Thursday, January 19, 2017

போராட்டத்தைக் கொண்டாடலாமே!

போராட்டத்தின் நோக்கம் பற்றிய தெளிவு, போராட்ட வழிமுறைகளெல்லாம் இப்போது விவாதிக்கப்படுகிறது. இதுதான் களத்திலுள்ளவர்களுக்கும் ஏனையோருக்கும் பாடம். அறவழியில் பெரும் மக்கள் கூட்டம், குறிப்பாக மாணவர்வர்கள் ஒன்றுசேர்ந்து நிற்பதே Establishment என்ற அரச கட்டமைக்கு பயத்தையும், நெருக்குதலையும் உண்டாக்கும் காரணி. இது அறவழியில் நடக்கும்போதும் அவர்களுக்கு பெரும் தலைவழியாக அல்லது எதிராக இல்லாதிருக்கும் வரை அவர்கள் பொருத்துக்கொண்டிருப்பார்கள். எப்போது அவர்களை நோக்கி உங்கள் குரல் உயர்கிறதோ அப்போது உங்கள் வலிமையை அதாவது ஒற்றுமையைக் குலைத்து உங்கள் போராட்டத்தை ஒடுக்க முற்படுவார்கள்.

அதே போல் இந்தப் போராட்டத்தை தங்களுடையதாக மாற்றமுடியாத அரசியல் சக்திகள் அல்லது இந்தப்போராட்டம் வன்முறையாக மாறும்போது பயன்பெற எண்ணும் சக்திகள் பொய்யான, ஆபத்தான செய்திகளைப் பரப்புவர். இன்றுகூட சிலர் காவல் துறையினரால் காவல் நிலையத்தில் தாக்கப்படுவது போன்ற வீடியோவைப் பரப்பினர். உண்மையில் அது சில ஆண்டுகளுக்கு முன் வேறெதோ இடத்தில் நடந்த நிகழ்வு. அதற்கு காவல்துறையும் தனியாக விளக்கமளித்து, போராட்டக்காரர்கள் தாக்கப்படவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டது. உங்களுக்கு காவல்துறை இதுபோன்றதொரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட நினைவிருக்கிறதா? இருக்க முடியாது. இதுவரை காவல்துறை போராட்டங்களை இந்த அளவிற்கு வளர விட்டது கிடையாது. இந்தப்போராட்டம் கூட அவர்கள் எதிர்பாராததுதான். 

போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடந்தால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படும் போது அது பெரும் கொந்தளிப்பாக மாறி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் வன்முறையாக மாறிவிடும். அதனால் அவர்களும் போராட்டம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனாலேயே காவலர் போராட்டக்காரர்கள் நேசக்கரம் கோர்க்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. அரசும் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறது. இப்போதைய நிலையில் யாரும் போராட்டம் வேறு வழியில் திசை திரும்புவதை விரும்பவில்லை. ஆக இந்தச் சூழலை போராட்டக்காரர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

போராட்டம் இன்னும் எத்தனை நாள் நீளும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் போராட்டம் அதன் இலக்கை, அதாவது ஜல்லிக்கட்டுக்கான தடை விலகும்வரை தொடரும் என்பது மட்டும் தெரிகிறது. போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பிடவசதி என அனைத்து வசதிகளும் தன்னார்வலர்களால் செய்யப்பட்டு போராட்டத்தை உயிரோட்டத்துடன் வைத்திருக்க முயற்சி செய்யப்படுகிறது.

போராட்டக்காரர்கள் மனச்சோர்வடையாமல் இருக்க போராட்டத்தை சற்று இளக்கமாக கையாளலாம் அல்லது கொண்டாடலாம். பொதுவாக தமிழர்கள் போரில்கூட பரணிபாடிக் கொண்டு போர் புரிந்தார்கள் என்று இலக்கியங்கள் சொல்கிறது. நமக்கும் இப்போது, கோவன்களும், டிரம்ஸ் சிவமணிகளும், குப்புசாமி அனிதா தம்பதியனரின் இசை, சிலம்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பறை இசையெல்லாம் தேவை. நாம் கலாச்சாரத்தை காக்க முன்னெடுக்கும் போராட்டத்தில் நமது கலைகளையும், அதன் வடிவங்களையும் கொண்டாடுவதும் பண்பாடே.



அதேபோல் அரசியல் பாடமும் கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு. மொழி வரலாறு, மொழிப்போராட்டம், தமிழகத்தில் சுதந்திரப்போராட்டம், தமிழறிஞர்களின் வாழ்க்கை, சமூகப்போராளிகளின் வாழ்க்கை என்று நம்மிடையே பேசும் வல்லமை கொண்ட பெரியவர்களின் உரைகளையும் ஒலிக்கச் செய்ய வேண்டும். அதனுடே ஆளுமைத்திறன் பற்றிய உரைகளும் இன்றைய மாணவர்களுக்குத் தேவை. இவற்றை அரசியல், இயக்க சார்பின்றி நிகழ்த்தவேண்டும்.

போராட்டத்தின் நீட்சி போராட்டக்காரர்களுக்கு திறனேற்றும் கருவியாகவும், அரசு மற்றும் அரசியல் வாதிகளுக்கு அடுத்த தலைமுறை மீதான அலட்சியத்தை ஒழிக்கும் முகமாகவும் இருக்கட்டும். காட்டுமிராண்டிகள் என்று சொன்ன கூட்டத்திற்கு நாங்கள் நாகரீகத்தின் நாயகர்கள் என்று காட்டுவோமே.

கொட்டட்டும் முரசு, வெல்லட்டும் போராட்டம், பாயட்டும் காளைகள்.

No comments:

Post a Comment