Sunday, November 29, 2015

இதுவும் ஒரு சாதாரண பதிவுதான்

சம்பவம் 1:  ஒரு வழியாக Thanks Giving Weekendக்கு எண்டு கார்டு போட்டாகிவிட்டது. அங்க இங்க Search பண்ணி ஒரு ஆப்பிள் கணினியை 30% தள்ளுபடியில் வாங்கியாகிவிட்டது. இன்று அந்த கடை, ஒரே நாளில் ஒரு மில்லியன் டாலர் அளவிற்கு விளம்பரம் ஏதுமில்லாமல் விற்பனை செய்து சாதனை படைத்திருப்பதாக அதன் இணைய தளத்தில் விளம்பரம் செய்திருந்தது.

சம்பவம் 2:  நேற்று பொழுது போகவில்லையென்று 'தி கன் மேன்' என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வழக்கமான உயிரை காப்பாற்றிக்கொள்ளும் திரில்லர்தான். கதையின் நாயகன் காங்கோவில் அங்கு தோண்டப்படும் தாதுக்களை கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து வாங்கி விற்றுப் பயன்பெரும் தனியார் நிறுவனங்களின் கைக்கூலியாகச் செயல்பட்டு அந்த நாட்டின் சுரங்கத்துறை மந்திரி சுரங்கங்களை அரசுடமையாக்கும் சட்டத்திருத்ததை கொண்டுவர முயல்வதால் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவான். பின் அவனைக் கொள்ள அவனது முன்னாள் கேப்டன் முயற்சி செய்வது தெரிய வரும்போது, நமக்கும் ஒரு உண்மை தெரியும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சம்பவம் 3:  நாம் பயன்படுத்தும் பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்கள் கோல்டான் என்ற மூலப்பொருளைக் கொண்ட டேண்டலம் கெப்பாசிடரை உள்ளடக்கியது. இந்த கோல்டான் காங்கோவில்தான் அதிகம் வெட்டியெடுக்கப் படுகிறது. இந்த உண்மை இன்று பார்த்த காங்கோவின் Conflict Mineral என்ற ஆவணப் படத்திலிருந்து தெரிந்தது. அந்த ஆவணப் படத்தில், கோல்டான் வெட்டியெடுக்கும் சுரங்கம் உள்ள பகுதி கிளர்ச்சிக்காரர்கள் கைவசம் இருக்கிறது. ஆவணம் தயாரிப்பவர் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கிளர்ச்சிக்காரர்கள் பகுதிக்குச் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் Neutral லைனைக் கடக்க அங்கிருக்கும் ஐநா வின் துருப்புக்களைச் சந்திக்கிறார். அந்த ஐநா துருப்பின் சட்டையில் 'பெலி சிங், இந்திய ராணுவம்' என்று எழுதப்பட்டிருக்கிறது.


மேற்சொன்ன மூன்று சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், கட்டுரையை மேலும் படிக்க வேண்டியதில்லை.

நாம் எங்கெல்லாம் தள்ளுபடியையும், விலைக்குறைப்பையும் எதிர்பார்க்கிறோமோ பெரும்பாலான சமையங்களில் அங்கெல்லாம் அந்த தள்ளுபடிக்கும், விலைக்குறைப்பிற்கும் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு அப்பாவி அவன் உழைப்பை, வளத்தை இழக்கிறான். காங்கோவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு, கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து அவர்களிடமிருந்து தாதுக்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பெரு நிறுவனங்களுக்கு விற்பனை செய்பவர்கள் உங்களுக்கும் எனக்கும் தெரிந்த, தெரியாத வணிக நிறுவனங்கள்தான். காங்கோ ஒரு அற்புதமான இயற்கையின் கொடை கொண்ட தேசம். அங்கு இருக்கும் வளங்கள் உலகில் எங்குமே இல்லை. இருந்தும் காங்கோ குடிமகனுக்கு படிப்போ, உணவோ, உடையோ இல்லை. அவன் போராட்டமெல்லாம் அன்றைய உணவுக்கானதாகவே இருக்கிறது.

ஐநா அங்கு அமைதியை நிலை நாட்ட குடிகொண்டிருப்பது போல் நமக்குத் தெரியும். ஆனால் அங்கு நடக்கும் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வராமலும், தனியார் முதலாளிகளின் லாபங்கள் குறையாமல் பார்த்துக் கொள்வதும் தான் முக்கிய நோக்கம். அங்கிருக்கும் பெலி சிங்கிற்கு இதெல்லாம் தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இங்கிருக்கும் சில முதலாளிகளுக்கு நன்று தெரியும்.

சரி.. புரட்சி பேசியது போதும்.. ஐபோன் 6 ப்ளஸ் 20% தள்ளுபடியில் எங்கு கிடைக்கும் என்று பார்க்க வேண்டிய வேலையிருக்கிறது. வரட்டுமா...

பிறகு சந்திப்போம்...


1 comment: