Friday, January 27, 2017

பன்னீர் வாயில் மிச்சரா?

போராட்டத்தில் கலவரம் நடந்ததற்கு பன்னீர் செல்வத்தின் மீது பழியைப்போட்டு ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது கீழ்வரும் கேள்விகளைக்கொண்டு நிகழ்வுகளை பகுத்தறியலாம்?
1. கலவரம் நடந்து பொதுமக்கள் தக்கப்பட்டால், தான் எடுத்த முயற்சிக்கு பலனில்லாமல், மக்கள் மத்தியில் கெட்ட பெயரெடுப்போம் என்று மோடியை சமாளித்த ப்ன்னீருக்குத் தெரியாதா?
2. போராட்டத்தின் இறுதியில் கலவரம் நடந்தால் யாருக்குப் பயன்?

   2அ முதல்வராகத் துடிக்கும் சசிகலா கும்பல்? தேர்தலில் கோட்டைவிட்ட ஸ்டாலின்        தரப்பு? ஆளுநர் வழியே மத்திய அரசின் ஆட்சியை அடைய எண்ணும் பாஜக?
   
 2ஆ. கலவரம் நடந்த பகுதிகள் குப்பம், பாதிக்கப்பட்டது ஏழைகள். சரி. கடந்தகால தேர்தல் முடிவுகளை எடுத்து கலவரம் நடந்த பகுதிகளில் எந்தக் கட்சி தொடர்ந்து அதிக ஓட்டுக்களை வாங்கியுள்ளது? அவர்களைத் தூண்டிவிட்டது யார்?

 2இ முதல்வரை ஆபாசமாக திட்டியும், அட்டைகள் வைத்தும் போராடியது மாணவர்கள்தானா? அல்லது இனையத்தில் ஆபாசமாம எழுதும் நிலைய வித்துவான்களுக்கு கூலி கொடுக்கும் எஜமானர்களின் வேலையா?

  2ஈ. பன்னீர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்து முதல்வர் பதவியில் நீடிப்பதாலும், அதன்மூலம் அதிமுகவில் ஆளுமை கொண்ட தலைமையாக மாறுவது யாருக்கெல்லாம் ஆபத்து? யாருடைய கனவுகளெல்லாம் பாழாய்ப்போகும்?

3. மற்ற மாநிலங்களுடன் இனக்கப்போக்கையும், மத்திய அரசுடன் இனக்கப்போக்கையும் கடைபிடுத்து தமிழக உரிமைகள் காக்கப்படவேண்டும், திட்டங்கள், நிதி தமிழகத்திற்கு தேவையான அளவு கிடைத்திட வேண்டும் என்று ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள், பன்னீரின் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை பாராட்டாமல், வாய்ப்பு கிடைத்தவுடன் மூடி நிறவ எண்ண என்ன காரணம்?

இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால், மாணவர் போராட்டத்தின் வெற்றியும், அதற்குப் பின்னால் உள்ள பன்னீரின் வெற்றியும் தெரியும்.
பன்னீர் வாயில் மிச்சரா என்பது தெரியாது, பன்னீரின் ஆளுமையைக் கண்டுகொள்ளவில்லையென்றால் நம் தலையில் மண் என்பது மட்டும் உறுதி.

Saturday, January 21, 2017

வெற்றி முரசு கொட்டு..

இளைஞர்களின் போராட்டம் வெற்றியடைய

உடனடியாக ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசுப் பிரதிநிதிகளுன் இவர்களே பேச வேண்டும்.

தமிழகம் முழுதும் உள்ள போராட்டக்காரர்களை ஒருங்கிணைக்க ஒரு குழுவும், அவர்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டக் குழுக்களுடன் நேரடித்தொடர்பில் நகர்வுகளை திட்டமிடவேண்டும். இது போராட்டம் திசை திருப்பப்படுவதிலிருந்தும், தவறான வழிகாட்டுதலில் இருந்தும் காக்கும்.

நோக்கம் : ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம்.

அதை அடையும் முறையை கண்டுபிடியுங்கள். சட்டத்தை  பாராளுமன்றமும், பிரதமருமே கொண்டுவர முடியும். அதைச் செய்ய அவர்களுக்கு அழுத்தம் தரக்கூடிய அற வழியைத் கண்டுபிடியுங்கள். உதவிக்கு அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், முடிவுகளை நீங்களே எடுங்கள்.

வெறும் அடையாளப் போராட்டமாக ஒரு நாள் கூடி மறு நாள் கலைவதில் சிக்கலுக்கு தீர்வு கிடைக்காது. தீர்வை நோக்கி நகரவேண்டிய கட்டம் இதுதான்.

Thursday, January 19, 2017

இது வெறும் சல்லிக்கட்டுக்கான போராட்டமா?

... இல்லை..

எனது மொழி, கலாச்சாரம் எதிலும் தலையிட அயலவருக்கு உரிமையில்லை என்று சொல்ல நடக்கும் போராட்டம்.

எங்களுக்குள் சாதியுமில்லை, மதமுமில்லை என்று உறக்கச்சொல்ல நடக்கும் போராட்டம்.

GST, NEET என்று மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசிற்கு, நாங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவர்கள், உங்கள் சட்டங்கள் எங்களுக்கு வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அடித்துச் சொல்லும் போராட்டம்.

கட்சிகள் தேவையில்லை, நடிகர்கள் தேவையில்லை, ஏன் தலைவனென்று எவரும் தேவையில்லை, நாங்களே எங்களுக்கு வழிகாட்டி என்று சொல்லும் போராட்டம்.

ஆணும் பெண்ணும் சரி நிகர் என்று சொல்லும் போரட்டம்.

அடித்தால் திருப்பி அடிப்போம் என்று சொல்லும் போராட்டம்.

இனியும் எங்களை அடக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் போராட்டம்.

அகிம்சையென்றால் என்னவென்று இந்தியாவிற்கு நினைவூட்டும் போராட்டம்.

தமிழர்கள் தனித்தன்மையானவர்கள் என்று சொல்லும் போராட்டம்.

இதுவல்லவோ போரட்டம், இதுவல்லவோ போராட்டம்.

வேகமும் விவேகமும் கலந்த போராட்டம்

அரை நூற்றாண்டு  காலம் தமிழர்களை ஆண்டு அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கடித்து வைத்ததை முடித்து வைத்து, தமிழர்களை உணர்வு ரீதியாக எழுச்சி பெறச்செய்து ஒருங்கிணைத்தது ஏதோ ஒரு சக்தி. ஆனால் போராட வந்தவர்களுக்கு அரசியல் தெளிவும், நோக்கத்தை அடையும் வழிகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது.

தேசியகீதம் பாடினால் காவலர் தடியடியில் தப்பித்துக்கொள்ளலாம்,
பஞ்சாயத்து தீர்மானம் உச்ச நீதிமன்ற தீர்மானத்தைவிட சக்தி வாய்ந்தது,
ரேசன் கார்டை கிழித்துவிட்டால் இந்திய குடியுரிமை போய்விடும், அதனால் இந்திய சட்டங்கள் கட்டுப்படுத்தாது,

போன்ற பைத்தியகார பிதற்றல்கள் அவர்களின் அரசியல் அறிவுப்பற்றாக்குறையையே காட்டுகிறது. வாட்சப்பிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது, நூலகங்களும், செய்தித்தாள்களும் இன்னும் நமக்காக உயிரோடு இருக்கிறது. அடிப்படை அரசியல் சித்தாந்த அறிவு, அரசியல் கட்டமைப்பு பற்றிய குறைந்தபட்ச அறிவு இல்லாமல், வாட்சப்பில் வந்ததை மட்டுமே எடுத்துக்கொண்டு உளருவது உதவாது. ஏனென்றால் இன்றை அரசியல்வாதிகளை வெல்ல, அவர்களைவிட அரசியல் அறிவு அதிகம் பெற்றிருக்க வேண்டும்.

வேகமும், விவேகமுமே வெற்றியைக் கொடுக்கும்.

போராட்டத்தைக் கொண்டாடலாமே!

போராட்டத்தின் நோக்கம் பற்றிய தெளிவு, போராட்ட வழிமுறைகளெல்லாம் இப்போது விவாதிக்கப்படுகிறது. இதுதான் களத்திலுள்ளவர்களுக்கும் ஏனையோருக்கும் பாடம். அறவழியில் பெரும் மக்கள் கூட்டம், குறிப்பாக மாணவர்வர்கள் ஒன்றுசேர்ந்து நிற்பதே Establishment என்ற அரச கட்டமைக்கு பயத்தையும், நெருக்குதலையும் உண்டாக்கும் காரணி. இது அறவழியில் நடக்கும்போதும் அவர்களுக்கு பெரும் தலைவழியாக அல்லது எதிராக இல்லாதிருக்கும் வரை அவர்கள் பொருத்துக்கொண்டிருப்பார்கள். எப்போது அவர்களை நோக்கி உங்கள் குரல் உயர்கிறதோ அப்போது உங்கள் வலிமையை அதாவது ஒற்றுமையைக் குலைத்து உங்கள் போராட்டத்தை ஒடுக்க முற்படுவார்கள்.

அதே போல் இந்தப் போராட்டத்தை தங்களுடையதாக மாற்றமுடியாத அரசியல் சக்திகள் அல்லது இந்தப்போராட்டம் வன்முறையாக மாறும்போது பயன்பெற எண்ணும் சக்திகள் பொய்யான, ஆபத்தான செய்திகளைப் பரப்புவர். இன்றுகூட சிலர் காவல் துறையினரால் காவல் நிலையத்தில் தாக்கப்படுவது போன்ற வீடியோவைப் பரப்பினர். உண்மையில் அது சில ஆண்டுகளுக்கு முன் வேறெதோ இடத்தில் நடந்த நிகழ்வு. அதற்கு காவல்துறையும் தனியாக விளக்கமளித்து, போராட்டக்காரர்கள் தாக்கப்படவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டது. உங்களுக்கு காவல்துறை இதுபோன்றதொரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட நினைவிருக்கிறதா? இருக்க முடியாது. இதுவரை காவல்துறை போராட்டங்களை இந்த அளவிற்கு வளர விட்டது கிடையாது. இந்தப்போராட்டம் கூட அவர்கள் எதிர்பாராததுதான். 

போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடந்தால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படும் போது அது பெரும் கொந்தளிப்பாக மாறி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் வன்முறையாக மாறிவிடும். அதனால் அவர்களும் போராட்டம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனாலேயே காவலர் போராட்டக்காரர்கள் நேசக்கரம் கோர்க்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. அரசும் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறது. இப்போதைய நிலையில் யாரும் போராட்டம் வேறு வழியில் திசை திரும்புவதை விரும்பவில்லை. ஆக இந்தச் சூழலை போராட்டக்காரர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

போராட்டம் இன்னும் எத்தனை நாள் நீளும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் போராட்டம் அதன் இலக்கை, அதாவது ஜல்லிக்கட்டுக்கான தடை விலகும்வரை தொடரும் என்பது மட்டும் தெரிகிறது. போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பிடவசதி என அனைத்து வசதிகளும் தன்னார்வலர்களால் செய்யப்பட்டு போராட்டத்தை உயிரோட்டத்துடன் வைத்திருக்க முயற்சி செய்யப்படுகிறது.

போராட்டக்காரர்கள் மனச்சோர்வடையாமல் இருக்க போராட்டத்தை சற்று இளக்கமாக கையாளலாம் அல்லது கொண்டாடலாம். பொதுவாக தமிழர்கள் போரில்கூட பரணிபாடிக் கொண்டு போர் புரிந்தார்கள் என்று இலக்கியங்கள் சொல்கிறது. நமக்கும் இப்போது, கோவன்களும், டிரம்ஸ் சிவமணிகளும், குப்புசாமி அனிதா தம்பதியனரின் இசை, சிலம்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பறை இசையெல்லாம் தேவை. நாம் கலாச்சாரத்தை காக்க முன்னெடுக்கும் போராட்டத்தில் நமது கலைகளையும், அதன் வடிவங்களையும் கொண்டாடுவதும் பண்பாடே.



அதேபோல் அரசியல் பாடமும் கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு. மொழி வரலாறு, மொழிப்போராட்டம், தமிழகத்தில் சுதந்திரப்போராட்டம், தமிழறிஞர்களின் வாழ்க்கை, சமூகப்போராளிகளின் வாழ்க்கை என்று நம்மிடையே பேசும் வல்லமை கொண்ட பெரியவர்களின் உரைகளையும் ஒலிக்கச் செய்ய வேண்டும். அதனுடே ஆளுமைத்திறன் பற்றிய உரைகளும் இன்றைய மாணவர்களுக்குத் தேவை. இவற்றை அரசியல், இயக்க சார்பின்றி நிகழ்த்தவேண்டும்.

போராட்டத்தின் நீட்சி போராட்டக்காரர்களுக்கு திறனேற்றும் கருவியாகவும், அரசு மற்றும் அரசியல் வாதிகளுக்கு அடுத்த தலைமுறை மீதான அலட்சியத்தை ஒழிக்கும் முகமாகவும் இருக்கட்டும். காட்டுமிராண்டிகள் என்று சொன்ன கூட்டத்திற்கு நாங்கள் நாகரீகத்தின் நாயகர்கள் என்று காட்டுவோமே.

கொட்டட்டும் முரசு, வெல்லட்டும் போராட்டம், பாயட்டும் காளைகள்.

Tuesday, January 10, 2017

ஏர் இந்தியா - முதலிடம்?

மிக மோசமான விமான சேவையின் பட்டியலில் ஏர் இந்தியா மூன்றாமிடத்தில் இருப்பதாக செய்திகள் வருகிறது. யார் இந்தப் பட்டியலை உருவாக்குகிறார்கள், எதற்காக உருவாக்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் அதற்குப் பின் உள்ள அரசியல் தெரியும்.

நெடுந்தூரப் பயணங்களுக்கு எமிரேட்ஸ், ஜெட், லுப்தான்சா, யுனைட்டெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஸ் ஏர்வேஸ், கெதெ பசிபிக், எதியாட், கதார் ஏர்லைன்ஸ் போன்ற விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன். சமீபத்தில் ஏர் இந்தியா சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன் ஒருதடவை ஏர் இந்தியா சேவையைப் பயன்படுத்தியுள்ளேன். இருப்பினும் இந்த முறை ஒரு பெரும் வித்தியாசத்தைக் கண்டேன். ஏர் இந்தியா விமானங்கள் மற்ற விமானங்களை விட அதிக இடவசதி(Leg room) கொண்டது. நெடுந்தூரப் பயணத்திற்கு இது மிகவும் தேவையானது. லுப்தான்சா, யுனைடெட் விமானங்களில் கூட முட்டி முன் சீட்டில் முட்டிக் கொண்டு 13 மணி நேரப் பயணத்தில் சிரமப் பட்டிருக்கிறேன். அந்த சிரமம் ஏர் இந்தியாவில் இல்லை.

அடுத்தது உணவு. ஏர் இந்தியா உணவு வகைகள் இந்தியர்களுக்கு ஏற்றதாகவும், குறுகிய தூரப்பயணங்களுக்கு கூட உணவை தனியாக விற்காமல் இலவசமாக அளிக்கிறார்கள்.

சிப்பந்திகளின் சேவையும் பாராட்டும்படியே இருக்கிறது.

இதையெல்லாவற்றையும் விட, இட ஒதுக்கீடு ஏர் இந்திய நிறுவனத்தில் பின் பற்றப்படுகிறது. ஆதலால் எங்கள் கருப்பினத்தவரையும் அமெரிக்க அலுவலகங்களில் காணலாம்.

என்ன ஒரே ஒரு உறுத்தல், விமானியின் ஒவ்வொரு அறிவிப்பிற்குப் பின்னும் "ஜெய் ஹிந்த்" என்று முடிக்கும் போது தூக்கம் கலைந்துவிடுகிறது. சில சமயம் எங்கே அருகிலிருக்கும் தேச பக்தன் எழுந்து வணக்கம் வைக்கவில்லையென்று சாத்திவிடுவானோ என்ற பயம்வேறு அப்பிக்கொள்ளுகிறது.

மற்றபடி, ஏர் இந்தியா சேவை பாராட்டும்படியாகவே உள்ளது.

Monday, January 9, 2017

டிரம்பிற்கு ஒரு ஐமடல்

அன்பின் டிரம்பு,

தாங்கள் அமெரிக்காவை வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்ற உறுதியேற்று மக்களின் ஆதரவு பெற்று ஆட்சியமைப்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் "மேக் இன் அமெரிக்கா" உறுதி மொழி, எங்கள் அகண்ட மார்பு மோடிஜி அவர்களின் கொல்கைக்கு இணையாக உள்ளதாக பிஸினஸ் இன்சைடர் ஆய்வு முடிவொன்றை வெளியிட்டுள்ளது பெருமிதம் தருகிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் சிம்மாசனத்தில் அமரவிருக்கும் தாங்கள், சிம்மாசனத்தில் அமரும் முன்பே டொயோடா, போர்டு போன்ற நிருவனங்களை மெக்சிகோவில் ஆலை அமைப்பதை தடுத்து நிறுத்தி, அமெரிக்காவில் ஆலை அமைக்க நிர்பந்தித்து அதில் வெற்றியும் கண்டது, நீங்கள் ஒரு அசகாய சூரர் என்பதை நிரூபித்து விட்டது.

இது போல பல சாதனைகள் புரியவிருக்கும் தங்கள் முயற்சிகளுக்கு தடையாக சில உள்ளூர் நிறுவனங்கள் முயற்சி செய்வதை, ஒரு சக வந்தேரியாக உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஒரு காலாண்டுக்கு 9 பில்லியன் டாலர்களை இலாபமாக ஈட்டும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தன் ஆலையை அமைக்க இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்த பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சமாக ஆலையில் ஏற்படுத்தப்போகும் வேலைவாய்ப்பிற்கு பதிலாக பல்லாயிரம் கோடி வரி விலக்குக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்துகிறது. ஏற்கனவே முழுவதும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் போன்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பெரிதாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தாது என்பது அப்பாவி இந்தியர்களுக்குத் தெரியாது. பிராண்டு மயக்கத்திலிருக்கும் அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரமிருக்காது. ஆகவே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கயவாளித்தனத்தை முறியடித்து ஆலையை அமெரிக்காவிலேயே நிறுவ ஆவன செய்ய வேண்டுகிறேன்.

கடந்த ஆண்டு இரண்டு ஆப்பிள் போன்களை வாங்கி அமெரிக்க அரசுக்கு வரி வருவாயை உயர்த்திய நல்லெண்ணத்திலும், மீண்டும் இந்த ஆண்டு புதிய ஆப்பிள் போனை வாங்கி அரசிற்கு வரிகட்ட கொண்டுள்ள கடமை உணர்வும் என்னை உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத உந்துகிறது.

எப்படி அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பும், பெருளாதாரமும் உயரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே போல் எண்ணும் உங்கள் சக ஹிருதையர் மோடி அவர்களை ஏமாற்றவும், உங்கள் லட்சியத்திற்கு எதிராகவும் செயல்படும் ஆப்பிளை, அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்து சலுகை விலையில் போன்களை மக்களுக்கு அளித்திட ஆணையிட வேண்டுகிறேன். இதன் மூலம் சாகித்திய அகாதமி விருதும், இந்திய அரசின் பாரத ரத்னா விருதும் பெறும் அறிய வாய்ப்பை தாங்கள் பெறுவீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

என்றும் தங்கள் மீது பாசமுள்ள

ஆண்டானடிமை