Monday, February 13, 2017

தொடரும் உரையாடல்

விழித்திருக்கும்போது மனது எதையாவது அரைத்துக்கொண்டே இருக்கிறது. அது எப்போதும் ஒரு தன்னுரையாடலை மெளனமாக நடத்திக்கொண்டே இருக்கிறது. ஒன்றைக் குறித்து உரையாடல் நிகழ்த்தும்போது குறுக்கிடும் காட்சியோ, ஒலியோ இன்னொரு பொருளைக் குறித்து மனம் உரையாடத் தொடங்குகிறது. அது ஒரு போதும் ஒரு நிலையில் ஒன்றைமட்டுமே நினைத்து நின்றதில்லை. அதை அப்படி இருக்க நிற்கவைத்தலைத்தான் தியானம் என்கிறார்களோ என்னமோ... ஆனால் அப்படி ஒரு நிலையை மனது அடையும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. தியானத்தில் கூட, "ஓ தியானம் இப்படித்தானிருக்குமா?", "ஏன் தியானம் எண்ணவோட்டத்திற்கு திரை போடுகிறது?" என்று எதையாவது கேட்டுக்கொண்டே ஒரு பதிலையும் தந்து கொள்ளும். அதன் கேள்விகளும், பதில்களும் நிறைவு பெறாதவையாகவே இருக்கிறது.

மனிதனுக்கு வாய்ப்புள்ள போதெல்லாம் யாராவதுடன் உரையாடிக்கொண்டே இருக்க விரும்புகிறான். யாருமில்லாதபோது அருகிலிருக்கும் செடி, நாய், காற்று, ஆகாயம் என்று எதாவது ஒன்றுடன் எதையோ பேசிக்கொண்டே இருக்கிறான். யாருமில்லாத தனிச்சிறையில், பாலைவனத்தில், கடலில் என்று எங்கு போனாலும் அவனுக்குள் தன்னுரையாடல் செய்துகொண்டிருக்க எதுவோ ஒன்று இருக்கிறது. அருகிலிருக்கும் நபரின் மொழி தெரியாவிட்டாலும், சைகையின் மூலமாகவேணும் ஒன்றைப்பற்றி பேச முயற்சிக்கிறான். பேசாத அல்லது பேச விரும்பாத, சலிப்பை பதிலாகக் கொடுக்கும் மனிதர்களிடம் கூட நமக்கு தொடர்ந்து உரையாட அல்லது அவர் பொருட்டு ஒரு தன்னுரையாடல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அருகிலிருப்பவனுடன் வாயால் பேசியது போதாமல், தொலைவிலிருப்பவனுடன் உரையாட கடிதம், தந்தி. தொலைபேசி என்று ஏதாவது ஒன்று உரையாட இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது. ஒரு காலத்தில் இன்லேண்ட் லெட்டரில் மூன்று பக்கத்திற்குள் அத்தனை அன்பையும், விசாரிப்பையும், கதைகளையும் அடைக்கி எழுதியும், அவ்வப்போது அந்தக் கடிதத்தின் ஓரங்களில் வார்த்தைகள் ததும்பி வழிய உரையாட ஏதோவொன்று இருந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. கடிதத்திற்கு பதில் வருவதும், அதற்கு ஆகும் காலத்தில் அதைப்பற்றி மனம் உரையாடிக்கொண்டே இருக்கிறது. பதில் கடிதம் கையில் கிடைத்ததும் அது ஒரு புதிய உரையாடலை உருவாக்குகிறது. முடிவில்லாமல் மனம் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறது.

மின்னஞ்சல் காத்திருக்கும் காலத்தைக் குறைத்தாலும், அந்த குறைந்த நேரத்தில் நமக்கு உரையாட ஏதாவதொன்று இருந்துகொண்டே இருக்கிறது. எழுதுவதற்கு ஒன்றுமில்லையென்றாலும் தொடரஞ்சல் ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. செல்லிடப்பேசிகள் வந்தபின், எழுத்து குறைந்து பேச்சு அதிகமாகிவிட்டது. பேச்சுக்களுடன் நண்பர்களும் அதிமாகிவிடுகின்றனர். சில நேரங்களில் அது பகைத்துக் கொண்டோரின் எண்ணிக்கையாகக்கூட அமைந்து விடுகிறது.

இப்போது முகநூல். எதைத்தான் இங்கு பேசவில்லை. கணக்குத் தொடங்கியதிலிருந்து தினமும் மனதில் என்ன இருக்கிறது என்று கையைப் பிடுங்குகிறது அது. தெரிந்தவர், தெரியாதவர் என்று எல்லோரிடமும் உரையாட விருப்பம் கொள்கிறது மனம். சமூகம் எப்போதும் எதையோ மென்று கொண்டே இருக்கிறது. அரசியல், கதை, கிசு கிசு, வசை, இசை, சினிமா என்று ஏதையாவது ஒன்றை மென்று கொண்டே இருக்கிறது. அரசியல், சினிமாவைப்போல் அதிகம் பேசப்பட்டவையல்ல கதைகள், இலக்கியங்கள், அனுபவங்கள். கதையையும், இசையையும், கவிதையையும், இலக்கியத்தையும் பேசுபவர்கள் அதிகம் இல்லை. ஆனால் அவற்றைப் பேசுகிறவர்கள் எண்ணங்கள் எல்லாம் ஒரே போல இருக்கிறது. அவர்கள் அவற்றை உள்ளூர ரசிப்பதைப்போல வெளியில் பேசுவதில்லை. அவர்களின் உரையாடல்கள் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களுடன் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிஜ உலக மனிதருடனுனான உரையாடலை பயத்துடனேயே நடத்துகின்றனர். கதைகளின் காதாப்பாத்திரங்கள் போல் இவர்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிடுவதில்லை. இவர்களுக்குள் நேரத்திற்கு ஒரு கதாப்பாத்திரம் வெளிப்படுகிறது. எந்தக் கதாபாத்திரத்துடன் எப்படிப் பேசவேண்டும் என்று நாம் யோசிப்பதிலேயே உரையாடல் குறித்த எண்ணம் முற்றுப்பெற்று விடுகிறது.

கவிதைகள் பற்றி பேசுபவனிடம் காதலும் கற்பனையும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அவன் எல்லா நேரங்களிலிலும் கவிதை வடித்துக்கொண்டே இருக்கிறான். அவன் கவிதைகள் வாசிக்கப்படாதவையாக இருப்பதாலோ என்னவோ, பார்ப்பவரிடமெல்லாம் வாசித்துக் காட்டி பெருமிதம் கொள்கிறான். அவனிடம் பேசுவதைவிடவும் கவிதையைப்பாடி அவனைச் சுற்றியிருப்பவர்கள் சற்று தள்ளியிருக்கக் காரணமாகிவிடுகிறான். உரையாடல் நின்று விடுகிறது. அவன் கற்பனைக் காதலியுடன் கவிதையால் உரையாடிக்கொண்டே இருக்கிறான்.

உரையாடலை எப்போது தொடங்குகிறோம்? பிறந்ததுமா? கருவிலேயேயா? தந்தையும், தாயும் கருவினுள் இருக்கும்போதே பிள்ளையுடன் உரையாடத்தொடங்கி விடுகிறார்கள். குழந்தை பேசும் பதில்களை தாய் உணர்கிறாள். பிறந்ததும் குழந்தை வண்ணங்களுடனும், உருவங்களுடனும் தனது உரையாடலைப் பார்வையில் தொடங்குகிறது. பிறகு மோட்டுவளை முதல் தொட்டிலில் தொங்கும் கிளி பொம்மைவரை அவற்றுடன் உரையாடுகிறது. அந்த உரையாடல் அவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் நடக்கிறது. அதில் வார்த்தைகளில்லை. ஒலியின் ஏற்ற இறக்கங்கள், புன்னகை, கண்சிமிட்டல் என தொடர்கிறது அந்த உரையாடல்.

வாய் பேச முடியாதவர்களும், கண் பார்க்க முடியாதவர்களும், காது கேளாதவர்களும் உரையாடுகிறார்கள். அவர்கள் அடுத்தவரிடம் உரையாடுவதைவிட தங்களுக்குள் அதிகம் உரையாடுகிறார்கள்.அந்த உரையாடல் வடிவங்கள், மொழி வெவ்வேறாக இருக்கிறது. மனிதன் இறக்கும் வரை ஏன் இறக்கும்போது எதையோ பேசிக்கொண்டே இறக்கிறான். அவன் கண்களும், உதடுகளும் எதையோ சொல்லிக்கொண்டே இருக்கிறது.

உரையாடல் மனிதன் இறந்தபின்னும் தொடர்கிறது. அவனைப்பற்றியோ அவன் உரையாட மறந்தவை, மறுத்தவை பற்றியோ உரையாடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உரையாடல் முற்றுப்பெறுவதில்லை. 1 comment: