அடிபட்டு இறப்பதும் அன்றாட செய்தி. யானைகள் இல்லையென்றால் அந்தக்காடுகள் அழிந்து விடும் என்பது பல்லுயிர்ச்சூழல் விஞ்ஞானிகளின் கருத்து.
இதைப்பற்றிப் பேசாத ஊடகங்கள் இப்போது மேஜராகிய இரண்டு பெண்கள் ஈசாவில் துறவரம் மேற்கொண்டிருப்பதை அவர்களின் பெற்றோரின் மனுவை வைத்து ஊதிப் பெரிதாக்குகின்றன. இதனால் யாருக்கு லாபம்?
ஊடகங்களுக்கு. எப்படி? ஊடகங்களின் சத்தத்திற்கேற்ப அவர்களின் சேனல்களின் விளம்பரர்தாரர் நிகழ்ச்சியாக காலையில் சத்குரு அருளுரை நிகழ்த்துவார். செய்தியாளர்களுக்கு பெட்டிகள் சேரும். பிறகு அமைதியாகும் ஊடகங்கள் வேறு ஏதாவது பிரச்சினையைத் தேடும்.
சட்டமீறலான வன ஆக்கிரமிப்பையே தடுக்காத அரசமைப்பு, சட்டத்திற்குட்பட்ட வயதுவந்தவர் எடுக்கும் தனிமனித முடிவுகளில் என்ன செய்ய முடியும்? சத்குரு தனிமனிதரா? இல்லை.. அவர் அரசியல் கட்சிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரின் வணிகத்தின் முகம்.
சத்குரு சத்குருவே.. ஊடகங்கள் ஊடகங்களே.. நீங்களும் நானும்தான் இதைப்பற்றிப் பேசி முட்டாள்காளாகிக் கொண்டிருக்கிறோம்..

Sunday, July 31, 2016

டிரம்பு ஒரு டிராகனா?


டிரம்பு, கிளாரி, மோடி, மன் மோஹன், ராகுல் என்ற தனிமனிதர்களின் எண்ணப்போக்கை வைத்து அவர்களின் ஆட்சி அமையும் என்று நம்புவது முட்டாள்தனம் என்பது வரலாறு. அரசு இயந்திரம் என்பது பல்வேறு அதிகாரச் சக்கரங்கள் ஒன்றினை ஒன்று இழுத்தும் தள்ளியும் சுற்றும் அமைப்பு. முடிவெடுத்தல் கூட தன்னிச்சையாக அதிபராலோ பிரதமராலோ செய்ய முடியாது(வெளியில் அப்படித் தெரியலாம், ஆனால் உண்மையில் அப்படியில்லை), வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவது உட்பட. அதிகபட்சம் தனது தனிச்செயலாளரை வேண்டுமானால் தன் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். கேபினட் அமைச்சர்களை தேர்வு செய்ய பிரதமர் அல்லது அதிபர் என்ற தனியான பிம்பத்தால் முடியாது. அந்த தேர்விற்குப்பின் இருக்கும் அரசியலை வெற்றிகரமாக கைக்கொண்ட அரசியல்வாதி இதுவரை யாருமில்லை. தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சியமைப்புகள், உள்ளூர் தாதாக்கள், வெளி நாட்டு அழுத்தங்கள் என்று பல்வேறு காரணிகளே அமைச்சரவையை முடிவு செய்கிறது. ஒபாமா வந்தால் உலக அரசியலில் தலைகீழ் மாற்றாம் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஆனால் அவரை இரண்டாவது முறை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் கடந்த ஆட்சியின் தொடர்ச்சியாக செய்ய வேண்டியவற்றை செய்யவும், எதிர்மறை விழைவுகளைத் தள்ளிப்போடவும்தான். இந்த முறை ஒரு வேளை டிரம்பே அதிபரானாலும், அவரால் பெரிதாக எதையும் செய்ய முடியாது, நல்லனவற்றையும், தீயவையும். அரசியல் என்பது ஒரு நபரால் எப்போதும் செய்யப்படுவதில்லை, அது ஒரு கூட்டு நோக்கம் கொண்டது, வெளிப்படையாக பேசப்படாவிட்டாலும், உள்ளுணர்வால் மனிதர்கள் இணைக்கப்பட்டு இயங்குவது. அந்த உள்ளுணர்வை ஆதிக்கம் செய்வது மேலோட்டமான பொதுநலமும், ஆழமான சுயநலமுமே.

Saturday, March 19, 2016

கொஞ்சம் மனிதாபிமானத்துடன் இருங்கள்

* ஞாபக சக்தி குறைவதில் தொடங்கி குறிப்பிட்ட சில நிகழ்வுகள் முற்றிலும் மூளையிலிருந்து அழிந்து விடும்.

* முடிவெடுக்கும் செயல்திறன் குறையும். முடிவெடுப்பதற்கான காரணிகளை ஆராயும் திறம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும்.

* ஐந்து முதல் ஆறு மணி நேரம் தொடர்ந்து விழித்திருப்பது கடினமாக இருக்கும்.

* ஒரே இடத்தில் ஓரிரண்டு மணிகளுக்கு மேல் அமர முடியாது.

* கேட்கும் திறன் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் கேட்கும் திறன் அற்றுப் போகும்.

* நினைவாற்றலை இழந்து ஒரு பொருள் குறித்த ஆழ்ந்த பேச்சுக்கள் தடைபடும்.

* கை, கால்கள் வலிமையிழந்து நடுக்கத்துடனே இருக்கும். எழுதுவது போன்ற திறன்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

மேற்கண்டவை அனைத்தும் 60 வயதுக்கு மேல் மனிதர்களுக்கு ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள். இவை மருத்துவத்துறையால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இதன் காரணமாகவே வேலையிலிருந்து ஓய்வு பெரும் வயது 55 லிருந்து 65 க்குள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக இந்த வயது மீண்டும் மனிதர்களின் உடல் மற்றும் மூளை மனிதனின் ஆரம்பகால வயதின் திறனை நோக்கிக் கொண்டிருக்கும். அதாவது குழந்தை போன்ற நிலையை அடைந்து கொண்டிருப்பர். இந்த காலங்களில் பெரும்பாலும் உறவுகள் துணையுடன் சிரமாமான வேலைகளைச் செய்யாமல் மகிழ்ச்சியாக வாழ்வை கழிக்கவே மருத்துவர்கள் அறிவுரை செய்வார்கள். அதுவே அவர்கள் வயதுக்கேற்ற சிறந்த வாழ்கை முறையாகும்.

முதிய வயதில் ஒரு மனிதருக்கு கடுமையான பணி என்பது அந்த மனிதரைச் சுற்றியுள்ளவர்கள் மீதான அக்கரையின்மையாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர்களை கொடுமைப் படுத்துவதற்கு ஒப்பாகும்.

முதல்வர் பதவி, அதுவும் தமிழகம் போன்ற சவால் நிறைந்த மாநிலத்தில், குறிப்பாக பல லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலை, மாநிலத்தின் கடன், பொருளாதாராச் சுமை, செய்து முடிக்க வேண்டிய பல்வேறு பணிகள், நெடுநோக்குத் திட்டங்கள் வகுத்தல், பல்வேறு துறை சாந்த வல்லுனர்களுடன் தொடர் ஆலோசனை, பின் முடிவுகள் எடுத்தல் என்று மிகவும் சிக்கலான, Demanding பதவி அது.


வெள்ளம் வந்த போது நம் முதல்வர் உறங்கினார், இலங்கையில் போர் நடந்த போது கலைஞர் கடற்கரையில் உறங்கினார், முதல்வர் மக்களைச் சந்திப்பதில்லை, முதல்வரின் உறவினர்களே முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர், திட்டங்களை திறந்து வைப்பது கூட தொலை வழியே செய்கின்றார், மத்திய அரசின் முக்கியமான முதல்வர்கள் மாநாட்டில் முதல்வருக்கு பதிலாக வேறொருவர் கலந்து கொள்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளில் எந்த நியாயமும் இல்லை. நமது முதல்வர்களின் வயதுக்கு அவர்களால் இயன்றதை செய்கிறார்கள்.

குடும்பசூழல், கட்சி அரசியல் போன்ற பல்வேறு சிக்கல்களால் அவர்களுக்கு தங்களைத் தவிர வேறொருவரை முதல்வராக அறிவிக்க முடியாத நிலை. புரிந்து கொள்ளக் கூடியதே.


ஆனால், தமிழகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பிரசினைகள் மிகவும் ஆழமானவை. இவற்றை எதிர்கொள்ள துடிப்புடன் இருக்கும், திறன் வாய்ந்த இளையவரால்தான் முடியும். இதைச் சொல்வதால் முக்கிய கட்சிக்காரர்கள் சீறலாம். ஆனால் உண்மை அதுதான். அதையும் மீறி அவர்கள் தங்கள் தலைவருக்கு திறன் உள்ளது, அவர் எல்லாவற்றையும் திறனோடு செய்து முடிப்பார் என்று சொல்வார்களேயானால், அது அறிவியலுக்கு எதிரான, மூட நம்பிக்கை. அதை பொது சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

அந்த வகையில் தமிழக முதல்வராக சுடாலினோ, அதிமுகவில் வேறு யாரோ(பன்னீரைத் தவிற வேறு யாரையும் தெரியவில்லை), அன்பு மணியோ, வைகோவோ, திருமாவோ, சீமானோ, உதயகுமாரோ, வசீகரனோ, சுதீஸாகவோ அல்லது வீரலட்சுமியாகவோ கூட இருக்கலாம்.


நிச்சயம் அது கருணாநிதியாகவோ அல்லது ஜெயலலிதாவாகவோ இருக்க முடியாது இருக்கவும் கூடாது. அவர்களை நிம்மதியாக ஓய்வில் வைக்க வேண்டியது மனிதப் பண்புள்ள அனைவரது கடமை.

Thursday, March 17, 2016

காந்தியம் பேசும் தமிழ்த் தேசியம்

   எண்பதுகளின் அந்திமக் காலமது. பள்ளிக்குச் செல்லும் வழிகளெல்லாம் நெசாவாளிகள் வீதிகளில் கதர் வேட்டிக்கு பாவு தோய்ந்து கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர், இரண்டு வீதி தள்ளியிருப்பவர் என்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கூட்டாகச் சேர்ந்து, பாவு தோய்ந்து கொண்டிருப்பர். ஒருவர் வீட்டு பாவிற்கு மற்றவர்கள் வந்து உதவுவது போல் மற்றவர் வீட்டு பாவிற்கு ஏனையோர் சேர்ந்து வேலை செய்வர். அது ஒரு அற்புதமான கூட்டுறவு. ஊரில் பாவடித் தெரு என்றும் பாவடித் திடல் என்றும் இடங்கள் உண்டு. அது இப்போது 'பழைய பாவடி' என்றாகிப்போனது. ஊன்றிய பாவடிக் கற்கள் பெயர்க்கப்பட்டுவிட்டது. கூட்டுறவு செய்த கூட்டம் பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து விட்டது.

"சர்வோதையா" - கூட்டுறவு சங்கம் மூலம் கதர் வேட்டி, கைக்குட்டை நெய்தல் அப்போது எங்கள் ஊரின் பிராதானத் தொழில். வேட்டிக்கு ஒன்பது ரூபாய் கூலி, வாரம் 8 முதல் 10 வேட்டி நெய்வதற்கு இரவு பகல் வித்தியாசமில்லாமல் தறியில் நாடா பாய்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் தந்தை தறியிலும், தாய் அடுப்பிலும், இராட்டையிலும் தங்கள் குடும்பத்திற்க்காக தேய்ந்து கொண்டிருப்பர். குண்டு பல்பு வெளிச்சமும், தறிநாடாச் சத்தமும் படித்த பாடங்களை இன்னும் ஒலி, ஒளியுடன் பசுமையாக நினைவில் நிறுத்தி வைத்திருக்கிறது.

வாரம் முழுதும் நெய்த வேட்டிகளை கட்டித் தலையில் வைத்து சனிக்கிழமை தோறும் அப்பனும், அம்மையும் சர்வோதயாவில் சேர்த்தால், கூலி ரூபாய் 100 முதல் 120 வரை கிடைக்கும். அதில் 10ஐ தொழிலாளர் வைப்பு நிதி என்று ஏதோ ஒன்றில் பிடித்தம் செய்து கொள்வார்கள். பின்னாளில் தறியை விட்ட பொழுது அதை இரண்டாயிரமாகவோ, மூன்றாயிரமாகவோ ரொக்கமாக திருப்பிக் கொடுத்தார்கள் என்று நினைவு.


மகாத்மா காந்தியின் சிந்தனையில் உருவான 'சுயராஜ்ய' சிந்தனை வடிவமே 'சர்வோதையா'. மக்கள் அனைவருக்கும் (பொருளாதார) பலமேற்படுத்தும் சோசலிச சிந்தனை அது. அந்நிய பொருட்களைத் தவிர்த்து கிராமங்கள் தோறும் உற்பத்தியைப் பரவலாக்கி, அந்த உற்பத்திப் பொருட்களை மீண்டும் மக்களிடம் சேர்ப்பதே "சுயராஜ்", "சுதேசி" அல்லது "தற்சார்பு" பொருளாதாரம் அல்லது "சர்வோதையா".

அன்றைய காலகட்டத்தில், அதாவது 1958ல் வினோபா அவர்களின் தூண்டுதலினால் தமிழகத்தில் முதன் முதலில் திருப்பூரைத் தலைமியிடமாகக் கொண்டு சர்வோதைய சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் கிளைகள் தமிழகமெங்கும் பரவலாக்கப்பட்டு, கதர் ஆடைகள், தோல் பொருட்கள், அலங்கார கைவினைப் பொருட்கள், மர வேலையில் உருவான மேசைகள், நாற்காலிகள், அடுக்கறைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, மெத்தை, சங்கு மாலைகள், சந்தன மாலைகள், சிகைக்காய் பொடி, வேம்பு சோப்புகள், தேங்காய் எண்ணை, தேங்காய் நார் கயிறுகள் என்று பல்வேறு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தன. பின்னாளில் வீட்டு உபயோக இரும்பு  சாதனங்களான இரும்பு அடுக்கு அறைகள், மேசை, நார்க்காலி என்று விரிந்து சர்வோதையா பொருட்கள் வீடுகளை அலங்கரித்தது.

பாலியெஸ்டர், ரெயான் போன்ற செயற்கை (இதை சிலர் அறிவியல் முன்னேற்றம் என்பார்கள்) இழைகள் வராத காலத்தில் கதராடைகளே மக்களின் பிராதான ஆடை. காங்கிரஸ்காரர்கள் கதராடை அணிவதை கவுரவமாகக் கருதினார்கள். தமிழத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் இந்தியதேசமெங்கும் விற்கப்பட்டது. பொருளாதாரத் தாராளமயமில்லாத, இயந்திர உற்பத்தி இல்லாத காலத்தில் ஒவ்வொரு கிராமத்தையும் பொருளாதாரத் தன்னிறைவை அடைய வைத்தது சுயராஜ் (அ) தற்சார்பு (அ) சுதேசி (அ) சர்வோதையா பொருளாதாரம். இன்று நம் அரசியல் வாதிகள் தங்கள் சாதனைகளாகப் பேசிக்கொள்ளும் மகளிர் சுய உதவிக் குழுக்களெல்லாம் காந்தியின் சர்வோதயாவின் வடிவங்களே

பின்னார் 90 களில் இந்திய சந்தை உலகத்திற்கு திறந்து விடப்பட்டதும், பருத்தி நூற்பாலை நுட்பங்கள், இயந்திரங்கள், பாலியெஸ்டர், ரெயான் இழைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை பருத்தி நூற்பாலைகளின் மையமாக மாறியது. ஒரு கட்டத்தில் தென்னிந்தியாவின் மேன்ச்சஸ்டர் என்றும் அழைக்கப்பட்டது. பருத்தி நூற்பாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், இயந்திர உதிரிப்பாகங்கள் கோவையிலேயே தயாரிக்கப்பட்டன. Laxmi Machine Works (LMW) லட்சுமி மில் குழுமம், Textool, Premier Instruments and Controls(Pricol), Premier Polytronics, Shanti Gears என்று கோவை இயந்திரமயத்தை உள்வாங்கிக் கொண்டது. வடக்கில் அம்பானியின் Reliance Industries இன் பாலியெஸ்டர் நூல் உற்பத்தி செய்தது, கதராடைகளுக்கு மாற்றாக பாலியெஸ்டர் ஆடைகள் சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

நுகர்வு சார்ந்த பொருளாதார தாராளமயமாக வந்த அந்த பாதிப்பு நெசவையே தொழிலாகக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர், தன் பெண் பிள்ளைகளின் வாழ்கைக்காக தறிகளுடன் வீட்டை விற்று, திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் கூலி வேலைக்காக இடம்பெயரச் செய்துவிட்டது.

இன்று கோவை ஆட்டோமபைல் மற்றும் பருத்தி நூற்பாலை இயந்திரங்களின் உற்பத்தி மையமாக மாறக் காரணம், மரபு சாரா அறிவியல் சிந்தனை மற்றும் கடும் உழைப்பாளிகளே. அன்றைய தொழிலாளிகள் இன்றைய முதலாளிகளாக வளரும் ஒரு வியப்புமிகு விதி கொண்டது கோவை. இன்று Bosch, Roots என்ற பண்ணாட்டு நிறுவனங்கள் கால்பதித்து வளர இங்குள்ள தொழில் நுட்பம் சார்ந்த பண்பாடே காரணம்.

உலகமயமாக்கல் ஒரு புறம் புதிய பொருட்களையும், மிகு நுகர்ச்சியைக் கொண்டுவந்தாலும் இன்னொரு புறம் அது உற்பத்தியைத் தனியார் முதலாளிகள் வசப்படுத்தியது. பெரும்பாலான மக்கள் தனித்தன்மை வாய்ந்த தொழில் நுட்பங்களை கைவிட்டு இயந்திரத்தை கையாளும் பொதுத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். தனிமனிதர் ஒருவரின் தேவையை உலக சந்தையே நிர்மானிக்கும் நிலை வந்தது. அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பின்மை பெரிதானால் சென்னையிலும், கோவையிலும் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலமை உருவானது. ஆஸ்திரேலியா சுரங்கம் தோண்டுவதை நிறுத்தினால் கோவையில் உருக்காலைகள் மற்றும் இயந்திரப்பாக உற்பத்தி நிறுவனத் தொழிலாளர் வேலையிழக்கும் நிலை வந்துவிட்டது. இது தவறில்லை என்றாலும், சீனா போன்ற அதிதீவிர வளர்ச்சி மோகம் கொண்ட நாடுகளுடன் போட்டி போட்டு நம் வளங்களை அழித்து. நாளையே கடன்காரர்களாகவும், பைத்தியகாரர்களகவும் நாம் நிற்க வேண்டியதில்லை.

அன்று நெசவை மட்டுமே தொழிலாகக் கொண்டு ஐந்து பெண் பிள்ளைகளை வளர்த்து, திருமணம் முடித்து நல் வாழ்கையமைத்து கொடுத்த என் தாத்தா, இறுதிகாலத்தில் கடனேதுமில்லாமல் ஊரில் மதிப்புடன் உலகை விட்டுச் சென்றார். இன்று ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியரின் வாழ்கை ஒன்றிரண்டு பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்குள் வீட்டுக்கடன், கல்விக்கடன், தொழில் கடன், கல்யாணக் கடன் என்று கடன்களை சேர்த்துவிட்டு மரணிக்கும் போது உலகம் விரும்பாத சரிதமாகிவிடுகிறது.

ஒரு புறம் உள்நாட்டு உற்பத்தியை விற்க உலக சந்தையை பயன்படுத்திக் கொள்வதும் இன்னொரு புறம் உள்ளூர் சந்தையை பலப் படுத்திக் கொண்டு உணவு மற்றும் இதர அடைப்படைத் தேவைகளில் சுயராஜ்ஜியத்தை அடைந்து கொள்ள முயற்சிப்பதே இன்றைய தேவை.

காந்திய சிந்தனையுடன் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தி, உற்பத்தி, சந்தை மற்றும் நுகர்வை இணைக்க வேண்டும். விவசாயத்தைத் தனியார் தொழிற் சாலைகளுக்கு இணையாகக் கருதாமல், கிராமத் தற்சார்பு உற்பத்தி சங்கங்களாக மாற்ற வேண்டும். உணவுத் தேவை துள்ளியமாக கணிக்கப்பட்டு மண் வகைகளுக்கேற்ப உணவு உற்பத்தியை முறைப் படுத்த வேண்டும். உற்பத்தியை முறைப்படுத்தி விட்டால் விவசாயிக்கு தன் உற்பத்திப் பொருளுக்கு நல்ல விலையும், நுகர்வோருக்குச் சீரான விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் முடியும். அதற்கு பல்நோக்கு திட்டம் ஒன்றின் மூலம் நீர் ஆதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள், அரசியல் தலையீடற்ற, ஊழல் இல்லா விவசாய, விற்பனை சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். பண்ணைகள் சமுதாயமயமாக்கப் படவேண்டும். இதன்மூலம் ஊரக வேலை வாய்ப்பைப் பெருக்கிட முடியும். இது ஒரு வகையில் கிராமங்களிலிருந்து நகரத்த்திற்குக் குடி பெயர்தலையும், நகரங்கள் வீங்கிப் பெருத்து வெடிப்பதையும் தவிர்க்க முடியும். தொழில்கள் மாநில முழுமைக்கும் பரவலாக்கப் படவேண்டும். இது பயணம் முதல், உரைவிடச் செலவு, சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு வகைகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

வளங்களும், அது சார்ந்த நலன்களும் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் சிந்திக்கும் தலைவர்கள்தான் இன்று நமக்குத் தேவை. வளர்ச்சி, மாற்றம் என்ற பெயரில் மக்களின் வளங்களைச் சுரண்டி தனியாருக்கு விற்று, அதை இலாபக் கணக்கில் காட்டும் வித்தகர்கள் தேவை இந்த நாட்டுக்குத் தேவையில்லை.

சீமான் முன் வைக்கும் தற்சார்பு விவசாயக் கொள்கை காந்தியின் சர்வோதையாவை கண் முன் நிறுத்துகிறது.

Sunday, January 3, 2016

நம் வாழ்க்கை நம் விரலில்...

“நமக்கெதற்கு அரசியல்... அது ஒரு சாக்கடை.. இவர்களுக்கு வேற வேலையில்லை...” இப்படி நிறைய இளம் தலைமுறையினர் எண்ணுகின்றனர். அவர்களின் நிலையில் அது சரியானதே. அதற்குக் காரணம் நம்மை ஆண்ட, நமக்கு அறிமுகமான அரசியல்வாதிகளின் நடவடிக்கை, அது நமக்கு அரசியல் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அந்தச் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. படித்த இளைஞர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இது வரை நடந்த தேர்தல்களில் வாக்களிப்பவர்கள் சதவீதம் 60-70%. ஏறக்குறைய 40% மக்கள் வாக்களிப்பதில்லை. பதிவான 60% ஓட்டுக்கள் 4 அல்லது 5 கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் பிரித்துக் கொள்கின்றனர். 25% முதல் 35% ஓட்டு வாங்குபர் எதிராளியைத் தோற்கடித்து வெற்றி பெறுகின்றார். அவர் வெற்றிபெற்ற ஓட்டுக்கள் பெரும்பாலும் கட்சியின் அடிப்படையில் காலங்காலமாக ஓட்டுப் போடுபவர்களின் ஓட்டுக்கள். அதிக பட்சமாக 5% - 10% கட்சி சாராத நடுநிலையாளர்கள், புதிய வாக்களார்களின் வாக்குகள் மூலம் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. நமது ஜனநாயக நாட்டில் 25% ஓட்டு வாங்குபவர் ஏனைய 75% மக்களுக்கான முடிவுகளை எடுக்கிறார். இந்த நிலையால் நம்மை ஆளும், ஆண்ட கட்சிகள் தங்களுக்குள் ஒரு எழுதப்படாத உடன்படிக்கை மூலம், மக்களின் வரிப்பணத்தைத் தவறாக செலவளித்து, ஊழல் செய்து பெரும் பணக்காரர்களாகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் நம் அடுத்த தலைமுறையான, மகன், பேரன்கள் இந்த நிலத்தில் வாழத் தேவையான நீர், காற்று, நிலம், காடுகள், மலைகள் இன்னும் பல இயற்கை வளங்களை சூரையாடி அழித்து லாபம் பார்க்கின்றனர்.
நாம் வாங்கும் சோப்பு, சீப்பு முதல் ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்டுகின்றோம். பெட்ரோல், டீசலுக்கு அதன் விலையை விட அதிகமாக வரி கட்டுகிறோம். டெலிபோன் பில்லில் ஒரு பகுதி, சொத்து வரியில் ஒருபகுதி கல்வி வரி கட்டுகிறோம். வாகனத்தை சாலையில் பயன்படுத்த சாலை வரி கட்டுகின்றோம். வருமானத்தில் 20 முதல் 30 சதவீதம் வரி கட்டுகின்றோம். மின்சாரக் கட்டணத்தில் வரி கட்டுகின்றோம்.
இப்படி ஒவ்வொரு அன்றாடத் தேவைகளுக்கும் வரி கட்டுகின்றோம். ஆண்டுக்கு ஒரு லட்சம் (மாதம் 8500 ரூபாய்) குடும்பச் செலவு செய்கிறவர் வரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அரசுக்கு அளிக்கிறார். இந்த வரி கல்வி, மருத்துவம், சாலை வசதி, குடி நீர் வசதி போன்றவற்றிற்காகவும், அரசு அலுவலர்களின் சம்பளமாகவும் செலவு செய்யப்படுகிறது. இந்த வரிச் செலவினங்களை நாம் முழுமையாகப் பயன் படுத்திக்கொள்கிறோமா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
கல்வி, மருத்துவத்திற்கு வரிகட்டினாலும் அந்த சேவைகள் அரசைவிட தனியாரிடம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்தச் செலவுகளை நாமே செய்து கொள்கிறோம். இந்தச் செலவுகள் தனிமனிதனின் ஆண்டு வருமானத்தில் பெரும் பங்காகச் செலவு செய்யப்படுகிறது. திருட்டிலிருந்து, பாதுகாப்பு வரை காவல் நிலையங்களை நம்பியிருக்கிறோம். ஆனால் காவல் நிலையங்கள் பெரும்பாலும் மக்கள் எளிதில் அணுகி உதவி பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பது நிதர்சனம்.
போடாத சாலையை போட்டது போல் கணக்குக் காட்டுவது, போட்ட சாலை 5 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க மதிப்பிடப்பட்டிருந்தால் அவை இரண்டு ஆண்டுக்குள் பழுதாகி மீண்டும் சாலை போடவேண்டிய நிலை. ஒவ்வொரு முறை சாலை போடும்போதும் அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் கமிசன் பெருகிறார்கள். ஆக, ஒவ்வொருமுறை அரசு பணம் செலவழிக்கப்படும் போதும் அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் லாபம் அடைவதால், செலவு செய்யத் தேவையான காரணங்களை செயற்கையாக உருவாக்குகிறார்கள். புதிய மின் உற்பத்தி நிலையங்களை அரசு உருவாக்குவதை தவிர்த்து அல்லது தாமதப்படுத்தி, மின்சாரத்தை அதிகவிலைக்கு தனியாரிடம் கொள்முதல் செய்து அதை நமக்கு வினியோகிப்பதன் காரணம் இதுதான்.
எங்கெல்லாம் தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் கமிசன், லஞ்சம் தாண்டவமாடுகிறது. டாஸ்மாக் கொள்முதலிலும் விற்பனையிலும் லாபம் பெருபவர்கள் அரசியல் வாதிகள், பலனடைபவர்கள் அதிகாரிகள். இதில் எந்த கட்டுப்பாடும், கேள்வியும், தண்டணையும் இல்லை. இது உங்கள் உழைப்பை ஒருவகையில் சுரண்டுவதற்கு ஒப்பானதாகும். ஆனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் அரிசி, கரும்பின் விலைகளில் அரசியல் வாதிக்கும், அதிகாரிக்கும் கமிசன் கிடைப்பதில்லை. அதனால் அங்கு கொள்முதல் விலை அதிகரிப்படுவதில்லை.  விவசாயி நட்டத்துடன் கடன்காரனாகத் தற்கொலை செய்து கொள்கிறான்.
அரசின் எல்லா அமைப்புகளும் நேர்மையாக இருந்தால் செலவுகள் குறைந்து, உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகமாகும். வாழ்க்கை முறை எளிதாகவும், வளமானதாகவும் இருக்கும். 60 ஆண்டுகள் தொடர்ந்து கடுமையாக உழைத்து ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்காது. 40 அல்லது 50 வயதிலேயே ஓய்வு பெற்று நிம்மதியாகக் காலம் கழிக்கலாம். உணவு, சாலை, சுற்றுச் சூழல் சரியாக இருந்தால் நோய்கள், விபத்துக்கள், மருத்துவச் செலவு குறையும்.

இவையெல்லாம் நாம் போடும் ஓட்டின் அடிப்படையிலேயே இருக்கிறது. நீங்கள் அலட்சியம் செய்யும் உங்கள் ஓட்டு, நாளை உங்களை கடன்காரர்களாகவும், நோயாளிகளாகவும் வைக்கப்போகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். நாளை மருத்துவமனையிலும், அரசு அலுவலகங்களில் சேவைகளைப் பெற வரிசையில் நிற்பதைத் தவிற்க, ஒரு நாள் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு நல்ல வேட்பாளார்களைத் தேர்ந்தெடுத்து நல்ல அரசை அமைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். நம் வாழ்க்கை நம் விரலில், ஓட்டுப்போடாத 40% இளைஞர்களும், மக்களும் ஓட்டுப்போட்டால் 25% ஓட்டு வாங்கி வெற்றிபெரும் ஊழல்வாதிகளை அப்புறப்படுத்திவிடலாம். சரியான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்திற்கு வருவார். பெரும் கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் படித்த திறமையுள்ள இளைஞர்கள் மக்களுக்கு சேவை செய்ய் தேர்தலில் போட்டி போடுவார்கள். நாடு வளம் பெரும். நாமும் வளம் பெறலாம்.