Monday, January 9, 2017

டிரம்பிற்கு ஒரு ஐமடல்

அன்பின் டிரம்பு,

தாங்கள் அமெரிக்காவை வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்ற உறுதியேற்று மக்களின் ஆதரவு பெற்று ஆட்சியமைப்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் "மேக் இன் அமெரிக்கா" உறுதி மொழி, எங்கள் அகண்ட மார்பு மோடிஜி அவர்களின் கொல்கைக்கு இணையாக உள்ளதாக பிஸினஸ் இன்சைடர் ஆய்வு முடிவொன்றை வெளியிட்டுள்ளது பெருமிதம் தருகிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் சிம்மாசனத்தில் அமரவிருக்கும் தாங்கள், சிம்மாசனத்தில் அமரும் முன்பே டொயோடா, போர்டு போன்ற நிருவனங்களை மெக்சிகோவில் ஆலை அமைப்பதை தடுத்து நிறுத்தி, அமெரிக்காவில் ஆலை அமைக்க நிர்பந்தித்து அதில் வெற்றியும் கண்டது, நீங்கள் ஒரு அசகாய சூரர் என்பதை நிரூபித்து விட்டது.

இது போல பல சாதனைகள் புரியவிருக்கும் தங்கள் முயற்சிகளுக்கு தடையாக சில உள்ளூர் நிறுவனங்கள் முயற்சி செய்வதை, ஒரு சக வந்தேரியாக உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஒரு காலாண்டுக்கு 9 பில்லியன் டாலர்களை இலாபமாக ஈட்டும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தன் ஆலையை அமைக்க இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்த பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சமாக ஆலையில் ஏற்படுத்தப்போகும் வேலைவாய்ப்பிற்கு பதிலாக பல்லாயிரம் கோடி வரி விலக்குக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்துகிறது. ஏற்கனவே முழுவதும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் போன்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பெரிதாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தாது என்பது அப்பாவி இந்தியர்களுக்குத் தெரியாது. பிராண்டு மயக்கத்திலிருக்கும் அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரமிருக்காது. ஆகவே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கயவாளித்தனத்தை முறியடித்து ஆலையை அமெரிக்காவிலேயே நிறுவ ஆவன செய்ய வேண்டுகிறேன்.

கடந்த ஆண்டு இரண்டு ஆப்பிள் போன்களை வாங்கி அமெரிக்க அரசுக்கு வரி வருவாயை உயர்த்திய நல்லெண்ணத்திலும், மீண்டும் இந்த ஆண்டு புதிய ஆப்பிள் போனை வாங்கி அரசிற்கு வரிகட்ட கொண்டுள்ள கடமை உணர்வும் என்னை உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத உந்துகிறது.

எப்படி அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பும், பெருளாதாரமும் உயரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே போல் எண்ணும் உங்கள் சக ஹிருதையர் மோடி அவர்களை ஏமாற்றவும், உங்கள் லட்சியத்திற்கு எதிராகவும் செயல்படும் ஆப்பிளை, அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்து சலுகை விலையில் போன்களை மக்களுக்கு அளித்திட ஆணையிட வேண்டுகிறேன். இதன் மூலம் சாகித்திய அகாதமி விருதும், இந்திய அரசின் பாரத ரத்னா விருதும் பெறும் அறிய வாய்ப்பை தாங்கள் பெறுவீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

என்றும் தங்கள் மீது பாசமுள்ள

ஆண்டானடிமை

No comments:

Post a Comment