Thursday, January 5, 2017

அற்பர்கள் தமிழர்களா?

இதைப்பற்றி நானும் சிந்தித்ததுண்டு.. என்னளவில் இதற்குக் காரணமாக நான் அறிந்து கொண்டது,

ஆந்திர மேல்தட்டு மக்கள் போல், இன்றைய பணக்காரத் தமிழர்கள் பரம்பரைப் பணக்காரர்கள் அல்லர். தமிழர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் சேர்க்கும் பணத்தின் மீதான பாசம் என்பது, ஏழ்மையின், பசியின் மீதான அனுபவப் பூர்வமான பயத்தின் அடிப்படையிலானது. எங்கே மீண்டும் பழைய ஏழ்மை நிலைக்குச் சென்றுவிடுவோமோ என்ற பயத்தின் அடிப்படையிலானது. இவர்கள் மேல்தட்டு மக்களாக உருவெடுத்திருப்பதில் இவர்கள்தான் முதல் தலைமுறையினராய் இருப்பர். அதுவும் உலகமயமாக்கல் கொண்டு வந்து சேர்த்த வேலை வாய்ப்பினால். ஆந்திரக்காரர்களுக்கோ, பரம்பரை பரம்பரையாக நிலங்களும், சொத்துக்களும் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

தமிழர்கள் அடிப்படையில் சுரண்டப்பட்டவர்கள். எடுத்த எடுப்பில் அவர்களை தலைமுறைப் பணக்காரர்களாக இருக்கும் ஆந்திரக்காரர்களுடன் ஒப்பிட்டு அற்பர்கள் என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.

இதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்தால், அது சேரும் இடம் சாதி, ஆண்டான் அடிமைக் கலாச்சாரம் என்று திராவிட இயக்கம் எதிர்த்து போராடிய காரணிகளாக இருக்கும். அதைப்பற்றிய எந்த சிந்தனையுமில்லாமல் தமிழர்களை அற்பர்கள் என்று அடையாளமிடுவது திராவிடத்தை தூக்கி நிறுத்தும் விநாயகமுருகன் போன்ற நவீன திராவிட எழுத்தாளர்களுக்கு வேண்டுமானல் இயல்பாக இருக்கலாம், எதார்த்தம் அதுவல்ல.

Vinayaga Murugan
நேற்றிரவு ஆந்திரா கிளப் சென்றிருந்தேன். திநகரின் மையத்தில் இருக்கிறது. சாதாரணமாக எல்லாரும் அங்கு சென்றுவிடமுடியாது. அதில் உறுப்பினராக சேர வேண்டுமென்றால் பத்து லட்ச ரூபாய் வேண்டும். அங்கிருக்கும் உறுப்பினர் விரும்பினால் உங்களை உள்ளே அழைத்துச்செல்லலாம். எனது அலுவலக நண்பர்கள் இரண்டு பேர் அங்கு உறுப்பினர்கள். இன்னொரு நண்பரின் மாமா அந்த கிளப்பில் பணிபுரிபவர். தரமான உணவு, குறைந்த விலை. நல்ல மது. சுகாதாரமாக பரமாரிக்கப்படும் நீச்சல்குளம். எவ்வளவு நேரமானாலும் அங்கு அமர்ந்து சீட்டு, அரட்டை , விளையாட்டு என்று பொழுதுபோக்கலாம். நண்பர்கள் வட்டத்தில் விருந்து வைப்பது என்றால் அங்கு சென்று விடுவோம். நேற்று செல்லும்போது கிளப் வாசலில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் நின்றிருந்தது. வரிசையாக பல இறக்குமதி கார்கள் நின்றிருந்தன. சென்னையில் ரோல்ஸ் ராய்ஸை பார்ப்பது அபூர்வம். ஹைதராபாத்தில் இருந்தபோது சர்வசாதாரணமாக அதுபோன்ற கார்களை பார்த்திருக்கிறேன். உயர்தட்டு மக்கள் வந்துசெல்லும் கிளப் அது. அது வேறு ஒரு உலகம். பணம் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல பணத்தை அலட்சியமாக பார்க்கும் மனிதர்களின் உலகமும் இதே சென்னையில்தான் இருக்கிறது.
நேற்று தமிழர்களின் பிச்சைக்காரத்தனத்தை பற்றி பேச ஆரம்பித்தோம். பிச்சைக்காரத்தனம் என்று நான் குறிப்பிடுவது வேறொன்றை . அது கையில் பத்து காசுகூட இல்லாத நிலை பற்றி அல்ல. கோடிக்கணக்கான பணத்தை கையில் வைத்திருந்தாலும் சிலருக்கு அதை அனுபவிக்க தெரியாது. அவ்வளவு பணத்தை பார்த்ததும் பணத்தின் மீது ஒரு பயம் வந்துவிடும். அல்லது திகைப்பு அல்லது பக்தி கலந்த மரியாதை வந்துவிடும். நல்ல உணவகத்துக்கு சென்று சாப்பிடமாட்டார்கள். நல்ல உடையை வாங்கி அணியமாட்டார்கள். பணத்தை பூட்டி பூட்டி வைப்பார்கள். எளிமையாக இருத்தல் என்பது வேறு. எளிமைக்கு எப்போதும் மதிப்புண்டு. நான் இங்கு குறிப்பிடுவது பிச்சைக்காரத்தனம். இதை தமிழர்களிடம் அதிகம் பார்க்கலாம். அவர்களுக்கு அனுபவிக்க தெரியாது. யுனைட்டட் ஸ்ட்டேஸ் ஆப் ஆந்திராவில் (அமெரிக்காவை நாங்கள் அப்படித்தான் வேடிக்கையாக அழைப்போம்) தெலுங்கர்கள் பலரை பார்த்துள்ளேன். அவர்களிடம் ஒரு ஜென்டில்மேன்தன்மை இருக்கும். அதுபோல கொண்டாட்டம் இருக்கும். பிட்ஸ்பர்க்கில் இருந்தபோது மகேஷ்பாபு நடித்த பிசினஸ்மேன் திரைப்படம் வெளியானது. அது ஒரு நடுங்க வைக்கும் குளிர்காலத்தின் வெள்ளிக்கிழமை மாலை. வெளியே ஏழங்குல பனிப்பொழிவு. கார்கள் கூட வெளியே செல்லமுடியாது. நாங்கள் இருந்த பகுதியிலிருந்து நாற்பது மைல் தாண்டி ஒரு திரையரங்கில் அந்த திரைப்படத்தை தெலுங்கர்கள் சிலர் வாங்கி திரையிட்டிருந்தார்கள். எனது நண்பர்கள் திரைப்படம் பார்க்க அழைத்தார்கள். வெளியில் மோசமானசூழல். நாற்பது மைல் அந்த நடுங்கவைக்கும் குளிரில் சென்று நள்ளிரவில் திரும்பிவருவது ஆபத்தான விஷயமாக பட்டது. தவிர அவர்கள் எல்லாரும் திருமணமாகாத மொட்டை பசங்க..காரில் சீட்பெல்ட்டை இறுக்ககட்டிக்கொண்டு பிட்ஸ்பர்க் மலையிலிருந்து கூட குதித்துவிடுவார்கள் போலிருந்தது..எப்போதும் சாகச மனநிலையுடன் இருப்பவர்கள். எனக்கு அந்த திரைப்படத்தை பார்க்க அவ்வளவு விருப்பமில்லை. தவிர நான் அதுவரை ருசித்திராத ஒரு புதுரக மதுபாட்டிலை வாங்கி வந்திருந்தேன். அதை ருசித்து பார்க்கும் ஆர்வத்தில் இருந்தேன். எனது பக்கத்து அறையில் திருமணமாகாத இன்னொரு தமிழ் பேசும் டீம்மேட் இருந்தான். அவனுக்கு மதுஅருந்தும் பழக்கம் இல்லை. சினிமா நிறைய பார்ப்பான். மகேஷ்பாபுவின் விசிறியும் கூட. அவனை அழைத்துபோக சொன்னேன். தெலுங்கு நண்பர்கள் அவனை அழைத்தார்கள். அவன் அவர்களோடு போகவில்லை. சரி விருப்பமில்லை என்று அவர்களும் சென்றுவிட்டார்கள். மறுநாள் காலையில் டீம்மேட் அறைக்கு சென்று பார்க்கும்போது அவன் ஆன்லைனில் பிசினஸ்மேன் படத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கெல்லாம் ஒரு படம் வெளிவந்தால் மறுநாளே ஆன்லைனில் பார்த்துவிடலாம். அவங்களோட படம் பார்க்க போனா அஞ்சு டாலர் டிக்கெட் செலவாகும். சாப்பாடு கூட அஞ்சு பத்து டாலர். முப்பது டாலர் செலவாகும். முப்பதை அறுபதால் பெருக்கினால் ஆயிரத்து எண்ணூறு என்று சொன்னான். அன்றிலிருந்து அவனை பார்த்தாலே எனக்கு கால்குலேட்டரை பார்ப்பதுபோல இருக்கும். அந்த கால்குலேட்டரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் பத்தாயிரம் டாலர். இதை கஞ்சத்தனம் என்று சொல்லமுடியாது. கஞ்சத்துக்கும், அற்பதனத்துக்கும் வித்தியாசம் இருக்கும். கஞ்சன் என்றால் தான் மட்டும் செலவுசெய்யமாட்டான். அற்பத்தனம் என்றால் மற்றவர்களுக்கு உதவிகூட செய்யமாட்டான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவனது தம்பி இங்கு சென்னையில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலைபார்த்துக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறான். அப்படி மிச்சம் பிடிக்கும் டாலரில் சொந்த சகோதரனுக்கு கூட உதவி செய்வதில்லை. இதுதான் நான் குறிப்பிடும் பிச்சைக்காரத்தனம் என்பது.
தெலுங்கர்களின் சமூகத்தையும், அவர்கள் எறும்பு புற்றுக்குள் இருக்கும் எறும்புகள்போல ஒருவருக்கொருவர் எப்படி உதவி செய்துக்கொள்கிறார்கள் என்பதை பார்த்தும் வியப்பாக இருக்கும். தமிழர்கள் இந்த விஷயத்தில் ஒருவர் முன்னேறினால் இன்னொருவர் அவரது காலை பிடித்து இழுத்துவிடுவார்கள். ஒவ்வொருமுறை அந்த கிளப்புக்கு செல்லும்போதும் அவர்கள் தனிநபர் கொண்டாட்டத்தை மீறி எப்படி நட்புகளை பேணிக்காக்கிறார்கள் என்றும் குடிக்கும்போதும் தொழில்விஷயங்கள் பற்றி விவாதிப்பதை பார்த்தும் வியப்பாக இருக்கும். நேற்று நாங்கள் பெங்களூரில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்ட பாலியல் அத்துமீறல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் தெலுங்கர்கள் இதுபோன்ற சில்லறை வேலைகளில் இறங்க மாட்டார்கள். ஒன்று கன்னடர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லை வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நண்பர் சொன்னார். தவிர பொது இடங்களில் பெண்களின் மார்புகளை பிடித்து கசக்கிவிட்டு ஓடிய அற்பர்களை பற்றியும், கூட்டமாக இன்னொரு நாட்டுக்கு சென்று அங்கிருக்கும் பெண்களை வன்புணரும் இராணுவவீரர்களை பற்றியும் பேச ஆரம்பித்தோம். இந்தியர்கள் என்றில்லை எந்தநாட்டிலும் கும்பல் மனப்பான்மை அப்படித்தான் இருக்கும். கும்பலாக சேர்ந்தால் மனிதர்களுக்கு வெறிவந்துவிடும். கூடவே குடியும் சேரும்போது அடக்கிவைக்கப்பட்ட எல்லா வக்கிரங்களும் வெளியே வந்துவிடும். கொண்டாட்டம் என்பது உண்மையில் என்ன என்று பேச ஆரம்பித்தோம். இந்தியாவில் பஞ்சாபிகள், தெலுங்கர்கள்போல வாழ்க்கையை கொண்டாடுபவர்கள் யாருமில்லை. இந்த மாநிலத்தில் பாலியல் அத்துமீறல்கள் மற்ற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் குறைவு என்று நண்பர் சொன்னார். கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இளம்வயதிலேயே செக்ஸ் கிடைத்துவிடும். பெரும்பாலும் தெலுங்கர்களுக்கு இருபத்து இரண்டிலிருந்து இருபத்தெட்டு வயதுக்குள் திருமணம் நடந்துவிடும் என்று நண்பர் சொன்னார். அது உண்மை என்று எனக்கு தோன்றியது. அதற்காக ஏழைமக்கள் அல்லது நடுத்தர வர்க்க இளைஞர்கள்தான் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். உயர்தட்டு இளைஞர்கள் எல்லாரும் உத்தமர்கள் என்றும் பொதுப்படையாக நான் சொல்லவில்லை. ஆந்திராவில்தான் நக்சலைட்டுகளும், பஞ்சாபில் தீவிரவாதிகளும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள் என்று நினைத்தாலும் பாலியல் வன்புணர்வு குறைவு என்பதையும் யோசிக்க வேண்டும். அமெரிக்கர்களை பொறுத்தவரை இந்தியர்கள் எல்லாரையும் ஒரேமாதிரித்தான் பார்ப்பார்கள் என்றாலும் தெலுங்கர்களின் கொண்டாட்ட மனநிலை அவர்களுக்கு ஓரளவு அணுக்கமாக இருக்கும்.
ஜனவரிமாதம் வந்தால் அடுத்து என்ன புதிதாக எழுதலாமென்று யோசிப்பேன். நேற்று ஆந்திராகிளப்பில் உட்கார்ந்திருந்த தருணத்தில் அடுத்த நாவலுக்கான தெளிவான வரைபடமொன்று கிடைத்துள்ளது. ராஜீவ்காந்தி சாலை நாவலில் யுனைட்டேட் ஸ்ட்டேட்ஸ் ஆப் ஆந்திரா பற்றி சின்ன புள்ளியொன்று இருக்கும். அந்த புள்ளியை பற்றி எழுத உத்தேசித்துள்ளேன்.

No comments:

Post a Comment