Thursday, February 2, 2017

டிராகு காலம் 1

அதிபர் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து குடியேறிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறார். தேர்தலின்போது தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார் என்று ஒரு சாரர் சொல்லலாம். ஆனால் அவர் சொல்லாதவற்றையும் செய்கிறார், அது பலரை பல்வேறு விதமாக பாதிக்கிறது. குறிப்பாக எழு இஸ்லாமிய நாடுகளைக் (ஈராக், ஈரான், சிரியா, ஏமன், சோமாலியா, லிபியா மற்றும் சூடான்) குறிப்பிட்டு அங்கிருந்து வரும் எவரையும் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்ற ஆணை. இது Green Card எனப்படும் நிரந்தர குடியிருக்கும் உரிமைகொண்டவரையும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு படிகளைக் கடந்து, பாதுகாப்பு பகுப்பாய்வுகளை நடத்தித்தான் Green Card வழங்கப்படுகிறது. அதன் பின்னும் பாதுகாப்புக் காரணங்களுக்குகாக குறிப்பிட்ட ஏழு நாட்டிலிருந்து வரும் Green Card வைத்திருப்பவரையும் விமான நிலையங்களில் தடுத்து திரும்ப அனுப்ப முயற்சி செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிபரின் ஆணையில் தெளிவில்லாமல் குறிப்பிட்ட ஏழு நாட்டிலிருந்து வரும் அனைவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற விதிதான் இதற்குக் காரணம். குறிப்பிட்ட ஏழு நாடுகளில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்த அந்நாட்டவருக்கு, அமெரிக்கா Green Card வழங்கி அவர்களை அமெரிக்காவில் பாதுகாப்பாக வாழ வழி செய்துவந்தது. அதிபரின் இந்த ஆணையால் பாதுகாப்பு தொடர்பான உறவுகளிலும், அமெரிக்காவின் எதிர்கால இராணுவ, உளவு நடவடிக்கைகளின் போது இனி வேறு நாட்டவர்களின் உதவி பெறமுடியாமல், அமெரிக்காவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என்று விவரம் அறிந்த முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிபரின் நோக்கம், அகதிகள், பயணிகள் போர்வையில் தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பது என்றாலும், அவரின் ஆணை அதன் நோக்கத்தைத் தாண்டி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது. உதாரணமாக பல பயணிகள் தங்கள் குடும்பங்கள் அமெரிக்காவில் இருக்கையில் தாங்கள் மட்டும் தங்கள் நாடுகளுக்குச் சென்று திரும்புகையில், தடுத்து வெளியனுப்பப்படும் சூழல் உருவானது. பல பெரு நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் இதுபோல் பாதிக்கப்பட்டனர். அதனால் இவர்களுக்கு ஆதரவாக விமான நிலையங்களில் அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் டெமகிராட்(ஒபாமா) கட்சிக்காரர்கள் என பல்வேறு நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நியூயார்க்கில் உள்ள உச்ச நீதிபதியிடம் ஒரு மனு அளிக்கப்பட்டு, அதிபரின் ஆணையில் சில விலக்குகளை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனடிப்படையில் Green Card வைத்திருப்பவர்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த உத்தரவு தற்காலிகமாக இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வைத் தந்தது. தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களின் உறவுகளுடன் சேர்ந்த மகிழ்ச்சியான தருணங்கள் செய்தித் தாழ்களின் பக்கங்களை நிறப்பியது

இப்போது இந்த சிக்கல் நீதிமன்றத்தில் இருப்பதால் அதிபர் தனது ஆணையை நீதிமன்றத்தில் வென்றெடுக்கவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது அவர் ஆரம்பகட்ட நடவடிக்கைகளிலேயே பின்னடைவைச் சந்தித்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்

முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அரசின் தலைமை சட்ட ஆலோசகர் சேலி யேட்ஸ், தமது வழக்குறைஞர்கள் அதிபர் டிரம்பின் ஆணையை ஆதரித்து நீதிமன்றத்தில் வழக்காடப் போவதில்லையென்றும், நீதியின் பக்கம் நின்று வழக்காடப்போவதாகவும் அறிவித்தார். இதனால் எரிச்சலடைந்த அதிபர் டிரம்ப், தலைமை வழக்கறிஞரை பணியிலிருந்து நீக்கி நாட்டிற்கு மேலும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.

அடுத்து இந்தியர்களின் நிலை...

No comments:

Post a Comment