Thursday, June 25, 2015

பெரிய வயிறு

அது ஒரு நடுத்தர ஊரின் சன நடமாட்டம் அதிகமிருக்கும் பேருந்து நிலையம். அந்த ஊர் பெரும் நகரமான கோவையை இணைக்கும் நெடுஞ்சாலையில் இருப்பதால் பத்து நிமிடத்திற்க்குள் இரண்டு மூன்று பேருந்துகள் கடந்து விடும். கோவிந்த ராஜன் அந்த பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடை வைத்துள்ளார். டீக்கடையின் கூடவே லாட்டரிச்சீட்டும் மொத்தமாக விற்று வந்தார். மொத்தமாக என்றால்...அவர் கடையில் நாலைந்து பேர் சீட்டுகளை மொத்தமாக வாங்கி கமிசனுக்கு விற்று கமிசனைப் பெற்றுக்கொள்வார்கள்.. வழக்கம் போலவே கோவிந்தராஜன் கடைமுன் ஓரமாக ஒதுங்கி நின்று கெஞ்சலாக முதலாளியின் பார்வைக்காக காத்திருந்தான் கோடி. ஆயிரம் முறைக்கு குறையாத சலவைக்கு போன அடையாளம் தாங்கி நின்ற துளைகள் கோர்த்த ரின் சோப்பு முண்டா பனியன், அவன் ரின் சோப்புக்கு காசு வாங்காத விளம்பர தூதுவன் என்பதை சொன்னது.

"இன்னைக்கு ஐநூறு சீட்டுக்கு கொறைஞ்சுது நாளைக்கு நீ கடைப்பக்கம் வராத"ன்னு மிரட்டி முன்னால் நின்றிருந்த காசிக்கு ஒரு சீட்டு கட்டை கொடுத்தார் கோவிந்தராஜன். அவன் தனக்கே பரிசு விழுந்தது போல் மகிழ்சியில் கடவுள் தன் இருகரங்களால் அள்ளிக்கொடுத்த ஒரு கரத்தினால் அதை வாங்கிக்கொண்டு அவசரமாக எங்கோ சென்றான்.

அடுத்தது தலையை படிய வாரி நெற்றி முழுதும் திருநீரு பட்டை அணிந்து வெள்ளை அரைக்கை சட்டையும் காவி வேட்டியும் அணிந்து நின்ற சாமிக்கண்ணுவிடம் சிறிதும் பெரிதுமாக சில கட்டு சீட்டுக்களை எதுவுமே பேசாமல் கொடுத்தார் கோவிந்தராஜன். அதை தன் கை இடுக்கில் வைத்திருந்த மஞ்சள் நிற கைப்பைக்குள் சீட்டுகள் வகை தொகை வாரியாக அடுக்கி வைத்துக்கொண்டே நகர்ந்தார் ஏதோ பாடலை மெல்ல பாடிக்கொண்டே. அது எங்கேயோ கேட்ட பக்தி பாடல் போல இருந்தது.

கடைசியாக அவர்கண்ணில் பட்டான் "கோடி". அவனை தனது ஓரக்கண்ணால் மேலிருந்து கீழாக பார்த்து "நேத்து வாங்குன சீட்டுக்கட்டுக்கு பணமெங்கே?" என கேட்டார் கோவிந்தராஜன். தன் இடுப்பைச்சுற்றி கட்டியிருந்த பச்சை நிற பெரிய கச்சையின் பட்டனை திறந்து எதையோ எடுத்தான். நன்றாக பாலித்தீன் பைக்குள் மடக்கி வைத்திருந்த ஒரு ரூபாய் தாள்களும் ஐந்து ரூபாய் தாள்களும் சேர்ந்த பணச்சுருளை எடுத்து கொடுத்தான் கோவிந்தராஜனிடம். "ராத்திரி போகும்போதே கணக்கு செட்டில் பண்ணிட்டி போகவேண்டியது தானெ?" என்றார் கோவிந்த ராஜன். "சீட்டு கொஞ்சம் மீஞ்சி போயிட்டுதுங்க. அதை சினிமா கொட்டகையில் ரெண்டாவதாட்டத்தில முடிச்சுட்டு வர நேரமாகிருச்சுங்க" என்றான் குரலை தாழ்த்தி மரியாதையுடன்.

"கமிசனுக்கு காசு வாங்கிக்கிறயா, இல்ல சீட்டா வாங்கிக்கிறயா?" என்றார் கோவிந்தராஜன்.

"சீட்டா குடுத்துருங்க சாமி.. இன்னைக்கி வித்து காச வாங்கிகிறேன்" என்றான் கோடி.

கோடி.. அவன் முதலில் லாட்டரி சீட்டு விற்க ஆரம்பித்த போது அவன் பெயர் சின்னக்குமார். ஏதோ காரணத்தால் அவன் கோடி ரூபாய் சீட்டுகளைத்தான் விற்க முடிவெடுத்து வேறு சீட்டுகளை விற்பதை நிறுத்தி விட்டான். தான் விற்ற சீட்டில் கோடி ரூபாய் விழுந்தால் தனக்கு அதிகம் கமிசன் கிடைக்கும் என்றோ அல்லது விற்க்காது தன்னிடம் தங்கிய சீட்டில் பரிசு விழுந்தால் தான் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற எண்ணமோ கூட காரணமாய் இருக்கலாம். இன்றுவரை அவன் பெயரில் தான் கோடியை வென்றிருக்கிறான்.

சீட்டுக்கட்டுகளை வாங்கிக் கொண்டு ஓரமாக வைத்திருந்த அதிர்ஸ்ட லட்சுமி நாளிதலை எடுத்துக்கொண்டு அவனும் அன்றைய நாளைத் தொடங்கினான். அதிர்ஸ்ட லட்சுமி நாளிதழ் - லாட்டரிச்சீட்டுகளின் குழுக்கல் முடிவுகளைத் தாங்கி வரும் தினசரி. தனக்கென்று சில ரெகுலர் கஸ்டமர்கள் வைத்திருக்கிறான். ஒன்றிரண்டு பேருக்கு அவன் விற்ற சீட்டில் 1000 ரூபாய் 5000 ரூபாய் என பரிசுகள் விழுந்திருக்கின்றன. சிலருக்கு ஆறுதல் பரிசாக 500 ரூபாய் வரை விழுந்திருக்கிறது. அதனால் அவனிடம் சீட்டு வாங்குவது தங்களுக்கு அதிர்ஸ்டம் என நம்புபவர்களை நம்பித்தான் அவன் வாழ்க்கை ஓடுகிறது.

இந்த முறை சீட்டுக்களின் எண் வரிசையை தான் தேர்ந்தெடுத்து வாங்கியிருப்பதாகவும் நிச்சயம் இந்த முறை பரிசு விழும் என அடித்து சொல்லிக்கொண்டிருந்தான் தன் வாடிக்கையாளரிடம். ஒவ்வொரு முறையும் அவன் இப்படித்தான் சொல்லுகிறான் என்பதை நையாண்டி செய்து விட்டு தனக்கு இரண்டு சீட்டுகளை எண்கள் சரி பார்த்து வாங்கிக் கொண்டார் அவர். அடுத்த வாரம் தீபாவளி ஸ்பெசல் குலுக்கள் இரண்டு கோடிக்கான சீட்டுகள் வரப்போகிறதாகவும் அடுத்தவாரம் வந்து பார்ப்பதாகவும் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரை தேடிச்சென்றான்.

"மருத மலை மா முனியே" என முருகன் பாட்டை பாகவதர்போல பாடிக்கொண்டே தன்னுடைய வாடிக்கையாளரிடம் தன் சீட்டுக்களை விற்றுக் கொண்டிருந்தார் சாமிகண்ணு. அவருடைய தோற்றம் வாடிக்கையாளர்களை அவர் கையில் சீட்டு வாங்கிக் கொண்டால் அதிர்ஸ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சீட்டுக்களை வாங்கச் செய்தது.

காசி, கோவிலுக்கு முன் உட்கார்ந்து கொண்டு "மகா லட்சுமி 50 லட்சம்- நாளை குழுக்கல், மகா லட்சுமி 50 லட்சம்" என வரும் பக்தர்களை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தான். உறுப்புகள் இருந்தும் பிச்சை கேட்கும் மனிதர்கள் நடுவில் ஒரு கையை இழந்தும் பிச்சை எடுக்காமல் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த காசியின் நம்பிக்கையய் பார்த்தும் அவன் மீது பரிதாபம் கொண்டும் சீட்டுக்களை வாங்கிச் சென்றனர் பக்த கோடிகள்.

லாட்டரி சீட்டு - ஒரு ரூபாயில் ஒரு சாமனியன் வாங்கிக் கொள்ளும் கனவுப்பத்திரம். பரிசு விழுவதைப்பற்றி யாரும் அதிகம் அக்கரைகொண்டு அதை வாங்குவதில்லை. குழுக்கல் முடிவு வரும்வரை அந்த லாட்டரிச்சீட்டு தரும் நம்பிக்கையில் அந்த வாரத்தை ஓட்டி விடுவர்.

கோவிலின் முன் பூஜைப்பொருட்கள் விற்க்கும் கனகத்திற்க்கும் அந்த கனவு காணும் பழக்கம் இருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து எப்போதும் மாலை நேரங்களில் துணையாக நான்காவது படிக்கும் மகள் சுந்தரி ஒத்தாசைக்காக அம்மாவுடன் சேர்ந்து பூசைப்பொருள் விற்க்க வந்துவிடுவாள். பூசைப்பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர் வாங்கும் பூசைப்பொருளுக்கு கொசுறாக செருப்பை கடையோரம் விட்டு விட்டு பாதுகாக்கும் பொறுப்பை கடைக்காரரிடம் விட்டுவிடுவர். சுந்தரி அவ்வப்போது சின்னப்பெண்கள் விட்டு விட்டு செல்லும் அழகான செருப்புகளை போட்டு அழகு பார்த்துக்கொள்வாள். அம்மாவிடம் சில நேரங்களில் அவளுக்கு பிடித்த செருப்பை காட்டி அது போலவே தனக்கும் வேண்டுமென்று கேட்டு வைத்துக்கொள்வாள். பூசைப்பொருள் வருமானம் கடன்காரர்களின் வட்டிக்கு போய்விடும். கூலி வேலைக்கு போய்வரும் மாரிச்சாமியின் வருமானம் மளிகைச்செலவிற்க்கு போனது போக ஏதுமில்லாத மிச்சத்தில் பிள்ளைக்கு புது செருப்பு, பண்டிகைக்கு துணியெல்லாம் வெரும் கனவுதான்.

கனகம் ஒரு லட்ச ரூபாய் வாரமொருமறை குழுக்கல் - மகாலட்சுமி சீட்டு ஒன்று வாங்கிவிடுவாள் தவராமல். இந்த வாரமும் அதுபோலவே ஒரு சீட்டை வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தாள். வழக்கம்போலவே உறங்கும் முன் வீட்டிலுள்ளவர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கான செலவுத்திட்டங்களை போட ஆரம்பித்திருந்தனர்.

சுந்தரி ஆசையாய் கேட்கும் சைக்கிள், பட்டுத்துணி, கலர் பென்சில் எல்லாவற்றிற்க்கும் அந்த ஒரு ரூபாய் லாட்டரிச்சீட்டுதான் பதில் சொல்லும். கனகத்தொற்க்கு ஒரு டிவி, ஒரு பட்டுப்புடவை என்பது ஆகப்பெரிய ஆவல். மாரிச்சாமிக்கு ஒரு சைக்கிள வாங்கிவிடனும். அவருக்கு லட்ச ரூபாய்க்குள் தனது சைக்கிள் செலவை அடக்கிவிட வேண்டும்(!) என்பதான பொருளாதார மதிப்பீடு. இந்த ஒட்டுக்குடித்தன வீட்டிலிருந்து தனியா ஒரு வீடுகட்டி போயிரனும்னு கனகம் சொல்ல, ஆமாம் தனியா ஒரு வீடு நமக்குன்னு இருந்தா நல்லாதான் இருக்கும். சைக்கிளை வீட்டுக்குள்ளேயே நிறுத்தி வைத்துக்கொள்ளலாம் என்றவாரு தன் கவலையை தீர்த்துக்கொள்ள விரும்பினார் மாரிச்சாமி. அவர்கள் ஆசைகளை வளர்த்துக்கொள்ள வளர்த்துக்கொள்ள இரவும் தன்னை சுறுக்கிக்கொண்டது.

அடுத்த நாள் காலையில் கோவிந்த ராஜன் கடையில் பரபரப்பாக பேசிக்கொண்டார்கள். கோவிந்த ராஜன் கடையில் விற்ற மகாலட்சுமி சீட்டு ஒன்றிற்க்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாய் விழுந்தது பேப்பரை பார்த்து தெரிந்து கொண்டனர். சாமிக்கண்ணு வாங்கிவிற்ற சீட்டுக்களில் ஏதும் அந்த எண் வரிசையில் இல்லை. கோவிந்த ராஜன் தன் நோட்டுப்புத்தகத்தை பார்த்து அது காசி விற்ற சீட்டில் ஒன்றுதான் என்று சொன்னார். காசிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தன்னிடம் மீதி இருந்த சீட்டுக்களில் தேடின்னான். பரிசு விழுந்த சீட்டின் எண் வரிசைதான். ஆனால் அந்த எண் சீட்டு காசியிடமில்லை. காசி தான் வழக்காம விற்க்கும் வாடிக்கையாளர்களை பார்க்க ஓடினான். ஒவ்வொருவராய்த் தேடி கடைசையில் அது கனகம் வாங்கியிருந்த சீட்டு என்று தெரிந்தது. கனகத்திற்க்கு செய்தியை கேள்விப்பட்டதும் தலைகால் புரியவில்லை. தான் தினமும் வனங்கும் அந்த மாரியம்மன் தனக்கு கருணைகாட்டிவிட்டதாக சொல்லிக்கொண்டால். காசியிடம் சீட்டைக்கொடுத்து பரிசை வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டால். காசியும் வாங்கிக்கொண்டு தன்னையும் கொஞ்சம் கவனிக்குமாறு பின் தலையை சொறிந்து கேட்டுக்கொண்டு முதலாளியை பார்க்கச் சென்றான். 

கோவிந்தராஜன் அதற்க்குள் கடையை காகிதப்பூக்களால் அலங்கரித்து விளம்பரம் செய்து கொண்டிருந்தார். காசி சீட்டைக்கொண்டு வந்து கொடுத்து அது கனகத்தின் சீட்டு, அவளுக்கு பரிசை வாங்கித்தருமாறுன்கேட்டுக்கொண்டான்.

"சரி சரி.. சீட்டை நாளைக்கே கோயம்புத்தூர் ஏஜன்சில குடுத்து பணத்தை வாங்கி கொடுத்து விடலாம்" என்றி சொன்னவாறே ஏஜன்சீக்கு போன் போட்டார்.

கனத்தின் வீட்டில் ஒரே கூட்டம். அக்கம் பக்கதிலுள்ளோரெல்லாம் விசாரிக்க வந்துவிட்டனர். தான் ஒரு முறை கொஞ்சம் கடன்கேட்ட போது ஏளனம் பேசிய அண்டைவீட்டு அம்சத்தின் காதில் விழும்படியே பேசிக்கொண்டாள்.

ரெண்டு காசு கைல வச்சிருந்தும் அவசறத்துக்கு கொடுக்காதவுகள பார்த்த அந்த மாரியாத்த தன்னை கவனித்து விட்டதாகவும், இனி அவசரத்திற்க்கு காசு வேண்டியவர்களுக்கு தான் இருப்பதாகவும், கொஞ்சூண்டு வட்டி கொடுத்தால் போதும் என்றவாறு தன்னையும் கவுண்டச்சியாக அறிவித்துக்கொண்டாள்.

சுந்தரிக்கு சைக்கிள், பட்டுப்பாவடை கிடைத்துவிடும் என்ற களிப்பு. மாரிச்சாமிக்கு இந்த செய்தி எட்டுமுன்பே அவர் பக்கத்து ஊருக்கு மம்மட்டியுடன் டவுண்பஸ் ஏறி விட்டார்.

தான் பரிசு வாங்கி செய்தி டிவி வரும் என்று அக்கம்பக்கத்தில் சொன்னதால் அருகில் உள்ள வீட்டில் சேரில் அமர்ந்து செய்திக்காக காத்திருந்தால். எப்போதும் சன்னலில் நின்று கம்பிகளுக்கு இடையில் டிவி பார்த்தவளுக்கு டி வியை விட உயரமான இடத்தில் உட்கார்ந்து காபியும் மிச்சருமாக டிவி பார்ப்பது ஆனந்தத்தை தந்தது. 

பூமி உருண்டை சுற்றிவந்து செய்தி வாசிக்கும் பெண்மணி திரையில் தோன்ற அவரின் சேலை கண்ணைப்பரித்தது. அங்கிருந்த அக்கம்பத்துக்காரர்கள் இனி கனகத்தை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல, டி வி யில் தோன்றும் பெண்ணைபோலவே இனி எப்போதும் புதிய ஆடைகளை கனகம் போட்டுக்கொள்வாள் என்றவாறு கிண்டலடித்துக்கொண்டிருந்தார்.

"தலைப்புச் செய்திகள்: தமிழக ஆளுனருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் தமிழத்தில் இன்று முதல் லாட்டரிச்சீட்டுகள் தடை செய்யப்படுகிறது. ஏழை எளிய மக்களிடம் ஆசைகாட்டி ஏமாற்றும் நோக்கில் லாட்டரி வியாபாரம் நடை பெறுவதால் அதைத்தடுக்க முதல்வர் எடுத்த முயற்ச்சியால் லாட்டரிச்சீட்டுகள் தடை செய்யப்படுவதாக முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது" என்றவாறு செய்தி வாசித்துக்கொண்டிருந்தார் அந்தப்பெண்மணி.

No comments:

Post a Comment