Monday, June 15, 2015

பணிவு....துணிவு

நமது பள்ளிப்பாடம் முதல் வீட்டில் சொல்லித்தரும் பாடம் வரை பெரியோர்க்கு பணிந்து நட. "அவையடக்கம் கொள்" என்ற பண்புகள் ஊட்டப்படுகிறது. இந்த பண்புகள் இன்றைய கால கட்டத்தில் எந்த அளவிற்க்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது இதன் தாக்கம் இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கையில் எந்த அளவு உள்ளது என்பது பற்றியே இந்த கட்டுரை.

சமீத்தில் பண்முகத்தன்மை(Diversity) பற்றிய ஒரு பயிற்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். இன்றைய உலக மயமாக்களில் ஒரு உலக நிறுவனம் தனக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு பண்பாட்டு பின் புலத்திலிருந்து வந்திருக்கும் சூழலில் ஏனையோரை எப்படி புரிந்து கொள்வது, அவர்களுடனான உரையாடலை எப்படி எடுத்துச்செல்வது, எந்த மாதிரியான பாவனைகள் மற்றும் சொல்லாடல்கள் ஏனையோருக்கு முகச்சுளிப்பைத் தரும், அவற்றை எப்படி தவிற்பது என்பது பற்றிய ஒரு பயிற்சி.

அந்த பயிற்ச்சியில் ஒரு நாட்டினரை அவர்களின் கலாச்சர இயல்புகளை பொறுத்து எப்படி அணுகுவது என்று வரும்போது பொதுவாக இந்தியர்கள் குழுக்கூட்டத்தில் தாமாக முன் வந்து கருத்துக்களை சொல்ல மாட்டார்கள் (Reserved). அவர்களுடனான கூட்டங்களில் அவர்களுக்கென பிரத்தியக கவனம் மற்றும் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்புடன் கூட்டத்தை நடத்தவேண்டுமென்பது போன்ற துணுக்குகளுடன் போகிறது. ஐரோப்பியர்கள் எப்போதும் தங்கள் கலாச்சாரத்தை உயர்வாக நினைப்பவர்கள், கருத்துக்களை தயக்கமின்றி முன் வைப்பர், அவர்களுடனான உரையாடலில் தனிப்பட்ட விசாரிப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தாது. அமெரிக்கர்கள் தனிப்பட்ட விசாரிப்புகளை விரும்புவர், வேலை தவிர்த்து வெளியுலக நடப்புகளை பேச ஆர்வம் கொண்டிருப்பர். சீனர்களை பொருத்தவரை சுறு சுறுப்பானவர்கள், பேச்சுக்களை தானாக முன் வந்து தொடரமாட்டார்கள் என்பது போன்ற புரிதல்களைச் சொல்லிக்கொடுக்கிறது.

என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தவரை தமிழர்கள் பன்னாட்டு கலாச்சாரத்தை எதிர்கொள்ள இன்னும் தயாரகவே இல்லை என்றே தோன்றுகிறது. வெறும் பிசா பர்கர் சாப்பிடுவது மட்டுமே மேலை நாட்டு கலாச்சாரம் என்று நினைப்பதற்கு மேல் சில மென்பண்புகள் நம்மிடம் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, நான் மேற்ச்சொன்ன பணிவின் தாக்கம். சில நேரங்களில் இந்த பணிவு தேவையற்றது என்றே தோன்றுகிறது. குளக்கல்வி மற்றும் வெள்ளைய அடிமைத்தனத்தின் தொடர்ச்சியாகவே இதை நான் பார்க்கிறேன். 

பள்ளியில் வகுப்பில் பேசுவது தடை செய்யப்படுகிறது. நான் படித்த காலத்தில் பேசுபவர்கள் பெயர் கரும்பலகையில் எழுதி ஆசிரியரிடம் காட்டிக்கொடுக்க கங்காணிகள் வைக்கப்பட்டனர். சில நேரங்களில் சத்தமாக பேசினால் அது தண்டணைக்குறிய குற்றமாக பார்க்கப்படும். வீட்டிலோ ஆசிரியரிடமோ கேள்விக்கோ, பேச்சுக்கோ உடனே உரக்க பதில் கூறினால் குற்றமாக பார்க்கப்படும். "கூட கூட பேசாதே" என்பது எங்கள் ஊர் பேச்சு வழக்கு. பெண்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் அதிகம். 

அதே போல் பள்ளிகளில் ஆசிரியர் வகுப்பில் நுழைந்தவுடன் எழுந்து நின்று மரியாதை கொடுப்பது. ஒருமுறை புதிதாக வேலைக்கெடுக்கப்பட்ட கல்லூரிமுடித்த மாணவர் என்னைப்பார்த்ததும் எழுந்து நின்றது எனக்கு அதிர்ச்சியாகவும், உண்மையில் ஒரு நிமிடம் பயமாகவும் இருந்தது.  

அதுபோலவே மதிப்பிற்க்குறியவர்களை "சார்" என்று அழைப்பது. இந்த சார் என்கிற மரியாதை வெள்ளைக்காரர்களின் "சர்" பட்டத்திலிருந்து தோன்றியது. இன்றைய படித்த தலைமுறையிடமும் இந்த எதிர்பார்ப்பு இருப்பது வருத்தம் கலந்த ஆச்சர்யம். இன்னும் அரசு அலுவலகங்களில் "சார்" என்ற வார்த்தையை உபயோகிக்காமல் உள்ளே சென்று வெளியே வர முடியாது. இப்போது எங்களைப் பொறுத்தவரை "சார்" என்று அழைத்தால் அதன் பொருள் "யோ...சொன்னா புரியாதா" என்பது.

இன்றை தலைமுறைக்கு இது போன்ற மிகுபணிவு தேவையில்லை. நிச்சையம் பன்னாட்டு பண்பாட்டில் இருக்கும் துறைகளில் இது வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும் காரணியாகவே நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாணவனும் பள்ளி படிப்பை முடித்து நான்கு ஆண்டுகள் பொறியியல் முடித்து வெளியே வருகிறான். அவன் அந்த படிப்பின் மீதும் தன் மீதும் முதலில் மரியாதைகொள்ளத் தெரிய வேண்டும். தன் திறமையின் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கையுள்ளவர்கள் சக பணியாளரிடம் தாழ்ந்து போகவேண்டியதில்லை, அது அவரின் மேலாளராக இருந்தாலும். இதன் பொருள் மேலாளரை மதிக்க வேண்டியதில்லை என்பதல்ல. அவரை ஒரு அரசர் போல் பாவித்து கூஜா தூக்க வேண்டியதில்லை என்பதே. அவரை வயதில் மூத்த அனுபவம் மிக்க சக பணியாளராய் பார்த்தாலே போதும். அது போல சக பணியாளர்களின் கல்வி மற்றும் சாதியை வைத்து தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்ள வேண்டியதில்லை. உங்களுடன் சமமான நிலையில் இருக்கும்போது இருவரும் சமமே. உழைப்பு மற்றும் தனித்தன்மையே வித்தயாசப் படுத்தும் காரணி.

நான் பணி செய்த நிறுவனமொன்றில் மேலாளர் உயர் சாதி வகுப்புக்காரர். குழுத்தலைவன் அவர் இனத்தைச் சேர்ந்தவன். இன்னொரு குழுத்தலைவன் IIT ல் படித்து வந்தவன். அரசுப்பள்ளியில் படித்து வாழ்கை கடலின் அலையில் கரைசேர்ந்த எனக்கு அவர்கள் ஆரம்பத்தில் வழிபாட்டு உரியவர்களாகவே தோன்றினார்கள். காலப்போக்கில் எனது அந்த உருவகம் போய்யென புரிந்து கொண்டேன். நமது கற்றலின் மூலம் செயல்படுத்தும் சின்ன சின்ன முன்னெடுப்புகளைக் கூட அவர்கள் ஒரு மிகப்பெரும் திட்டமிடலுடனும் ஆர்ப்பாட்டத்தினுடனும் செய்யும் போது அதன் தாக்கத்தையும் அதன் பின்னுள்ள சூட்சமத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது.

முன் கூறிய பணிவின் தாக்கம் நம்மை நம் கருத்துக்களை முன்வைக்கும் ஆர்வத்தை அல்லது முயற்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டை போடுகிறது. மேலாளர் பேசும்போது குறுக்கே பேசக்கூடது என்றவிதி. ஆனால் ஏனையோரிடம் அதுபோன்ற ஒரு தாக்கத்தை துளிகூட பார்க்க முடியவில்லை. தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் நேரத்தில் தெளிவாகவும் உரக்கமாகவும் தெரிவித்து வியப்பேற்படுத்தினார்கள். இன்றைய கால கட்டத்தில் கூட சமூக ஊடகங்களில் சில முந்தைய தலை முறையினர் "சார்" பட்டங்களை எதிர் பார்த்தே இருப்பது விந்தையான உணமை.

ஆகவே ஒரு மனிதருக்கும் அவர் கொண்டுள்ள பண்பிற்க்கும் உரிய மரியாதை கொடுத்து அதே சமையத்தில் அவர்களின் கருத்துக்களுக்கு நியாயமான எதிர் கருத்துக்கள் உள்ள போது வெளிப்படையாகவும் நயமாகவும் உரக்கவும் வெளிப்படுத்த தவறக்கூடாது. உங்களுக்கு சிறந்த திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த வில்லையென்றால் அந்த திறமைக்கு பயனேதுமில்லை. 

கருத்துக்களை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கும் சூழலை நமது சமூகம் கொடுக்க சிறிது நாளாகும். ஆனால் அதை தயார்படுத்த வேண்டியது நம் கடமை. 

பேசுங்கள்.. எழுதுங்கள்.. உங்கள் கருத்து மற்றவருக்கு போய்ச்சேர உரக்க பேசுங்கள்.. அழுத்தமாக எழுதுங்கள்..


1 comment:

  1. நானும் உங்களை போல எண்ணியதுண்டு. பொதுவாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீடுகளிலும் பெரியோருக்கு மரியாதையை கொடுக்க வேண்டும், ஆசிரியரிடம் கேள்விகள் கேட்க கூடாது, பெரியவர்களிடம் கூட கூட பேச கூடாது என்றெல்லாம் கூறி கூடுதல் பணிவுடன் வளர்ந்து விடுகிறார்கள்.

    இன்றைய கால கட்டத்தில் இந்த கூடுதல் பணிவு மனப்பான்மை பணியில் முன்னேற்றம் தராது. விரைவில் மற்றவர்களை பார்த்து தங்களை மாற்றிக் கொள்வோர் தப்பித்து விடுவார்கள். மாற்றிக் கொள்ள முடியதவர் பாடு சிரமம்தான்.

    ReplyDelete